என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    எல்லாமே எதிர்மறைக் கூட்டணிகள் தான்!- தராசு ஷ்யாம்
    X

    எல்லாமே எதிர்மறைக் கூட்டணிகள் தான்!- தராசு ஷ்யாம்

    • அண்ணா தன் தோல்வியை ஓரளவுக்கு முன்பே யூகித்து இருந்தார்.
    • பொது எதிரியை வீழ்த்தப் பழைய எதிரிகள் ஒன்று கூட வேண்டும். அல்லது கூட்டப்பட வேண்டும்.

    பா.ஜனதா எம்.பி.க்களின் வாராந்திர கூட்டத்தில் பிரதமர் மோடி 25.7.23 அன்று பேசினார்.

    "இதுநாள் வரையில் நான் இதுபோன்ற திக்கற்ற எதிர்க்கட்சியினரைப் பார்த்தது இல்லை. கிழக்கிந்தியக் கம்பெனி, இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்றவற்றிலும் இந்தியா என்ற பெயர் இருக்கிறது. நாட்டின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு மக்களைத் தவறாக வழிநடத்த முடியாது. மோடியை எதிர்ப்பது ஒன்றையே கொள்கையாக வைத்திருக்கிறார்கள்." என்று அப்போது அவர் சூடானார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி " பங்களிப்புகளின் கூட்டணி" (coalition of contributions). எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி "நிர்பந்தக் கூட்டணி" (coalition of compulsions) என்பது பிரதமரின் கருத்து. "எதிர்மறைக் கூட்டணி ஒருபோதும் வெற்றி பெறாது!" என்றும் அவர் அழுத்தமாகக் கூறினார்.

    கிழக்கிந்தியக் கம்பெனி 1.6.1874ல் கலைக்கப்பட்டுப் பின்னர் குஜராத் தொழில் அதிபர் சஞ்சீவி மேத்தா என்பவரால் பங்கு பரிவர்த்தனை செய்யப்பட்டு 2010 முதல் "இந்தியன்" நிறுவனமாக உள்ளது. அதை ஏனோ பிரதமர் மறந்து விட்டார்!

    தேர்தல் கூட்டணிகள் மேகங்கள் திரண்டு மழை பொழியும் வகை இல்லை. காகங்கள் கூடித் தொகுதிகளைப் பங்கு போடும் ரகம் தான். வெற்றிக் கணக்கின் அடிப்படையில் கட்சிகள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. பங்கீடு குறித்த தாவாக்களும் வருத்தங்களும் "வாக்குப் பதிவு முடிந்தபிறகு கூட" எல்லா அணிகளிலும் உண்டு.

    எனக்கு நினைவில் இருக்கும் முதல் தேர்தல் 1957. மாணவப் பருவம். சாத்தான் குளம் (இப்போது தூத்துக்குடி மாவட்டம்) என்ற சிற்றூரில் பள்ளி வகுப்பு. கூட்டணி என்ற வார்த்தைப் பிரயோகமே அரசியலில் இல்லை. காங்கிரஸ் கட்சி வலிமையுடன் இருந்தது.

    எங்கள் பகுதிகளில் தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் தலைமையில் "நாம் தமிழர்" கட்சி இயங்கி வந்தது. (இன்றைய சீமான் கட்சி அல்ல). காங்கிரஸ் எதிர்ப்பு வாக்காளர்களின் சாய்ஸ் ஊரில் அது மட்டும் தான். எம். ஜி. ஆர் மன்றங்கள் இயங்கின. ஆனால் தி.மு.க. செல்வாக்கு வளராத காலம்.

    நாம் தமிழர் சார்பில் அய்யா சி. பா. ஆதித்தனார் "சேவல்" சின்னத்தில் சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் கந்தசாமி என்பவர் "இரட்டைக் காளை" சின்னத்தில் போட்டியிட்டார்.

    தொகுதிக்குள் தி.மு.க. ஆதரவு கொஞ்சம் உண்டு. ஆனாலும் தலைவர்கள் தங்கள் சொந்த பலத்தை நம்பியே களம் கண்ட காலம் அது. எனவே கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பலம் வாய்ந்த காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தார் அய்யா சி. பா. ஆதித்தனார். எந்தக் கூட்டணி ஆதரவையும் அவர் கேட்கவில்லை.

    பள்ளிச்சிறுவர்களாகிய நாங்கள் ஆரோரூட் அல்லது கோதுமை மாவு, மயில்துத்தம், வஜ்ரம் ஆகியவற்றைக் காய்ச்சிப் பசை தயாரித்து "ட்வைன்" நூலில் தடவிக் கொடி ஒட்டு வோம். பிறகு அதைப் பந்து போல சுருட்டி அண்ணாச்சிகளிடம் கொடுத்துத் தேர்தல் பணி செய்த திருப்தியோடு வீட்டுக்கு லேட்டாகப் போய்த் திட்டு வாங்குவோம். இரவில் டோர் சிலிப் ஒட்டுவோம்.

    ஊரைச் சுற்றி பண்டாரபுரம், பன்னம்பாறை ஆகிய கிராமங்களில் தீப்பெட்டி ஆபீஸ்கள் குறுந்தொழில்களாக இயங்கி வந்தன. எனவே பசை உற்பத்தி பலருக்கும் கை வந்த கலை. வெறும் கோதுமை அல்லது ஆரோரூட் என்றால் கொடிப் பசை குட்டிப் பையன்களின் குச்சி மிட்டாய் ஆகி விடும். அதற்கான தடுப்பு நடவடிக்கை தான் வஜ்ரம். மேலும் பலத்த காற்று அடித்தாலும் கொடி கிழியாது. வில்லேஜ் டெக்னாலஜி!

    அடுத்த தேர்தலில் தான் (1962 பிப். 21) கூட்டணி என்ற வார்த்தைப் பிரயோகத்தை முதன் முதலில் கேட்டேன். அது எப்படி ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் உடன்பாடு வைத்துக் கொள்ள முடியும் என்று மண்டைக்குள் ஒரே குடைச்சல். "ஏலே.. ஜெயிக்கணுமில்ல?" என்றார்கள் அண்ணாச்சிகள்.

    அப்போது மொத்தம் 206 தொகுதிகள் தான். 167 பொதுத் தொகுதி. 38 தனித் தொகுதி. 1957-ல் இருந்த இரட்டை உறுப்பினர் முறை 1961ல் கைவிடப்பட்டது. அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே உறுப்பினர். எனவே கூட்டணி என்பது காலத்தின் தேவை என்றார்கள் பெரியவர்கள்.

    ஆனால் எங்களுக்குப் புரியவில்லை. முன்னதாக 1959- ம்ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றி இருந்தது. பெருந்தலைவர் காமராஜருக்குத் தந்தை பெரியார் ஆதரவு. அவரது தி. க. வாக்கரசியலில் இல்லை. எனவே அதைக் கூட்டணி என்று அழைக்க முடியாது. 206 தொகுதிகளிலும் தனித்துக் களம் இறங்கியது காங்கிரஸ். முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வார்டு பிளாக், நாம் தமிழர் கட்சி, அம்பேத்கரின் குடியரசு கட்சி, பொதுவுடைமைக் கட்சி, பிரஜா சோஷ லிஸ்ட் கட்சி போன்றவையும் போட்டியிட்டன.

    அனைத்து எதிர்க் கட்சியினரையும் ஓரணியில் திரட்ட 1962ல் அண்ணா முயன்றார். கம்யூனிஸ்டுகளுக்கும் வலதுசாரி சுதந்திராக் கட்சியினருக்கும் இடையே இருந்த கொள்கை முரண்பாடு காரணமாக கூட்டணி முயற்சி கைகூடவில்லை. திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தி.மு.க.- கம்யூனிஸ்ட் கூட்டணி அமைந்தது. முஸ்லிம் லீக் தி.மு.க. கூட்டணியில் இணைந்தது. "வாக்குரிமை" என்ற காங்கிரஸ் தேர்தல் பரப்புரைப் படம் எங்கள் பகுதி டூரிங் டாக்கீஸ் வரை வலம் வந்தது.

    அன்றிருந்த 206 இடங்களில் 139 இடங்களைப் பிடித்தது காங்கிரஸ். முந்தைய தேர்தலோடு ஒப்பிட்டால் 12 இடங்கள் குறைவு. 1957-ல் 15 இடங்களை மட்டுமே பிடித்திருந்த தி.மு.க. 1962-ம் ஆண்டு தேர்தலில் 50 இடங்களை வென்றது. சில மாவட்டங்களில் அது செய்து கொண்ட கூட்டணி ஏற்பாடு பலன் தந்தது. ஆனால் 1957ல் வெற்றிபெற்றிருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 15 பேரில் 14 பேர் தோல்வியைத் தழுவினர்- கலைஞர் மட்டுமே 1962லிலும் தொடர் வெற்றி.

    வாக்கு எண்ணும் தினத்தன்று எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி உயிரிழந்தார். மக்கள் திலகத்திற்கு ஆறுதல் சொல்ல வந்த அண்ணா அங்கேயே நீண்ட நேரம் இருந்தார். "ஓட்டு எண்ணும் நேரத்தில், நீங்க இங்க இருக்கீங்களே.. ஏதாவது தப்பு நடந்து விடாதா?" என்று எம்.ஜி.ஆர். கேட்டதாகவும் "இனிமே தப்பு நடப்பதற்கு ஒன்றுமே இல்லை" என்று அண்ணா சொன்னதாகவும் பத்திரிகைகள் பின்னர் எழுதின. அதாவது அண்ணா தன் தோல்வியை ஓரளவுக்கு முன்பே யூகித்து இருந்தார். எனவே அடுத்த தேர்தலில் 1962 அரசியல் கூட்டணியை மேலும் பலமாக்க வேண்டும் என்ற முடிவை அவர் அன்றே எடுத்து விட்டார்.

    அடுத்த 1967 தேர்தலில் கூட்டணி யுகம் முழுமையாகப் பிறந்தது. இந்திய தேசிய காங்கிரசை எதிர்த்து ஒரே அணியாகப் போட்டியிட தி.மு.க., சுதந்திரா, பார்வர்டு பிளாக், நாம் தமிழர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தயாராக இருந்தன. 1964 முதல் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்றும் பிரிந்து இயங்க ஆரம்பித்திருந்தன. தி.மு.க.வில் இருந்து பிரிந்த ஈ.வே.கி. சம்பத் தான் ஆரம்பித்த தமிழ்த் தேசியக் கட்சியை 1964லேயே காங்கிரசுடன் இணைத்து விட்டார்.

    நான் மதுரை விவசாயக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன். காமராஜர் பதவி விலகிக் கட்சிப் பணிக்குச் சென்றுவிட்டார். எம். பக்தவத்சலம் முதல்-அமைச்சராகி சுமார் 4 ஆண்டுகள் கழிந்திருந்தன. அரிசித் தட்டுப்பாடு, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகியவை கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன.

    அண்ணா இடதுசாரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் ராஜாஜியின் சுதந்திராவையும் தங்கள் கூட்டணியில் இணைத்தார். மார்க்சிஸ்ட்களுக்கு அது முதல் தேர்தல். எனவே வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம். நாம் தமிழர், ம. பொ. சியின் தமிழரசுக் கழகம், காயிதே மில்லத்தின் முஸ்லீம் லீக், பிரஜா சோஷலிஸ்ட் என்று ஒரு "நிர்பந்தக் கூட்டணி" (பிரதமர் மொழியில்) கட்டமைக்கப்பட்டது.

    மோடி "இந்தியா" கூட்டணியை இப்போது விமர்சித்துள்ளது போல அப்போது தி.மு.க. கூட்டணியும் கடும் விமர்சனத்துக்குள்ளனது. தி.மு.க. கூட்டணித் தலைவர்கள் ஒரு கழுதை மீது ஏறி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைப் பிடிக்கப் போவது போலக் கார்ட்டூன் போட்டுப் "ஆனந்தவிகடன்" பத்திரிகையில் கிண்டல் செய்திருந்தார்கள். சென்னை விருகம்பாக்கத்தில் தி.மு.க. தேர்தல் கூட்டணிப் பொதுக் கூட்டம். அண்ணா என்ன சொல்லப் போகிறார் என்று கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் ஆவலுடன் காத்தி ருந்தோம்.

    "எண் வீட்டில் ஒரு பாம்பு புகுந்து விட்டது. அதை அடிக்க ஒரு தடி வேண்டும். கையில் கிடைத்த தடியை எடுத்துத் தான் பாம்பை அடிப்பேன். அது சுதந்திரா தடியா, கம்யூனிஸ்ட் தடியா என்று பார்க்க மாட்டேன்!" என்று அண்ணா "எதிர்மறைக் கூட்டணிக்கு" ஒரு விளக்கம் தந்தார்.

    முன்னாள் கவர்னர் ஜெனரல் - முதல்வர் ராஜாஜி, ம.பொ.சி. அய்யா சி.பா, கம்யூ. தலைவர்கள் அடங்கிய அணி என்பதால் முதல்வர் வேட்பாளர் பற்றிய பேச்சே கிடையாது. அண்ணாவே எம். பி. தொகுதியில் தான் போட்டியிட்டார். அப்போதே தமிழரசுக் கழகமும் நாம் தமிழர் கட்சியும் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சி தனித்தே எதிர்கொண்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யாருடனும் இணையாமல் போட்டியிட்டது. மறுசீரமைப்பு நடந்ததால் மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 234ஆக உயர்ந்திருந்தது. 189 தொகுதிகள் பொது. 45 தனித் தொகுதிகள்.

    ஜெமினி ஸ்டுடியோ சார்பில் சிவாஜி, நாகேஷ் நடிக்க "வாழ்க நம் தாயகம்" என்ற விளம்பரப் படம் காங்கிரஸ் கட்சியால் வெளியிடப்பட்டது. மதுரை விவசாயக் கல்லூரி இருக்கும் யானைமலை ஒத்தக்கடையில் அப்போது இயங்கி வந்த சிவலிங்கம் தியேட்டரில் வாக்குப் பதிவுக்கு முதல் நாள் இரவு அது காட்டப்பட்டதை எதிர்த்துப் புகார் கொடுத்த சம்பவம் நினைவில் உள்ளது.

    இப்படி இந்திய அரசியலில் எல்லாமே எதிர்மறைக் கூட்டணிகள் தான்! பொருந்தாக் கூட்டணிகள் தான்! "இந்தியா அணியை" பிரதமர் மோடி எப்படி விமர்சித்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை என்று ராகுல்காந்தி அதனால் தான் சொல்கிறார்.

    இந்திராகாந்தியை வீழ்த்த லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் 1977ல் அமைத்த எதிர்மறைக் கூட்டணி தான் "ஜனதா". அதில் பாரதிய ஜனதாவின் தாய் ஸ்தாபனமான ஜனசங்கம் இருந்தது வரலாறு. இந்திராகாந்தி வேட்பாளர்களை எதிர்த்து 350க்கும் மேற்பட்ட இடங்களில் பொது வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 290 இடங்களுக்கு மேல் வெற்றி கிடைத்தது. ஏன் என்றால் யாரை எதிர்க்க வேண்டுமோ அவரை எதிர்ப்பதில் எதிர்மறைக் கூட்டணிகள் ஒருமித்த கருத்துடன் செயல்படுகின்றன.

    வாக்கரசியலில் வெற்றி பெற ஒரு பொது எதிரியை உருவாக்க வேண்டும்.. அல்லது உருவாக்கப்பட வேண்டும். பிறகு பொது எதிரியை வீழ்த்தப் பழைய எதிரிகள் ஒன்று கூட வேண்டும். அல்லது கூட்டப்பட வேண்டும்.

    அரிஸ்டாட்டில் காலத்தில் இருந்தே அரசியல் உத்தி இது தான்! எனவே எல்லாக் கூட்டணிகளும் எதிர்மறைக் கூட்டணிகள் தான்!

    வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தேர்தல் நிர்பந்தமே காரணம்!

    Next Story
    ×