என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முதுமையில் தோல் நோய்களும், தீர்வுகளும்...
    X

    முதுமையில் தோல் நோய்களும், தீர்வுகளும்...

    • பல வெளிப்புற காரணிகளும் தோல் நோய்களை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
    • முதுமையில் தோலில் உண்டாகும் மாற்றங்கள் பல.

    வயது மூப்பின் அடையாளத்தில் முக்கிய பங்காற்றுபவை தோலில் உண்டாகும் மாற்றங்கள். உள்ளுறுப்புகளில் எத்தனை தான் மாற்றம் நிகழ்ந்தாலும், வெளிப்புற தோற்றத்தில் வயது மூப்பை காட்டிக்கொடுக்கும் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல் தான். முதுமையில் அத்தகைய தோலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் தோல் சார்ந்த நோய்கள் உண்டாக முக்கிய காரணமாக அமைகின்றன.

    முதுமையில் தோல் சார்ந்த பிரச்சினைகள் என்பது ஆரோக்கியத்திற்கு கூடுதல் சுமை. கட்டுப்படுத்த முடியாத தோல் அரிப்பும், நமைச்சலும் உடலை மட்டுமின்றி மனதையும் ரணமாக்கி துக்கத்தில் ஆழ்த்தும்.

    முதுமையில் உடலின் செல்களுக்குள் நிகழும் பல்வேறு மாற்றங்களால் தோல் தனது இயற்கைத் தன்மையை இழப்பதோடு, பல வெளிப்புற காரணிகளும் தோல் நோய்களை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

    முதுமையில் தோலில் உண்டாகும் மாற்றங்கள் பல. அவற்றில் வறண்ட சருமம், தளர்வான முகத்தோல் (குறிப்பாக கண்கள், கன்னங்கள் மற்றும் தாடைகளை ஒட்டி தளர்வான தோல்) மெலிதான தோலின் தன்மை, மற்றும் தோல் நெகிழ்ச்சித்தன்மை குறைந்ததாய் மாறுதல் போன்றவை முக்கிய மாற்றங்களாக உள்ளன. உடல் செயலியல் ரீதியாக உண்டாகும் இத்தகைய மாற்றங்களால் தோலில் எளிதில் சிராய்ப்பும், தொற்றுக்களும் ஏற்படும் அபாயம் உள்ளதாக உள்ளது.

    சர்க்கரை நோய், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்கள் போன்ற தொற்றா நோய்களால் உண்டாகும் தோல் நோய்கள் மட்டுமின்றி, எந்த நோயின் பின்புலமும் இல்லாமல் உண்டாகும் தோல் அரிப்பு நோய்கள் முதுமைக்கு மிகப்பெரும் சவாலாகும். முதுமையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேருக்கு அரிப்புடன் கூடிய தோல்நோய் உள்ளதாக தரவுகள் தெரிவிப்பது கூடுதல் வருத்தம். இதனால் தூக்கமின்மை மற்றும் மனசோர்வு உண்டாகக்கூடும்.

    "வாதமலாது மேனி கெடாது" என்பது சித்த மருத்துவக் கூற்று. சித்த மருத்துவத் தத்துவத்தின் படி நோய்க்கு காரணமாகும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் வாத குற்றம் முதன்மையாக பாதிக்கப்பட்டு தோல் சார்ந்த நோய்களை உண்டாக்குவதாக உள்ளது.

    சித்த மருத்துவத்தில் தோல் நோய்களை 'குட்ட நோய்கள்' என்ற பெயரில் 18 வகைகளாக விவரித்துள்ளது. இத்தகைய தோல் நோய்களில் முதுமையில் உண்டாகும் தோல் வறட்சி நோயும், தோல் அரிப்பு நோயும், சோரியாசிஸ் எனும் காளாஞ்சகப்படையும், படர்தாமரையும், வைரஸ் மற்றும் பாக்டீரியா சார்ந்த தோல் தொற்றுநோய்களும் அதிகம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன.

    முதுமையில் சர்க்கரை நோய் போன்ற உடலின் எதிர்ப்புசக்தியை பலவீனப்படுத்தும் நோய் நிலையால், நீரிழிவு நோயுள்ள பலருக்கு தோல்நோய்கள் உண்டாவது வாடிக்கையாக உள்ளது. அதில் முக்கியமாக நோய் எதிர்ப்பு குறைபாட்டால் பூஞ்சைத் தொற்றினால் உண்டாகும் படர்தாமரை போன்ற சரும நோயும், தோலில் மீன் செதில்கள் போன்ற உதிர்வை உண்டாக்கும் 'சோரியாசிஸ்' எனும் காளாஞ்சகப்படையும் அதிக சிரமத்தை உண்டாக்க வல்லது.

    படர்தாமரை நோய்நிலையில் பூஞ்சைக்கொல்லி மூலிகை மருந்துகளை எடுப்பது நோயினை தீர்க்க உதவும். சீமை அகத்தி இலையுடன், வேப்பிலை மற்றும் குப்பைமேனி இவற்றை அரைத்து பற்றாக்கி பூசுவதன் மூலம் தோல் படைகள் நீங்கும்.

    கட்டுப்படாத நீரிழிவு நோயால் நாட்பட்ட படர்தாமரையால் அவதியுறுபவர்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் மருந்துகளுடன் சித்த மருந்துகளான பறங்கிப்பட்டை சூரணம், கந்தக பற்பம் ஆகிய மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி எடுக்க நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

    முதுமையில் தோலில் உள்ள எண்ணெய் சுரப்புகள் செயல்பாடு குறைவதாலும், பல்வேறு நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளினாலும் இயல்பான தோல் வறண்டு (சீரோசிஸ்) தோலில் அரிப்பினை உண்டாக்கும். இத்தகைய நிலையில் எண்ணெய் பசை மிகுந்த சவுக்கார கட்டிகளை பயன்படுத்துவது நல்லது.

    மேலும் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள அருகன் தைலம், புங்கன் விதை தைலம், மத்தன் தைலம் ஆகிய தைலங்களை மேலே பூசி வர தோல் வறட்சி நீங்கி நமைச்சல் குறையும்.

    பீட்டா கரோட்டின், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் குறைபாடு உள்ளவர்கள் பெரும்பாலும் தோல் வறட்சியால் பாதிக்கப்படுகின்றனர். ஆதலால் அத்தகைய சத்துள்ள பழங்களையும், பிஞ்சு காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்வது தோல் வறட்சியைத் தடுக்கும்.

    தில்லைவாணன்

    ஒவ்வாமையால் உண்டாகும் தோல் நோய்நிலைகளில் சித்த மருத்துவம் கூறும் பத்தியங்களை கடைபிடிப்பது நல்ல பலன் தரும். பித்தம் அதிகமான சூழலில் ஒவ்வாமை உண்டாகும் என்பதால் பித்தத்தை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை குறைப்பது அல்லது தவிர்ப்பது நல்லது.

    தேநீர், குளம்பி (காபி) இவற்றைத் தவிர்த்து பாலில் மஞ்சள் பொடி மற்றும் மிளகு சேர்த்து எடுத்துக்கொள்வது ஒவ்வாமையைத் தடுத்து நற்பலன் தரும். மஞ்சளில் உள்ள 'குர்குமின்' மற்றும் மிளகில் உள்ள 'பைப்பரின்' வகை வேதிப்பொருட்கள் உடலில் ஒவ்வாமையை உண்டாக்கும் காரணிகளைத் தடுத்து நமைச்சலைப் போக்கும்.

    ஒவ்வாமைக்கு சித்த மருத்துவம் கூறும் எளிய மருந்து 'அருகம்புல் குடிநீர்' தான். அருகம்புல்லை அலசி அத்துடன் மிளகு சேர்த்து கசாயமாக்கி குடிக்கலாம். மருந்துகளினால் உண்டாகும் தோல் ஒவ்வாமை நிலையிலும் இது நல்ல பலன் தரும். அதே போல் மற்றுமொரு எளிய மூலிகை வெற்றிலை குடிநீர்.

    'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்' என்பது பழமொழி. அத்தகைய சிறப்புமிக்க மிளகினை, வெற்றிலையுடன் சேர்த்து கசாயமாக்கி எடுத்துக்கொள்வது ஒவ்வாமையை நீக்க உதவும். வெற்றிலையில் உள்ள வேதிப்பொருட்கள், ஒவ்வாமையை உருவாக்கும் ஹிஸ்டமின் மற்றும் இம்முனோகுளோபுலின்-ஈ போன்ற வேதிப்பொருட்களின் செயல்பாட்டை தடுத்து ஒவ்வாமையை குறைக்க உதவும். சீந்தில் (அமிர்தவல்லி) மூலிகை ஒவ்வாமை சார்ந்த பல நோய்களில் நற்பலன் தரும்.

    பொதுவாகவே அதிக புரதச்சத்துள்ள உணவுப்பொருள்களான அசைவ உணவுகளும், வேர்க்கடலை, பாதாம், முந்திரி போன்ற கொட்டை வகைகளும், கத்திரி, சுண்டைக்காய், காளான் போன்ற உணவுப்பொருட்களும் நமைச்சலை அதிகமாக்கி தொந்தரவுகளை அதிகரிக்கும். ஆகவே இவற்றை தவிர்ப்பது நல்லது. வாரம் இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்து எண்ணெய் குளியல் எடுப்பது உடலில் வாதம், பித்தம் இரண்டையும் சமப்படுத்தி தோல் நோய்களைக் குறைக்க உதவும்.

    'சீரோசிஸ்' எனும் தோல் நோய்க்கு அடுத்தபடியாக அதிகம் காணப்படுவது 'எக்சீமா' எனும் கரப்பான் தோல் நோய். உடம்பினுள்ளே கரப்பான் பூச்சியைப் போல் ஒளிந்துகொண்டு அவ்வப்போது துன்பங்களை கொடுக்கும் என்பதால் இப்பெயர் வந்ததாக அறியப்படுகின்றது. சில சிறுநீர்பெருக்கி மருந்துகளும், ரத்த அழுத்தம் குறைக்கும் சில மருந்துகளும் கூட கரப்பான் உண்டாக காரணமாக இருப்பதால் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது அவசியம்.

    கரப்பான் நிலையில் தோல் தடித்து கருத்து நமைச்சலுடன் காணப்படும். இந்நிலையில் உணவுக்கட்டுப்பாடுடன் குடல் சுத்தமும் மிக அவசியம் என்கிறது சித்த மருத்துவம். குடலுக்கும் தோலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என இன்றைய நவீன அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.

    எனவே ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்வது குடல் சுத்திக்கு உத்திரவாதம் தரும். இருப்பினும் முதுமையில் பேதி மருந்து ஏற்புடையது அல்ல என்பதால் மலமிளக்கும் சித்த மருந்துகளாகிய திரிபலை சூரணம், சிவதை சூரணம், நிலவாகை சூரணம் ஆகிய மருந்துகளை நாடுவது நல்லது.

    கரப்பான் நோயில் வெளிபிரயோகமாக பலனைத் தரக்கூடியதாக உள்ள மூலிகை சோற்றுக்கற்றாழை. இது தோல் நோய்கள் பலவற்றுக்கும் நல்லது. தோலின் வறட்சியைப் போக்க கூடியது. ஆக கற்றாழை உள்ளடக்கிய சவுக்கார கட்டிகளை பயன்படுத்துவது நல்லது.

    அதே போல் தேங்காய் எண்ணெயும் தோல் வறட்சியை போக்கும் என்பதால் அதனையும் மேலுக்கு தடவி வரலாம். இதனை இன்றைய நவீன ஆய்வுகள் பல உறுதி செய்துள்ளன. தோலின் வீக்கத்தைக் குறைத்து வறட்சியைப் போக்கும் 'குங்கிலிய வெண்ணெய்' என்ற சித்த மருந்தும் கரப்பான் நோய் நிலையில் உதவும். அருகம்புல்லுக்கு வறட்சியைப் போக்கும் தன்மை உடையதால் தோல் அரிப்பு, கரப்பான் போன்ற பல நோய்களில் இது நல்ல பலன் தரும்.

    காலில் உண்டாகும் சேற்றுப்புண் நிலையில் சித்த மருந்துகளான 'அமிர்த வெண்ணெய்' அல்லது 'வங்க வெண்ணெய்' இவற்றை பயன்படுத்த பலன் தரும். எளிமையாக நகச்சுற்று, சேற்றுப்புண் வராமல் தடுக்க மருதாணி இலையை அரைத்து பூசி வரலாம். கிருமிகள் தொற்றினால் உண்டாகும் தோல் நோய்களில் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறுவது அவசியம்.

    மன நலனுக்கும், தோல் நலனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால் மன அழுத்தம் இருப்பின் அதை போக்கும் மருந்துகளை நாடுவது தோல் நோய்களை குறைக்க உதவும். சித்த மருந்தான அமுக்கராகிழங்கு சூரணம், மன அழுத்தத்தைக் குறைப்பதுடன் தோல் நலனில் நன்மை தரக்கூடும். அத்துடன் வல்லாரை கீரை, பிரமி கீரை, மணத்தக்காளி கீரை இவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வதும் தோல் நோய்களுக்கு நல்லது.

    வயதாக வயதாக உடலில் ஏற்படும் எண்ணற்ற மாற்றங்கள் நமது தோலிற்கு விதிவிலக்கல்ல. தோலிலும் ஆயிரக்கணக்கான மாற்றங்கள் நிகழ்ந்து, முதுமையை வெளிக்கொணர்ந்து வெளிச்சத்தில் நிறுத்தும். எனவே தோலில் அரிப்பு மற்றும் நோய்கள் ஏற்படும் வரை காத்திருக்காமல். தோல் பாதுகாப்பில் முன்கூட்டியே அக்கறை செலுத்துவது அவசியம்.

    (தொடரும்...) தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×