என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்
    X

    இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்

    • காந்தியடிகளின் வலதுகரமாக விளங்கியவர் ஜீவத்ராம் பகவன்தாஸ் கிருபலானி.
    • வார்தாவில் உள்ள மகிளா ஆசிரமத்தில் சேர வருமாறு சுதேசாவை அழைத்தார் கிருபலானி.

    வாழ்க்கைப் பயணத்தில் தனிப்பட்ட வாழ்விலும் சரி, பொதுவாழ்விலும் சரி, அநீதிகளை எதிர்த்து குரல் கொடுத்து போராடி வெல்வது அத்தனை எளிதானது இல்லை என்பதும் அது எத்தனை கடுமையானது என்பதும் போராடுபவர்களுக்கு மட்டுமே தெரியும்.

    கடுமையானது என்பதற்காக விட்டு விடாமல் தான் வாழும் காலத்தில் தன் மண்ணிற்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக தன் வாழ்க்கை இருக்கவேண்டும் என்று வாழ்ந்தவர்களுக்கு வரலாறும் ஒரு இருக்கையை தந்துவிடுகிறது.

    வரலாற்றின் சிறந்த பரிசு எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை என்றாலும் சில நேரங்களில் உரியவர்களுக்கு அரிதாக கிடைத்தும் விடுகிறது. அப்படி, பல இன்னல்களை எதிர்கொண்ட போதிலும் கொண்ட கொள்கையை கைவிட்டுவிடாமல், தன் மனத்திடத்தினால் மட்டுமே சாதனை நாயகியாக வரலாற்றின் பரிசைப் பெற்று மிளிர்ந்த பெண் யார் தெரியுமா?

    இன்றைக்கு குடியரசு நாடாக நம்நாடு பரிணமிக்கிறது என்றால் அதற்குரிய அடிப்படை அரசியல் கட்டமைப்பை உருவாக்கிய பெருமக்கள்தான் காரணம். அதிலும் பதினைந்து பெண்கள் நம்முடைய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்கெடுத்தார்கள்.

    இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர், இளைஞர்களையும், பெண்களையும், மாணவ-மாணவிகளையும் நாட்டு விடுதலையை நோக்கித் திருப்பியவர், மகாத்மா காந்தியின் தீவிர தொண்டர். மிகச்சிறந்த சமூக சேவகர், பெண் முன்னேற்றத்திற்கான தடைகளை உடைத்து புதிய பாதைகளை வகுத்துத் தந்தவர்,

    இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் போன்ற பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரர்தான் இக்கட்டுரையின் நாயகி சுதேசா கிருபலானி.

    இவர் தனக்கு ஏற்பட்ட சோதனைகளை சாதனைகளாக்கிய வரலாற்றை காண்போம் வாருங்கள்.

    அரியானா, அம்பாலா பகுதியில் வசித்து வந்த காங்கிரஸ் உறுப்பினரும், தீவிர தேசபக்தருமான அரசுமருத்துவர் சுரேந்திரநாத் மஜூம்தார் என்ற வங்காளத்தவரின் மகளாக ஜூன் 25, 1908-ல் பிறந்தார் சுதேசா. தன் மகள் சுதேசா சிறந்த கல்வியாளராக ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு, நன்றாக படிக்கவைத்தார் மஜூம்தார்.

    பெண்கல்வி அரிதாயிருந்த காலத்தில் பல்கலைக்கழகம் வரை சென்று தங்கம் வென்ற சுதேசாவிற்கு துன்பம் தந்தையின் மரணத்தாலும், பொருளாதாரச் சிக்கல்களாலும் உண்டானது. குடும்பச் சுமை முழுவதும் அவரின் தோளுக்கு மாற்றப்பட்டது.

    தன் குடும்பத்தை காப்பதற்காக பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் அரசியலமைப்பு வரலாற்றுப் பேராசிரியராக பணியி்ல் சேர்ந்தார் சுதேசா. ஒருபுறம் நாட்டுப்பற்று, மறுபுறம் குடும்பப் பொறுப்பு என இயங்கலானார். இந்திய நாட்டுவிடுதலை நோக்கிய போராட்டங்களின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதில் மிகவும் தீவிரம் காட்டினார் சுதேசா.


    பேராசிரியர் ருக்மணி

    காந்தியடிகளின் வலதுகரமாக விளங்கியவர் ஜீவத்ராம் பகவன்தாஸ் கிருபலானி. ஆச்சார்யா என்று அழைக்கப்பட்ட தீவிர காந்திய தொண்டரான இவர் போராட்டங்களில் பங்கேற்க மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக அடிக்கடி இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்திற்கு வருவதுண்டு.

    1930-களில் அவ்வாறு வரும்போதுதான் சுதேசாவை சந்தித்தார் கிருபலானி. தொடர்ந்து பீகார் நிலநடுக்க மீட்பு நடவடிக்கையின் போது இருவரும் நெருங்கிப் பழகினர். வார்தாவில் உள்ள மகிளா ஆசிரமத்தில் சேர வருமாறு சுதேசாவை அழைத்தார் கிருபலானி. இவர்களின் நெருக்கம் குறித்து வினோபாபாவே கூறிய கருத்தால் அதிர்ச்சியுற்ற சுதேசா ஆசிரமத்தில் சேருவதை தள்ளிவைத்தார்.

    1936-ல் தன்னைவிட இருபது வயது மூத்தவரும் சிந்தி இனத்தவருமான கிருபலானியை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார் சுதேசா. இத்திருமணத்திற்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது.

    காந்தியடிகள், சுதேசாவிடம் இத்திருமணத்தை நிறுத்தவேண்டும் என்றும், இதனால் தன்னுடைய தீவிரமான தொண்டரை தான் இழக்கநேரிடும் என்றும் கூறினார். "எங்கள் திருமணத்தை நீங்கள் ஆதரித்தால் உங்களுக்கு இரண்டு தொண்டர்கள் கிடைப்பார்கள்" என்று பதிலளித்தார் சுதேசா. அதற்கு காந்தியடிகள் "நீ வேறு யாரையாவது மணம்செய்து கொள்" என்றார். அதைக் கேட்ட சுதேசா, "அது ஒழுக்கமற்றதாகவும், நேர்மையற்றதாகவும் ஆகிவிடும்" என்றார். காந்திக்கு தெரியாமலே இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

    வயது வித்தியாசம் இருந்தாலும் இருவரும் கொள்கைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டனர். சமூகப் பணி, நாட்டு விடுதலை இரண்டையும் இரண்டு கண்களாகக் கொண்டு செயல்புரிந்து வந்தனர்.

    இந்திய தேசியக் காங்கிரசின் பொதுச்செயலாளராக இருந்த கிருபலானி, அலகாபாத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுதேசாவோ வாரணாசியில் பணியாற்றினார். வார இறுதிகளிலும், விடுமுறை நாட்களிலும் மட்டுமே தன் கணவரை சந்தித்து வந்தார். 1939-ல் தன் பணியை விட்டு விலகி தன் கணவரோடு முழுநேர தேசப்பணியில் இணைந்தார்.

    1942-ல் நடைபெற்ற "வெள்ளயனே வெளியேறு" இயக்கத்தில் அருணா ஆசப் அலி, உஷா மேனன் உள்ளிட்டோருடன் சுதேசாவும் இணைந்து போராடத் தொடங்கினார். முக்கியத் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். சுதேசா மீதும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டபோது, தலைமறைவாக இருந்து பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தவேண்டும் என காங்கிரஸ் இயக்கம் அவரை நியமித்தது. அதேநேரத்தில் புனேவில் உள்ள ஆகாகான் அரண்மனையில் உண்ணாவிரதம் இருந்துவந்த மகாத்மா காந்தியின் உடல்நிலை மிகவும் மோசமாக ஆனது.

    காந்தியின் உடல்நிலை மோசமானது குறித்து பெரிதும் கவலைப்பட்ட சுதேசா அவரைப் பார்க்கவேண்டுமென விரும்பி பம்பாய் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதினார். "நான் சுதேசா கிருபலானி. காந்திஜியை பார்க்க எனக்கு அனுமதி வேண்டும். அவரைப் பார்த்துவிட்டு திரும்பியவுடன் நீங்கள் என்னை கைது செய்யலாம். எனக்காக இந்த உதவியை நீங்கள் செய்யவேண்டும்" என கோரியிருந்தார். உள்துறை செயலர் அக்கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி அனுமதிபெற்றார். 24 மணி நேரத்திற்குள் காந்தியைப் பார்த்துவிட்டு வெளியேறிவிட வேண்டுமென அனுமதி தரப்பட்டது. சுதேசா கைது செய்யப்படவில்லை.

    சுதேசா கிருபலானியின் தீவிர நாட்டுப்பற்றையும், போராட்டங்களையும் கண்ட காந்தியடிகள் 1946-ம் ஆண்டு "கஸ்தூரிபா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளை"யின் அமைப்புச் செயலாளராக அவரை நியமித்தார். அதே ஆண்டு, வங்கத்தில் நவகாளியில் வன்முறை வகுப்புக் கலவரங்கள் வெடித்ததால் அங்கே மக்களுக்கு சேவை செய்யவும், அமைதியை கொண்டுவரவும் காந்தி புறப்பட்டபோது அவருடன் சுதேசாவும் கணவர் கிருபலானியுடன் இணைந்து, படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவைசெய்தனர்.

    1946-ம் ஆண்டின் இறுதியில் சுதேசா கிருபலானி அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆற்றலும் திறமையும் காரணமாக இந்திய அரசியலமைப்புக்கான சட்டவரைவை உருவாக்கும் பணிக்கு ஒதுக்கப்பட்ட துணைக்குழுவில் அவர் சேர்க்கப்பட்டார்.

    1947-ம் ஆண்டு சுதந்திரம் அறிவி்ப்பதற்கு சற்று முன்னர் "வந்தே மாதரம்" பாடலைப் பாடி எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தார் சுதேசா கிருபலானி.

    1948-ல் காந்தியடிகள் இறந்த பிறகு அரசியலில் பற்பல மாற்றங்கள் ஏற்பட்டன. 1949- ல், அவர் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்கு ஒரு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

    ஆச்சார்ய கிருபலானி, ஜவஹர்லால் நேருவிடம் கொண்ட கருத்து வேறுபாட்டினால், காங்கிரஸ் தலைமைப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, 'கிரிஷக் மஸ்தூர் பிரஜா கட்சி' என்ற கட்சியை நிறுவி, 1952-ல் தேர்தலுக்குத் தயாரானார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மன்மோகினி சேகல் என்பவரை சுதேசா வென்றார். பின்னர் கணவர் தொடங்கிய கட்சியை விட்டு வெளியேறி காங்கிரசி்ல் மீண்டும் இணைந்து அக்கட்சியின் நலனுக்காகவே முழு அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வந்தார்.

    உத்தரப்பிரதேச அரசியலில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சுதேசாவின் அனைத்து தகுதிகளின் விளைவாக 1952-ம் ஆண்டும் 1957-ம் ஆண்டிலும், சட்டசபைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதேசா தனது அரசியல் பயணத்தின் தொடர்ச்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் என்ற அமைப்பையும் நிறுவினார்.

    கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு கட்சிகளில் பணியாற்றினாலும், சுதேசா தம் கணவருக்கு ஆற்றக்கூடிய தொண்டுகளை உடனிருந்து செய்ததோடு, அவர் உடல் நலத்தில் அக்கறையும் எடுத்துக் கொண்டார்.

    முதல் பெண் முதல்வராக பதவியேற்றார்

    1963-ல் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் முதலமைச்சராகவும், இந்திய மாநிலங்களில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையையும் ஒருசேரப் பெற்றார் சுதேசா கிருபலானி. முதல்வர் ஆனவுடன் தன்னுடைய திறமையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை நடத்தி பொருளாதாரச் சரிவை மீட்டெடுத்து கட்டுப்படுத்தினார்.

    ஊதிய உயர்வு வேண்டி அரசு ஊழியர்கள் 62 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டப் பிரச்சினையை மிகச் சரியாக கையாண்டு தான் ஒரு சிறந்த நிர்வாகி என்பதை நிரூபித்தார். காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை பணியாற்றி அதன்பின்னரே ஓய்வெடுக்கப் போவது இவரது வழக்கம். இன்றும் இது போன்ற ஒரு முதல்வரைக் காண்பதரிது என்று நினைவு கூறும் அளவிற்கு ஒரு சிறந்த முதல்வராக பணியாற்றிய வல்லமை உடையவராய் இருந்தார் சுதேசா. ஒரு முதல் அமைச்சராக இவருடைய எளிமையைக் கண்டு, லால் பகதூர் சாஸ்திரி மிகவும் வியந்து பாராட்டினார்.

    1971-ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் தேசு கிருபலானி. இளமைக்காலம் முதல் பம்பரமாய் சுற்றிச் சுழன்று தன் உடல்நிலையைப் பற்றி கவலைப்படாமல் உழைத்த அவர் டிசம்பர் 1, 1974-ல் தீவிர நெஞ்சடைப்பின் காரணமாக இவ்வுலக வாழ்வை நீத்தார்.

    தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in

    Next Story
    ×