என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

செவ்வாய் தோஷம் நீக்கும் பரிகாரங்கள்
- செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது.
- ரிஷப ராசிக்கு செவ்வாய் 7,12ம் அதிபதி. செவ்வாய் மிதமான பலத்துடன் இருப்பது நல்லது.
செவ்வாய் பூமிக் காரகன், ரத்த காரகன் மற்றும் யுத்த காராகன் தைரிய வீரியத்திற்குரிய கிரகம்.
மேலும் உடன் பிறந்த சகோதரம் மற்றும் பெண்கள் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும் கிரகமாகும்.
இந்த செவ்வாய் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12-ம்மிடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்பது பொது விதி. திருமணத்திற்கு செவ்வாய் தோஷம் கணக்கிட வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறினாலும், செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது. உலகின் அனைத்து நிகழ்விலும் இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவது நாம் அறிந்ததே. அதனால் செவ்வாய் தோஷம் பற்றி 1000 பட்டிமன்றம் நடத்தினாலும் இது சர்ச்சைக்குரிய கருத்தாகவே இருக்கும். ஆனால் சுய ஜாதகத்தில் ஒரு கிரகம் தான் பெற்ற ஆதிபத்திய ரீதியான பலனை தனது தசை, புத்தி காலங்களில் நிச்சயம் வழங்கும். இனி பனிரெண்டு ராசிக்கும் செவ்வாய் தோஷ பரிகாரங்களைக் காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு செவ்வாய் ராசி அதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. செவ்வாய் ஆட்சி, உச்சம், சுயசாரம் பெறக் கூறாக் கூடாது. ஒரு நல்லது நடந்தாலும் ஒரு அவச்சொல், அவமானம் ஏற்பட்டாலும் ஜாதகரே காரணமாக இருப்பார். செவ்வாய் பலம் பெற்றால் சொத்து, புகழ், செல்வம், செல்வாக்கு, உயர் பதவி, போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, மற்றும் அரசு உயர் பதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், கட்டிட கட்டுமானத் தொழில், செங்கல் சூளை, நெருப்பு சம்பந்தமான தொழில்கள் தோட்டம், எஸ்டேட், தோப்பு, நிலபுலன்கள் என வசதியாக வாழ்வார்கள். இதற்கு அசுப கிரகம் சம்பந்தம் இருந்தால் வாஸ்து குறைபாடு சொத்து தொடர்பான மன உளைச்சல் இருக்கும். செவ்வாய் அஷ்டமாதிபதி என்பதால் சிலருக்கு அதிர்ஷ்ட பணம், உயில் சொத்து, வெளிநாட்டு வாழ்கை போன்றவைகள் அமையும். செவ்வாய் தசை, புத்தி காலங்களில் ஒரு வம்பு, வழக்கு, சர்ஜரி, தீராத நோய், கடன் இருந்தே தீரும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் முருகனை வழிபட வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு செவ்வாய் 7,12ம் அதிபதி. செவ்வாய் மிதமான பலத்துடன் இருப்பது நல்லது.
செவ்வாய் களத்திர ஸ்தான அதிபதி என்பதால் செவ்வாய் பலம் குறைந்தால் கால தாமத திருமணம் நடக்கும். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். தொழில் உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பிரிந்து வாழும் நிலை ஏற்படும். செவ்வாய்க்கு சனி, ராகு, கேது சம்பந்தம் இருந்தால் விவகாரத்து வரை செல்லும். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண உறவை ஏற்படுத்தும். செவ்வாய் விரயாதிபதி என்பதால் செவ்வாய் தசை, புத்தி காலங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள் அல்லது அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்வார்கள். சிலர் தனிமையாகவோ, யாருக்கேனும் அடிமையாகவோ இருப்பார்கள். சிலர் சிறை தண்டனை அனுபவிப்பார்கள். சிலர் படுக்கையில் காலம் கழிப்பார்கள். இவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை நன்மை தரும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அல்லது காளியை வழிபட வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு செவ்வாய் 6, 11ம் அதிபதி. 6ம் இடத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெறுவது சிறப்பல்ல. 6ம் அதிபதி என்பதால் விரைவில் நோய், கடன் தாக்கும். சுய தொழிலில் மிகுதியான கடன், வம்பு, வழக்கு பண இழப்புகள் ஏற்படும். அதே நேரத்தில் செவ்வாய் சுப வலுப் பெற்றால் மிகப் பெரிய லாபம் கிடைத்து எவ்வளவு அதிகமான கடன் இருந்தாலும் விரைவில் தீர்ந்து விடும். செவ்வாய்க்கு சந்திரன் சம்பந்தம் சந்திர மங்கள யோகமாக செயல்படும். செவ்வாய்க்கு குரு சம்பந்தம் குருமங்களமாக செயல்படும். சிலருக்கு செவ்வாய் தசை காலங்களில் மறுமணம் நடக்கும். சிலருக்கு இந்த காலங்களில் யாருக்கும் தெரியாத ரகசிய குடும்பம் அமையும். இரண்டாம் திருமணத்திற்குப் பிறகு ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். அதனால் செவ்வாயால் கடன், நோய் உருவாகினாலும் தசை முடியும் முன்பு கடன், நோய் நிவர்த்தியாகும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் சிவ வழிபாடு செய்வது நல்லது.
கடகம்
கடக ராசிக்கு செவ்வாய் 5, 10ம் அதிபதியாக இருப்பதால் ஆட்சி, உச்சம் என சுப வலுப்பெறுவது நல்லது. செவ்வாய் கடகத்திற்கு ஏக யோகாதிபதி. செவ்வாய் சுப வலுப்பெற்றால் பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். தலைமைப் பதவி தேடி வரும். நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடி வரும். நிர்வாகத் திறமை உண்டு. அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள். நன்மக்கட்பேறு உண்டாகும். புத்திரர்களால் இவர்களுக்கும் இவர்களால் புத்திரர்களுக்கும் பயன் உண்டு. அதிர்ஷ்ட தேவதை வசப்படுவாள். குல தெய்வ கடாட்சம் உண்டு. குல தெய்வ கோவில் நிர்வாகிகள். வம்சா வழியாக பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். செவ்வாய் ஏக யோகாதிபதி என்பதால் சனி ராகு, கேது சம்பந்தம் பெறாத வரை செவ்வாய் தசை வரமான காலம். செவ்வாய் சுப வலுப் பெற்ற கடக ராசியினர் பாக்கியவான்கள். இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் பூர்வீகத்தில் வாழ முடியாது. பூர்வீகச் சொத்தில் சர்ச்சை உண்டு. பிள்ளைகளால் மன வேதனை மிகும். குல தெய்வ அருள் கிடைக்காது.
பரிகாரம்: செவ்வாய் கிழமை முருகன் வழிபாடு செய்து வரும் கடக லக்னத்தினருக்கு தொடர் அதிர்ஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு செவ்வாய் 4,9ம் அதிபதி. செவ்வாய் ஒரு கேந்திரத்திற்கும் திரிகோணத்திற்கும் அதிபதி. இவர்களுக்கு செவ்வாய் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெற்றால் அபரிமிதமான சுப பலன் உண்டு. தாய், தந்தை வழி உறவுகளின் அன்பு, அனுசரனை இருக்கும். தாய் வழி, தந்தை வழி சொத்து அதிகம் இருக்கும். தொட்டது துலங்கும். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்க பலர் விரும்புவார்கள். தனது புத்தி சாதுர்யத்தால் பிறரை நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். உற்றார் உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். செவ்வாய் தசை, புத்தி காலங்களில் டிரஸ்ட், தர்ம ஸ்தாபனங்கள் அமைத்தல், கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தல், தீர்த்த யாத்திரை செல்லுதல், அரச உத்தியோகம், அரச பதவி போன்ற பாக்கிய பலன்கள் அதிகரிக்கும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமை சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்வதால் நன்மைகள் இரட்டிப்பாகும்.
ஐ.ஆனந்தி
கன்னி
கன்னி ராசிக்கு செவ்வாய் 3, 8ம் அதிபதி. செவ்வாய்க்கு சுப கிரக சம்பந்தம் இருந்தால் வாழ்வியல் மாற்றம் தரும் இடப் பெயர்ச்சி கிடைக்கும். உள்ளத்தில் தைரியம், தெம்பு இருக்கும். அண்டை, அயலார் உதவியாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களால் சகாயம் உண்டு. பாகப்பிரிவினை சுமுகமாகும். நிம்மதியான தூக்கம், நல்ல வெளிநாட்டு வாழ்க்கை அமையும். செவ்வாய் அசுப பலம் பெற்றால் செவித்திறன் குறையும் . அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு இருக்கும். முக்கிய ஆவணங்கள் தொலைந்து போகும். ஞாபகமறதி அதிகமாகும். சொத்து தொடர்பான பாகப் பிரிவினையில் குழப்பம் உருவாகும். உடன் பிறந்தவர்களால் மிகுதியான விரயம் இருக்கும். தனிமையாகவோ, யாருக்கேனும் அடிமையாகவோ இருப்பார்கள். சிலர் சிறை தண்டனை அனுபவிப்பார்கள். சிலர் படுக்கையில் காலம் கழிப்பார்கள். சிலருக்கு விபத்து, கண்டம், சர்ஜரி வம்பு, வழக்கு உண்டாகும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமை புதன் ஓரையில் வாராகி அம்மனை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்கு செவ்வாய் 2,7ம் அதிபதி. இனிமையான இல்வாழ்க்கை அமையும். வாக்கு சாதுர்யத்தால் குடும்ப உறுப்பினர்களின் அன்பை பெறுவார்கள். இவர்கள் பேச்சில் கவுரவம், அதிகார தோரணை இருக்கும். சமுதாயத்தில் தலை சிறந்த மனிதனாக உயருவார்கள். வார்த்தைகளில் உண்மை, நிதானம், நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொள்ளும் சூட்சமம் உண்டாகும். சொல்வாக்கால் செல்வாக்கை உயர்த்திக் கொள்வார்கள். வெற்றி மேல் வெற்றிகள் கிடைக்கும். தனக்கு மட்டுமல்ல தன்னை சார்ந்தவர்களுக்கும், நன்மைமைகளை உண்டாக்குவார்கள். உரிய வயதில் திருமணம் நடக்கும். செவ்வாய் பலம் குறைந்தால் காலதாமத திருமணம் அல்லது கலகம் நிறைந்த திருமண வாழ்க்கை அமையும். செவ்வாய் தசை, புத்தி காலங்களில் சொத்துக்களால், கூட்டுத் தொழிலால், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். வயோதிகத்தில் செவ்வாய் தசை, புத்தி மாரகத்தை தரத் தவறுவதும் இல்லை.
பரிகாரம்: செவ்வாய் தசை, புத்தி காலங்களில் கால பைரவரை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு செவ்வாய் 1, 6ம் அதிபதி என்பதால் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்பல்ல. தங்களுக்கு ஏற்படும் நல்லது, கெட்டது இரண்டிற்கும் இவர்களே காரணமாக இருப்பார்கள். செவ்வாய்க்கு சுப கிரக சம்பந்தம் இருந்தால் கவுரவம், புகழ், நிம்மதியான உறக்கம், நிர்வாகத் திறமை உண்டு. அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும். அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள். திருமணத்திற்கு, வீடு கட்டுவதற்கு , கல்வி செலவிற்காக, வியாபாரத்திற்காக கடன் வாங்கிவிட்டு, திரும்பி கட்டமுடியாமல் கஷ்டப்படுவார்கள். தொழில் நஷ்டம் , வேலை இழப்பு, வேலை இல்லாமை, மருத்துவ செலவு அதிகமாகுதல் ஆகியவற்றால் கடன் ஏற்படும். சிலர் முன் கோபத்தால் சொந்த செலவில் தனக்கு தானே சூன்யம் வைத்துக் கொள்வார்கள். செவ்வாய் தசை புத்தி காலங்களில் நோய், கடன், எதிரி தொல்லை, ஏவல், பில்லி சூன்ய தாக்கம் உண்டாகும்.
பரிகாரம்: செவ்வாயால் பாதிப்பு இருப்பவர்கள் செவ்வாய் கிழமை சரபேஸ்வரரை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்கு செவ்வாய் 5, 12ம் அதிபதி. செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றால் செவ்வாய் தசை காலங்களில் பேரதிர்ஷ்டம் உண்டாகும். பண்பு, பாசம் , நல்ல மனநிலை, கவிதை, கற்பனைத் திறன், கவுரவம், புகழ், நிம்மதியான உறக்கம், அரசு வழியில் ஆதரவுகள் நன்மக்கட்பேறு உண்டாகும். பிள்ளைகள் தாய்மாமன் மூலம் நல்லது நடக்கும். அதிர்ஷ்ட தேவதை வசப்படும். தொட்டது துலங்கும். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்கக் பலர் விரும்புவார்கள். வசீகரமான தோற்றம் ஏற்படும். ஆன்ம பலம் பெருகும். பொருளாதாரத்தில் தன் நிறைவு ஏற்படும். பங்குச் சந்தை, லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் என பல புதிய மாற்றங்கள் ஏற்படும். அதிர்ஷ்டம் செவ்வாய் தசை முடியும் போது இழப்பையும் ஏமாற்றத்தையும், விரயத்தையும், தரத் தவறுவது இல்லை.
பரிகாரம்: செவ்வாய் கிழமை குரு ஓரையில் நவகிரக செவ்வாய் பகவானை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்கு செவ்வாய் 4, 11ம் அதிபதி. பாதகாதிபதி. ஆட்சி உச்சம் பெற்ற செவ்வாய் தசை ஆரம்பத்தில் ஆதாயத்தையும் தசை முடிவில் பாதகத்தையும் தருகிறது. செவ்வாய் சூட்சம வலுப்பெற்று தசை நடத்தினால் சொத்துக்களால் அதிக வருமானம் உண்டு. உயர்ரக வாகன வசதி உள்ளவர்கள். விவசாயம், கால்நடை வளர்ப்பு, வாடகை வருமானம் என வாழ்க்கை வளமாக இருக்கும். ஆடம்பரமான, அந்தஸ்தான சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள். தாய் வழி உறவுகள் மற்றும் மூத்த சகோதரம், சித்தப்பா போன்றவர்களால் ஆதாயம் உண்டு. கற்ற கல்வி பயன் தரும். படிப்பிற்கு ஏற்ற தொழில், உத்தியோகம் அமையும். தசையின் ஆரம்பத்தில் லாபத்தை கொடுத்தாலும் தசையின் முடிவில் கொடுத்ததை விட பல மடங்கு அழிவு,ஏமாற்றம் மற்றும் வம்பு, வழக்கு உண்டு. மகரம் சர ராசி என்பதால் பிரச்சனையில் இருந்து மீள்வது எளிது. சிலருக்கு உயிர் காரகத்துவத்தையும், சிலருக்கு பொருள் காரகத்துவத்தையும் பாதிக்கிறது.
பரிகாரம்: செவ்வாய் கிழமை திருவண்ணாமலை சென்று வர பாதிப்பு குறையும்.
கும்பம்
கும்ப ராசிக்கு செவ்வாய் 3 , 10ம் அதிபதி. ஆட்சி உச்சம் சுப வலுப் பெறுவது மிகச் சிறப்பு. சிலர் லக்னாதிபதி சனியும் செவ்வாயும் பகை கிரகங்கள் என்ற கருத்தை முன் வைக்கிறார்கள். பகை கிரகங்களுடன் சம்பந்தம் பெறாத செவ்வாய் கும்ப லக்னத்திற்கு தொழில், உத்தியோக உயர்வை நிச்சயம் தரும். ஒப்பந்த அடிப்படையான தொழில் மற்றும் கூட்டுத் தொழில் அமையும். தொழில் உத்தியோகத்திற்காக தினமும் இடம் பெயறுவார்கள். இவர்களுக்கு அரசியல், ஆன்மீகம்,குலத்தொழில் ஆர்வமும் ஆதாயமும். அதிகமாக இருக்கும். முன்னோர்கள் வழிச் சொத்து கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு ஆண்மை, தைரியம், நிறைந்த குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழிநடத்தும் கணவர் கிடைப்பார். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவராக இருப்பார்கள். ஞாபக சக்தி கூடும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமை பழநி முருகனை வழிபட நிலையான முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்
மீன ராசிக்கு செவ்வாய் 2, 9ம் அதிபதி. செவ்வாய் சுப வலுப் பெற்றவர்கள் வங்கிப் பணி, ஆசிரியர் தொழில், ஜோதிடம், நிதி நிர்வாகம் போன்ற பணிகளில் தனித் திறமையுடன் மிளிர்கின்றனர். உற்றார் உறவினர், குடும்ப உறவுகள் உடன் பிறந்தவர்களின் அன்பு, அனுசரணை, ஆதாயம் உண்டு. தந்தையின் செல்வாக்கும், சொல்வாக்கும் அரவணைப்பும் கிடைத்துக் கொண்டே இருக்கும். அதிர்ஷ்டம், நிறைந்த செல்வம், தானம், தருமம் செய்யும் நற்பண்புகள், புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு, கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது, அன்னதானம் செய்வது, முன்னோர்களின் நல்லாசி, நல்ல குரு அமைவது , புனித யாத்திரை, தந்தை வழி சொத்து, உயர்ரக சொகுசு வாகனம் போன்ற அனைத்து இன்பங்களையும் அடைவார்கள். உயர்ந்த கல்வி, கேள்வி ஞானம் உண்டு.
பரிகாரம்: செவ்வாய் கிழமை குரு ஓரையில் திருச்செந்தூர் முருகனை வழிபட ஏற்றம் அதிகரிக்கும். எந்த ஒரு பலனும் அதன் தசாபுத்திகளிலேயே அப்பட்டமாக வெளிப்படும். எனவே செவ்வாய்க்கு உரிய பரிகாரங்களை பயன்படுத்தி உயர்வு பெற வாழ்த்துக்கள்.
செல்: 98652 20406






