என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சிறுநீரக செயலிழப்பும் சிகிச்சை முறையும்
- சிறுநீரகத்தின் முக்கிய பணி கழிவுப்பொருட்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றுவதே ஆகும்.
- சிறுநீரக செயலிழப்பு என்பது சிறுநீரகம் முழுமையாக வேலை செய்வதை நிறுத்தும் நிலை.
மனித உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என சிறுநீரகங்கள் அழைக்கப்படுகின்றன. நம் வயிற்றின் பின்பக்கம் கீழ் முதுகுப் பகுதியில் முதுகுத்தண்டின் இருபுறமும் அவரை விதை வடிவத்தில் சிறு நீரகங்கள் அமைந்துள்ளன.
சிறுநீரகத்தின் முக்கிய பணி கழிவுப்பொருட்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றுவதே ஆகும். இவை ரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களான யூரிக் அமிலம், யூரியா, கிரியேட்டினைன் சல்பேட்டுகள் போன்றவற்றை வெளியேற்றுகின்றன. அளவுக்கு அதிகமான தாதுப் பொருட்களான சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பேட் மற்றும் மெக்னீசியம் போன்றவற்றையும் சிறுநீரின் வழியாக வெளியேற்றுகிறது.
குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் சிறுநீர் கழிக்கத் தொடங்கும். ஒரு நாளைக்கு 9 முறைக்கு மேல் குழந்தைகள் சிறுநீர் கழிப்பர். அவ்வாறு சிறுநீர் போகவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து.
ஒரு நபருக்கு சிறுநீரே வரவில்லை என்று வைத்துக் கொள்வோம், 2 நாளில் மூளை செயல்படாமல் போகும். அடுத்து கோமா நிலைக்கு சென்று விடுவார். சிறுநீர் என்பது அசுத்தமாக தெரியலாம். அருவெறுப்பாகவும் இருக்கலாம். அந்த சிறுநீர் வெளியேறவில்லை என்றால் நீங்கள் அருவெறுப்பாக மாறி விடுவீர்கள்.
சிறுநீரக பாதிப்பு பிறந்த குழந்தைக்கும் வரும், 80 வயது முதியவருக்கும் வரும். இதில் சிறுநீரக செயலிழப்பு என்பது வேறு, சிறுநீரக கல் என்பது வேறு. நாம் குடிக்கும் தண்ணீரிலும், சாப்பிடும் உணவிலும் கால்சியம் பாஸ்பேட், ஆக்சலேட் என்று பல தாது உப்புக்கள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சில சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும் போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து கல் போலத் திரளும். ஒரு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீரகக் கல். இந்த கற்கள் வயிற்று பகுதியில் கடுமையான வலியை ஏற்படுத்தும். ஸ்கேன் செய்து கல் இருப்பது உறுதி செய்தால் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியே எடுத்து விடலாம். அல்லது சிறுநீர் வழியாகவே கல்லை வெளியே வருமாறு செய்து விடலாம்.
சிறுநீரக செயலிழப்பு என்பது சிறுநீரகம் முழுமையாக வேலை செய்வதை நிறுத்தும் நிலை. இந்த நிலையில், சிறுநீரகம் சேதமடைந்து அதன் பணிகளைச் செய்வதை நிறுத்துகிறது. இது நாள்பட்ட சிறுநீரக நோயின் கடைசி கட்டமாக கருதப்படுகிறது.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் சிறுநீர் பிரிவது குறையும். பசி குறையும். விக்கல், வாந்தி வரும். தூக்கம் குறையும். கடுமையான சோர்வு, உடலில் அரிப்பு, முகம் மற்றும் கை கால்களில் வீக்கம் தோன்றுவது, மூச்சிரைப்பு, சோர்ந்து படுத்துக் கொள்வது போன்ற அறிகுறிகளும் தோன்றும். சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கவனித்து விட்டால் நோய்க்கான அடிப்படை காரணத்தை அறிந்து மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். ஆனால் சிறுநீரகம் செயலிழந்து விட்டால் மருத்துவச் சிகிச்சை மட்டும் போதாது. 'டயாலிசிஸ்' என்ற ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை தேவைப்படும். சிலருக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டியதும் வரும். சிறுநீரக செயல் இழப்புக்கு டயாலிசிஸ் சிகிச்சையை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர் ஜனதா கட்சியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் நாராயணன் ஆவார். இவர் சிறுநீரக செயல் இழப்பால் பாதிக்கப்பட்டதால் அமெரிக்காவில் இருந்து டயாலிசிஸ் எந்திரத்தை மும்பைக்கு கொண்டு வந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றார்.
சிலருக்கு 2 சிறுநீரகங்களும் ஒரே நேரத்தில் செயலிழக்கலாம். அல்லது ஒரு சிறுநீரகம் மட்டும் தனியாக செயலிழக்கலாம். சிலர் பிறக்கும் போதே ஒரு சிறுநீரகத்துடன் பிறப்பர். 2 சிறுநீரகங்கள் பெரிதாக இருந்தும் அவை இயங்கவில்லை என்றால் ஆபத்து தான்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டால் ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினைன் அதிகமாக இருக்கும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு நோய் வர வாய்ப்புள்ளது. சிலர் தலைவலி, மூட்டு வலி என எந்த நோய் வந்தாலும் தாங்களே மருந்துக்கடைக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடுவார்கள். அவ்வாறு மருத்துவர்களின் ஆலோசனையின்றி கிடைக்கும் மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். இதேபோல வலி நிவாரண மாத்திரைகளும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சிறுநீரக பாதிப்பு பெண்களுக்கும் வரும். பிரசவ காலத்தில் உயர் ரத்த அழுத்தம் இருந்து அதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் சிறுநீரக செயலிழப்பு வரும். எனவே பிரசவ காலங்களில் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். கோவையில் பிறந்த ஒரு குழந்தைக்கு முதல் நாள் சிறுநீர் வரவில்லை. 2-வது நாளும் சிறுநீர் வராததால் பெற்றோர் பதறி அடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பெண் மருத்துவர் ஒருவர் பரிசோதித்து பார்த்து விட்டு குழந்தைக்கு சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உள்ளது என்றார். பிறந்த குழந்தைக்கு சிறுநீரக பாதிப்பா? என்று அனைவரும் ஆச்சர்யத்துடனேயே கேட்டனர்.
ஸ்கேன் செய்து பார்த்தால் குழந்தையின் உடலில் சிறுநீரகங்கள் உள்ளது. ஆனால் அந்த சிறுநீரகங்கள் செயல்படாமல் இருந்தது. குழந்தையின் தாயார் உட்கொண்ட மருந்தால் குழந்தைக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. நீண்ட நாட்களாக அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. பிறகு அந்த பெண் கருவுற்று இருக்கிறார். கர்ப்ப காலத்தில் அந்த பெண்ணுக்கு ரத்த அழுத்தம் இருந்துள்ளது. இதற்காக அந்த பெண் மாத்திரை சாப்பிட்டு இருக்கிறார். ரத்த அழுத்த மாத்திரை சாப்பிடும் போது அந்த மாத்திரை பெண்ணின் ரத்தத்தில் இருந்து குழந்தையின் ரத்தத்துக்கு சென்று அதன் மூலம் குழந்தையின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.எனவே பிரசவ காலத்தில் பெண்கள் என்ன மாத்திரை உட்கொண்டாலும் சிறந்த மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தையும் பாதிக்கப்படும்.
ஒரு நபருக்கு 24 மணி நேரத்தில் ஒன்றரை லிட்டர் சிறுநீர் வெளியேற வேண்டும். அவ்வாறு வராமல் சிறுநீர் குறைவாக வந்தாலோ, அதிகமாக வந்தாலோ சிறுநீரக பாதிப்பு உள்ளது என்று அர்த்தம். ஒருநாள் முழுக்க சிறுநீர் வரவில்லை என்றாலோ, சிறுநீரில் ரத்தம் வந்தாலோ உடனே மருத்து வரை பார்த்து சிகிச்சை பெற வேண்டும். சிறுநீரக ரத்த குழாயில் அடைப்பு இருந்தாலும் சிறுநீர் வருவதில் பாதிப்பு ஏற்படும். குறைவாக வந்தால் சிறுநீரக செயலிழப்பு, அதிகமாக வந்தால் அது சர்க்கரை நோய். பிட்யூட்டரி, அட்ரினல் பாதிப்புகள் இருந்தாலும் அதிகம் சிறுநீர் வெளியேறும். உடனே சிறுநீரக சிகிச்சை மருத்துவரை பார்த்து சிகிச்சை பெற வேண்டும்.
சிறுநீரக தானம்
சிறுநீரக செயலிழப்பு ஆன அனைத்து நோயாளிகளுக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது இல்லை. 1000 பேர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவர்களில் 500 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்தால் போதும். 300 பேருக்கு ஹோம் டயாலிசிஸ் எனப்படும் சிகிச்சை தேவைப்படும். மீதம் உள்ள 200 பேருக்கு தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருக்கும். சிறுநீரக செயலிழப்பை கண்டுபிடித்த உடனேயே மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். அல்லது 6 மாதம் கடந்த பின்னரோ பண்ணலாம். ஒரு ஆண்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று விட்டு மாற்றிக் கொள்ளலாம்.
பாதிக்கப்பட்ட நபருக்கு தாய், தந்தை சிறுநீரக தானம் கொடுக்கலாம். ஏன் என்றால் ஒவ்வொருவருக்கும் 2 சிறுநீரகங்கள் உள்ளன. அதில் ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுக்கலாம். இதேபோல தங்கை, அண்ணன் போன்ற உறவுமுறையில் உள்ளவர்களும் சிறுநீரக தானம் செய்யலாம். சிலர் பணத்துக்காக சிறுநீரகத்தை விற்பனை செய்வார்கள். இவ்வாறு சிறுநீரகத்தை விலை கொடுத்து வாங்கக் கூடாது. இது குற்றச் செயல் ஆகும். இது சிறுநீரகம் பொருத்து பவருக்கும், விற்பனை செய்பவருக்கும் சட்ட சிக்கலை ஏற்படுத்தும்.
ஒரு இளைஞர் மூளைச்சாவு அடைந்து விட்டார் என்றால் அவரிடம் இருந்து சிறுநீரகத்தை தானமாக பெற்றுக் கொண்டு பிறருக்கு பொருத்தலாம். எப்படி சிறுநீரக தானம் பெற்று பொருத்தினாலும் அதற்கு அரசின் முறையான அனுமதி பெற வேண்டும். தாய், தந்தையிடம் இருந்து சிறுநீரக தானம் பெற்றாலும் அரசின் அனுமதி பெற வேண்டும்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது மிக சிரமமான சிகிச்சை ஆகும். சிறுநீரகத்தை ஒரு நபரிடம் இருந்து எடுப்பதற்கும், அதனை பொருத்துவதற்கும் பல மணி நேரங்கள் பிடிக்கும். சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் நலமாக வாழலாம். 10 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சிறுநீரகம் செயலிழந்தாலும் மாற்றிக் கொள்ளலாம். சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று அவர்களுக்கு திருமணமாகி குழந்தைகளும் பிறந்துள்ளனர். எனவே மாற்று அறுவை சிகிச்சை செய்தால் கண்டிப்பாக மறுவாழ்வு கிடைக்கும். எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
எந்த நோயாக இருந்தாலும் மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளையே உட்கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நோய் வருமுன் காக்கும் திட்டமாகும். 25 வயதுக்கு மேற்பட்டோர் 3 ஆண்டுக்கு ஒருமுறையும் 30 வயதுக்கு மேற்பட்டோர் 2 ஆண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டோர் வருடத்துக்கு ஒரு முறையும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இவ்வாறு பரிசோதனை செய்து கொண்டு பெரிய நோய்கள் வருவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிடுங்கள், மது அருந்தாதீர்கள், தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள், புகை பிடிக்காதீர்கள், தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். சிறுநீரை அடக்கி வைக்கக்கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்து விட வேண்டும். இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளலாம்.
தொடர்புக்கு: info@kghospital.com, 98422 66630






