என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

திருமணத்தை தாமதப்படுத்தும் நவகிரகத் தோஷங்கள்!
- சூரிய தோஷம் கடுமையாக இருந்தால் தந்தை வழி உறவுகளை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
- சந்திரனால் ஒருவருக்கு திருமண தோஷம் ஏற்பட்டதாக தெரிய வந்தால் அவர் அம்பாளை வழிபட வேண்டும்.
ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆகிக் கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். ஜாதக ரீதியாக பார்த்தால் நிச்சயமாக ஏதாவது கிரக தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்வார்கள். நவக்கிரகங்களில் எந்த கிரகத்தின் அமைப்பு சரியில்லாமல் போனாலும் அதனால் நிச்சயமாக பாதிப்பு ஏற்படும்.
சில கிரக அமைப்புகள் முன்வினைகளை பிரதிபலிப்பதாக இருக்கும். அந்த கிரக அமைப்புகள் தான் திருமண தோஷமாக அமைந்து விடுவது உண்டு. கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பில் இருந்து விடுபட வேண்டுமானால் அதற்குரிய பரிகாரங்கள் உரிய வழிபாட்டு முறைகளுடன் செய்யப்பட வேண்டும்.
சூரியனால் ஒருவருக்கு திருமணம் கை கூடுவதில் பாதிப்பு ஏற்பட்டு தோஷம் ஏற்பட்டு இருந்தால் அதை ஜோதிடரிடம் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும். ஜாதகப்படி சூரியன் பித்ருக்காரகன் எனப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் அமைந்து இருக்கிறாரோ அதை பொறுத்துதான் அவருக்கு தந்தை அமைவார்.
எனவே சூரிய தோஷம் கடுமையாக இருந்தால் தந்தை வழி உறவுகளை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவான் துதிகளை சொல்லி வழிபட வேண்டும். ஆலயங்களுக்கு செல்லும்போதும் தவறாமல் சூரியனை வழிபட வேண்டும்.
சூரிய தோஷம் மிக கடுமையாக இருந்தால் திருவண்ணாமலைக்கு சென்று அருணாசலேஸ்வரரை பார்த்து வணங்கி வரவேண்டும். அதுபோல கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று அங்குள்ள விநாயகருக்கு ரோஜா மாலை அணிவித்து நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிறகு சூரியனையும் வழிபட வேண்டும்.
வசதி இருப்பவர்கள் வீட்டில் வெள்ளருக்கு சமித்தால் ஹோமம் செய்து வழிபட்டால் சூரிய தோஷம் விலகி செல்லும்.
சந்திரனால் ஒருவருக்கு திருமண தோஷம் ஏற்பட்டதாக தெரிய வந்தால் அவர் அம்பாளை வழிபட வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் சந்திரனை மாத்ருக்காரகன் என்று சொல்வார்கள். அதாவது சந்திரன் தாயாரை குறிக்கும். எனவேதான் சந்திர தோஷம் விலக அம்பாளை தொடர்ந்து வழிபட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
சந்திர தோஷம் அதிகமாக இருந்தால் சிவ பெருமானுக்கு திங்கட்கிழமை தோறும் பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். திருச்சி அருகே உள்ள திருவானைக்காவல் தலத்தில் உச்சிக்கால பூஜையை தரிசிப்பது சந்திர தோஷ விமோசனத்துக்கு மிக சிறந்தது என்கிறார்கள். அதுபோல திங்களூர் சென்றும் சந்திரனை வழிபடலாம்.
நவகிரக தலங்களில் ஒன்றான கஞ்சனூரில் சந்திர தீர்த்த குளம் உள்ளது. அங்கு சந்திரன் நீராடி தனது தோஷத்தை நீக்கி கொண்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு சென்று வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும்.
மானாமதுரை, திருவெண்காட்டில் உள்ள தலங்களிலும் வழிபட்டு சந்திரதோஷ நிவர்த்தி பெறலாம்.
நவக்கிரகங்களில் செவ்வாய் தோஷத்தால் தான் அதிகம் பேர் திருமணம் கைகூடுவதில் பாதிப்பை சந்திக்கிறார்கள். பொதுவாக செவ்வாய் தோஷம் இருந்தால் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபட்டு தானம் செய்து விட்டு வருமாறு ஜோதிடர்கள் சொல்வார்கள். ஆனாலும் இந்த பரிகாரம் மட்டுமே போதுமானது அல்ல.
செவ்வாய் தோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் முருகப்பெருமானிடம் சரணடைய வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் காலையில் வீட்டிலும், ஆலயத்திலும் முருகனை வழிபட்டு தானங்கள் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் காலையில் வீட்டில் கந்தசஷ்டி கவசம் படித்தால் செவ்வாய் தோஷம் உங்களை விட்டு மெல்ல மெல்ல விலகி சென்று விடும்.
ஆண்டாளை வழிபட்டாலும் செவ்வாய் தோஷம் கட்டுப்படும். உங்கள் வீட்டுக்கு அருகில் பெருமாள் கோவிலுக்கு சென்று ஆண்டாள் சன்னதியில் விளக்கேற்றி அங்கேயே அமர்ந்து அவளை வழிபட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
புதன் கிரகத்தால் சிலருக்கு திருமண தோஷம் ஏற்படுவது உண்டு. நவக்கிரகங்களில் இருக்கும் புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷத்தை நிவர்த்தி செய்யலாம். காஞ்சிபுரம், திருவெண்காடு, சீர்காழி திருக்காவூர் தலங்களில் புதன் கிரகத்துக்கும் சிவ பெருமானுக்கும் பூஜைகள் செய்து வழிபடலாம்.
புதன்கிழமைகளில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு அங்கு பிரகாரத்தில் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வந்தால் கைமேல் பலன் கிடைக்கும். எந்த அளவுக்கு புதனை வழிபட்டு பாராயணம் செய்கிறாமோ அந்த அளவுக்கு விரைவில் நல்ல செய்தி தேடி வரும்.
நவக்கிரகங்களில் திருமணத்துக்கு மிக மிக முக்கியமானதாக கருதப்படுவது குரு கிரகத்தின் அம்சமாகும். குரு பலம் இருந்தால்தான் ஜோதிட ரீதியாக திருமணம் கைகூடும் என்று சொல்வார்கள். குரு பலம் இல்லாவிட்டால் அதுவே ஒரு தோஷமாக கருதப்படும். குரு கிரகத்தால் தோஷம் இருப்பது தெரிய வந்தால் வியாழக் கிழமைகளில் ஆலய வழிபாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.
சித்தர்களின் ஜீவசமாதி, மகான்களின் அதிஷ்டானம் ஆகியவற்றுக்கு சென்று விளக்கேற்றி வழிபட வேண்டும். அங்கு அமர்ந்து தியானம் செய்வதின் மூலம் குரு ஸ்தானத்தில் இருக்கும் அவர்களது ஆசியை பெற முடியும். இது குரு தோஷத்தை கட்டுப்படுத்தி நல்ல மணவாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும்.
ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதாக இருந்தால் குரு பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலங்குடி தலத்துக்கு சென்று வழிபடலாம். மேலும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு சென்று சிவகாமி சமேத நடராஜரை வழிபட்டு வருவது மிகவும் நல்லது.
வசதி வாய்ப்பு இருப்பவர்கள் வீட்டில் ஹோமம் வளர்த்து பூஜைகள் செய்து குரு தோஷ நிவர்த்தி பெற முடியும். அரசமர சமித்தால் ஹோமம் செய்து வழிபாடு செய்யும் போது குரு தோஷம் நிவர்த்தி பெறும்.
ஜாதகத்தில் சுக்கிரனின் அமைப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சுக்கிரன் அமைப்பு சரி இல்லை என்றால் அல்லது வேறு கிரகத்துடன் சேர்ந்து இருந்தால் அதுவும் தோஷத்தை உண்டாக்கி விடும். சுக்கிர தோஷத்தில் இருந்து மிக எளிதாக வெளியில் வந்துவிட முடியும். அதற்கு அடிக்கடி சுமங்கலி பூஜை நடத்தப்பட வேண்டும்.
மேலும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வது நல்லது. வீட்டில் சுமங்கலிகளை அழைத்து பூஜை செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அந்த பூஜை முடிந்ததும் ஏழை பெண்களை அழைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். குறிப்பாக திருமணத்துக்கு தயாராக இருக்கும் ஏழை பெண்களுக்கு தாலி, சீர்வரிசை போன்ற மங்கலகரமான பொருட்களை வாங்கி தானமாக கொடுப்பது மிக மிக சிறந்த பரிகரமாகும்.
சுக்கிர தோஷம் மிக அதிகமாக இருப்பவர்கள் ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதரிடம் சரண் அடைந்து விடுங்கள். அவரை கண் குளிர வழிபட்ட பிறகு பிரகாரத்தில் அமர்ந்து லட்சுமி அஷ்டோத்திரம் படித்து விட்டு வாருங்கள். சுக்கிர தோஷம் நழுவி சென்று விடுவதை அனுபவப்பூர்வமாக பார்ப்பீர்கள்.
திருமணத்தை தாமதம் செய்வதில் சனி கிரகத்துக்கு முக்கிய பங்கு உண்டு. ஒருவரது ஜாதகத்தில் சனி தோஷம் மிகுந்து இருந்தால் எவ்வளவு பரிகாரம் செய்தாலும் திருமணம் தள்ளி போய்க்கொண்டே இருக்கும். இத்தகைய நிலையில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். ஆஞ்சநேயரை நினைத்து வழிபடுங்கள். அது ஒன்றே போதுமானது.
உலகில் பயபக்திக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் ஆஞ்சநேயர் மட்டுமே. அவர் மனம் குளிரும் வகையில் பூஜைகள் செய்து ஏழைகளுக்கு உதவினால் போதும். சனீஸ்வரனின் அருள் பார்வை உங்களுக்கு கிடைக்க தொடங்கி விடும்.
ஜாதக ரீதியாக சனி தோஷம் மிக சிக்கலாக இருப்பதாக கருதினால் ஒரு தடவை திருநள்ளாறுக்கு சென்று வருவது நல்லது. அங்குள்ள தர்ப்பா ரண்யேஸ்வரரையும் சனி பகவானையும் வழிபட்டால் நல்லது நடக்கும்.
சனி போலவே ராகு-கேது தோஷங்களும் திருமணத்தை தாமதப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. காள ஹத்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம். காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தரை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும்.






