என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    செயின்ட் லூயிசு வளைவு!
    X

    செயின்ட் லூயிசு வளைவு!

    • கேட்வே வளைவைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு நினைவுச்சின்னத்தின் வளைவுத் தன்மையை பிரதிபலிக்கிறது.
    • புதுமையான அருங்காட்சியகம் அமெரிக்காவின் முன்னோடியான சாதனைகளைக் கொண்டாடக்கூடிய ஒன்றாகும்.

    அமெரிக்க நாட்டின் மிக உயரமான நினைவுச் சின்னம் கேட்வே ஆர்ச் அல்லது கேட்வே டு த வெஸ்ட் என்பது செயின்ட் லூயிசு, மிசூரியில் அமைந்துள்ளது, 630 அடி (192மீ) உயரமுள்ள இது அமெரிக்காவின் அதிஅற்புத இயந்திரவியல் பொறியியல்நுட்பம் கொண்ட நினைவுச் சின்னம் என்றால் அது மிகையாகாது. இதே போன்று இதன் அருங்காட்சியகமும் சிறப்பானது.

    செயின்ட் லூயிஸ் அமெரிக்காவின் மிக உயரமான நினைவுச் சின்னமாகவும், உலகின் மிக உயரமான வளைவாகவும் அமைகிறது. வளைவின் உச்சியில் ஒரு கண்காணிப்புத் தளம் உள்ளது. அமெரிக்காவின் மேற்குலக விரிவாக்கத்திற்கான நினைவுச் சின்னமாக இந்த வளைவு வடிவமைக்கப்பட்டது.

    செயின்ட் லூயிசு வளைவு மிசிசிப்பி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது நகரப் பகுதியில் உள்ள ஒரு சோலை. இது ஜெபர்சனின் தேசிய விரிவாக்க நினைவகத்தின் ஒரு பகுதியாகும். ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சனின் பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.

    பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் விரிவாக்கத்திற்குப் பொறுப்பான தாமஸ் ஜெபர்சன் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள், அரசியல்வாதிகளின் பங்களிப்புகளைக் கொண்டாடும் வகையில் 1935-ம் ஆண்டில் இந்தப் பூங்கா நிறுவப்பட்டது.

    கீழிருந்து பார்க்கும்போது தோன்றும் இதன் கம்பீரமான அழகு உண்மையிலேயே நம்மை பெருமூச்சு விடச்செய்கிறது. 630 அடியை டிராம் மூலம் உயர உயரக் கடந்து செல்லும்போது ஆச்சரியமானதும், பரபரப்பான காட்சிகளுக்கும் பஞ்சமே இருக்காது. இதன் மூலம் பெறும் அனுபவம் வாழ்வில் மறக்க முடியாத உற்சாகமானதொரு அனுபவமாகவே உறைந்திருக்கும்.

    கலை, இயற்கை, வரலாறு, சாகசம் என அனைத்தையும் ஒருங்கே கொண்டு சேர்க்கும் இந்த நினைவுச் சின்னப் பயணம் உத்வேகம் அளிக்கக்கூடியதொன்று. உயர உயரச் செல்லும் உன்னத அனுபவம் மனதை ஏதோ செய்யக்கூடியதுதான்.

    பூர்வீக அமெரிக்கர்கள், கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், அமெரிக்காவை எழுச்சியுறச் செய்த வெற்றியாளர்களின் கதையை அறிந்துகொள்ள நல்ல வாய்ப்பு இந்த அருங்காட்சியத்தில் அமைகிறது.

    ஆறு கருப்பொருள் கண்காட்சிப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த புதுமையான அருங்காட்சியகம் அமெரிக்காவின் முன்னோடியான சாதனைகளைக் கொண்டாடக்கூடிய ஒன்றாகும்.

    19-ம் நூற்றாண்டின் மாதிரிப் படகு பார்ப்பதில் ஒரு தனிப்பட்ட சுகமாகிப் போகிறது. அந்த துடுப்புப் படகு பயண அனுபவம் ஒரு தனி ரகமாக அமைந்துள்ளது. பகலோ அல்லது இரவோ, வளைவின் நுழைவாயிலில் உள்ள ஆறுகள், புனித லூயிசு நகரின் அற்புதமான வானூர்திக் காட்சிகள் மிகச் சிறந்தவையாக மக்களால் வாக்களிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    பவளசங்கரி

    தேர்ந்தெடுத்து உண்ணும் வகையில் பல்வேறு வகையான உணவு வகைகளுடனும், வித்தியாசமான சுற்றுலாப் பயணிகளுடன், ஒரு படகு இல்லையில்லை ஒரு பயணக் கப்பல் மூலம் செயின்ட் லூயிசின் நகரப் பகுதிகளோடு பல்வேறு காட்சிகளையும் கண்டுகளிக்கும் சுவையான அனுபவம் கொண்ட ஒரு தனித்துவமான பயணம்தான்.

    1964-ம் ஆண்டில் செயின்ட் லூயிசு ஆற்றுமுனையைப் பார்வையிட அழைத்து வரப்பெற்ற பெக்கி தாட்சர் மற்றும் டாம் சாயர் ஆகியோர், முதலில் வளைவின் நுழைவாயிலின் கட்டுமானத்தைப் பார்வையிடுவதற்காக மிக ஆர்வமாக ஆற்றுக்கு வருகை புரிந்தனர். நகரத்தின் அன்றைய காட்சிகளில் பல்வேறு மாற்றங்கள் நிரம்பியிருந்தாலும், அந்த வளைவின் காட்சிகள் எப்பொழுதும் போலவே இன்றும் அதே சுவையானதொன்றாகவே இருக்கின்றன. நுழைவாயிலில் உள்ள அருங்காட்சியகம் பார்வையாளர்களை இனிமையாக வரவேற்கின்றது!

    செயின்ட் லூயிசு, நுழைவாயிலும், புதிய மேற்கு நுழைவு வாயிலின் அருங்காட்சியகமும், கடந்த ஜூலை மாதம்

    2018-ல் திறக்கப்பட்டது. இது 380 மில்லியன் டாலர் செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மிகப்பெரிய திட்டமானது.

    அந்த புதிய அறையில் இருந்து, பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தின் பார்வையாளர் மையத்திற்கு மின்தூக்கி அல்லது படிகள் வழியாக இறங்கி வரவேண்டும். இங்கு உயரிய தொழில்நுட்பக் கருவிகள் மூலம் சிறப்பான விளக்கங்கள், கல்வி நடவடிக்கைகள், சிறப்பு நிகழ்வுகள் போன்றவைகள் புதிய காணொலிக் காட்சிகளின் மூலம் வழங்கப்படுகின்றன.

    இந்த புதிய அருங்காட்சியகத்தின் கருப்பொருள்கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த படுகின்றன. படிகள் வழியாகவும், எஸ்கலேட்டர்களின் வழியாகவும் சிறப்பாகப் புதுப்பிக்கப்பட்டிருக்கும் பெரிய புதிய கண்காட்சிப் பகுதிக்குச் செல்லலாம்.

    19-ம் நூற்றாண்டில் மேற்கின் விரிவாக்கத்திற்கு செயின்ட் லூயிசு நுழைவாயிலாக இருந்ததையும், அதன் பங்களிப்பையும், தனிநபர்களின் மரபுவழி, மரபுரிமைகள், பாரம்பரிய மரபுகள் ஆகியவற்றைப் பற்றிய பார்வையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கேட்வே வளைவும், அதன் கட்டிடக்கலை, பொறியியலாளர்கள் பற்றியும், அடுக்கு மாடிக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான வரலாற்றையும் கூட பார்வையாளர்கள் அறிய முடிகிறது.

    சித்திரங்கள், சித்தரிக்கப்பட்ட வரலாற்று விளக்கங்கள், முதன்மை மூல ஆவணங்கள், வரலாறு சார்ந்த கலையையும், கலைப்பொருட்கள் போன்றவற்றையும் காட்சிப்படுத்துகின்றன.

    நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் பார்வையாளர்கள் லூயிசு மற்றும் கிளார்க் ஆகியோரின் பயணத்தின் காணொலிக் காட்சிகளை பெரிய திரையில் பார்வையிட கிடைக்கின்றன.

    மின்னணு தொழில்நுட்பப் பயணங்கள் மூலம் காலனித்துவ வரலாற்றைப் பற்றியும் அறியலாம்.

    கேட்வே வளைவைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு நினைவுச்சின்னத்தின் வளைவுத் தன்மையை பிரதிபலிக்கிறது.

    இயற்கைக் கட்டிடக் கலைஞர் டான் கிலே, கண்ணைக் கவரும் நுட்பமான, பொருத்தமான அமைப்பை உருவாக்க வடிவியல் விதிகளையும், பாரம்பரிய இயற்கை வடிவமைப்புக் கூறுகளையும் பயன்படுத்தியுள்ளார். மைதானத்தின் அளவும், தாக்கமும், வடிவமைப்பும் உலகப் புகழ் பெற்ற வளைவிற்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் இன்றியமையாதவை ஆகும்.

    செயின்ட் லூயிசு வளைவு கட்டுவதற்காக சுற்று வட்டாரத்தில் இருந்த பல கட்டிடங்கள் இடிக்கப்பட்ட போதும் ஒரு தேவாலயம் மட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதுதான் பிரான்சின் புனித லூயிஸ் கிங்கின் பசிலிக்கா (பழைய கதீட்ரல்).

    வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த பழமையான தேவாலயம், செயின்ட் லூயிசு பசிலிக்கா உலகின் மிகவும் மதிக்கப்படும் தேவாலயங்களுள் ஒன்றாகும். இது கேட்வே வளைவின் தெற்கே உள்ள நதிக்கரையில் அமைந்துள்ளது.

    இந்தப் பழமையான தேவாலயம், மேற்குப் பகுதியில் கத்தோலிக்கத்தின் தொடக்கத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பதோடு, வளர்ந்துவரும் அமெரிக்கா முழுவதும் அனைத்து கலாச்சாரங்களுக்கும் நம்பிக்கை அடிப்படையிலான மதிப்புகள் பரவுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×