என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கனவு ஒரு நாள் நனவாகும்!
- கலாம் சுற்றுப்புறச்சூழலின் மேம்பாட்டிற்காகப் பெரிதும் உழைத்தார்.
- ஜனாதிபதி பதவியில் அவர் ஆற்றிய செயல்கள் பல.
இந்தியாவின் தலைசிறந்த மாமனிதருள் ஒருவராகத் திகழ்ந்ததோடு இளைஞர்களுக்கு 'கனவு காணுங்கள், அதை மெய்ப்பிக்க உழையுங்கள்' என்ற தாரக மந்திரத்தைத் தந்தவர் மக்கள் தலைவராகத் திகழ்ந்த பெரும் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். இவரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வதே இளைஞர்கள் வெற்றியின் முதல் படியில் காலடி வைத்தது போலாகும்.
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் படகு ஒன்றின் சொந்தக்காரராகத் திகழ்ந்த ஜைனுலாப்தீன் மற்றும் அவரது மனைவி ஆஷியம்மாவிற்கு ஐந்தாவது மகனாக 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி பிறந்தார்.
மிக வறுமையான பின்னணி. ஆகவே குடும்பத்திற்கு வருமானம் சேர்க்கும் வகையில் பள்ளி நேரம் போக மற்ற நேரத்தில் வேலைக்குச் சென்றார். செய்தித்தாள்களை அன்றாடம் விநியோகம் செய்யத் தொடங்கினார்.
ராமேஸ்வரத்தில் தொடக்கப்பள்ளியில் தன் கல்வியை ஆரம்பித்த கலாம், திருச்சிக்குச் சென்று 1954-ம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தார். 1955-ல் சென்னை எம்.ஐ.டி.-யில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்து முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.
படைப்பாற்றல் திறனுடன் கூடிய அதிக உழைப்பு, இன்னும் அதிக உழைப்பு - இதற்கு இலக்கணமாக இளமையில் இருந்தே திகழ்ந்தார் கலாம். முடிக்கவே முடியாத ஒரு திட்டத்தைக் கொடுத்த ஒரு முதல்வர் அதை இரண்டு நாளில் முடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை விதித்தார். இராப்பகலாக உழைத்து இரண்டே நாட்களில் அதை முடித்து சாதனையை நிகழ்த்தினார் கலாம்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானியாகச் சேர்ந்த கலாம் ஒரு ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார். விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட கலாம் இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோளை ஏவும் ஊர்தியைச் செய்யும் திட்டத்தின் இயக்குநர் ஆனார். சாட்டிலைட் லாஞ்ச் வெஹிகிள் எனப்படும் இந்த ஊர்தி உருவாக்கப்பட்டு, ரோஹினி என்ற செயற்கைக் கோளை புவி ஓடுபாதையில் 1980-ல் வெற்றிகரமாக ஏவியது.
கலாம் சுற்றுப்புறச்சூழலின் மேம்பாட்டிற்காகப் பெரிதும் உழைத்தார். டிஆர்டிஓவின் தலைவராகத் திகழ்ந்த கலாம் அக்னி ஏவுகணையை வடிவமைப்பதில் ஈடுபட்டார். 20 மீட்டர் நீளமுள்ள இந்த சாலிட் புரொபல்ட் பாலிஸ்டிக் மிஸைல் 16 டன் எடையைக் கொண்டது. இதன் பே- லோட் 1000 கிலோ ஆகும். இதைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
வீலர் என்ற தீவு ஒரிசாவின் தெற்குக் கடற்கரையில் பிதர்கணிகா காடுகளுக்கு அருகில் உள்ளது. இதுவே அக்னி –| ஏவுகணையைச் சோதனை செய்ய வேண்டிய இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தக் கடற்கரை பிரதேசத்திற்கு அருகில் உள்ள கடலில் மிகவும் அரிதாகக் காணப்படும் ஒருவகை ஆமைகள் ஏராளமாக உள்ளன.
இவற்றை ஆலிவ் ரிட்லி டர்டில் என்பர். நம்ப முடியாத தூரத்தில் இருந்து பயணப்பட்டு அவை இங்கு வருவது வழக்கம். ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கு வந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் குஞ்சு பொறிக்கும் ஒரு வகை விசேஷமான ஆமைகள் இவை. நவம்பரில் வரும் இவை மார்ச் முடிய இங்கே தங்கும். குஞ்சுகள் பொறிக்கப்பட்டவுடன் திரும்பித் தமது இடம் நோக்கிச் செல்லும்.
ஆகவே சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் அப்துல் கலாம் அவர்களிடம் மார்ச்சுக்கு பிறகு அக்னி ஏவுகணை சோதனையை வைத்துக் கொள்ளலாம் என்று யோசனை கூறினர். சுற்றுப்புறச் சூழலில் பெரிதும் ஆர்வம் கொண்ட அப்துல் கலாம் உடனே இந்த யோசனையை ஏற்றுக் கொண்டார்.
உடனடியாக ஒரு ஆணையைப் பிறப்பித்தார். அதன்படி இந்தத் தளத்தில் இருந்த அனைத்து விஞ்ஞானிகளும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துக் கொண்டு தங்கள் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.
ஒருவிதமான மின் விளக்கும் எரியவிடப்படவில்லை. ஏனெனில் அவை ஆமைகளுக்கு தொந்தரவாக இருக்கும் என்று. சுமார் ஐந்து மாதங்கள் இப்படி மெழுகுவர்த்திப் பணி தொடர்ந்தது.
விசேஷ விருந்தாளிகளான இந்த ஆமைகள் தமது சந்ததி விருத்திப் பணி முடித்து மீண்டும் சொந்த இடம் நோக்கிப் பயணப்பட்டபின் ஆய்வு வேலைகள் முழு வீச்சில் நடைபெற ஆரம்பித்தன.
1999-ம் ஆண்டு ஏப்ரல் 11 என்ற – நிர்ணயிக்கப்பட்ட தேதியில் சோதனை நடந்தது; வெற்றி பெற்றது. இது 2004-ம் ஆண்டு உரிய முறையில் நமது ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. அடுத்து பிரித்வி ஏவுகணைத் திட்டத்தையும் அவர் வெற்றிகரமாக்கினார். மக்கள் அவரை ஏவுகணை மனிதர் என்று செல்லமாகப் போற்றி அழைக்கலாயினர்.
பொக்ரான் அணுகுண்டு வெடிப்புத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டு ஒவ்வொரு திட்டத்தின் வெற்றிக்காகவும் கடுமையாக உழைத்தார் கலாம். இந்திய அரசாங்கம் 1999 நவம்பரில் முதன்மை அறிவியல் ஆலோசகர் பதவியை அவருக்கு வழங்கியது. ஆலோசகராக 2001 நவம்பர் வரை இருந்த அவர் இந்தியா விண்வெளித் துறையில் முன்னேற பல்வேறு ஆலோசனைகளை அரசுக்கு வழங்கினார். அவரது தளராத உழைப்பும் அதன் மூலம் நாட்டிற்கு அவர் ஆற்றிய பணியும் பெரிதும் அனைவராலும் போற்றப்பட்டது. பல்வேறு விருதுகள் அவரை வந்தடைந்தன. 1981-ல் பத்மபூஷண் 1990-ல் பத்மவிபூஷண் விருதுகளைப் பெற்ற கலாம் பாரதத்தின் மிக உயரிய கவுரவ விருதான பாரத ரத்னா-வை 1999-ல் பெற்றார்.
இதைத் தொடர்ந்து அவர் இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002 ஜூலை 25-ம் நாள் தேதி முதல் 2007 ஜூலை 25 முடிய அவர் ஜனாதிபதியாகத் திகழ்ந்தார். அவரை மக்கள் தலைவர் என அனைவரும் அன்புடன் அழைத்தனர்.
ஜனாதிபதி பதவியில் அவர் ஆற்றிய செயல்கள் பல. நாடு முழுவதும் பயணப்பட்டு ஆங்காங்கே மாணவர்களையும் இளைஞர்களையும் அவர் ஊக்குவித்தார். அவர் சென்ற இடமெல்லாம் அவரது ஆளுமையைக் காட்டும் பல்வேறு சுவையான சம்பவங்கள் நடைபெற்றன.
கலாம் அவர்களின் வாழ்க்கையின் முக்கிய மையமாக அமைந்தது அவர் மாணவர்களையும் இளைஞர்களையும் கவர்ந்து அவர்களை ஊக்குவித்தது தான்!
பல்கலைக் கழக விழா ஒன்றில் பங்கேற்பதற்கு ஜனாதிபதி கலாமிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் ஏற்றார். மாணவர்களைச் சந்திப்பது என்றால் அவருக்குத் தான் தனிப்பட்ட உற்சாகம் உண்டே! விழா மேடையில் ஜனாதிபதி அமர்வதற்காக சற்று பெரிதாக இருந்த விசேஷ நாற்காலி போடப்பட்டிருந்தது. கலாம் அதில் அமர மறுத்து விட்டார். துணைவேந்தரை அதில் அமருமாறு கூறி அவரது நாற்காலியில் தான் அமர்வதாகக் கூறினார். துணைவேந்தரோ அதற்கு மறுத்து விட்டார். உடனடியாக மற்றவருக்குப் போடப்பட்டிருந்தது போன்ற நாற்காலி வரவழைக்கப்படது. அதில் அமர்ந்தார் கலாம். விழா தொடங்கியது. எளிமையிலும் எளிமை என்பதற்கு அவர் ஒரு இலக்கணமாக விளங்கினார்.
அடுத்த ஜனாதிபதியாக ஆகப் போகிறார் என்று நிச்சயமாகி விட்ட நிலையில் அவர் ஒரு பள்ளியில் உரையாற்றச் சென்றார். அங்கு பவர் கட்! கலாம் அசரவில்லை. நானூறு மாணவர்களுக்கு மத்தியில் சென்ற அவர் தன்னைச் சுற்றி நெருங்கி வருமாறு அனைவரையும் அழைத்தார். அனைவரும் அப்படியே வந்தனர். உத்வேகமூட்டும் உரையை அவர் நிகழ்த்த மாணவர்கள் மனம் மிக மகிழ்ந்தனர்.
டி.ஆர்.டி.ஓ-வில் அவர் பணியாற்றிய போது அவரது உதவியாளர்களுள் ஒருவருக்கு வேலைப்பளு காரணமாக தன் மகனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போனது. அன்று மாலை பொருட்காட்சிக்குத் தன் மகனைக் கூட்டிக் கொண்டு போவதாக அவர் சொல்லி இருந்தார். போகமுடியவில்லை. இதை அறிந்த கலாம் அவரது வீட்டிற்குச் சென்று அவர் மகனைத் தானே பொருட்காட்சிக்குக் கூட்டிச் சென்று விட்டார். குடும்பங்களின் மூத்த அண்ணன் அவர்!
சைவ உணவுக்காரர். பிரம்மச்சாரி. மக்களின் தலைவர் என்று அழைக்கப்பட்டவர்.
ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவரிடையே 2015 ஜூலை மாதம் 27-ந் தேதி உரை ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருந்த போது அவர் மாலை சுமார் 6.30 மணியளவில் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது உடல் ராமேஸ்வரத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்களும் நல்லடக்க நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவர் எழுதிய நூல்கள் பல. அவற்றுள் முக்கியமானது அக்னிச் சிறகுகள்.
அவர் இளைஞர்களுக்குக் கொடுத்த முக்கிய உத்வேகமூட்டும் உபதேசம் :-
"கனவு காணுங்கள். தேசம் மேம்பட, நீங்கள் மேம்பட கனவு காணுங்கள். படைப்பாற்றலுடன் தீவிரமாக உழைத்து அதை மெய்ப்பித்து நனவாக்குங்கள்."
இதன்படி வாழ்ந்து காட்டி நாட்டின் உயரிய குடிமகனாகத் திகழ்ந்த அவர் பொன்மொழி பொய்யா மொழி அன்றோ!
தொடர்புக்கு:- snagarajans@yahoo.com






