என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மனித வாழ்வின் எட்டு நிலைகள்- (பாகம் 2)
- சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும்.
- 80 வயதுக்கு பிறகு கேதுவின் ஆதிக்கம். கேது ஒரு நிழல் கிரகம்.
ஐந்தாம் நிலை
மனிதர்களாய் பிறந்தவர்கள் லவுகீக உலகில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் அனுபவித்த பிறகு பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, சொல்வாக்கை நிலை நாட்ட விரும்பும் காலம்.
இந்நிலையில் சம்பாதித்தது போதும் இருப்பதை வைத்துக் கொண்டு உற்றார் உறவுகள் பேரன், பேத்தி, பிள்ளைகள், மருமகள், மருமகன் என வாழ மனம் விரும்பும் பருவம். இந்த காலகட்டத்தில் நல்ல ஓய்வையும், சொந்த பந்தங்களுடன் கலந்து உறவாடுவது, உலகைச் சுற்றிப் பார்ப்பது என மகிழ்ச்சியை யார் அனுபவித்து வாழ்கிறார்களோ, அவர்கள்தான் நான்காம் நிலையில் நன்றாக வாழ்கிறார்கள் என அர்த்தம். மாறாக இந்தப் பருவத்திலும் ஒருவர் பொருள் ஈட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தால், அவர் கடந்த காலங்களைத் தவறவிட்டுவிட்டார் என்றுதான் பொருள்.
குரு தேடி வரும் காலம்:
50 முதல் 60 வயது வரை குருவருள் தேடி வரும் காலம்.
நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் குரு. மனிதவாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால் எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும் குரு பார்வைக்கும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் குரு பார்வை இருந்தால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் மிகும். எனவே தான் ஜோதிட சாஸ்த்திரம் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுகிறது. ஜனன கால ஜாதகத்தில் குரு பலம் பெற்றவர்கள் உடல் ஆரோக்கியம், மன அமைதி ஆன்மீகச் சிந்தனை, தெய்வ பக்தி, நல்ல புத்திரர், நல்ல அறிவு, கற்பு, மந்திர சாஸ்திரம், தெய்வதரிசனம், தீர்த்த யாத்திரை, ஆன்மீக குருக்களின் நட்பு, சமுதாயத்தில் நல்ல மதிப்பு, பிராமணர் ஆசி, சொல்வாக்கு, பணம் ஆகிய நற்பலன்கள் தானாக வந்து விடும். அத்துடன் ஆலய தரிசனம் கிடைக்கும். குழந்தைகளின் அன்பு, அரவணைப்பு உண்டாகும் காலம். கவுரவம் புகழ் அந்தஸ்து தேடி வரும் காலம்.
ஆறாம் நிலை
தன் கணக்கை கூட்டி கழித்து லாப நஷ்டங்களை மனிதன் பார்க்கும் காலம். தொழில் உத்தியோகத்தில் இருந்து விடுபட வேண்டிய காலம்.
40 முதல் 60 வயது வரை சம்பாதிக்க தவறியவர்களுக்கு பிள்ளைகளின் கல்விக் கடன், மகளின் திருமண செலவு. மனைவியின் நச்சரிப்பால் வங்கியில் வீட்டுக் கடன் என்று பல கடன்கள் வந்து பயமுறுத்தும் காலம்.
சனியின் ஆதிக்கம்:
60 முதல் 70 வயது வரை சனியின் ஆதிக்கம்
சனி பகவான் நவகிரகத்தில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர். கர்மக் காரகன், ஆயுள்காரகன் என்று அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் கடுமையான துன்பத்தையும் அளவற்ற நன்மையையும் தருபவர் இவரே. ஒருவரின் கர்ம வினையை முழுமையாக அனுபவிக்க உதவுபவர். கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். ஒருவரின் வாழ்வில் ஏற்படும் எல்லா சம்பவங்களையும் ரெக்காடிங் செய்து தனக்குள் பதிவு செய்பவர். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்தவர் சனியாகும்.
சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும். கடனிலும் கவலையிலும் வாழ்வு கழியும்.
ஜனன ஜாதகத்தில் சனி வலிமை பெற்றவர்கள் சுகமாக சகரியமாக வாழ்க்கையில் செட்டிலாகுவது எப்படி என ஓய்வு காலத்தில் பிறருக்கு ஆலோசனை வழங்குவார்கள். வயதான காலத்தை சுகமாக கழிப்பார்கள்.
ஏழாம் நிலை
ஏமாற்றங்கள், துரோகங்களால் அவதியுறும் காலம். இதுவரை பாடுப்பட்ட நம்மை மனைவி, மக்கள், உற்றார், உறவினர் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களோ என நினைக்கும் காலம்.
ராகுவின் ஆதிக்கம்:-
70 முதல் 80 வயது வரை ராகுவின் ஆதிக்கம். நவகிரகங்களில் மிகவும் வலிமையானவர் ராகு. ஒளி கிரகங்களான சூரிய, சந்திரர்களை தன் பிடியில் சிக்க வைத்து செயலிழக்க செய்யும் வலிமை மிக்கவர். கலியுகத்தில் மிகவும் வலுவாக செயல்படும் கிரகம் ராகுவாகும். ராகு மனித தலையும் பாம்பின் உடலும் கொண்டவர். பாதி மனிதன் பாதி மிருகம். மெய், வாய், கண், மூக்கு , காது என்ற ஐம்புலன்களே ஒருவரின் சிந்தனை உறுப்புகள். மனித உடலில் உள்ள ஐம்புலன்கள் தலைப் பகுதியில் உள்ளன.
ராகு மனித தலையின் ஐம்புலன்களை இயக்கி புறச் சிந்தனைகளை உருவாக்கி லவுகீக உலகோடு இணைக்க வைப்பதே ராகுவின் வேலை. லவுகீக உலகோடு இணையும் மனிதனே தவறு செய்வான். ஐம்புலன்களையும் அடக்கினால் மட்டுமே அகச் சிந்தனைகள் உருவாகும். ஐம்புலன்களை அடக்க பாடம் கற்பிப்பதே ராகு பகவான்.
பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
சுபத்தன்மையுடன் பலமாக அமைந்த ஜாதகர்கள் மட்டும் ராகுவின் தொல்லையில் இருந்து தப்பித்து விடுவார்கள் அல்லது விதிவிலக்குப் பெறுவார்கள்.
நமக்கு உரிய மதிப்பும் மரியாதையும் இல்லையே! பலரும் உதாசீனப்படுத்து கிறார்களே! எனும் சிந்தனைகள் வலுக்கக்கூடிய காலம். இவர்களுக்கா பாடுபட்டோம் ? என்று மனவேதனையை ஏற்படுத்தக்கூடிய காலம்.
அத்துடன் பலவிதமான உடல் உபாதைகள் நோய்கள் வந்து நட்பு கொள்ளும் காலம். உதவிக்கு உறவுகள் தேவைப்படும் காலம்.
எட்டாம் நிலை
மனிதன் ஞானம் பெறும் காலம். பழைய நினைவுகளிலேயே காலம் கழிக்கும் நிலை. அதிகமாக பேசாமல் மவுனமாகவே இருக்கும் காலம். வாலிப பருவத்தில் உலக இன்பங்களை நுகர தான் செய்த தவறுகளுக்கு வருந்தும் காலம்.
80 வயதுக்கு பிறகு கேதுவின் ஆதிக்கம். கேது ஒரு நிழல் கிரகம். சட்டப்படியான மற்றும் தீர்ப்பதற்கு கடினமான அல்லது தீர்க்கவே முடியாத அனைத்து பிரச்சினைக்கும் கேதுவே காரணம்
உருவம் இல்லாமல் நிழலாக நின்று செயல்படுவதால் உடலில் சூட்சமமாக நின்று செயல்படும் குண்டலினி சக்திக்கு ஒப்பிடலாம். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப் பகுதியில் அமைதியாய் இருக்கும் குண்டலினி சக்தியை
யோகா மற்றும் தியானம் மூலம் எழுப்பும் போது அளவிட முடியாத பேராற்றல் கிடைக்கும். லவுகீகம் என்னும் மாயையில் சிக்கி அலைபாயும் ஆன்மாவை அடக்கி முக்தி அடையச் செய்பவர் கேது. முக்தியை ஆன்மா நாடும் வரை அனுபவப் பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருப்பவர் கேது.
இந்த காலத்தில் அனைவரையும் அனுசரித்துப் போகும் கட்டாய நிலைக்கு தள்ளப்படுவர். குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறோம் என்ற எண்னம் மிகும். ஒரே இடத்தில் பொழுதைக் கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடல் உறுப்புகள் தளர்ந்து நடை, உடை, பாவனை மாறிவிடும். ஒருவரின் அந்தஸ்திற்கும் கல்வித்தகுதிக்கும் தற்போதைய உருவத்திற்கும் சம்பந்தம் இருக்காது. முக்தியை மனம் விரும்பும் காலம். இனி மனிதப் பிறவியே வேண்டாம் என மனம் வேதனைப்படும் காலம்.
விதி- மதி- கதி
விதி, மதி, கதி இந்த மூன்றுமே ஒரு மனிதனின் வாழ்வை பிறப்பு முதல் இறப்பு வரை வழிநடத்துகிறது.
ஜோதிட ரீதியாக இந்த எட்டு நிலையையும் தீர்மானிப்பது விதி மதி கதி. ஒருவர் ஜாதகம் என்னதான் யோகம் படைத்த ஜாதகமாக இருந்தாலும் அந்த யோகத்தை முழுவதுமாக முறையாக அனுபவிக்க லக்கனாதிபதி வலிமை அடைந்த நிலையில் பாவ தன்மை அல்லது பலவீனம் அடையாமல் இருக்க வேண்டும். சிலர் பிறந்த நேரத்தில் இருந்து இறக்கும் வரையிலும் ஒரு சிலருக்கு எல்லாமே சரியாக அமைந்து சரியான சொகுசு வாழ்க்கையை அனுபவித்து விட்டு நிறைவாக மறைவார்கள்.
காரணம் அவர்களது ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் நல்லபடியாக அமர்ந்து லக்கனாதிபதி வலிமை பெற்று உகந்த யோக தசைகள் பிறப்பிலிருந்து இறப்பு வரை சரியாக அமைந்து இருக்கும்.
சிலர் பிறப்பிலிருந்து இறப்பு வரை கஷ்டப்பட்டு பிறந்து, வளர்ந்து மற்றும் கஷ்டப்பட்டு இறப்பார்கள். இவர்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஜாதகத்தில் லக்கின பாவகமும் பலவீனம் பெற்று, கிரக அமைவிடமும் சரியாக இல்லாமல் தொடர்ந்து யோக தசைகள் நடப்பில் இல்லாமல் இருப்பதை பார்க்கலாம்.
ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமையாக கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரகமான குரு பகவான் அல்லது வளர்பிறை சந்திரன் அல்லது தனித்த புதன் அல்லது சுக்கிரன் ஆகிய சுப கிரக தொடர்பை பெற்ற நிலையில் ஜாதகர் எவ்வித சூழலிலும் நிலை குலையாமல் எதிர்நீச்சல் போட்டு வாழ்வில் வெற்றி காண்பார். லக்கனாதிபதி பலம் இழந்த நிலையில் ராசியையும் அதன் அதிபதியும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். இதைத்தான் விதி கெட்டால் மதி என்று சொல்வார்கள். அந்த வகையில் ராசியில் எந்த பாவ கிரகம் இடம்பெறாமல் இருக்க வேண்டும். ராசி அதிபதியும் பாவர் கலப்பு இன்றி சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை தொடர்பை பெற்றிருக்க வேண்டும்.
விதி-மதி இரண்டும் கெட்டால் கதி என்று அழைக்கப்படும் சூரியன் ஜாதகத்தில் வளம் பெற வேண்டும்.
விதி
விதி என்பது லக்னம் ஜோதிட ரீதியாக லக்னம் என்பது விதியாக, ஒருவரின் தலையெழுத்தாக அமைகிறது.
மதி
மதி என்பது சந்திரன். 5-ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய பலத்தால் விதிக்கப்பட்டதை மதியால் எப்படி சாதகமாக மாற்றி அமைப்பது என்பதை காட்டுகிறது.
கதி என்பது சூரியன்
5-ம் இடம் எனும் பூர்வ புண்ணிய பலத்தால் மதியால் மாற்றியமைக்கப்பட்டதை 9-ம் இடம் எனும் பாக்கிய பலத்தால் சாதகமாக கிடைக்க வழிவகை செய்யப்படுவதை குறிக்கிறது..
மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் தசா புத்தியோடு இணைந்தே செயல்பட்டாலும் மேலே குறிப்பிட்ட வயது பிரிவின்படியும் கிரகங்களின் ஆளுமை படியுமே வாழ்க்கை பயணம் அமையும்.
இந்த எட்டு நிலைகளையும் அந்தந்த நிலைகளுக்கேற்ற ஞானத்துடன் கடந்தால் நிச்சயம் மகிழ்ச்சியுடனும் அர்த்தமுள்ளதாகவும் வாழ்க்கை அமையும். வாழ்வில் விதி, மதி, கதி நன்கு அமைந்தவர்களுக்குத்தான் சகல வெற்றிகளும் கூடி வருகின்றன. சாதாரணமாக இருப்பவர்கள்கூட மிக பெரிய சாதனை மனிதராக மாற்றுவது இத்தகைய அமைப்பினால்தான்.
எனவே, அந்தந்த நிலையில் சரியாக வாழ்ந்து நம் வாழ்வை மகிழ்ச்சியும், அர்த்தமும், சமுதாயத்திற்கு உதவி கொண்டதாகவும் மாற்ற வேண்டியது அனைவரின் கடமையாகும்.






