என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

முதுமையில் சோரியாசிஸ் நோயும், தீர்வுகளும்...
- பல மூலிகைகள் சோரியாசிஸ் நோய்க்கு பலனளிக்க கூடியதாக உள்ளன.
- பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகை மஞ்சள்.
பேரன் பேத்திகளோடு கொஞ்சி விளையாடும் முதுமைப் பருவத்தில், அவர்களை தொடுவதற்கே சங்கடமான சூழ்நிலையை உண்டாக்கி உடலோடு மனதையும் புண்படுத்தும் நோய்களாக இருப்பவை தோல் சார்ந்த நோய்கள். அடுத்த தலைமுறை சந்ததிகளுடன் இனிதாக பயணிக்க ஆரோக்கியம் அவசியம். ஆனால் அடுக்கடுக்கான மருந்து மாத்திரைகள், அவற்றிற்கு கட்டுப்படாத நோய்நிலைகள் என்று வாழ்வை நலமாக்க முதுமையில் போராட வேண்டியதாய் இருக்கிறது. அந்த நலவாழ்விற்கான போராட்டத்தில் தோல் நோய்கள் கூடுதல் துயரம் தான்.
அத்தகைய தோல் நோய்களில் சருமம் மட்டுமின்றி, தலை முதல் நகம் வரை எந்த உறுப்பு பாகுபாடும் இன்றி அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் நோய்நிலையாக இருப்பது 'சோரியாசிஸ்' எனும் 'காளாஞ்சகப்படை'. உலக அளவில் கிட்டதட்ட 3 சதவீதம் பேருக்கு இந்த சோரியாசிஸ் உள்ளது. அதுவும் அறுபதைக் கடக்கும் முதுமையில் கிட்டத்தட்ட 15 சதவீதம் பேருக்கு இந்த நோய்நிலை வருத்தத்தை உண்டாக்க கூடியதாக உள்ளது.
சோரியாசிஸ் நோயானது உடலின் நோய் எதிர்ப்புசக்தியின் தானியங்கு செயல்பாட்டால் உண்டாவதாக உள்ளது. இது பருவநிலை மாறும் போது அதிகரிப்பதும் குறைவதுமாக மாறி மாறி தோன்றக்கூடியது. முதுமையில் திரும்ப திரும்ப உண்டாகி மனதளவில் பாதித்து, நாளடைவில் சோரியாசிஸ் சார்ந்த மூட்டுவலியை உண்டாக்கி மூட்டுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
முதுமையில் அதிகம் பேருக்கு காணும் சோரியாசிஸ் நோயில் தோல் தடித்து சிவந்து, வெள்ளி போன்ற வெள்ளை நிற செதில்கள் காணும். அவ்வப்போது அவை உதிரக்கூடும். சிலருக்கு சிறிய புள்ளி போன்ற ரத்தகசிவும் உண்டாகும். இத்துடன் பெரும்பாலும் நமைச்சலும் உண்டாகக்கூடும். கெரட்டினோ சைட்கள் எனும் ஒருவகை செல்களின் அதிகப்படியான பெருக்கமும், அசாதாரண வளர்ச்சியும், தோலின் அழற்சியும் இந்நோய்க்கு முக்கிய காரணமாக உள்ளன.
நூற்றுக்கணக்கான தோல் நோய்கள் இருக்கக்கூடிய சூழலில் சோரியாசிஸ் மட்டும் அதிக முக்கியத்துவம் பெறக் காரணம், இந்நோய் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பல்வேறு தொற்றா நோய்களோடு தொடர்புடையது என்பது தான். இதனால் உண்டாகும் பின் விளைவுகளும் அதிகம். சோரியாசிஸ் நோய்க்கும் மாரடைப்புக்கும் கூட நெருங்கிய தொடர்புடையதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுவது வருத்தம் தான்.
சித்த மருத்துவக் கூற்றுப்படி வாதமோடு சேரும் கபம் தோலினை பாதிக்கும் போது உண்டாகும் நோய்நிலையாக உள்ளது சோரியாசிஸ். வாதகபம் மற்றும் கபவாதம் ஆகியவற்றின் கூட்டால் உண்டாகும் நோய்நிலைகள் தீருவது கடினம் என சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. அதன்படி இது முழுமையாக தீராமல் தொடர்ந்து வந்து மன உளைச்சல் தரும். இந்நிலையில் வாதம், கபம் இரண்டையும் தணிக்கும் மூலிகை மற்றும் மருந்துகள் இந்நோய்க்கு பலன் தரக்கூடியன.
சித்த மருத்துவ மூலிகைகளில் சீந்தில், பறங்கிப்பட்டை, நீரடிமுத்து, சேராங்கொட்டை, அமுக்கரா கிழங்கு, வெட்பாலை, அவுரி இலை, கருஞ்சீரகம், கார்போகரிசி, மஞ்சள் போன்ற பல மூலிகைகள் சோரியாசிஸ் நோய்க்கு பலனளிக்க கூடியதாக உள்ளன.
தோல் நோய்களுக்கு பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகை 'மஞ்சள்'. இதில் உள்ள 'குர்குமின்' சோரியாசிஸ் நோயில் தோலில் அழற்சியை ஏற்படுத்தும் கப்பா-பி எனும் வேதிக்காரணியை தடுக்கும் தன்மை கொண்டதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. சோரியாசிஸ் நோய்க்கு எடுக்கும் மருந்து மாத்திரைகளுடன், தினசரி 5 கிராம் மஞ்சளை பாலில் கலந்து எடுக்க நோயின் தன்மை குறையும். சோரியாசிஸ் நோயின் பின் விளைவுகளான மூட்டு வீக்கம் ஏற்படாமலும் தடுக்க உதவும்.
சோ.தில்லைவாணன்
சோற்றுக்கற்றாழை மூலிகை சோரியாசிஸ் நோயில் அதிக நன்மைகளை தரக்கூடிய இயற்கை கொடுத்த வரம். இதில் உள்ள 'ஆந்த்ரோகுயினோன்' வேதிப்பொருள் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உடையது. கற்றாழையில் உள்ள 'சாலிசிலிக் அமிலம்' எனும் அழற்சியைப் போக்கும் வேதிப்பொருள் சோரியாசிஸ் நோயில் உதிர்ந்த செதில்களுக்கு புத்துணர்ச்சி தரவும், தோலின் தேய்மானத்தை சரி செய்யவும் உதவும்.
சித்த மருத்துவ மூலிகையான பரங்கிப்பட்டை தோல் நோய்களைப் போக்கும் பெரும்பாலான சித்த மருந்துகளில் சேருவது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள 'குர்செட்டின்' எனும் வேதிப்பொருள் சோரியாசிஸ் நோயில் உண்டாகும் தோல் தடிப்பினைக் குறைத்து இயல்பு நிலைக்கு திரும்ப உதவும். மேலும் அதில் உள்ள இயற்கை ஸ்டீராய்டு வகை வேதிப்பொருள் தோலில் காணும் அழற்சியை போக்கி நோயின் தீவிர தன்மையைக் குறைக்க உதவும். சித்த மருந்தான பறங்கிப்பட்டை சூரணத்தை பாலில் கலந்து எடுத்துக்கொள்ள மேற்கூறிய நன்மைகளைத் தரும். அதே போல் அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கான கருஞ்சீரகம் சோரியாசிஸ் நோய்நிலையில் பலன் தரக்கூடியது. இதனை கொண்டு செய்யப்படும் 'கருஞ்சீரகத் தைலம்' சோரியாசிஸ் நோய்நிலையில் மேலுக்கு தடவி வர நல்ல பலன் தரும்.
இதில் உள்ள 'தைமோகுயினோன்' வேதிப்பொருள் உடலில் பல்வேறு நோய்களுக்கு காரணமாகும் அழற்சிகளை தடுத்து பலன் தரக்கூடியது.
தோல் வறட்சியைப் போக்கும் அருகம்புல் சேர்ந்த அருகன் தைலம், புங்கன் விதை சேர்ந்த புங்கன் தைலம், வெட்பாலை இலை தைலம், அவுரி இலை தைலம் போன்ற சித்த மருத்துவ வெளிபிரயோக மருந்துகள் சோரியாசிஸ் நோயில் தோல் அழற்சியைப் போக்கி நன்மை தரவல்லன. அதனோடு கருஞ்சீரகம் மற்றும் சோற்றுகற்றாழை சேர்ந்த மருந்துகள் சோரியாசிஸ் நோயில் சிறப்பாக செயல்பட்டு பழைய தோல் இயல்பு நிலைக்கு திரும்ப உதவுவதாக உள்ளன.
சித்த மருந்தான 'வெட்பாலை தைலம்' சோரியாசிஸ் நோய்க்கு பிரசித்தி பெற்ற ஒன்று. இதனை நோயின் தன்மைக்கு ஏற்றாற் போல் வெளி உபயோகம் மட்டுமின்றி உள்மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு. வெட்பாலை இலையில் உள்ள இயற்கை நிறமிகளான கேம்ப்பெரால், குர்சிட்டின் இரண்டும் தோல் சிதைவினை உண்டாக்கும் நச்சுப்பொருட்களை நம் உடலில் இருந்து நீக்கி சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தோலை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.
அதே போல் கருஞ்சீரகம் மற்றும் இயற்கை சாயத்தை கொண்ட அவுரி இலை தைலங்களும், சோரியாசிஸ் நோய் நிலையில் வெளிபிர யோகமாக பயன்படுத்த நல்ல பலன் தருவதாக உள்ளன. இயற்கை முடிசாயங்களை தயாரிக்க உதவும் அவுரி இலையில் உள்ள இயற்கை நிறமிகள் சோரியாசிஸ் நோயில் தோலின் இன்னலை போக்க உதவும். மூலிகை மருந்துகளை கடந்து இன்னும் பல தாது கலப்புள்ள மருந்துகள் முதுமையில் சோரியாசிஸ் நோயில் பலன் தரக்கூடியதாக உள்ளன.
சோரியாசிஸ் நோயினை 40-60 சதவீதம் வரை அதிகரிக்ககூடியதாக இருப்பது மன அழுத்தம் என்று நவீன ஆய்வுகள் தம்பட்டம் அடித்து கூறுகின்றன. முதுமையில் மன அழுத்தத்திற்கு பஞ்சமா என்ன? அவ்வாறு இருக்கையில் நோய் தன்மை குறைவது கடினம் தான். ஆகவே மன அழுத்தத்தைப் போக்க யோகாசன இருக்கை நிலைகளும், தியானமும் பழகுவது நோயின் தன்மையைக் குறைக்க உதவும்.
அதே போல் மன அழுத்தம் போக்கி சோரியாசிஸ் நிலையில் பலன் தருவதாக இருக்கும் சித்த மருத்துவ மூலிகை 'இந்தியன் ஜின்செங்' எனப்படும் 'அமுக்கரா கிழங்கு'. அமுக்கரா பொடியை கொண்டு மேற்கொண்ட ஒரு ஆய்வில் எட்டு வாரங்கள் உட்கொண்டவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பதாக 'ஆக்ஸ்போர்டு மகிழ்ச்சி கேள்வித்தாள்' எனும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
மேலும் அமுக்கராவில் உள்ள வேதிப்பொருட்கள் மன அழுத்தம் தூண்டும் ஹார்மோன் சுரப்புகளை குறைப்பதாக உள்ளதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. ஆகவே சோரியாசிஸ் நோய்நிலையில் அமுக்கரா சூரண சித்த மருந்தை பாலில் கலந்து எடுத்துக்கொள்ள, மன மகிழ்ச்சி உண்டாவதோடு நோயின் தன்மையைக் குறைக்க உதவும். 'வித்தாபெரின்-ஏ' எனும் வேதிமூலக்கூறு அமுக்கரா மூலிகையின் மகத்தான மருத்துவ தன்மைக்கு காரணமாகின்றது.
பதப்படுத்தப்பட்ட உணவும், செறிவுற்ற கொழுப்பு அமிலம் தோய்ந்த உணவுப் பண்டங்களும், இனிப்பு பண்டங்களும், இறைச்சி உணவுகளும், மதுப்பழக்கமும் உடலில் பல்வேறு வேதிகாரணிகளை தூண்டுவதன் மூலம் சோரியாசிஸ் நோயின் தன்மையை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
மாறாக வைட்டமின் டி, வைட்டமின் பி-12, செலினியம், நார்ச்சத்துக்கள், செறிவுறா கொழுப்பு அமிலம் சேர்ந்த உணவுகள் சோரியாசிஸ் நோய்க்கு காரணமாகும் அழற்சி வினைகளை தடுத்து நோயினை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் என்கின்றன ஆய்வுத் தரவுகள். எனவே நமது பாரம்பரிய உணவுகளை நாடுவது வெறும் வாய் ருசிக்காகவும், வயிற்று பசிக்காகவும் என்பதோடு இன்றி, பல்வேறு நோய்களையும் தடுக்க வல்லது என்பதற்கு இது மிகப்பெரும் சான்று.
அவ்வப்போது வாதம் குறைக்கும் மலமிளக்கி மருந்துகளும், வாரம் இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் குளியலும், இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை எழுதலும், இயற்கை உணவு மற்றும் மருந்துகளை நாடுவதும் போன்ற பாரம்பரிய வாழ்வியல் வழிமுறைகள் சோரியாசிஸ் நோயின் தாக்கத்தைக் குறைத்து முதுமையை நலமாக்கும். முக்கியமாக சோரியாசிஸ் நோய் ஒரு தொற்றுநோய் அல்ல. இதனை அனைவரும் புரிந்துகொண்டு, முதியோர்களை அரவணைத்து ஆறுதல் தருவதும், அன்பை பரிமாறுவதும் அவசியமான ஒன்று.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com






