என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மவுனம் நமக்கு மகுடம் சூட்டும்
    X

    மவுனம் நமக்கு மகுடம் சூட்டும்

    • நேரம், தொலைவு, காலம் இவற்றினை அறிவியல் விஞ்ஞானம் கணித முறையில் கூறுகின்றது.
    • நாம் இருக்கும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும்.

    கடவுள் யார்? எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? பல உருவங்களில் கடவுளை வணங்குகிறார்கள். அப்படியானால் உண்மை ரூபம் என்ன? என்ற கேள்விகள் எழுந்து கொண்டு தான் இருக்கின்றன.

    இறைவன் ஜோதி ரூபன். ஒளி ரூபம் அதன் பிரதிபலிப்பாக பல ரூபங்களில் நாம் வழிபடுகின்றோம் என்பது பதில். இந்த ஒளியினைத் தான் அடி முடி காண முடியாதவர் இறைவன் என்கின்றோம்.

    இது விஞ்ஞான ரீதியான நிரூபணமாக இல்லையே. விஞ்ஞானம்-உலகம், பூமி, சூரியன், சந்திரன் என பேசுகின்றது. நிரூபிக்கின்றது. நேரம், தொலைவு, காலம் இதனை புள்ளி விவரமாய் சொல்கின்றதே. மீண்டும் எழும் சந்தேகம். நேரம், தொலைவு, காலம் இவற்றினை அறிவியல் விஞ்ஞானம் கணித முறையில் கூறுகின்றது.

    ஆக விஞ்ஞானத்தின் அடிப்படை கணக்கு. கணக்கிற்கு அடிப்படை எண்கள் தானே. இருக்கட்டும். எண்கள் வழியில் மிகப்பெரிய எண், மிகச்சிறிய எண் என வரையறுக்க முடியுமா என்ன? உதாரணம்-100 என்றால் அதனுடன் மற்றொரு 0 சேர்த்தால் அது 1000. அதுபோல மிகச்சிறிய எண்ணையும் வரையறுத்து கூற முடியாது. ஆக முடிவில்லாத (00) என்ற குறியீட்டில்தான் விஞ்ஞான வழி எண்களும் உள்ளன. இதனை

    'ஆதி அந்த மில்லாத என்றோ

    அடி முடி இல்லாத என்றோ'

    ஒளியினை கூறுவதும் சரியாகத் தானே இருக்கும். அந்த ஒளி ஒவ்வொருவர் உள்ளேயும் உள்ளது. அதனை ஒளிரச் செய்வோமாக.

    நமக்கு ஒரு அமைதியான வாழ்வு வேண்டுமென்றால்,

    நாம் இருக்கும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும்.

    சுவாசிக்கும் காற்று தூய்மையாக இருக்க வேண்டும்.

    பேசும் பேச்சும், எண்ணும் எண்ணங்களும், செய்யும் செயல்களும் தூய்மையாக இருக்க வேண்டும்.

    உண்ணும் உணவும் தூய்மையாக இருக்க வேண்டும்.

    உணவில் கூட தோஷங்கள் உள்ளன.

    உணவு யாரால், எப்படி, எங்கே செய்யப்படுகின்றது? எப்படி பரிமாறப்படுகின்றது? என்பது கவனம் செலுத்தப்பட வேண்டியவை ஆகும்.

    உணவு சமைப்பவர் ஆரோக்கியமானவராக, பசியின்றி இருப்பவராக, மன வேதனைகள் இன்றி இருப்பவராக இருப்பது அவசியம்.

    உணவு பரபரப்பின்றி, அள்ளி கொட்டிய காரம், புளி, உப்பு, மசாலா இன்றி - நிதான முறையில் சமைக்கப்பட வேண்டும்.

    சமைக்கும் இடம் சுத்தமாக தெய்வீகமானதாக இருக்க வேண்டும்.

    பரிமாறப்படும் உணவு அப்பொழுது சமைத்ததாக இருக்க வேண்டும். அன்புடன் பரிமாறப்பட வேண்டும். இவையெல்லாம் இன்றைய சூழ்நிலையில் சாத்தியமா? முடிந்த வரை சூழ்நிலையினை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

    உணவுப் பொருட்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருக்க வேண்டும். தவறான முறையில் சம்பாதித்த பொருளை சமைத்து உண்டால் தவறான எண்ணங்களே உண்பவருக்கு உண்டாகும்.

    உணவு சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருக்க வேண்டும். சண்டை சச்சரவுகள் இருக்க கூடாது.

    துரியோதனன் கிருஷ்ணரை விருந்திற்கு அழைத்தான். 56 வித உணவுகள் சமைக்கப்பட்டன. இருப்பினும், துரியோதனன் கிருஷ்ணரை எப்படி கைது செய்யலாம் என்ற தீய எண்ணத்தோடே இருந்தான். இதனை கிருஷ்ணர் அறியாமலா இருப்பார்? அவர் விதுரன் வீட்டிற்கு உணவு உட்கொள்ள சென்றார். திடீரென கிருஷ்ணர் வீட்டிற்கு வந்ததும் விதுரன் மகிழ்ச்சி கொண்டான். அந்த மகிழ்ச்சியில் வாழைப் பழத்தினை உரித்து பழத்தை கீழே போட்டு தோலை கிருஷ்ணருக்கு தவறுதலாக அளித்தான். விதுனர் தன் மனைவியினை கோபித்துக் கொண்டார். ஆனால் கிருஷ்ணரோ 'எனக்கு உள்ளன்புடன் ஒரு இலையோ, துளி நீரோ, ஒரு பழமோ, எது கொடுத்தாலும் அதுவே எனக்கு போதும்' என்றார்.

    கமலி ஸ்ரீபால்

    ஆக சாப்பிடுபவர் நன்கு உண்ண வேண்டும் என்ற உள்ளன்போடு சமைக்க வேண்டும். நல்ல வார்த்தைகள் அவ்விடத்தில் பேசப்பட வேண்டும். அதிகம் வேக வைத்தல், அதிகம் வறுத்தல், பழைய உணவு, கெட்டு போன உணவு இவை கூடவே கூடாது.

    ஆக உண்ணும் உணவு என்பது இத்தனை புனி தத்துவம் பெற்றது. கண்ட நேரத்தில், கண்ட இடத்தில், கண்டபடி உண்பதனை முதலில் தவிர்த்தாலே நம் ஆன்மீகப் பயணம் சிறப்பாக இருக்கும்.

    இந்த பிரபஞ்சம் நீ எதனை செய்கின்றாயோ அதனையே திருப்பி கொடுக்கும் என்பர். அது உங்கள் உடலுக்கும் பொருந்தும். அண்டத்தில் இருப்பது பிண்டத்தில் இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. ஆக உங்களின் உடலும் உங்கள் பிரபஞ்சமே. நீங்கள் அளவாய், முறையாய் உணவு அருந்தினால் உடலும் உங்களது உடல் ஆரோக்கியத்தினை சீராய் வைக்கும். நீங்கள் உணவினை முறையற்று கையாண்டால் ஆரோக்கியம் கெடும். இது பிரபஞ்ச விதி.

    சிலர் எதற்கெடுத்தாலும் பிறர் இடத்தில் 'சாரி', 'சாரி' என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஏன் இப்படி சொல்கின்றனர்? எந்த தவறும் செய்யாத பொழுது 'சாரி', 'சாரி' என்கின்றனர். தன் வாழ்விற்காக தன்னை மிகவும் இறக்கிக் கொள்கின்றனரோ? எதிராளியிடம் இப்படி ஒரு அடிமைத் தனம் தேவையா?

    இப்படி வாழ்ந்தால் உள்ளுக்குள் இருக்கும் ஒளி இருள் சூழ்ந்து விடுமே? அதன்பின் ஆன்மீக முன்னேற்றம் பெறுவது எப்படி? ஆகவே இன்று முதல் செய்யாத தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டாம்.

    செய்த தவறுக்காக உதட்டளவில் ஒப்புக்காக 'சாரி' சொல்வது வேண்டாம். மனம் உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

    சிலர் தன் உடல்நலம் என்பதில் சிறிதும் அக்கறை கொள்ள மாட்டார்கள். காலை உணவினையே மதியத்திற்கு மேல் எடுத்துக் கொள்வார்கள். டீ குடித்தே நாள் முழுவதும் கடத்துவார்கள். 'என்ன பெரிய வாழ்க்கை? நான் சாப்பிடாவிட்டால் என்ன?' என்பார்கள். தன் உடை, தோற்றம் இவற்றில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஒரு வித மன அழுத்தம், சோர்வு இருக்கும். இத்தகையோர் முதலில் தன் உடல்நலத்தில் முறையாக கவனம் செலுத்த வேண்டும். எல்லாம் துறந்த நிலை என்பது வேறு. அன்றாட வாழ்க்கை முறையில் வாழ்பவர் வேறு என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இல்லையெனில் உடல், மனம் இரண்டும் கெட்டு எந்த செயலிலும் முன்னேற முடியாது.

    வீட்டிலோ, அலுவலகத்திலோ நம் சுயமரியாதை குறையும் இடத்தில் இருந்து நகர்ந்து விடுவதும், தவிர்த்து விடுவதும் நல்லது. இல்லையெனில் ஒருவரின் வாழ்வினை, முன்னேற்றத்தினை நசுக்க இது ஒன்றே போதும்.

    ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு உலகம். ஒரு பிரபஞ்சம். மற்றவர்களோடு தன்னை நினைத்து பார்க்காமல் உங்களுக்குள்ளே உங்களைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும்.

    வெற்றியோ, தோல்வியோ நம் வாழ்வினை நாம் முறையாகத் தான் வாழ வேண்டும். இதில் பிறர் நம்மை பாராட்டலாம் அல்லது நம்மை தூற்றவும் செய்யலாம். அது பற்றிய கவலை கொண்டால் வாழ்வு சிதறி விடும். ஆகவே முறையாக மட்டுமே வாழ வேண்டும்.

    சுதந்திரம், சுதந்திரம் என்கின்றோமே எது சுதந்திரம்? சட்டம், வரைபாடுகள் இவற்றில் கட்டுப்பட்டு வாழ்வது தானே சுதந்திரம். இதனை சரியாக செய்யும் பொழுது அபரிமிதமான சுதந்திரத்தினை ஒவ்வொருவரும் உணருவர்.

    நமது கடமைகளை நாம் சரியாக செய்யத் தொடங்கினால் நம் திறமைகள், நேர்மை வெளிப்படும். பகையாளி கூட உங்களை மதிப்பார்.

    இருப்பினும் பிறர் பாராட்டினை எதிர்பார்த்து கடமையினைச் செய்தால் மனம் பேயாய் அலையும்.

    ஆகவே எதிர்பார்ப்புகளே வேண்டாம். அவை ஏக்கத்தினையும், ஏமாற்றத்தினையும் தரும்.

    அவரவர் கஷ்டங்களை கூச்சல் போட்டு கூறாதீர்கள். நாமே யோசித்து தகுதியான உதவியோ அல்லது ஆலோசனையோ பெற்று செய்யலாம்.

    பொறுத்துக் கொள்ளுங்கள். வேறு வழியே இல்லை. கோபம், ஆத்திரம், பொறுமை இவற்றில் வாழ்க்கையே இல்லை.

    ஏட்டிக்குப் போட்டியாக பேசுவது திறமையும் இல்லை. அறிவும் இல்லை.

    பல நேரங்களில் மவுனம் நமக்கு மகுடம் சூட்டும். ஒரு அரிசி மணி, ஒரு சிறு காகிதத் துண்டை கூட வீண் செய்யாதீர்கள். வாழ்வில் இதுவும் ஒரு வகை தவம் தான்.

    Next Story
    ×