search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆரோக்கியம் அளிக்கும் அஞ்சறைப்பெட்டி- வம்ச விருத்திக்கு உதவும் சாதிக்காய்
    X

    ஆரோக்கியம் அளிக்கும் அஞ்சறைப்பெட்டி- வம்ச விருத்திக்கு உதவும் 'சாதிக்காய்'

    • சாதிக்காயில் 5 முதல் 15 சதவீதம் நறுமண எண்ணெய் உள்ளது.
    • பல நோய்நிலைகளுக்கு சாதிக்காய் பலன் தரும் என்கிறது.

    பண்டைய காலங்களில் கறிமசாலா பொருட்களோடும், வெற்றிலைப்பாக்கு தாம்பூலத்தோடும் சேர்த்து பயன்படுத்தப்பட்ட அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கு 'சாதிக்காய்'. இது இன்று நாம் பயன்படுத்த மறந்த மூலிகை கடைச்சரக்குகளுள் ஒன்று. நாட்டு மருந்து கடைகளிலும், பல சரக்கு கடைகளிலும் கிடைக்கும், மலைப்பகுதிகளில் விளையும் மணமான காய் தான் 'சாதிக்காய்'.

    பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் இந்தியா வருகைக்கு முன்னரே, டச்சுகாரர்கள் படையெடுத்து வந்து, நாடுகளை தன்வசமாக்க விரும்பியது நாடறிந்த வரலாற்று செய்தி. ஆனால் அத்தகைய வரலாற்றுக்கு பின்னர் தெரியாத உண்மை யாதெனில், அவர்கள் தேடி வந்தது சாதிக்காய் எனும் மிகச்சிறந்த மணமூட்டியைத் தான் என்கிறது வரலாற்று நூல்கள். அத்தகைய சாதிக்காயால் டச்சுகாரர்களின் கார்ப்பரேட் தனத்துக்கு அடிமையான நாடு இந்தோனேசியா என்கிறது வரலாறு. ஆக, சாதிக்காய்க்கு பின்னர் மணமும், மருத்துவ குணமும் மட்டுமல்லாது பல வரலாற்று கதைகளும் உண்டு.

    இத்தகைய சாதிக்காய் பல்வேறு நாடுகளில் உணவுப் பொருட்களில் மணமூட்டியாக மட்டுமின்றி, மருத்துவ நலமூட்டியாக, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மார்பு சளி, இருமல், தசைப்பிடிப்புகள் மற்றும் நாள்பட்ட மூட்டு வாத நோய்களுக்கு சீன மருத்துவத்தில் சாதிக்காய் விதைத்தூளை பயன்படுத்தியதாகவும், பாரம்பரியமாக இந்தோனேசியர்கள் பசியின்மை, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, அசீரணம், வாயுதொல்லை ஆகியவற்றிற்கு சாதிக்காய் விதைத்தூளை வேக வைத்து பயன்படுத்தியதாகவும் அறியப்படுகின்றது.

    அரேபியர்கள் செரிமான கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள், நிணநீர் சுரப்பிக் கோளாறுகள் போன்றவற்றுக்கு சாதிக்காயை பயன்படுத்துகின்றனர். மேலும் பாலுணர்வை (காமத்தை) தூண்டும் மருந்துகளில் இன்றளவும் சாதிக்காயை பயன்படுத்துவதாக நூல்கள் தெரிவிக்கின்றன. இதன் விதையின் எண்ணெய் தலைவலிக்கு நிவாரணி. அசீரண கோளாறுகளுக்கு, விதை எண்ணெய் இரண்டு சொட்டு தேநீரில் கலந்து பல நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

    நமது பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவமானது, மூச்சி ரைப்பு (ஆஸ்துமா), காய்ச்சல், இருமல், பெருங்கழிச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்ற வாயுவால் உண்டாகும் நோய்நிலைகள், வாத நோய், ஆண்களின் விந்தணுக்கள் குறைவு ஆகிய பல நோய்நிலைகளுக்கு சாதிக்காய் பலன் தரும் என்கிறது.

    சாதிக்காயின் கனி இன்றும் பல கிராமங்களில் ஊறுகாயாக செய்து பயன்படுத்தப்படுகிறது. கனிக்கு உள்ளிருக்கும் விதை தான் 'சாதிக்காய்'. அதுவே பல்வேறு மருத்துவக் குணங்களை உடையது. கனிக்கும் விதைக்கும் நடுவே இருக்கும் மெல்லிய தோல் பகுதி (விதை உறை) 'சாதிபத்திரி' என்று அழைக்கப்படுகிறது. அதுவும் மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக சித்த மருத்துவம் கூறுகின்றது.

    சாதிக்காயில் 5 முதல் 15 சதவீதம் நறுமண எண்ணெய் உள்ளது. அதில் உள்ள நறுமணம் தரும் எண்ணெய் பொருட்கள் அதன் மருத்துவ குணத்திற்கு காரணம் என்கிறது நவீன அறிவியல். அதில் உள்ள யூஜெனால், மிரிஸ்டிசின் ஆகிய முக்கிய வேதி மூலக்கூறுகள் பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சாதிக்காயில் உள்ள 'மிரிஸ்டிசின்' எனும் வேதிப்பொருள் அதன் மருத்துவ குணங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

    சாதிக்காயில் கூடுதலாக உடலுக்கு இன்றியமையாத பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்புச் சத்து போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன. மேலும் ரிபோபிளேவின், தையமின், நியாசின் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் வைட்டமின்களும் உள்ளது. இது பல மருத்துவ நன்மைகளை பயக்கும் இயற்கை நிறமிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது கூடுதல் சிறப்பு.

    நீண்ட நறுமணமும், காரமும், துவர்ப்புச் சுவையும் கொண்ட சாதிக்காய் வெப்ப வீரியத்தன்மையை உடையது என்கிறது சித்த மருத்துவம். சித்த மருத்துவ நோய்க்கூறுகளான வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் வாயுவையும், கபத்தையும் குறைத்து பித்தத்தைக் கூட்டும் தன்மை இதற்குண்டு. நரம்பு சார்ந்த நோய்நிலைகளுக்கு சிறிய அளவில் பயன்படுத்த மிகப்பெரிய நன்மைகளைத் தரக்கூடியது.

    இது அதிக துவர்ப்பு சுவையை உடையதால் தனியாகவோ, துவர்ப்பு சுவையுடைய பிற மூலிகைகளுடன் சேர்த்தோ ரத்தம் கசியும் நோய்நிலைகளில் பயன்படுத்த சித்த மருத்துவம் அறிவுறுத்துகின்றது. சாதிக்காய் அதிகம் பயன்படுவது ஆண்களின் காமத்தைப் பெருக்குவதற்கும், குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்கவும் தான். குழந்தைகளின் கழிச்சலுக்கு சிட்டிகை அளவு சாதிக்காய் பொடியை தேனுடன் அல்லது பாலுடன் கொடுக்க நன்மை தரும் என்கிறது சித்த மருத்துவம்.

    வயிற்றில் வாயுவினால் அவதிப்படும் நபர்கள் சாதிக்காயுடன், சுக்குப் பொடி சம அளவு சேர்த்து அத்துடன் இரண்டு பங்கு சீரகம் சேர்த்து தேவைப்படும் போது எடுத்துக்கொள்ள நன்மை பயக்கும். அல்லது அரை கிராம் பொடியுடன் சிறிது சர்க்கரை கலந்து, உணவுக்கு முன் எடுத்துக்கொள்ள வாயுத் தொல்லை நீங்கி செரிமானம் எளிதாகும். வாந்தி, வாய்க்குமட்டலை நீக்கி பசியைத் தூண்டும்.

    சாதிக்காயைப் பொடித்து சிட்டிகை அளவு பாலில் கலந்து எடுத்துக்கொள்ள மன அழுத்தம் நீங்கும். மனபதட்டம் குறையும். நரம்புகளுக்கு வன்மை தரும். தூக்கமின்மையால் தவிப்பவர்கள் சாதிக்காய் பொடியுடன், கசகசா சேர்த்து பாலில் கலந்து எடுத்துக்கொள்வது நல்லது.

    சாதிக்காயில் உள்ள மிரிஸ்டிசின் எனும் வேதிப்பொருள் மூட்டுகளில் வீக்கத்தை உண்டாக்கும் சைட்டோகைன் நொதிகளை தடுத்து வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே, சாதிக்காயில் இருந்து கிடைக்கும் நறுமண எண்ணெயுடன், நல்லெண்ணெய் கலந்து மூட்டு வீக்கம், மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற நோய்களுக்கு மேலே தடவ நல்ல பலன் தரும். இது இயற்கை வலி நிவாரணியாக செயல்படும்.

    நவீன யுகத்தில் குழந்தைப்பேறின்மை அளவுக்கு அதிகமாக பெருகிவிட்டது. நவீன வாழ்வியலில் உள்ள ஆண்களின் வம்ச விருத்தி தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. புகைபிடித்தலும், மதுப்பழக்கமும், மனஅழுத்தமும், இரவுப்பணிகளும், பெருகிவிட்ட மின்னணு சாதனங்களும், உடல் பருமனும், மறந்துபோன வாழ்வியல் நெறிமுறைகளும், துரித உணவு முறைகளும், ஆண்மை குறைவு நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளன.

    கலவியில் நாட்டமின்மை, விந்தணுக்கள் உற்பத்தி குறைவு, அதன் இயக்கம் குறைவு போன்ற பல்வேறு நிலைகளில் பயன்தரும் எளிய அஞ்சறைப்பெட்டிச் சரக்காக உள்ளது சாதிக்காய். சாதிக்காயைக் கொண்டு ஆண் எலிகளில் நடத்திய சோதனையில், அவற்றின் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரித்து இருப்பதாகவும், அவற்றின் கலவியில் நாட்டம் அதிகரித்து இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

    எனவே சாதிக்காய் பொடியுடன், ஆண்மையை அதிகரிக்கும் பிற மூலிகைகளாகிய நெருஞ்சில் முள் மற்றும் நீர்முள்ளி விதை சேர்த்து பொடித்து பாலில் கலந்து எடுத்துக்கொள்ள விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ஆண்களின் வம்ச விருத்திக்கு உதவும். தாம்பூலம் தரித்தலில் வெற்றிலை பாக்குடன் சாதிக்காய் சேர்ப்பது ஆண்மையை அதிகரிக்கும் என்பதை நம் முன்னோர்கள் முன்னரே அறிந்திருந்து, அதனை வழக்கமாக கொண்டிருந்தார்கள். இது தமிழர்களின் மரபு மருத்துவத்திற்கு உதாரணம்.

    முகத்தில் உண்டாகும் 'மங்கு' (மெலாஸ்மா) எனப்படும் கருப்பு நிற படைகளுக்கு இந்திய மருத்துவ முறைகளில் சாதிக்காய் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதிக்காயை பொடித்து பன்னீருடன் அல்லது பாலுடன் கலந்து தினசரி மேலே பூசிவர மங்கு படிப்படியாக மறையும். அதே போல், சாதிக்காயுடன் சந்தனம் சேர்த்து பாலுடன் கலந்து முகப்பருக்களுக்கு பூசி வர பருக்கள் நீங்கி முகம் பொலிவடையும்.

    சாதிக்காய் துவர்ப்பு சுவையுடையதால் பல்லீறுகளைப் பலப்படுத்தும் தன்மையுடையது. பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிக்கொல்லியாகவும் செயல்படக்கூடியதால் வாய் கொப்பளிக்கும் திரவங்களில் இதன் நறுமண எண்ணெய் சேர்க்கப்படுகின்றது.

    தோல் சுருக்கத்திற்கு காரணமாகும் 'எலாஸ்டேஸ்' எனும் நொதியின் செயல்பாட்டை தடுப்பதன் மூலம், தோல் என்றும் இளமையாக இருக்க சாதிக்காய் உதவுவதாக தென் கொரியா நாட்டு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. என்றும் இளமையாக இருக்க, தோல் சுருக்கத்தைப் போக்கும் முகப்பூச்சுகளில் வெளிநாட்டினர் இதனை சேர்ப்பதும் குறிப்பிடத்தக்கது.

    சாதிக்காய் எண்ணெய், புற்றுசெல்களின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் 'லாக்டேட் டிஹைடிரோஜீன்ஸ்- ஏ' எனும் நொதியின் செயல்பாட்டை தடுத்து பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றுக்கட்டியின் வளர்ச்சியைத் தடுப்பதாக சீனாவில் நடந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே போல் உடலில் உள்ள புராஸ்டாகிளான்டின் எனும் நொதியின் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் புற்றுநோயின் பல்வேறு நிலைமைகளில் பலன் தருவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

    சாதிக்காய் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதாகவும், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுத்து ரத்தகுழாய் அடைப்பு உண்டாவதைத் தடுப்பதாகவும் எலிகளில் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, இதயத்திற்கு நன்மை அளிப்பதாகவும் உள்ளது.

    சாதிக்காயை நெய்யில் பொரித்து பயன்படுத்துவது நல்லது என்கிறது சித்த மருத்துவம். இரண்டு தேக்கரண்டி அளவு சாதிக்காய் அல்லது 5 கிராம் சாதிக்காய் பொடி எடுத்துக்கொள்ள மயக்கம், மாயத்தோற்றம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்று நவீன அறிவியல் மட்டுமல்ல சித்த மருத்துவமும் எச்சரிக்கின்றது.

    'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழிப்படி, சாதிக்காயை அளவுடன் பயன்படுத்துவது நல்லது. இன்றைய நவீன வாழ்வியலில் சிக்குண்டு, இல்லற வாழ்வில் வம்ச விருத்தி செய்து, சாதிக்கத் துடிக்கும் ஆண்களுக்கு இயற்கை தந்த அஞ்சறைப்பெட்டி கொடை சாதிக்காய். இதனை அளவோடு பயன்படுத்துவது நாடி நரம்புகளுக்கு நிச்சயம் நலம் பயக்கும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×