என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

விண்வெளி வீராங்கனையான முதல் இந்தியப் பெண் கல்பனா
- கல்லூரியில் படிக்கும் போது கல்பனா தனது இதயத்தையும் ஆன்மாவையும் ஒருசேர படிப்பில் ஈடுபடுத்தினார்.
- கல்லூரிப் படிப்பை முடித்ததும் 1984 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஆர்லிங்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றார்.
"கனவுகளில்தான் வெற்றியை நோக்கிய பாதை உள்ளது. அதைக் கண்டுபிடிப்பதற்கான தொலைநோக்குப் பார்வையும், அதனை அடையும் தைரியமும், அதைப் பின்பற்றுவதற்கான விடாமுயற்சியும் உங்களிடம் இருக்கட்டும்".
வாசிக்கின்ற ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகின்ற மேற்கண்ட வரிகளை கூறியவர்தான் இந்தக் கட்டுரையின் நாயகியான விண்வெளி வீராங்கனையான முதல் இந்தியப் பெண்.
கனவு காண்பதும் கற்பனை செய்வதும் எல்லோராலும்தான் முடிகிறது. ஆனால் தன் கனவுகளையும், கற்பனைகளையும் சாத்தியப்படுத்துவது என்பது அவற்றை மட்டுமே இலட்சியமாக கொண்டிருப்பவர்களால் மட்டுமே முடிகிறது.
விண்ணில் தூரத்தில் சிறுபறவை போல் செல்லும் விமானத்தின் சத்தம் கேட்டால் போதும் வீதிக்கு ஓடிவந்து அந்த விமானம் புள்ளியாகி மறையும்வரை அன்னார்ந்துபார்த்து கைத்தட்டியபடி இருக்கும் குழந்தைகளில் ஒருத்தி அந்த சிறுமி. வீட்டிற்குள் ஓடிவந்ததும் அவள் பொம்மைகளோடு விளையாட மாட்டாள். விதவிதமாய் விமானங்களை வரைந்து பார்ப்பாள்.
கோடைக்காலங்களில் அச்சிறுமியின் குடும்பம் மொட்டைமாடியில் உறங்கும் போது இச்சிறுமி மட்டும் உறங்காமல் நட்சத்திரங்களையே பார்த்துக் கொண்டிருப்பாள். பின்னாளில் விண்வெளிக்குச் சென்று பல ஆய்வுகளை படைத்து வரலாற்றில் இடம்பெறப் போகிறோம் என்பது அப்போது அச்சிறுமிக்கு தெரியாதிருந்திருக்கலாம். அந்தச் சிறுமிதான் விண்வெளி வீராங்கனையான முதல் இந்தியப் பெண் என்பதைப்பற்றி நாம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
இளமைக் காலம்
ஹரியானா மாநிலத்தில் கர்னால் என்ற ஊரில் ஜூலை 17, 1962 ஆம் ஆண்டு, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் நான்காவது குழந்தையாக பிறந்தவள் 'மொன்டோ' என செல்லமாக அழைக்கப்பட்ட மகள்.
பெண்களுக்கு கல்வி என்பது தேவையற்ற ஆடம்பரம் என்று கருதப்பட்ட காலத்தில் தன் மகள்கள் நன்றாகப் படிக்கவேண்டும் என்று நினைத்தார் 'மொன்டோ' தாய் சன்யோகிதா தேவி. மொன்டோவிற்கு ஐந்து வயதானதும் அருகில் உள்ள தாகூர் பால் நிகேதன் பள்ளியில் சேர்க்கும்போது பள்ளிமுதல்வர் பெயர் கேட்கிறார். இன்னும் பெயர் வைக்கவில்லை ஆனால், கல்பனா, ஜோத்சனா, சுனைனா என மூன்று பெயர்கள் மனதில் உள்ளது என்றார் மொண்டோவின் பெரியம்மா.
"உனக்கு எந்தப் பெயர் பிடித்துள்ளது என முதல்வர் கேட்டவுடன் "கல்பனா" என்றாள் மொன்டோ. "ஏன் இந்தப் பெயர்" என்றதும் உடனடியாக, "கல்பனா" என்பதுதான் கற்பனை செய்வதற்கு பொருத்தமாக உள்ளது எனக் கூறி தனக்கான பெயரை தானே தேர்ந்தெடுத்தாள் கல்பனா. பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கிய கல்பனா தனக்கான இலட்சியத்தை அடையவேண்டும் என்று மனதிலே உறுதியுடனே வளர்ந்து வந்தாள்.
பள்ளியிலும் இலட்சியத்தை வெளிப்படுத்துதல்
ஒருநாள் பள்ளியில் கணித வகுப்பின் போது, கல்பனாவின் ஆசிரியர் பூஜ்ஜிய செட் (இயற்கணிதத்தில் வெற்று தொகுப்பு) என்ற கருத்தை விளக்கிக் கொண்டிருந்தார். எடுத்துக்காட்டாக, இதுவரை எந்த இந்தியப் பெண்ணும் விண்வெளி வீராங்கனையாக மாறவில்லை என்ற வெற்று தொகுப்புதான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். உடனே, "யாருக்குத் தெரியும் மேடம், ஒரு நாள் இந்த தொகுப்பு காலியாக இருக்காது!" என்று கல்பனா உரக்கக் கூறினாள். அந்த நேரத்தில், இந்த வரிகளைப் பேசிய பெண்ணே அந்த செட்டை நிரப்பி விடுவாள் என்று வகுப்பறையில் இருந்த யாரும் நினைத்துப் பார்க்கவில்லை!
12-ம் வகுப்பு பொதுத்தேர்வை முடித்த கல்பனா, தனது கனவின் முதல் படியான ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்தார். ஆனால் கல்பனாவின் விருப்பத்தை அவரது தந்தை விரும்பவில்லை. அது பெண்களுக்கு பொருத்தமான படிப்போ, தொழிலோ அல்ல என்று அவர் நம்பினார். கல்பனா டாக்டராகவோ அல்லது பள்ளி ஆசிரியராகவோ ஆக வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
விமானப் பொறியாளர் கனவை அடைதல்
விமானப் பொறியாளராக வேண்டும் என்ற தன்னுடைய இலட்சியத்தில் உறுதியாக இருந்த கல்பனாவிற்கு தாயின் ஆதரவு இருந்ததால், இறுதியாக அவள் தந்தையும் தன் மகளின் உறுதியைக் கண்டு கல்பனா விருப்பம்போல் விமானப் பொறியியல் படிக்க அனுமதித்தார்.
1982- ல் சண்டிகருக்குச் சென்று பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் பயில விண்ணப்பித்தார். பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கான கலந்தாய்வின்போது, ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்கை தேர்வு செய்தார். ஓரேயொரு பெண் இப்படிப்பை தேர்வு செய்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆலோசகர்கள், கல்பனா, ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பில் சேர்வதை தடுக்க எவ்வளவோ முயன்றனர். ஆனால் கல்பனா சம்மதிக்கவில்லை. உங்கள் இரண்டாவது விருப்பம் என்ன என்று அவர்கள் கேட்டபோது, ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் தவிர எதுவும் இல்லை என்று பதிலளித்தார்.
கல்லூரியில் படிக்கும் போது கல்பனா தனது இதயத்தையும் ஆன்மாவையும் ஒருசேர படிப்பில் ஈடுபடுத்தினார். அங்கே பெண்கள் விடுதி இல்லாததால், ஒரு சிறிய அறையில் தனியாக வசித்து வந்த அவர், தினமும் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தார். தனது ஓய்வு நேரத்தில், அவர் கராத்தே கற்றுக்கொள்வதற்கும் மற்றும் தனக்கு பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிப்பதற்கும் தன்னை அர்ப்பணித்தார்.
பேராசிரியர் ருக்மணி
அமெரிக்காவில் முதுகலையும் டாக்டர் பட்டமும்
கல்லூரிப் படிப்பை முடித்ததும் 1984 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஆர்லிங்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றார். இங்கு ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங்கில் எம்.எஸ்., பட்டம் பெற்றார். 1986 ஆம் ஆண்டில் இரண்டாவது எம்.எஸ் பட்டத்தையும், 1988 ஆம் ஆண்டில் போல்டரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டத்தையும் முடித்தார்.
நாசா ஆய்வுமையத்தில் பணியில் சேர்தல்
1988 ஆம் ஆண்டில், நாசா ஏம்ஸ் ஆராய்ச்சி மையத்தில் இன்க் துணைத் தலைவராக தனது பணியைத் தொடங்கினார் கல்பனா. தனது பதவியின் ஒரு பகுதியாக அவர், விமானங்களைச் சுற்றி எதிர்கொள்ளும் சிக்கலான காற்று ஓட்டங்களின் உருவகப்படுத்தலை ஆராய்ச்சி செய்துவந்தார்.
1993 ஆம் ஆண்டில் கல்பனா சாவ்லா கலிபோர்னியாவின் லாஸ் ஆல்டோஸில் உள்ள ஓவர்செட் முறைகள் நிறுவனத்தில் துணைத் தலைவர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானியாக சேர்ந்தார், அங்கு திறமையான ஏரோடைனமிக் ஆப்டிமைசேஷன் நுட்பங்களை உருவாக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் ஆராய்ச்சியாளர்கள் குழுவை உருவாக்குவதற்கும் அவர் பொறுப்பாக இருந்தார்.
விண்வெளி வீரர் கனவு நனவாதல்
1994 -ஆம் ஆண்டு அவரின் விண்வெளி வீரர் கனவு நனவாகத் தொடங்கியது. நாசாவில் விண்வெளி வீரர் பயிற்சிபெற விண்ணப்பித்த 3,000 பேரில், ஆறு பேர் மட்டுமே தேர்வானார்கள். அவர்களுள் கல்பனாவும் ஒருவர். ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்காணல்கள் ஆகியவற்றை கடந்து வெற்றிகரமாக தேர்ச்சிப் பட்டியலில் இடம்பிடித்தார் கல்பனா சாவ்லா.
டிசம்பர், 1994 இல், கல்பனா சாவ்லா நாசாவின் 15 வது விண்வெளி வீரர்கள் குழுவில் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மார்ச் 1995 முதல் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அறிக்கை அளிக்கத் தொடங்கினார்.
நவம்பர் 1996 இல், விண்வெளி விண்கலமான எஸ்.டி.எஸ் -87 இல் (நவம்பர் 19 முதல் டிசம்பர் 5, 1997 வரை) மிஷன் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் முதன்மை ரோபோடிக் ஆர்ம் ஆபரேட்டராக நியமிக்கப்பட்டார்.
விண்வெளியில் பறக்கும் முதல்வாய்ப்பு
கல்பனா சாவ்லாவுக்கு 1997 நவம்பரில் விண்வெளியில் பறக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது. இந்த விண்கலம் இரண்டு வாரங்களில் பூமியின் 252 சுற்றுவட்டப்பாதைகளை உருவாக்கி, 6.5 மில்லியன் மைல்கள் பயணம் செய்து, விண்வெளியில் 376 மணி நேரம் 34 நிமிடங்கள் பயணம் செய்தது. அதன் பயணத்தில் பல்வேறு சோதனைகள் மற்றும் கண்காணிப்பு கருவிகளை மேற்கொண்டது. சாவ்லா விண்கலத்திலிருந்து ஸ்பார்ட்டன் செயற்கைக்கோளை நிலைநிறுத்தினார், இது சூரியனின் வெளிப்புற அடுக்கை ஆய்வு செய்தது. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையைப் பெற்றார் கல்பனா சாவ்லா.
இரண்டாம் விண்வெளிப் பயணமும் வாழ்க்கைப் பயண முடிவும்
2000 ஆம் ஆண்டில், எஸ்.டி.எஸ் -107 குழுவின் ஒரு பகுதியாக தனது இரண்டாவது முறை விண்வெளிக்குச் செல்ல அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பயணம் பலமுறை தாமதப்படுத்தப்பட்டு இறுதியாக ஜனவரி 16, 2003 அன்று நாசாவைச் சேர்ந்த 7 விண்வெளி வீரர்கள் 15 நாட்கள் விண்வெளி பயணம் சென்றனர். பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் (zero gravity) தங்கி பணிபுரிந்து வந்தனர். விண்வெளிக்குச் செல்லும் 16 நாள் பயணத்தில், சாவ்லாவின் பங்கு மைக்ரோகிராவிட்டி சோதனைகளை உள்ளடக்கியது, இதற்காக அக்குழுவால் கிட்டத்தட்ட 80 சோதனைகள் நடத்தப்பட்டன, பூமி மற்றும் விண்வெளி அறிவியல், மேம்பட்ட தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் விண்வெளி வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
15 நாட்களுக்குப் பிறகு பணி முடிந்து பூமிக்கு திரும்ப குழு ஆயத்தமானது. பிப்ரவரி 1, 2003 அன்று கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் விண்கலத்தை பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறங்குவதை விஞ்ஞானிகள் உறுதி செய்து கொண்டிருந்தனர். நாசாவின் என்டரி விமான இயக்குனர் லெராய் கெய்ன், STS-107 விண்கலம் பூமிக்குள் நுழைவதற்கான சிக்னலைக் கொடுத்தார். விண்கலத்தில் இந்தியாவின் கல்பனா சாவ்லா உள்பட 7 ஏழு நபர்கள் இருந்தனர். அடுத்து என்ன நடந்தது என்பது அமெரிக்க விண்வெளி மையம் மட்டுமல்லாமல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விண்வெளி வரலாற்றில் மிக மோசமான பேரழிவாக மாறியது. மக்கள் வானத்தில் தீப்பிழம்புகள் மற்றும் தீப்பொறிகளைக் கண்டனர். கொலம்பியா நகரம் தொலைந்து போனது. 7 விண்வெளி வீரர்கள் தரையிறங்கும் போது உயிரிந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
மரணம் எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வாய்க்கலாம். ஆனால் நம் இலட்சியத்தில் நாம் பின்தங்கிவிடக் கூடாது என்று ஒரு மாபெரும் இலட்சியவாதியாக திகழ்ந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா இந்தியப் பெண்களுக்கும், உலகப் பெண்களுக்கும் கனவு காண்பது, இலட்சியத்தை உருவாக்கிக் கொள்வது, அதன்பாதையில் நடப்பது வெற்றிகளைப் பெறுவது புதிய வரலாற்றைப் படைப்பது என்று என்றென்றும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in






