என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  இதயம் ஒரு கோவில்: ஆபத்தை உணர்த்தும் மயக்கம்- திடீர் மரணத்தை வெல்ல முடியுமா?
  X

  இதயம் ஒரு கோவில்: ஆபத்தை உணர்த்தும் மயக்கம்- திடீர் மரணத்தை வெல்ல முடியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் மரணத்தை தழுவியே ஆக வேண்டும்.
  • இதயத்தின் இடதுபிரதான ரத்தக்குழாய் பாதிப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரும்.

  மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் மரணத்தை தழுவியே ஆக வேண்டும். அனைவருக்கும் ஒரு கட்டத்தில் மரணம் ஏற்படும். வயது மூப்பு, விபத்து, தொடர் நோய் ஆகிய காரணங்களால் மரணம் உண்டாகும். ஆனால் எந்த நோயும் இல்லாமல், நோய்க்கான அறிகுறிகளும் இல்லாமல் திடீரென சிலர் மரணம் அடைகின்றனர். இதற்கு பெயர் தான் திடீர் மரணம்.

  முன்பு திடீர் மரணங்கள் பற்றி கேள்விப்படுவோம். ஆனால் இப்போது அந்த துயர காட்சிகளை வீடியோவாகவே பார்க்கிறோம். திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருப்பவர் அப்படியே சரிந்து விழுந்து இறப்பார், விளையாடிக் கொண்டிருக்கும் வீரர் சுருண்டு விழுந்து உயிர் விடுவார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர் அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டு மரணிப்பார். இதுபோன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுவதை பார்க்கிறோம். அதனால் திடீர் மரணங்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகி விட்டது.

  திடீர் மரணத்துக்கு 4 காரணங்கள் உள்ளன. ஒன்று இதயம் சம்பந்தப்பட்டது. இதயத்துக்கு செல்லும் ரத்தம் 3 குழாய்கள் வழியாக செல்கிறது. அந்த 3 குழாய்களும் ஒரே சமயத்தில் அடைத்து விட்டால் இதயத்துக்கு ரத்தம் போவதில்லை. இதயத்தின் தசைப்பகுதிகளுக்கு செல்லும் ரத்தம் போகாமல் தடைபட்டால் தசைகள் செயல் இழந்து விடுகிறது. செயலிழந்த அந்த தசைகள் மீண்டும் செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது. மீண்டும் அந்த தசைகள் விரிந்து சுருங்காது. இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் முக்கியமானது இடது பிரதான ரத்தக்குழாய்.

  அணையில் இருந்து வரும் தண்ணீர் மெயின் குழாய் வழியாக வந்து அதில் இருந்து ஒவ்வொரு பகுதிக்கும் சிறு குழாய்களாக பிரிந்து சென்று தண்ணீர் சப்ளை வழங்கப்படும். அந்த மெயின் குழாயிலேயே அடைப்பு ஏற்பட்டால் தண்ணீர் எங்கேயும் செல்லாது. அடைப்பு ஏற்பட்டாலும், குழாய் உடைந்து போனாலும் தண்ணீர் வராது. அதேபோல மெயின் குழாய் வழியாக ரத்தம் வந்து மற்ற பகுதிகளுக்கு ரத்தம் செல்லும். இந்த மெயின் குழாய் தான் இடதுபிரதான ரத்தக்குழாய்.

  இந்த குழாய் 4 மில்லி மீட்டர் அளவில் இருக்கும். அந்த மெல்லிய குழாயானது திடீரென்று அடைபடாது. அதில் கொஞ்சம், கொஞ்சமாக கொழுப்பு படிந்து கொண்டே வரும். 90 சதவீதத்துக்கு மேல் படியும்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு இறந்து விடுகிறார். இடது பிரதான ரத்தக்குழாயை விதவை ரத்தக்குழாய் என்றும் அழைப்பர்.

  எந்தவொரு மனிதனும் சிறு நோயாவது இல்லாமல் இருக்க முடியாது. நோயானது 20 வயதிலும், 40 வயதிலும் வரலாம். சிலர் பிறக்கும் போது நோயுடனேயே பிறக்கிறார்கள். இதயத்தின் இடதுபிரதான ரத்தக்குழாய் பாதிப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரும்.


  டாக்டர் ஜி.பக்தவத்சலம்

  இந்த ரத்தக்குழாய் பாதிப்பை எளிதில் கண்டறிய முடியாது. டாக்டரிடம் சென்றால் ஈ.சி.ஜி. எடுத்து பார்ப்பார். அதில் ஒன்றும் தெரியாது. உங்களுக்கு ஒன்றும் இல்லை என டாக்டர் சொல்வார். எனது தந்தை மாரடைப்பால் இறந்து விட்டார், எனவே நன்றாக பரிசோதித்து பாருங்கள் என டாக்டரிடம் வேண்டுகோள் விடுப்பர்.

  உடனே நோயாளியின் சந்தேகத்தை போக்க அவருக்கு எக்கோ கார்டியோ கிராபிக் எடுத்து பார்ப்பார்கள். இதயம் விரிந்து சுருங்கும்போது 60 சதவீத ரத்தம் வெளியேறும். அவ்வாறு வெளியேறாமல் 20 சதவீத ரத்தம் வெளியேறுகிறது என்றால் இதயம் பலமாக இல்லை, பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். அதிலும் பிரச்சினை இல்லை என்றால் மூவிங் பெல்ட் மீது நடக்கும் பரிசோதனை. அந்த பெல்ட்டை 2, 3, 4 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடச் செய்து அதில் நம்மை ஓடச் சொல்வார்கள். மலையேறும் போது இதயத்துடிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும். இதேபோன்றதொரு பரிசோதனை தான் இது. 4 கிலோ மீட்டர் வேகத்தில் பெல்ட்டில் ஓடும்போது இதயத்துடிப்பின் அளவு 140 வரை செல்லும். 150-க்கு போகும் போது கூட நெஞ்சில் வலியோ, எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை என்றால் இதயம் நன்றாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளப்படும்.

  150-க்கு போகும்போது லேசாக நெஞ்சு வலிப்பது போல் இருந்தாலோ, ஈ.சி.ஜி.யில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தாலோ உங்களுக்கு ரத்த ஓட்டம் குறைவான இதய நோய் என்று அர்த்தம். இதற்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர் பரிந்துரைப்பார். அல்லது நவீன சி.டி. ஸ்கேன் மூலமும் ரத்தக் குழாயில் இருக்கும் பிரச்சினையை மருத்துவர் கண்டறிந்து சிகிச்சை அளிப்பார். அடுத்து இதயத்தில் உள்ள அயோடிக் வால்வில் ஏற்படும் பாதிப்பு. உடலில் அனைத்து பாகங்களுக்கும் ரத்தம் செல்ல இதயம் அழுத்தும் போது வால்வு திறக்கும். அந்த வால்வு சுருங்கிப் போனால் 4 அல்லது 5 மில்லி மீட்டர் அளவில் இருக்கும் வால்வு அரை சென்டி மீட்டர் ஆகி விடும். வால்வு சுருங்கி போனால் ரத்தம் அடுத்த இடத்துக்கு செல்ல முடியாது. அப்போது மூளைக்கும் ரத்தம் செல்வது தடைபடும். அந்த சமயம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருப்பவர்களும் மயக்கம் போட்டு விழுந்து விடுவார்கள். எனவே அயோடிக் வால்வு பழுதுபட்டால் மயக்கம் வரும். பழுதுபட்ட அந்த வால்வை மாற்ற வேண்டும்.

  இதய ரத்தக்குழாய்களில் ஒரு அடைப்பு, 3 அடைப்பு இருந்தால் கூட பைபாஸ் சர்ஜரி செய்யலாம். அயோடிக் வால்வு பழுதுபட்டால் அந்த வால்வை மாற்றித்தான் ஆக வேண்டும். ஒரு முறை மயக்கம் வந்தவுடன் உஷாராகி மருத்துவரை போய் பார்த்து எக்கோ கார்டியோ கிராபி மூலம் அயோடிக் வால்வு பழுதாகி இருந்தால் அதனை மாற்ற வேண்டும். திறந்தநிலை அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்த வால்வை மாற்றி விட்டால் இன்னும் 10 ஆண்டுகள் கூடுதலாக வாழலாம். அந்த வால்வை மாற்றாமல் சாதாரண மயக்கம் தான் என்று விட்டு விட்டால் அடுத்த மயக்கம் வரும்போது உயிரோடு இருக்க மாட்டீர்கள். நெஞ்சுவலி லேசாக வருகிறது என்றால் அது அபாய மணி. உடனே டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெறுங்கள். ஏன் என்றால் அடுத்த அபாய மணி அடிக்கும் போது உயிர் பிழைப்பது கடினம் ஆகிவிடும்.

  3-வது இதயத்துக்கு செல்லும் நரம்புகளால் பாதிப்பு ஏற்படும். இதயம் துடிக்கிறது என்று சொன்னால் அங்கு சின்ன பல்ஸ் ஜெனரேட்டர் இருக்கிறது. இதயத்தின் உள்ளேயே இதுபோன்ற செயல்பாடு உள்ளது. கரண்டை தொட்டவுடன் ஷாக் அடிப்பது போல இதயத்துக்கே மெல்லியதாக ஷாக் கொடுப்பது போல இந்த அமைப்பை நமக்குள் கடவுள் படைத்து இருக்கிறார். இந்த மின் தூண்டுதல் செயல்படாவிட்டாலும் இதயம் சரியாக துடிக்காது. மூளைக்கும் சரியாக ரத்தம் செல்லாது. இதனால் ஏற்படும் மயக்கம் மிக ஆபத்தானது. அடுத்து இதயத்துக்கு செல்லும் நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் மயக்கம் வரும். இதுவும் திடீர் மரணத்துக்கான அறிகுறியே. மகா பெருஞ்சிரை குழாய் உடைந்து போனாலும் அடைப்பு ஏற்படும். மேலும் மாரடைப்பின் போது இதயத்தின் ஒரு சுவர் உடைந்து விடும். இதனாலும் திடீர் மரணம் ஏற்படும்.

  எனவே உங்கள் உயிர் மேல், உங்கள் குடும்பத்தின் மீது அக்கறை இருந்தால் நீங்கள் கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும். சிகரெட் பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது. மன அழுத்தத்துக்கு ஆளாகாதீர்கள். டென்சன் ஆகாமல் அமைதியாக உங்கள் வேலையை கவனியுங்கள். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள், முடிந்தவரை ஓட்டலில் சாப்பிடுவதை தவிருங்கள். அதிகம் இனிப்பு சாப்பிடாதீர்கள். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

  ஆபரேஷன் வரை வந்து விட்டோம் என்றால் அதன்பிறகாவது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். அசைவ உணவை தவிர்க்க வேண்டும். மஞ்சள் கரு சாப்பிடக் கூடாது. தினந்தோறும் 30 நிமிடம் நடைபயிற்சி செய்யுங்கள். காய்கறிகள், சிறுதானியங்களை அதிகம் சாப்பிடுங்கள். சாப்பாட்டை அப்படியே விழுங்காதீர்கள். நன்கு மென்று சாப்பிடுங்கள்.

  அறிந்து கொள்வோம் முதலுதவி

  சிலர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்கள். திடீரென மட்டனோ அல்லது சிக்கனோ தவறான வழியாகச் சென்று மூச்சு குழாயை அடைத்துக் கொள்ளும். அப்போது காற்று உள்ளே போக முடியாது. காற்று உள்ளே போகவில்லை என்றால் 3 நிமிடத்தில் உயிர் போய் விடும். உங்கள் நண்பர் ஒருவர் சாப்பிடும்போது இப்படி நடந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். பேச்சு வரவில்லை, கையை மட்டும் தொண்டையில் வைத்து சைகை காட்டுகிறார். அப்போது தொண்டையில் ஏதோ உணவு சிக்கிக் கொண்டு அவதிப்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உடனே அவரது பின்னால் போய் நின்று வயிற்றை பலமாக அழுத்தினோம் என்றால் சிக்கிக் கொண்ட உணவோ, பொருளோ வெளியே வந்து விடும். குழந்தைகளுக்கு மூச்சுக்குழாயில் ஏதாவது சிக்கிக் கொண்டால் குழந்தையை தலைகீழாக பிடித்து முதுகை தட்டினால் வெளியே வந்து விடும். எனவே நாமும் சிறு, சிறு முதலுதவிகளை தெரிந்து கொள்வது அவசியம்.

  பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை. விதியை மதியால் வெல்லலாம்.

  தொடர்புக்கு: info@kghospital.com, 98422 66630

  Next Story
  ×