என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கற்பக தரு போல் கேட்பதை எல்லாம் தரும் மயிலை கற்பகாம்பாள்
- அம்பிகையின் பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் உரிய காலத்தில் அன்னைக்குக் காட்சி தந்து சாபவிமோசனம் அருளினார்.
- அன்னை மயிலாய் வந்து வழிபட்ட இடம் மயிலை என்றே பெயர்பெற்றது.
சென்னையில் உள்ள மயிலை, கயிலாயத்திற்கு ஒப்பானது. அதனால் கயிலையே மயிலை, மயிலையே கயிலை என்று புராணங்கள் இந்தத் திருத்தலத்தைப் போற்றுகின்றன.
மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவிலின் தல விருட்சம் வடக்குப் பிரகாரத்தில் உள்ள புன்னை மரம். இறைவன் கபாலீஸ்வரர். இறைவி கற்பக வல்லி என்கிற கற்பகாம்பாள்.
*அன்னை கற்பகாம்பாளுக்கு ஏன் அந்தப் பெயர்? கேட்டதையெல்லாம் தரும் கற்பக விருட்சம்போல பக்தர்கள் வேண்டியவை அனைத்தையும் அருளும் கருணை மனம் படைத்தவள் என்பதால் அப்பெயர்.
இந்த ஆலயத்தில் உள்ள கற்பகவல்லியை வழிபட்டால் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். கற்பகாம்பாள், தன்னை நாடி வருவோரின் மனக் கலக்கத்தைப் போக்கித் தெளிவுபெறச் செய்பவள்.
உடல்நோய் தீர்ப்பதில் கற்பகாம்பாள் உற்ற துணையாக இருக்கிறாள். ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் தாய்க்கு இருக்கும் அக்கறை, பக்தர்களின் உடல் நலனைப் பாதுகாப்பதில் அன்னை கற்பகாம்பாளுக்கு உண்டு.
நோய்தீர இந்த அம்மனை வேண்டிக் கொள்வோர் நோயிலிருந்து மீண்டு வந்து, பின்னர் இந்த ஆலயத்திற்கு மீண்டும் வந்து வழிபடுகிறார்கள். நன்றி செலுத்துகிறார்கள்.
ஆலயத்தின் தலபுராணம் சுவாரஸ்யமானது.
ஒருமுறை கயிலை மலையில் பார்வதி தேவிக்கு நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரம் குறித்து உபதேசம் செய்துகொண்டிருந்தார் சிவபெருமான். முக்கியமான உபதேசம் அது.
அப்போது அழகிய மயில் ஒன்று அருகே தன் தோகைவிரித்து நடனம் ஆடிக் கொண்டிருந்தது. கணவரின் உபதேசத்தைச் செவிமடுத்துக் கொண்டிருந்த ஆடல்வல்லானின் மனைவி, மயிலின் ஆடலைப் பார்த்துச் சற்றுக் கவனம் சிதறினாள்.
இதனால் சீற்றம் கொண்டார் சிவன். நெற்றிக் கண்ணனின் சீற்றம் பிரசித்தி பெற்றதுதானே?
`என் உபதேசத்தை விட உனக்கு மயிலின் நடனம் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்குமெனில் நீ மண்ணுலகில் மயிலாகப் பிறக்கக் கடவாய்!` எனச் சபித்துவிட்டார் அவர்.
தன் தவற்றை உணர்ந்த அம்பிகை தாளாத வருத்தமடைந்தாள். `எனக்குச் சாபவிமோசனம் அருள வேண்டும் நாதா!' என மனமுருகிப் பிரார்த்தித்தாள்.
`தமிழகத்தில் தொண்டை நாட்டுக்குச் சென்று மயில் வடிவிலேயே தவம் இயற்றி வா. உரிய நேரத்தில் வந்து உனக்கு அருள்புரிவேன்!` என விரிசடைக் கடவுள் வாக்குறுதி கொடுத்தார்.
அதன்படி தொண்டை நாடான சென்னையில் மயிலையில் மயிலுருக் கொண்டு புன்னை மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தை பக்தியோடு வழிபட்டு வந்தாள் பார்வதி தேவி.
அம்பிகையின் பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் உரிய காலத்தில் அன்னைக்குக் காட்சி தந்து சாபவிமோசனம் அருளினார். அன்னை மயிலுரு நீங்கிப் பார்வதியாய் மாறினாள்.
சாபவிமோசனம் அருளிய தங்களிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் உண்டு என்றாள் அன்னை. என்ன வேண்டுகோள் என நகைத்தவாறே வினவினார் நடராஜர்.
`இந்தத் தலத்திலேயே தாங்கள் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும். நானும் தங்களுடன் இங்கேயே தங்கி என் மானிடக் குழந்தைகள் வேண்டியதையெல்லாம் அருளவேண்டும்` என அன்னை விண்ணப்பித்துக் கொண்டாள். `அப்படியே ஆகட்டும்!` என்று உடன்பட்டார் சிவன்.
சிவனும் சக்தியுமாக சென்னைத் திருமயிலைக் கோவிலில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்புரியத் தொடங்கிய வரலாறு இதுதான். அன்னை மயிலாய் வந்து வழிபட்ட இடம் மயிலை என்றே பெயர்பெற்றது.
இக்கோவிலில் அன்னைக்கே முக்கியத்துவம் என்பதால், தேவியை வழிபட்ட பின்னரே சிவனை வழிபடும் மரபு நிலவுகிறது.
*சென்னை திருவல்லிக்கேணியில் குடிகொண்டிருக்கும் பார்த்தசாரதி, கற்பகாம்பாளின் அண்ணனல்லவா? அவர் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் தன் தங்கையைக் காண இந்த ஆலயத்திற்கு வந்து செல்கிறார் என்பது ஐதீகம்.
எனவே பவுர்ணமி தினங்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அதிலும் ஆடிப் பவுர்ணமி கூடுதல் சிறப்புடையது.
*திருமயிலையில் வாழ்ந்துவந்த வணிகர் சிவநேசர் பெயருக்கேற்றாற்போல் சிவ பக்தர். அவருக்கு ஏழு வயதான ஒரு பெண் இருந்தாள். பூம்பாவை என்பது அவள் பெயர். அவளை சைவ சமயத் தொண்டு செய்யும் திருஞான சம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க எண்ணியிருந்தார் சிவநேசர்.
தன்னுடைய ஏழாம் வயதில் ஒருநாள் ஆலய வழிபாட்டுக்காகப் பூப்பறிக்கச் சென்றாள் பூம்பாவை. அங்கே விதி ஒரு நாகத்தின் வடிவில் காத்திருந்ததை அவள் அறியவில்லை. நாகம் பூம்பாவையைக் கொத்த, சிறுமி அங்கேயே காலமானாள்.
கடும் துயரமடைந்த சிவநேசர் கண்ணீர் வழியத் தன் பெண்ணின் உடலை தகனம் செய்தார். அவளின் எலும்பையும் சாம்பலையும் ஒரு குடத்தில் அடைத்துக் கன்னிமாடத்தில் வைத்திருந்தார். அதைப் பார்த்துப் பார்த்து நாள்தோறும் அழுது அரற்றிக் கொண்டிருந்தார். ஐந்தாண்டுகள் இப்படியே கடந்தன.
இந்நிலையில் திருஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு விஜயம் செய்துள்ள தகவல் சிவநேசரை எட்டியது. அடடா! நம் பெண்ணை இவருக்கல்லவோ திருமணம் செய்துகொடுக்க எண்ணியிருந்தோம்!
ஓடோடித் திருவொற்றியூர் சென்றார். ஞானசம்பந்தரை வணங்கிக் கதறினார். தன் பெண்ணுக்கு நேர்ந்த சம்பவத்தை விவரித்தார். மகளை இழந்த தந்தையின் கடும் துயரம் ஞானசம்பந்தரையும் வாட்டியது.
சிவநேசர்மேல் இரக்கம் கொண்ட சம்பந்தர், திருமயிலை ஆலயத்திற்கு வந்தார். கபாலீஸ்வரரை வணங்கியபின், பூம்பாவையின் அஸ்திக் கலசத்தைக் கொண்டுவருமாறு சிவநேசரிடம் பணித்தார்.
அந்தக் கலசத்தின் முன் நின்று, `திருமயிலைக் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களைக் காணாமல் நீ போனது சரியா பூம்பாவாய்?` எனக் கேட்டுப் பத்துப் பாடல்களைப் பாடினார்.
`மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!'
என்பது அந்தப் பதிகத்தின் முதல் பாடல். பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் `காணாதே போதியோ பூம்பாவாய்!' என முடிகிறது.
ஐப்பசி ஓண விழா, கார்த்திகை தீபத் திரு விழா, திருவாதிரை விழா, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்தரம், சித்திரை அஷ்டமி, ஊஞ்சல் திருவிழா, பெருஞ்சாந்தி விழா போன்ற எந்த விழாக்களையும் காணாமல் நீ போகலாமா என மனமுருகிக் கேட்டார் ஞானசம்பந்தர்.
இந்த அத்தனை விழாக்களும் ஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலேயே திருமயிலைக் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்தன என்பது இந்தப் பாடல்களிலிருந்து புலப்படுகிறது.
ஞானசம்பந்தர் பாடல்களைப் பாடி முடித்ததும் ஓர் ஆச்சரியகரமான சம்பவம் நிகழ்ந்தது. சிறுமி பூம்பாவை தான் எலும்பாகவும் சாம்பலாகவும் இருந்த ஐந்து ஆண்டுகளையும் சேர்த்து, வளர்ந்த பன்னிரண்டு வயதுப் பெண்ணாய் மீண்டும் உயிர்த்து எழுந்தாள்.
மிகுந்த மகிழ்ச்சியோடு கண்ணீரைத் துடைத்துக் கொண்ட சிவநேசர், தன் மகள் பூம்பாவையை சம்பந்தரே மணம் செய்துகொள்ள வேண்டும் என வேண்டினார்.
தான் அவளுக்கு உயிர் கொடுத்ததால் தந்தை முறை ஆகிறது எனச் சொல்லி மறுத்த சம்பந்தர், அவளுக்கு ஆசி கூறி விடைபெற்றார்.
பின் தன் வாழ்நாள் முழுதும் சிவபக்தியில் ஆழ்ந்து முக்தி அடைந்தாள் பூம்பாவை என்கிறது பெரிய புராணம்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் வெளிப் பிரகாரத்தில் பூம்பாவையின் சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியின் கோபுரத்தில் பூம்பாவைச் சரிதம் சுதைச் சிற்பமாக அமைந்துள்ளது. ஞானசம்பந்தர், அவரால் உயிர்ப்பிக்கப்பட்ட பூம்பாவை, சிவநேசர் ஆகியோர் சிலை வடிவில் காட்சி தருகிறார்கள்.
ஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்வு இந்த ஆலயத்தில் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி பிரம்மோற்சவத்தில் எட்டாம் நாள் காலையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஞானசம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகளை நீராட்டி, குடத்தில் நாட்டுச் சர்க்கரையை இட்டு, பூம்பாவையின் சாம்பலாகப் பாவித்து எடுத்து வருகிறார்கள். அதன்பின் பூம்பாவையை உயிர்ப்பித்த ஞானசம்பந்தரின் பதிகம் ஓதப்படுகிறது. பின்னர் பூம்பாவை உயிருடன் எழுந்ததான பாவனையுடன் விழா நிறைவடைகிறது. இவ்விழாவைப் பார்த்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
*அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர். `தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்` எனத் திருத்தொண்டத் தொகை இவர் மயிலாப்பூரைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பிடுகிறது.
சேக்கிழார் அருளிய பெரிய புராணத்திலும் வாயிலார் மயிலாப்பூரைச் சேர்ந்தவர் என்ற குறிப்பு உண்டு.
மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் இறைவனை வழிபடலாம். மெய்யால் சடங்குகள் செய்து வழிபடுவது ஆரம்ப நிலை. மொழியால் தோத்திரம் செய்து வழிபடுவது அதற்கடுத்த நிலை. மனத்தால் ஜபம் செய்து வழிபடுவது எல்லாவற்றிலும் சிறந்த முதல்நிலை.
வாயிலார் நாயனார் சிவபெருமானை மனத்தால் வழிபட்ட பெருமைக்குரியவர்.
மயிலாப்பூரில் பிறந்த வாயிலார் நாயனாருக்கு மயிலை கற்பகாம்பாள் ஆலயத்தில் தனி சன்னிதி இருக்கிறது. வாயிலாரின் குருபூஜை மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
அண்மைக் காலத்தில் மயிலை கற்பகாம்பாள் குறித்து யாழ்ப்பாணம் வீரமணி ஐயர் எழுதிய `கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா!` என்ற பாடல், டி.எம். சவுந்தரராஜன் குரலில் ஒலித்து திரைப்பாடல்களைவிடப் புகழ்பெற்ற பக்திப் பாடல் என்ற பெருமையைப் பெற்றது.
ராகமாலிகையாக அமைந்த இப்பாடலில் ஒவ்வொரு கண்ணியும் ஒவ்வொரு ராகத்தில் அமைந்துள்ளது. அந்த ராகத்தின் பெயரே பாடலில் வருமாறு கருத்துப் பொருத்தத்துடன் அமைந்துள்ள விதம் நயம் நிறைந்தது.
`ஆனந்த பைரவியே, கல்யாணியே, ரஞ்சனியே` என்றெல்லாம் அந்தந்த ராகங்களில் கற்பகவல்லியைப் போற்றுகிறார் கவிஞர்.
தற்கால பக்திக் கவிஞர்களில் மேலும் பலர் தங்கள் தமிழால் கற்பகாம்பிகையைக் கவிதைகளில் போற்றியுள்ளனர்.
அம்மனுக்கு விசேஷமான ஆடி மாதத்தில் அன்னை கற்பகாம்பிகையைத் துதித்து அனைத்து மங்கலங்களையும் பெறுவோம்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com






