search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நட்பிற்கு ஏது அளவீடு?
    X

    நட்பிற்கு ஏது அளவீடு?

    • மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் சக உயிரினத்திடம் அன்புகாட்ட வேண்டும்.
    • உலகிலுள்ள உறவின்முறைகள் மற்றும் உணர்வின்முறைச் சொந்தங்கள் அனைத்திலும் உயர்ந்தது நட்பு.

    நல்ல நண்பர்களாலேயே உலகம் இன்னும் நலமாக இருக்கிறது என்பதை நம்பும் இனிய நண்பர்களே! வணக்கம்.

    "நட்பு" என்னும் மூன்றெழுத்துச் சொல்லுக்கு இணையாக, அன்பு, பண்பு, பாசம், கருணை, அறம், உறவு, காதல், ஈரம், வீரம், அறிவு, திறமை, உரிமை, எளிமை, இனிமை, புதுமை, நன்மை, என்று தமிழில் எத்தனை மூன்றெழுத்துச் சொற்களைக் கொண்டுவந்து வைத்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி உயரச் சிகரத்தில் நிற்கக் கூடிய உன்னத உணர்வு 'நட்பு" ஒன்றே!.

    "காதல்" என்னும் உணர்வை, நட்புக்குக் கொஞ்சம் நெருங்கிய உணர்வாகச் சொல்லலாம்; அதனால்தான் நமது சங்கத்தமிழில் நட்பு என்பது சில இடங்களில் காதலுக்கு மாற்றுச் சொல்லாகவும் இடம்பெற்றிருக்கிறது. ஆயினும் காதலுக்கும் மேம்பட்ட புனிதத்தன்மை உடையது நட்பு.

    நட்புக்கு எந்தக் கட்டுப்பாட்டு விதிமுறைகளும் கிடையாது. யாரும் எவர் மீதும் நட்புக்கொள்ளலாம்; காதலும் அப்படித்தான் என்றாலும் காதல் மலர்வதற்கு அடிப்படைத் தேவை ஒருவர் பெண்ணாகவும் ஒருவர் ஆணாகவும் இருக்க வேண்டும். ஆனால் நட்பு என்பது எல்லாத் தடைகளையும் தாண்டி, காற்றைப்போல எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றது.

    நட்பிற்கு ஆண் பெண் பேதம் கிடையாது; வயதில் இளையவர் மூத்தவர் பேதம் கிடையாது; வசதியில் ஏழை பணக்காரர் பேதம் கிடையாது; தோலில் கறுப்பு வெள்ளை நிற பேதம் கிடையாது; நகர கிராம வாழிட பேதம் கிடையாது; சாதி மத, இன, மொழி பேதம் கிடையாது; படித்தவர் படிக்காதவர் பேதம் கிடையாது; முட்டாள் புத்திசாலி பேதம் கிடையாது; தலைவர் தொண்டர் பேதம் கிடையாது; ஏன்? கடவுள் பக்தர் பேதம் கூடக் கிடையாது.

    நாயன்மார்களில் ஒருவராகிய சுந்தரர் என்னும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், சிவனாகிய இறைவனுடன் நட்பு என்னும் தோழமை நெறி மேற்கொண்டே பக்திப் பயிர் தழைக்கச் செய்தவர். ஏழைப் புலவனாகிய பிசிராந்தையாரும், சோழப் பேரரசனாகிய கோப்பெருஞ் சோழனும் காணாமலேயே நட்புப் பூண்டு காவிய உலகில் நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வையார் அதியமான், பாரி கபிலர் என்று இலக்கிய உலகில் வாழும் நட்பிற் சிறந்த பெருமக்களால் நட்பின் பேதமிலாப் பெருமை மேலும்மேலும் புகழ்விளங்கத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் சக உயிரினத்திடம் அன்புகாட்ட வேண்டும்; பிற உயிரினங்கள் என்னும்போது, புல்பூண்டு தொடங்கி, வள்ளல்பெருமான் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியதுபோல அனைத்து ஜீவராசிகள் மீதும் உயிர் இரக்கத்தோடு அன்பு காட்ட வேண்டும்.

    எல்லா உயிரினங்கள் மீதும் என்பது பரந்து விரிந்து பலதிறப்பட்டதாகத் தோன்றினால், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் சக மனிதன்மீதாவது அன்பு காட்ட வேண்டும்.

    அன்பு காட்டப் பல நிலைகள் மனிதர்களுக்குள் இயல்பாகவே இருக்கின்றன; ஒரு குடும்பத்தில் பிறந்தோர், அப்பா, அம்மா, மகன், மகள், அண்ணன், தம்பி, அக்காள், தங்கை எனும் உறவுமுறைகளால் அன்புகாட்டுவது இயல்பு. இக்குடும்ப நிலையே குடிமுறையாக மாறும்போது, தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி, அண்ணி, மாமா, அத்தை, தாய்மாமன், மைத்துனர், கொழுந்தனார், கொழுந்தியாள், நாத்தனார், மாமியார், மாமனார், மருமகள், மருமகன், பேரன், பேத்தி எனக் கிளைவிட்ட விழுதுவிட்ட உறவுநிலைகளில் அன்புப் பெருக்கெடுக்கிறது.

    குடிமுறைக்கு அப்பால், இனம், ஊர், சாதி, மதம், மொழி, தொழில் ஆகிய நிலைகளிலும் தொடர்புமுறைகள் பெருகும்போது அதற்கேற்ற இணக்கத்தோடு மனிதர்கள் அன்பு காட்டவும் உறவைப் பேணவும் முற்படுகின்றனர்.

    சுந்தர ஆவுடையப்பன்

    இந்த வகையில் குருதித் தொடர்பாலும் வாழிடத் தொடர்பாலும் மனிதர்கள் அன்புடன் இணங்கி வாழும் உறவுநிலைகள் வலுப்பெறுகின்றன. ஆயினும், இந்த வகையான நேர்நிலைத் தொடர்புக் கோடுகளைத் தாண்டி, குறுக்கும் நெடுக்குமாக, யார் எந்த நிலையிலும், எவரோடும் எப்போதும், எவ்விடத்தும் கொள்ளுவதே நட்பு என்னும் உணர்வுநிலை ஆகும்.

    மனிதர்களுக்கு இடையேயான உறவுநிலை உடம்பு ரத்தம் சதை நிலையிலானது; ஆனால் நட்பு என்பதோ உணர்வு நிலையில் உயிரோடு இயைந்த உன்னதத் தன்மையது. அதனால்தான் திருவள்ளுவரும், "உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்!"என்கிறார். ஆம்! மனிதர்களுக்கு இடையிலான உறவு உடம்பு சார்ந்தது என்றால், நட்பு என்பது உடம்பைத் தாண்டிய உயிரை அடிப்படையாகக் கொண்ட உணர்வு.

    உலகிலுள்ள உறவின்முறைகள் மற்றும் உணர்வின்முறைச் சொந்தங்கள் அனைத்திலும் உயர்ந்தது நட்பு. அதனால்தான் உலகர் அனைவருக்குமான மறைதந்த திருவள்ளுவர் நட்புக்கு என 4 அதிகாரங்கள் தந்துள்ளார்; நட்பு, தீ நட்பு, கூடா நட்பு, நட்பாராய்தல், பழைமை என்பவை அவை.

    நட்பு என்பது மனிதர்கள் கூடிமகிழ்ந்து சிரித்துக், களித்துக் கொண்டாடுவதற்கு மட்டுமன்று; தேவைப்பட்டால் நண்பர்கள் நெறி பிறழ்ந்து செல்லும் தருணங்களில் அவர்களை உணர்த்தித் திருத்தி வழிக்குக் கொண்டுவரும் நியாயக் கடமைகளும் உண்டு. நண்பர்களின் உணர்வு அலைவரிசை ஒன்றியதாகவே இருப்பதால், ஒருவருக்குத் துன்பம் என்றால், மற்றவர் கூறாமலேயே ஓடிச் சென்று உதவிநிற்பர். நண்பனுக்குத் தவிர்க்க முடியாத துன்பம் என்றால், அத்துன்பத்தைத் தாமும் பங்குபோட்டுக் கொண்டு அனுபவிப்பதே உண்மை நட்பு.

    நட்பு என்பது உயிர்சார்ந்த உணர்வு என்பதால், முகத்தளவில் சிரித்து உடலளவில் வெளிக்காட்டுவதல்ல அது; இதயத்தின் ஆழத்தில் இருந்து மகிழ்வதும் இடையறவு படாமல் அதனைப் பாதுகாப்பதுமே நட்பு. அதனால்தான் நட்புக்கொள்வதற்குமுன் தீயநட்பு எது? கூடா நட்பு எது? என நட்பை ஆராய்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

    சொல்வது ஒன்று செய்வது வேறாகச் சிலர் செயல்படுவர்; சிலர் முகமெல்லாம் சிரித்து இனிப்பாகப் பேசி, நெஞ்சமெல்லாம் வஞ்சம் கொண்ட நஞ்சாக இருப்பர்; சிலர் வில்லைப்போல வளைந்து நெளிந்து பணிவாக வணக்கம் செய்துவிட்டு, அதிலிருந்து புறப்படும் கூரிய அம்புபோலத் தீமைகள் செய்வதற்கு அஞ்ச மாட்டர்; கும்பிடும் கரங்களுக்குள்ளும் கொடிய குறுவாளை ஒளித்து வைத்திருக்கும் கொடியவர்களும் உண்டு ; காரியம் ஆகும்வரை நண்பரைப்போல நடித்துக், காரியம் முடிந்தவுடன் கழன்றுகொள்ளும் கயவர்களும் உண்டு.

    இப்படிப்பட்டவர்களை இனம்கண்டு ஒதுக்கிப் பண்புடையவர்களோடு நட்புக்கொள்ள வேண்டும். நம் நண்பர்களே நமது நற்செயல்களுக்கும் தீய செயல்களுக்கும் வெளிப்படையான சான்றுகள். நல்ல நூல்களைப் படிக்கப் படிக்க நமக்குள் நயமான சிந்தனைகள் பெருகுவதுபோல நல்ல நண்பர்களோடு பழகப் பழக ஒழுக்கமிகு பண்புகள் வளரும். பழகத் தொடங்கிய பின் நண்பர்கள் எல்லாரும் சமம்; அவர்களுக்குள் ஒப்பீடுகள் தோன்றினால் நட்புப் பழுதுபட்டுப் போகும்

    ஒரு காட்டில் ஒரு யானைக்குத் திடீரென நண்பர்களை உருவாக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்ற ஆசை தோன்றியது. நண்பர்களைத் தேடிக் காட்டிற்குள் சென்றது. முதலில் ஒரு குரங்கை அது பார்த்தது;" நாம் இருவரும் நண்பர்களாக இருப்போமா? என் நட்பை நீ ஏற்றுக் கொள்கிறாயா?" எனக் கேட்டது. உட்கார்ந்திருந்த கிளையில் இருந்து அடுத்த கிளைக்குத் தாவி அமர்ந்துகொண்ட குரங்கு சொன்னது," யானையே! நீ உருவத்தில் மிகப் பெரியதாக இருக்கிறாய்!. என்னோடு நண்பனாக இருந்தால் மரத்துக்கு மரம், கிளைக்குக் கிளை தாவ வேண்டும்.!. அது உன்னால் இயலாது; அதனால் நட்புக் கொள்ள முடியாது" என்றது.

    யானை அடுத்து ஒரு முயலைப் பார்த்தது;" நண்பனாக என்னை ஏற்றுக்கொள்வாயா?" என்று கேட்டது. "யானையே! யானையே! என்னைவிட உருவத்தில் பெரியவனாக நீ இருக்கிறாய்! என்னோடு ஓடிப்பிடித்து விளையாடவும் உன்னால் முடியாது; என்னுடைய வளைக்குள்ளும் வந்து விளையாட உன் உருவம் பெரியதடையாக இருக்கும்; அதனால் நட்புக்கொள்ள முடியாது" என்று முயலும் சொல்லி விட்டது.

    அடுத்துக், காட்டில் ஒரு குளத்தங் கரையோரமாக ஒரு தவளையைப் பார்த்து அதனிடம் நட்பு வேண்டுகோள் விடுத்தது யானை. தவளையோ, " உருவத்தில் நீ பெரிய அளவில் இருக்கிறாய்!; என்னைப் போல மளிச்! மளிச்! என்று தாவிக் குதித்துச் செல்ல உன் கனத்த உடம்பால் முடியாது; அதனால் நட்புக்கொள்ள உகந்த அளவு உனக்குக் கிடையாது!" என்று மறுதலித்து விட்டது.

    அதன் பின்னர் யானை, கரடி, நரி எனச் சில மிருகங்களிடமும் நட்பு வேண்டுகை வைத்தது; ஆயினும் அவையெல்லாம் யானை பெரியதாக இருக்கிறது என்கிற ஒற்றைக் காரணத்தைச் சொல்லி நட்பை ஏற்க மறுத்து விட்டன.

    சில நாட்கள் கழிந்தன. ஒருநாள் காலையில் காட்டில் உள்ள விலங்குகள் எல்லாம் அச்சத்துடன் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன. ஓடிக்கொண்டிருந்த ஒரு கரடியைப் பார்த்து என்ன விசயம்? என யானை கேட்டது. அந்தக் காட்டிலுள்ள புலியொன்று கடும் பசியோடு வேட்டைக்குக் கிளம்பி வந்து கொண்டிருப்பதாகவும், கண்ணில் அகப்படும் எந்த விலங்காக இருந்தாலும் அது கொன்று உண்டுவிடும் என்றும் கரடி கூறி ஓடியது .

    யானை அந்தப் புலியைத் தேடிக் காட்டுக்குள் சென்றது. பசியொரு பக்கம், எந்த மிருகமும் சிக்காத கோபம் ஒருபக்கமுமாகப் புலி கர்ஜனை செய்துகொண்டே வந்து கொண்டிருந்தது . வழி மறித்த யானை, " புலியே! புலியே! திரும்பிப் போய்விடு! அடுத்த உயிர்களை வேட்டையாடுவது பாவம்!" என்று அறிவுரை கூறியது. " யானையே! தடுக்காதே! போய்விடு! இல்லையென்றால் உன்னையே கொன்று விடுவேன்!" என்று புலி முழக்கமிட்டது.

    புலியைத் திருத்த நினைத்த யானை, தனது பெருத்த உருவத்தைத் திருப்பிவைத்துக் கொண்டு, தனது பின்னங்கால்களால் புலியை ஒரு எத்து எத்தியது!. அவ்வளவுதான்; புலி அந்தக் காட்டை விட்டே ஓடிவிட்டது. மகிழ்ந்த யானை ," புலி காட்டை விட்டே ஓடிவிட்டது!. எல்லாரும் வாருங்கள்" என்று அழைத்தது. எல்லா விலங்கினங்களும் யானை இருந்த இடத்திற்கு வந்து நின்றன;" இனி இங்குள்ள எங்கள் எல்லாருக்கும் நீ நண்பன்!" என்றன. "என்னுடைய உடல் அளவு பெரியதாக இருக்கிறதே!" என்று யானை கேட்டது. "நட்பிற்கு ஏது அளவீடு!?" என்று அசரீரியாய் வானம் பதில் ஒலித்தது.

    தற்போது, நவீன சமூக ஊடகக் காலத்தில் உலகத்தின் எந்த மூலையில் இருப்பவரோடும் முகநூல் வழியாகவும், வாட்ஸ் அப் வழியாகவும் அபரிமிதமாக நட்புப் பெருகி வழிந்து கொண்டிருக்கின்றன. என்றாலும் அதற்கிணையான கூடாநட்புச் செயல்பாடுகளும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

    நட்பாராய்தலே நட்பின் முதல் படியாக இருக்கட்டும்.

    தொடர்புக்கு- 9443190098

    Next Story
    ×