என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

அகிலாண்டேஸ்வரியின் அற்புதங்கள்
- சிவன் நாவல் மரத்தடியில் அன்னைக்குக் காட்சி தந்ததால் அவர் ஜம்புலிங்கேஸ்வரர் ஆனார்.
- அன்னையின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும் பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
அன்னை அகிலாண்டேஸ்வரி கோவில் கொண்டு உறையும் திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத் தலம்.
அப்பு என்ற சொல்லுக்கு வடமொழியில் நீர் என்று பொருள். ஜம்புலிங்கேஸ்வரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் அங்கு எப்போதும் நீர்க் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.
திருவானைக்காவல் என்றும் திருவானைக்கோவில் என்றும் அடியவர்கள் இத்திருத்தலத்தை அழைக்கிறார்கள்.
ஆனைக்கா என்றால் யானைகள் வசித்த கானகம் என்று பொருள். அக்காலத்தில் இப்பகுதியில் யானைகள் அதிகம் இருந்திருக்க வேண்டும். இத்தலத்தை கஜாரண்யம் (யானைக்காடு) என்கின்றன புராணங்கள்.
*ஒருமுறை பரமேஸ்வரன் கண்மூடி யோக நிஷ்டையில் இருந்தபோது பார்வதி அவர் நிஷ்டையைக் கலைக்க முற்பட்டாள். விழிதிறந்தார் சிவபெருமான்.
`தேவி! நான் விண்ணுலகில் தவம் செய்கிறேன். நீ மண்ணுலகம் சென்று தவம் புரிவாயாக. நான் பூமிக்கு வந்து உனக்கு உபதேசம் செய்கிறேன். உன் தவத்தால் மண்ணுலகில் உள்ளோர் பயனடையட்டும்!' எனக் கட்டளையிட்டார் அவர்.
உத்தரவை ஏற்ற அன்னை ஓர் ஆடி மாதத்தில் பூமிக்கு வந்தாள். திருவானைக்காவல் காவிரி ஆற்றில் நீர் எடுத்து ஒரு நாவல் மரத்தடியில் அமர்ந்து அந்த நீரிலேயே லிங்கம் அமைத்து வழிபடலானாள்.
தியானமும் தவமுமாய் பார்வதியின் பக்தி தொடரத் தொடர சிவன் மனம் கனிந்தார். பார்வதிக்குக் காட்சி தந்து ஞான உபதேசம் செய்தருளினார்.
அகிலத்தைக் காக்க அன்னை தவம் இயற்றியதால் அகிலாண்டேஸ்வரி எனப் பெயர் பெற்றாள். ஜம்பு என்றால் நாவல் பழம். சிவன் நாவல் மரத்தடியில் அன்னைக்குக் காட்சி தந்ததால் அவர் ஜம்புலிங்கேஸ்வரர் ஆனார்.
அகிலாண்டேஸ்வரியும் சிவபெருமானும் காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் உள்ள தீவில் அமைந்துள்ள திருவானைக்காவலிலேயே கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரியத் தொடங்கினார்கள்.
இப்போதும் கூட திருவானைக்காவில் உச்சிக்கால பூஜையின்போது அர்ச்சகர் சேலை தரித்து தன்னைப் பார்வதியாக பாவனை செய்துகொண்டு சிவ வழிபாடு நிகழ்த்துகிறார்.
தொடக்கத்தில் அன்னை உக்கிர சொரூபமாக இருந்தாள். ஆதிசங்கரர் இரண்டு ஸ்ரீசக்கரங்கள் அமைத்து அவற்றில் அன்னையின் சக்தியை ஆவாகனம் செய்தார். அதன்பின் அன்னை உக்கிரம் தணிந்து சாந்த சொரூபியானாள்.
சங்கரர் ஸ்தாபித்த சக்கரங்கள் அன்னையின் செவிகளில் தாடங்கம் என்ற அணிகலனாக மாறி ஒளிவீசத் தொடங்கின.
அன்னையின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும் பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
*புராண காலத்தில் இப்போதுள்ள திருவானைக்கா, வெண்நாவல் மரங்கள் நிறைந்தவனமாக இருந்தது. ஒரு வெண்நாவல் மரத்தடியில் ஓர் அழகிய சிவலிங்கமும் இருந்தது.
சிவ கணங்களில் இருவர் சாபத்தின் காரணமாக யானையாகவும் சிலந்தியாகவும் இங்கு பிறந்தனர். சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி லிங்கத்தின் மீது சருகுகள் விழாது காத்தது.
நாள்தோறும் காவிரியிலிருந்து துதிக்கை மூலம் நீர் எடுத்துவந்து லிங்கத்தை நீராட்டுவது யானையின் வழக்கம். சிலந்தி வலையை அது ஒவ்வொரு நாளும் அழித்துவிட்டுச் செல்லும்.
இதனால் யானைமேல் கடும் சீற்றம் கொண்ட சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்தது. யானையும் சிலந்தியும் நிகழ்த்திய போராட்டத்தில் இரண்டுமே மடிந்தன.
அந்தச் சிலந்தியே மறுபிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற மன்னனாகப் பிறந்தது. பூர்வஜன்ம வாசனையால் யானை ஏற முடியாத விதத்தில் குறுகலான படிகளைக் கொண்ட கோவில்களைக் கட்டினான் அவன்.
அப்படிக் கட்டப்பட்ட கோவில்கள் மாடக் கோவில்கள் எனப்பட்டன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆலயம்.
திருப்பூர் கிருஷ்ணன்
திருக்குறுக்கை என்னும் தலத்தில் பாடிய ஒரு பாடலில், யானை சிலந்தி வரலாற்றைக் கூறுகிறார் நாவுக்கரசர்.
சிலந்தியும் ஆனைக் காவில்
திருநிழல் பந்தல் செய்து
உலந்துஅவண் இறந்தபோதே
கோச்செங்கணானு மாக
கலந்துநீர் காவிரி சூழ்
சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித் திட்டார்
குறுக்கை வீரட்டனாரே.
*உறையூரிலிருந்து அரசாண்ட சோழ மன்னன் ஒருவன் அன்னை அகிலாண்டேஸ்வரியை வழிபட உறையூரிலிருந்து புறப்பட்டு மனைவியுடன் வரலானான். வரும் வழியில் அவனுக்கு ஓர் எண்ணம் உதித்தது.
தன் மனைவியின் கழுத்தில் கிடந்த விலைமதிப்பற்ற முத்து மாலையை அகிலாண்டேஸ்வரித் தாயாருக்கு அர்ப்பணித்தால் அந்த அலங்காரம் மிக அழகாயிருக்குமே என அவன் பக்தி மனம் நினைத்தது.
கோவிலுக்குச் செல்லுமுன் நீராட வேண்டாமா? காவிரியில் நீராடினார்கள் அரசனும் அரசியும். நீராடி எழுந்தபோது அரசியின் கழுத்தில் இருந்த முத்தாரத்தைக் காணோம்.
திடுக்கிட்டனர் இருவரும். அம்பாளுக்கு அர்ப்பணிக்க நினைத்த மாலையைக் காவிரி அபகரித்துக் கொண்டதே என்ற வருத்தத்தோடு ஆலயத்திற்கு வந்தார்கள் அவர்கள்.
அகிலாண்டேஸ்வரியைக் காவிரியில் இருந்து ஒரு குடம் நீர் கொண்டுவந்து அந்த நீரால் அபிஷேகம் செய்தார் அர்ச்சகர். அப்போது நிகழ்ந்தது அந்த அற்புதம்.
குடத்து நீரிலிருந்த முத்துமாலை அன்னையின் கழுத்தில் விழுந்து அவளை அலங்கரித்தது. காவிரித்தாய் தன் திருக்கரத்தால் முத்துமாலையை எடுத்துவந்து அகிலாண்டேஸ்வரியை அலங்கரித்திருக்கிறாள் என்ற உண்மை புரிந்தபோது அரசனும் அரசியும் அன்னையின் அளவற்ற கருணையை அறிந்து பரவசம் அடைந்தனர்.
*திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் மடப்பள்ளியில் பணியில் இருந்தார் வரதன் என்பவர். அவர் வேலை, ஒவ்வொரு வேளையும் அம்பிகைக்கு நைவேத்தியம் தயாரிப்பதுதான். பக்தி சிரத்தையுடன் அந்தப் பணியைச் செய்துவந்தார்.
அவர் செய்த நிவேதனப் பொருட்களாலும் அவரது மனப்பூர்வமான பக்தியாலும் நிறைவடைந்தாள் அன்னை. வரதனுக்கு அருள்புரியச் சித்தம் கொண்டாள்.
ஒருநாள் ஆலய வளாகத்தின் உள்ளேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்த வரதனைத் தட்டி எழுப்பினாள். கண்விழித்த வரதன், அன்னையின் திவ்ய தரிசனம் கண்டு, தான் காண்பது கனவா நனவா என்றறியாது திகைத்தான்.
அவனை அதட்டி, தான் தரித்த தாம்பூலத்தை அவன் உண்ணுமாறு செய்து, பின் மறைந்தாள் அம்பிகை.
அப்போதிலிருந்து வரதன் நாவில் தமிழ் நடனம் புரியத் தொடங்கியது. பேச்செல்லாம் கவிதையாய்ப் பொங்கியது. சிலேடைகள் அவரிடமிருந்து கொட்டத் தொடங்கின.
அவரே சிலேடை நயம்செறிந்த வெண்பாக்கள் மூலம் தமிழில் தனித்தடம் பதித்து காளமேகம் என்ற கவியாய்ப் பெரும்புகழ் பெற்றார்.
*இத்தலத்தின் நான்காம் திருச்சுற்று மதிலைக் கட்டிய பணியாளர்கள் தங்களுக்குரிய கூலிவேண்டி நின்றனர். சிவன் ஒரு சித்தராக அவர்கள் முன் வந்தான். அனைவருக்கும் திருநீறையே கூலியாகத் தந்து மறைநாயகன் காட்சியிலிருந்து மறைந்தான்.
பணியாளர்கள் வியப்படைந்து தங்கள் கையில் இருந்த திருநீறைப் பார்த்தார்கள். என்ன ஆச்சரியம்! திருநீறு அவரவர் உழைப்புக்கு ஏற்ற அளவு தங்கமாக மாறி ஒளிவீசியது. இதனால் இந்த நான்காம் திருச்சுற்று மதில் `திருநீற்றான் மதில்` என வழங்கப்படுகிறது.
*இக்கோவிலில் பங்குனி மாதம் சித்திரை நாளில் ஒரு விந்தையான உற்சவம் நடைபெறும். அதற்கு `பஞ்சப் பிரகார உற்சவம்` எனப் பெயர். அன்று ஜம்புலிங்கேஸ்வரர் பெண்வேடத்தோடும் அகிலாண்டேஸ்வரி ஆண்வேடத்தோடும் உலா வருவார்கள்.
இந்த உலாவுக்கு ஒரு புராண வரலாறு உண்டு. பிரம்மா, தான் படைத்த பெண்ணொருத்தியின் அழகில் தானே மயங்கினாராம். அதனால் தொடர்ந்து படைத்தல் தொழில் செய்ய முடியாமல் தடுமாறினாராம்.
தன் தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டி சிவனை நோக்கித் தவம் செய்தார் பிரம்மன். சிவன் காட்சிதந்து பிரமனை மன்னித்தருளினார்.
ஆனால் அவ்விதம் காட்சி தரும்போது பேரழகியான பார்வதியைக் கண்டும் பிரம்மன் மயங்கினால் என்ன செய்வது என்ற சந்தேகம் வந்தது. எனவே சிவன் பார்வதியாகவும் பார்வதி சிவனாகவும் மாறி பிரம்மனுக்குக் காட்சி தந்தார்களாம்.
இதையுணர்ந்து பிரம்மன் வெட்கித் தலைகுனிந்ததாகச் சொல்கிறது புராணம். இதை நினைவூட்டவே பஞ்சப் பிரகார உற்சவத்தில் அகிலாண்டேஸ்வரி சிவனாகவும் சிவன் அம்பிகையாகவும் கோலம் மாறி உலா வருகிறார்கள்.
*இக்கோவிலின் ஒரு சன்னிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப் பெரிய லிங்கம். இந்த லிங்கத்தைக் குபேரன் வழிபட்டுச் சிவனருள் பெற்று மாபெரும் செல்வந்தன் ஆனான் என்பது வரலாறு. இப்போதும் மக்கள் கூட்டம் குபேர லிங்கத்தை வழிபடுவதில் பேரார்வம் காட்டி வருகிறது.
அகிலாண்டேஸ்வரி காலையில் லட்சுமியாகவும் உச்சிக் காலத்தில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள்.
அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் சுவாமி சன்னிதி மேற்கு நோக்கியும் அம்மன் சன்னிதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது.
மொத்தம் ஐந்து பிரகாரங்கள் கொண்டது இந்த மாபெரும் கோவில். ஆலயத்தின் தல விருட்சம் நாவல் மரம். சிலந்தியும் யானையும் சாபவிமோசனம் பெற்றது, அன்னை நீராலாகிய சிவலிங்கம் செய்து வழிபட்டது, ஈசனிடம் ஞான உபதேசம் பெற்றது என இத்தலத்தின் பெருமைகள் பலப்பல.
அப்பர், சுந்தரர், சம்பந்தர், அருணகிரிநாதர், தாயுமானவர் போன்ற பலரால் பாடல் பெற்ற தலம் திருவானைக்கா.
இந்தத் திருத்தலம், திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
ஆடி மாதத்தில் அம்பிகை தவம் இருந்ததால் இங்கு ஆடிவெள்ளி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடியில் தவம் செய்த அகிலாண்டேஸ் வரியை ஆடி மாதத்தில் வழிபட்டு அன்னையின் கருணையால் அனைத்து நலன்களையும் அடைவோம்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com






