என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சுற்றமும் நட்பும்!
- ஒவ்வொரு தனிமனிதனும் சமுதாயத்தில் கலந்து சமுதாய மனிதனாகிறான்.
- பட்டம் சுதந்திரமாக உயரே பறக்கட்டும்!” என்று கூறி, நூலையும் அறுத்துவிட்டான்.
சுற்றத்தோடு சூழ்ந்து வாழ முயற்சிக்கும் அன்புமயமான வாசகர்களே! வணக்கம்.
மனிதர்கள் பெரும்பாலும் தனித்தனியாகப் பிறக்கிறோம். தனித்தனியாகவே இறக்கிறோம். ஆனால் வாழும்போது மட்டும் கூடிவாழ வேண்டும் என்கிற நிலைக்கு ஆட்படுத்தப் படுத்தப்படுகிறோமே! அது ஏன்?.
ஆணும் பெண்ணுமாக அமையும் மனிதப் படைப்பில் ஆணோ பெண்ணோ ஒவ்வொரு தனிநபரும் தனித் தனியே வாழக்கூடாது என்று சமூக அமைப்பில் சட்டம் கிடையாது. தனித் தனியாக வாழ நினைப்பவர்கள் வாழ்ந்து கொள்ளலாம். ஆனாலும் மனிதனாகிலும் அல்லது மற்ற படைப்புக்களாகிலும் அவர்கள் தாமே சுயம்புவாய் எவருடைய தயவுமின்றித் தோன்றியவரில்லை. சமுதாயக் குடிமரபில் அவர்கள் புதிதாய்த் தோன்றிடும் புதிய கிளை.
மனிதன் தனியேதான் பிறந்தவன் என்றாலும் அவன் பிறப்பதற்கு முன்பே அவனுக்கு உற்றார், உறவினர், சுற்றத்தார் எனும் ரத்தவழிச் சொந்தங்கள் உருவாகி விடுகின்றனர். பிறந்த பிறகு நண்பர்களும் உறவுபோல ஒட்டிக் கொள்கின்றனர். தனிமனிதன் குடும்பமாகிக், குடும்பம் குடிவழியாகிக், குடிவழி சமூகமாகிறது. இப்படித்தான் ஒவ்வொரு தனிமனிதனும் சமுதாயத்தில் கலந்து சமுதாய மனிதனாகிறான்.
"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" எனும் கணியன் பூங்குன்றனின் தமிழ் முழக்கம், மண்ணில் தோன்றுகிற தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் உலகில் உள்ள ஒவ்வொரு ஊரும் சொந்த ஊரே! ஒவ்வொரு மனிதனும் சொந்த உறவினரே! என்று உலகளாவிய சமூக நல்லுறவிற்குப் புதுப்பாதை சமைக்கிறது.
'கேளிர்' என்னும் பூங்குன்றனின் உறவுரிமைச் சொல் ஆழமான பொருள்விரிவு உடையது. தனியனாகப் பிறக்கின்ற மனிதனுக்கு முதலில் உற்றார் உறுதுணையாக நிற்கின்றனர். உற்றார் என்றால் ரத்த சம்பந்தமுடையதால் சொந்தம் எனும் உரிமை கொண்டாடத் தகுதி உற்றவர்கள். அம்மா, அப்பா, பெரிய, சிறிய அப்பாக்கள், அம்மாக்கள், தாத்தா, பாட்டிகள், மாமா, அத்தைகள், உடன் பிறந்தோர், பிறகு தம்வயிற்றிற் பிறந்தோர் என ரத்த சம்பந்தம் கொண்டவர்களையெல்லாம் உற்றார் என்று குறிப்பிடலாம்.
உறவினர்கள் என்போர் குடிவழியில் தோன்றியவர்கள், பெண் கொடுத்தோ அல்லது எடுத்தோ உறவுமுறை ஆகிறவர்கள், தூரத்துச் சொந்தத்தினர் ஆகியோர் உறவினர்கள் ஆகின்றனர். இப்போதெல்லாம் சாதிமறுப்புத் திருமணங்கள் பெருகிக் கொண்டிருப்பதால் உறவினர் எனும் எல்லை சாதி மதம் கடந்ததாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
திருமண அழைப்பிதழ்களில் நிறைவாக ஒரு சொற்றொடர் கட்டாயம் இடம் பெற்றிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். "சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து மணமக்களை வாழ்த்தியருள வேண்டுகிறோம்" என்பதே அந்த வாக்கியம். 'உற்றார்' என்பதையும் 'உறவினர்' என்பதையும் பார்த்தோம்; அது என்ன 'சுற்றம்'?.
சுந்தர ஆவுடையப்பன்
ரத்த சம்பந்தம் உடையவர்கள் 'உற்றார்'; உறவுவழிச் சொந்தம் ஆகிறவர் 'உறவினர்'. இந்த உற்றாரும் உறவினரும், நமது வாழ்க்கையில் ஏற்படும் நன்மையிலும் தீமையிலும் நம்மைச் சுற்றியே நிற்கப் போகிறவர்கள் ஆகையால், இவர்களே 'சுற்றம்'.
நகரத்தின் ஓர் அடுக்ககத்தின் மொட்டை மாடியில் நின்று சிலர் பட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். பட்டம் விடுகிறவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உதவியாகப் பெரியவர்களும் உடன் நின்றிருந்தனர். பத்துப் பதினைந்து பட்டங்கள் வானவெளியில் பறக்கத் தொடங்கியிருந்தன. சிறுவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பட்டங்களை உயரே உயரே பறக்க விடுவதில் ஆர்வமும் கவனமும் செலுத்திக் கொண்டிருந்தனர்.
ஒரு சிறுவன், அவனது தந்தையின் கையில் இருந்த நூலைத் தன்னுடைய கையில் தருமாறு அடம்பிடித்துக் கொண்டிருந்தான். அவனது பட்டம் மற்ற பட்டங்களைப் போல உயரே சென்று பறக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. காற்றடிக்கும் விசைக்கு ஏற்ப, நூலை அங்கும் இங்குமாக அசைத்துச் செலுத்தினால்தான் பட்டம் மற்ற பட்டங்களோடு சிக்கிக் கொள்ளாமல் உயரே உயரே பறக்கும்.
ஆனால் சிறுவன் மிகுந்த பரபரப்போடு அப்பாவிடம் கூறினான், " அப்பா! பட்டத்திற்கு விடுதலை கொடுங்கள்! நம்முடைய பட்டம் எல்லார் பட்டத்திற்கும் மேலே பறக்க வேண்டும்!. இப்படி நூலை இழுத்து இழுத்துப், பறக்க விடாமல் பிடித்துக் கொண்டால் எப்படிப் பறக்கும்?. நூலை உங்கள் கையிலிருந்து விட்டு விடுங்கள்! அல்லது நூலை அறுத்தெறியுங்கள்! பட்டம் சுதந்திரமாக உயரே பறக்கட்டும்!" என்று கூறி, நூலையும் அறுத்துவிட்டான்.
அவ்வளவுதான். வானத்தில் பறந்து கொண்டிருந்த பட்டம் நிலைதடுமாறிப் பறக்கமுடியாமல், கீழ்நோக்கிச் சரிந்து, ஒரு மரக்கிளையில் பட்டுக் கிழிந்து நைந்தும் போனது. சிறுவன் அழத்தொடங்கி விட்டான். அவனை அமைதிப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்த அப்பா கூறினார்,
"மகனே கேள்! பட்டம் விடுவதில் ஒரு தத்துவம் இருக்கிறது. ஒரு பட்டம் வானில் பறக்கிறது என்றால், அது காற்றின் விசையினால்தான் பறக்கிறது. என்றாலும் அது எந்த விதமான இடையூறும் இன்றி உயரே உயரே மேலே மேலே பறப்பதற்கு, அதன் ஒருமுனையில் கட்டப்பட்டு மறுமுனையில் நம் கைகளில் இருக்கும் நூல்தான் காரணம் என்பதை மறவாதே!. "
அந்தப் பட்டம் தான் நீ என்று வைத்துக்கொள். உன்னை மேலே மேலே உயர்த்தி முன்னேற்றுவதற்கு என்னால் முடிந்த அளவுக்கு நான் பாடுபட வேண்டும். என் கையில் உன்னோடு பிணைக்கப்பட்ட நூல் இருக்கிறது. சேதாரமில்லாத உன் பறத்தலுக்கு நானும் செயலாற்ற வேண்டும்; நூலும் அறுந்து போகாமல் கெட்டியாக இருக்க வேண்டும். பட்டம் நீ என்றால், உன்னை உயரத்தில் பறக்க விடுவது நான் என்றால், உன்னையும் என்னையும் பிணைத்திருக்கக் கூடிய நூல் நமது சுற்றத்தினராகிய உற்றார் உறவினர் மற்றும் நமது நண்பர்கள் ஆகும் . சுற்றத்தார் எனப்படும் நூலின் உதவி அறுந்து போனால் பட்டத்தின் நிலை என்னவாகும் பார்த்தாயா?"
தந்தையின் தத்துவார்த்தக் கதையும் உறவுகளின் மேன்மையும் சிறுவனைச் சிந்திக்க வைத்தது. சுற்றிக் கரைகள் இல்லாத குளத்தில் தண்ணீர் ததும்பி நிற்காது; அதே போலச் சுற்றத்தினர் சூழ்ந்து அளவளாவி மகிழாத குடும்பத்தில் மகிழ்ச்சியும் தளும்பி நிற்பதில்லை என்கிறார் திருவள்ளுவர். குளத்திற்குப் பலமான கரை எப்படி அவசியயோ அதுபோலக் குடும்பத்திற்கு நல்ல சுற்றத்தினரும் அவசியம்.
ஒரு நகரத்தின் பாதுகாப்பிற்கு, அதனைச் சுற்றிப் பாதுகாப்புச் சுவர்களை எழுப்புவர். அதைப்போலச் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் சுற்றத்தினரால் சுற்றப்பட்ட பாதுகாப்பு உடையதாகத் திகழ்வது நல்லது. திருவள்ளுவர் ஒவ்வொரு குடும்பமும் சுற்றம் தழுவி வாழவேண்டும் என்பதற்காகத் தான் 'சுற்றந்தழாஅல்' என்னும் தனி அதிகாரம் படைத்தார்.
வேளாண்மைத் தொழிலை மட்டுமே நம்பியிருந்த கிராமியம் சார்ந்த மக்கள் நிலை இன்று மாறியிருக்கிறது. நகர்மயமாதலில் பல்வேறுபட்டத் தொழில்களை மேற்கொள்ளும் நிமித்தம் மனிதர்கள், உற்றார் உறவினர் என்னும் சுற்றுச் சூழலைப் பிரிந்து வாழும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கின்றனர். எந்த ஊர் பணிவழங்கி, தொழில் வழங்கி, வாழும் வசதிகளை வழங்குகிறதோ அதுவே காலப்போக்கில் சொந்த ஊர் எனும்படிக்கு மக்கள் மனநிலை மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஓர் அராபியக் கதை. ஓர் ஊரில் ஒரு வீட்டில் தந்தையும் மகளும் மட்டும் வசித்து வருகின்றனர். அன்றைக்குப் பகல் விருந்தாக ஒரு முழு ஆட்டையும் சமைத்துவிடுவது என்று முடிவெடுத்த தந்தை அப்படியே செய்து விருந்தைத் தயார் செய்து விட்டார். தானும் மகளும் என இருவர் மட்டும் வாழும் வீட்டில் எப்படி இவ்வளவு அதிகமான உணவை உண்ணுவது?.
மகளை அழைத்தார், " விருந்து தயார் மகளே! இன்றைக்கு நம்மோடு மதிய விருந்து சாப்பிடுவதற்காக, வெளியில் சென்று, நமது வீட்டைச் சுற்றியுள்ள நமது உற்றார் உறவினர் அனைவரையும் அழைத்து வா! மகிழ்ச்சியோடு உணவுண்போம்!" என்றார்.
வீட்டை விட்டு வெளியில் வாசலுக்கு வந்து நின்று கொண்ட மகள், ஒரு புதுவிதமான உத்தியைக் கையாண்டார், "ஆபத்து! ஆபத்து! உள்ளே வீட்டின் சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்கும் போது என் தந்தையின் மீது நெருப்புப் பற்றிக்கொண்டது!,. எனது தந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். யாராவது உள்ளே சென்று காப்பாற்றுங்கள்!" என்று கூக்குரலிட்டாள்.
அவளின் கூக்குரலைக் கேட்டு வீடுகளை விட்டு வெளியே வந்த அவளது சொந்த உறவினர்களில் பலர், நெருப்பில் இருப்பவரைக் காப்பாற்றுவதற்கு மனமில்லாமல், திரும்ப வீட்டுக்குள் சென்று கதவை நன்றாகப் பூட்டிக் கொண்டனர். சில உறவினர்களோ வேக வேகமாகச் சொந்த வீட்டின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு நகரத்தை நோக்கித் தப்பிச் சென்றனர். வெகு சில உறவினர்கள் மட்டுமே உண்மைப் பதற்றத்துடன், என்ன! ஏது! என்று கேட்டுக்கொண்டே அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் ஓடினர். அந்தத் தெரு வழியாக அப்போது சென்றுகொண்டிருந்த ஒருசில புதிய வழிப்போக்கர்களும் உதவும் பரோபகாரச் சிந்தனையுடன் அவளின் வீட்டுக்குள் புகுந்தனர்.
வீட்டிற்கு உள்ளே வந்தவர்கள் அனைவரும் பதற்றத்துடனும் பரபரப்புடனும் காணப்பட்டனர். அவர்களை அன்பு கனிந்த முகத்துடன் வரவேற்பறையில் நின்றுகொண்டு வரவேற்றார் பெண்ணின் தந்தை. வந்தவர்கள்," எங்கே சமையலறை? எங்கே நெருப்பு? உங்களுக்கு ஒன்றுமில்லையே?" என மிகுந்த பரபரப்புடனும் பரிவுடனும் விசாரித்தனர்.
ஏதும் புரியாமல், என்ன நடந்தது என்று தெரியாமல் மகளைப் பார்த்தார் அப்பா." இவர்கள்தான் அப்பா நமது உண்மையான சுற்றத்தினர், உற்றார் உறவினர். இவர்களுக்கு விருந்து பரிமாறி மகிழ்வோம்!" என்று கூறிய மகள், வந்திருந்தவர்களிடம்," மன்னிக்கவும்! இங்கு தீ விபத்து எதுவும் நடக்கவில்லை!. எங்களுக்கு ஏதாவது நடந்துவிட்டால் யாரெல்லாம் ஓடிவந்து உதவுவார்களோ அவர்கள்தாம் உண்மையான உற்றார் என நான் நினைத்தேன். அப்படிப் பார்த்தால் நீங்கள் அனைவரும் எங்கள் சுற்றத்தினர். எங்கள் விருந்தில் அன்போடு கலந்து கொள்ளுங்கள்" என்றாள்.
காலம் புதிய புதிய குடும்பக் கோட்பாடுகளோடும் உறவுக் கோட்பாடுகளோடும் பயணப்படத் தொடங்கியிருக்கின்ற இன்றைய சூழ்நிலைகளில், ரத்தச் சொந்தம், உறவுச் சொந்தம், சுற்றச் சொந்தம் எல்லாம் கடந்து, தற்போது நட்புச் சொந்தமே பெருஞ் சொந்தமென ஆகும் காலம் கருவாகியிருக்கிறது.
"யாவரும் கேளிர்!"
எனும் கணியனின் வாசகமும் கனிந்திருக்கிறது.
ஏற்போம்! புதிய சுற்றம் படைப்போம்!
தொடர்புக்கு 9443190098.






