என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நாடோடி மன்னனா? பொன்னியின் செல்வனா?
    X

    நாடோடி மன்னனா? பொன்னியின் செல்வனா?

    • இந்திய அரசியலமைப்பை மாற்றியமைப்பது தான் உண்மையில் பா.ஜ.க.வின் திட்டம் என்ற அய்யம் வலுப்பட்டது.
    • சூரத் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்று மாயமானார்.

    விஷன் 2047 என்றால் என்ன? 'விக்சித் பாரத்' எப்படி இருக்கும்? இந்தியா அந்தப் பொற்காலத்திற்கு எப்படிச்செல்லும்?

    நம்பிக்கைக் கதைகளை வடிவமைக்கும் போது விவரங்கள் அவ்வளவு முக்கியமில்லை, மகா ஜனங்களே!.

    அடித்துச் சொல்லுங்கள். உறுதியாகச் சொல்லுங்கள்! மக்கள் அதை நம்புவார்கள். ஊர்ச் சந்தையில் கல்நார் பல்பொடி விற்பனை செய்பவனின் டெக்னிக் இது. ஆயுசுக்கும் பல் சம்பந்தப்பட்ட கோளாறு வராமல் இருக்கும் என்று அடித்துச் சொல்லி வியாபாரம் நடத்துவான் அவன்.

    ஆத்தாடி.

    'அப் கி பார் சார் சௌ பார்'என்ற மோடி முழக்கம் முக்கியம் என்று கர்நாடக பா.ஜ.க. எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே மார்ச் 10-ந் தேதி கூறினார். அரசியலமைப்பைத் திருத்தியமைக்க 400க்கு மேற்பட்ட மிருகபல மெஜாரிட்டி மோடிக்குத் தேவை என்று விளக்கமும் கொடுத்தார் அவர்.

    ராகுல் காந்தி தீவிர தாக்குதலில் இறங்கினார். இந்திய அரசியல் சாசனத்தை மோடி ரத்து செய்து விடுவார் என்று எதிர்த் தரப்பு பீதியைக் கிளப்பியது.

    ஏற்பட இருக்கும் கடும் சேதாரத்தை உணர்ந்தது பா.ஜ.க. ஹெக்டேவின் 'தனிப்பட்ட பார்வை' என்று நிராகரித்தது. கட்சி அவரிடம் விளக்கம் கேட்டுள்ளதாகக் கூறினார் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா.

    ஆனால் அடுத்த ஒரு வாரத்தில் மீரட் பா.ஜ.க வேட்பாளர் அருண்கோவில். மற்றும் பைசாபாத் எம்.பி. லல்லு சிங் உள்ளிட்ட பலர் ஹெக்டேவின் கருத்தை எதிரொலித்தனர். இந்திய அரசியலமைப்பை மாற்றியமைப்பது தான் உண்மையில் பா.ஜ.க.வின் திட்டம் என்ற அய்யம் வலுப்பட்டது.

    "ஆர்.எஸ்.எஸ். இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது. பா.ஜனதா மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால் அரசியலமைப்பு மீண்டும் எழுதப்பட்டு இடஒதுக்கீடு நீக்கப்படும்!" என்றது இந்தியா கூட்டணி.

    ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் செப்டம்பர் 2015-க்கு முந்தைய அறிக்கையையும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதி மன்மோகன் வைத்யாவின் ஜனவரி 2017 அறிக்கையையும் எதிர்த் தரப்பு சுட்டிக்காட்டியது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அரசியல் சாசனத்தைத் திருத்தவே பா.ஜ.க. 400 சீட் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று ராகுல் காந்தி வாதிட்டார்.

    டேமேஜ் கண்ட்ரோல் மோடுக்குப் போன மோடி 'பரம்பரை வரி'யைக் கையிலெடுத்தார். 'உங்கள் செல்வத்துக்காக அவர்கள் வருகிறார்கள்'என்பதுதான் மூன்றாம் கட்டத் தேர்தலில் பிரதமரின் மிகப் பெரிய தேர்தல் பரப்புரை! 'பெண்களின் லாக்கர்களுக்குள் நுழைய விரும்புகிறது காங்கிரஸ்' என்பது மட்டுமே தொடர் வியூக உத்தி!

    மேற்படிப் பிரசாரம் மிகவும் ஏழ்மையான வாக்காளர்களிடம் பேசும்போது என்ன பயன் தரும்? பரம்பரை வரியைப் பற்றி பாமர வாக்காளர்களுக்கு என்ன பதற்றம்? இதில் இன்னொரு சிக்கல்! முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஜெயந்த் சின்ஹா, ஸ்வராஜ்யா தலையங்க இயக்குனர் ஆர்.ஜெகந்நாதன், ஐ.டி. செல் தலைவர் அமித் மாளவியா மற்றும் பல பா.ஜ.க. தலைவர்கள் கடந்த காலத்தில் பரம்பரை வரிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்கள். அந்த வீடியோக்கள் மீண்டும் உலா வரத் தொடங்கின.

    பா.ஜ.க.வின் கூட்டு சங்கடம் பன்மடங்காகப் பெருகியது. உடனே டிராக் மாறியது. "உங்களிடம் இரண்டு எருமைகள் இருந்தால் ஒன்றைப் பறித்து அவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள்!" என்று குஜராத்தில் பிரசாரம் செய்தார் மோடி. பாமர வாக்காளனுக்கு எருமைக் கணக்குப் புரியும் அல்லவா?

    அம்மா இந்திராகாந்தி செல்வத்தில் பாதி அரசாங்கத்திற்குச் செல்லக்கூடாது என்பதற்காகவே ராஜீவ் காந்தி பரம்பரை வரிச் சட்டத்தை ரத்து செய்தார் என்று குற்றம் சாட்டினார் மோடி.

    பரம்பரை வரி ஒழிப்பு நடைமுறைக்கு வந்தது மார்ச் 16, 1985 முதல்! இந்திரா காந்தி அக்டோபர் 31, 1984-ல் படுகொலை செய்யப்பட்டார். சட்டம் எந்தப் பின்னோக்கிய விளைவையும் கொண்டிருக்கவில்லை. எனவே பரம்பரை வரியை ரத்து செய்ததால் ராஜீவுக்கு எந்தப் பலனும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

    மீண்டும் ஒரு திசை வழி மாற்றம்! ஏப்ரல் 25-ல் மத்தியப் பிரதேசத்தில் உரையாற்றிய மோடி "வாரிசு வரியை மீண்டும் கொண்டுவருவதின் மூலம் மக்களின் வருமானத்தில் பாதிக்கும் மேல் காங்கிரஸ் பறிக்கும்!" என்றார். அதாவது இப்போது மோடி பிரசாரம் வருமானம் பற்றியது. நோட் திஸ் பாயிண்ட் மை லார்ட். பரம்பரைச் சொத்து அல்ல!! ஜஸ்ட் இன்கம்!

    "விலைமதிப்புள்ள பொருட்களைப் பற்றி 'எக்ஸ்ரே'நடத்தி, மக்களின் நகைகள் மற்றும் சிறுசேமிப்புகளைப் பறிமுதல் செய்யக் காங்கிரஸ் விரும்புகிறது. உங்களுக்கும் உங்களைக் கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டத்திற்கும் இடையே மோடி மட்டுமே பாதுகாப்புச் சுவர்."

    "முஸ்லிம் வாக்கு வங்கிக்காக எஸ்சி/எஸ்டி/ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறிக்கக் காங்கிரஸ் விரும்புகிறது. நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று காங்கிரஸ் கூறுகிறது."

    தராசு ஷ்யாம்

    "உங்களுக்கு இரண்டு வீடு இருந்தால் ஒரு வீட்டைப் பிடுங்கி முஸ்லீம்களுக்குக் கொடுத்து விடுவார்கள்!"

    சொத்து, நகை மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைப் பற்றி வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் சாமானிய வாக்காளர்களுக்கு என்ன கவலை! குந்தவே குடிசை இல்லை.. கோபுரத்தைக் கண்டது யார்?

    இதற்கிடையில் தேர்தல் களத்தில் பல மாற்றங்கள்! கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை காணாமல் போனது. சூரத் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்று மாயமானார். இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் பா.ஜ.க. விலேயே சேர்ந்தார்.

    முன்பே அகிலேஷ் உ.பி.யில் கடைப்பிடித்தது இந்த சூரத் பார்முலா. அவர் 2012-ல் பதவி இழக்க நேரிட்டபோது மனைவி டிம்பிளைக் களத்தில் நிறுத்தினார். அவருக்கு எதிரான பா.ஜ.க. வேட்பாளர் கடைசி நேரத்தில் காலை வாரினார். டிம்பிள் போட்டியில்லாமல் ஜெயித்தார்.

    ஆனால் அதன் பின் நோட்டா பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே இப்போது "அன் அப்போஸ்ட்" என்று அறிவிக்கும அதிகாரம் தேர்தலை நடத்தும் அதிகாரிக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறி.

    சூரத் இப்போது சுப்ரீம் கோர்ட்டில்! மோடி பரப்புரை செய்வதற்கு வசதியாக 2019-ல் பல கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முரட்டு தேசியவாதம் பற்றிய சொற்சித்திரம் வரையப்பட்டது. மோடியின் கரங்களில் தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது.

    புல்வாமா 2019 அதற்குக் கை கொடுத்தது. ஆனால் புல்வாமாவைப் புஸ்வாணம் ஆக்கினார் காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால். அவர் மீது ஈடியும் சி.பி.ஐ.யும் பாய்ந்தன. இந்த முறையும் 44 நாட்களில் ஏழு கட்டத் தேர்தல்! அதே 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'! ஆனால் இந்திய எல்லைக்குள் சீனா தொடர்ந்து ஊடுருவி வருவதால் மோடியின் முரட்டு தேசியவாதம் எடுபடவில்லை.

    அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளுக்கு தங்கள் நாட்டுப் பெயரைச் சூட்டி வரைபடம் வெளியிட்டது சீனா. சியாச்சின் பனிப்பாறை அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இப்போது அது சாலை அமைத்து வருகிறது.

    முன்னெப்போதும் இல்லாத அளவு வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களைக் கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் அக்னிவீர் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு! விவசாயிகள், ராஜபுத்திரர்கள், சத்திரியர்கள், தலித்துகள் போராடத் துவங்கி உள்ளனர்.

    எனவே மறுசுழற்சி செய்யப்பட்ட இந்துத்துவா பரப்புரை இப்போது மீண்டும் கைகொடுக்கும் என்று மோடி நினைக்கிறார். ஆனால் சாப்பாடா, சாமியா? எது முக்கியம், பிரதமர் அவர்களே!

    பா.ஜ.க.வில் நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியல் இருந்தாலும், நடைமுறையில் இரண்டு பேர் மட்டுமே! மோடி மற்றும் அமித்ஷா! வெளிப்படையாகச் சொன்னால் முழுக்க முழுக்க மோடி தான்!

    பீகாரில் தேஜஸ்வி, உ.பி மற்றும் அண்டை மாநிலங்களில் அகிலேஷ், மகாராஷ்டிராவில் தாக்கரே பவார்; கர்நாடகாவில் சித்தராமையா, டி.கே.எஸ்., தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி. பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரம் இனி காந்திகளை மட்டுமே நம்பி இல்லை.

    அதே நேரத்தில் ஏழு கட்டப் பரப்புரைக் களம் பிரியங்காவுக்கும் ராகுலுக்கும் பெரிய வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

    மூன்றாம் கட்டத் தேர்தலின் அதிரடித் திருப்பம் கர்நாடகாவில் ஏற்பட்டது. தேவேகவுடாவின் பேரன் ரேவண்ணா பாலியல் அத்துமீறல் தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் வெளிவந்தன. பா.ஜனதாவின் முக்கிய கூட்டாளி மதச் சார்பற்ற ஜனதா தளம். 2019-ல் கர்நாடகாவின் 25 தொகுதிகள் பா.ஜனதா வசம். ஜூன் 4-ந் தேதி என்ன கிடைக்கும்?

    ஆக, 370+ லட்சியம் எட்டமுடியாத நெடுங்கனவு! பா.ஜ.க. இப்போது வைத்திருக்கும் 303 இடங்களில் 32 இடங்களை இழந்தாலே தனிப்பெரும்பான்மை கேள்விக்குறி தான் ! கர்நாடகா அதற்குக் கட்டியம் கூறுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    திரும்பத் திரும்பப் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் நரேந்திரமோடி என்ன நாடோடி மன்னனா, அல்லது பொன்னியின் செல்வனா?

    Next Story
    ×