என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மருத்துவம் அறிவோம்- புகை பிடித்தால் தண்டு வடம் பாதிக்கும்!
    X

    மருத்துவம் அறிவோம்- புகை பிடித்தால் தண்டு வடம் பாதிக்கும்!

    • புகை பிடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. புகை பிடிப்பது தண்டு வடத்தினை அதிகமாக பாதிக்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.
    • சிறுநீரக கற்கள் உருவாகுவதனை வெகுவாய் தவிர்க்க, எலுமிச்சை ஜூசுடன் சில துண்டுகள் அண்ணாச்சி பழச் சாறு கலந்தாலே போதும்.

    புகை பிடித்தல்: புகை பிடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. புகை பிடிப்பது தண்டு வடத்தினை அதிகமாக பாதிக்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. புகை பிடிப்பது பல ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று எத்தனையோ மருத்துவர்கள் எழுதினாலும், பேசினாலும் முழுமையான வெற்றி பெற முடிவதில்லை. குறிப்பாக பள்ளி மாணவர்கள் கூட புகை பிடிக்கின்றனர். இந்த நிலையில் தண்டு வட நோய்களைப் பற்றி நடந்த ஆய்வு கூறுவது மேல் தண்டு வட, கீழ் தண்டு வட பாதிப்புகள் மற்றும் தண்டு வட சுறுக்கம் போன்ற பாதிப்புகளுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக புகை பிடித்தலை கூறுகின்றது.

    புகை பிடித்தலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. சுவாச மண்டலம் மிகவும் பாதிக்கப்படுகின்றது. புற்று நோய்க்கு புகை பிடித்தல் முக்கிய காரணம் ஆகின்றது. சமீபத்திய ஆய்வு தண்டு வட தேய்மானம் மற்றும் சில பாதிப்புகளுக்கு புகை பிடித்தல் முக்கிய காரணம் என வெளியிட்டு உள்ளது. அது மட்டுமல்ல இந்த பாதிப்பு இந்தியர்களிடையே அதிகம் காணப்படுகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு மற்ற பிரச்சினைகளோடு தண்டு வட பிரச்சினையும் ஏற்படுகின்றது. ஆக புகை பழக்கத்தினை இந்த நொடியே விட்டு விடுங்கள்.

    எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்: பலர் காலை எழுந்தவுடன் எலுமிச்சை சாறு கலந்து வெது வெதுப்பான நீர் குடிப்பார்கள். ஆல்காலின் எனப்படும் காரத்தன்மையினை எலுமிச்சை சாறு தரும். ஆனால் இன்று உணவு நிபுணர்கள் கூறுவது எலுமிச்சை சாற்றினை நீருடன் கலந்து அதில் சிறிதளவு அண்ணாச்சி பழ சாற்றினையும் கலந்து எடுத்துக் கொள்வது மிகுந்த நன்மையினைப் பயக்கும் என்கின்றனர். காரத்தன்மை- அமிலத்தன்மை இரண்டும் சீராய் இருப்பதே உடலின் செயல்பாடுகள் நடக்க உதவும் காரத்தன்மையினை சற்று கூட்டுவதற்கு இந்த பழத்தில் இருக்கும் தாதுக்கள் நன்கு உதவும். இதன் பலன்களாக கூறப்படுபவை:-

    * புற்று நோய் எதிர்ப்பாக வேலை செய்யும்.

    * பல் வலி, ஈறு பிரச்சினைகளுக்கு உதவும்.

    * எடை குறைய உதவும்.

    * மூட்டு வலி, தசை வலி குறையும்.

    * எலுமிச்சையில் உள்ள தாதுக்கள் உடல் வற்றாது இருக்கச் செய்யும்.

    * ஜீரண சக்தி கூடும்.

    * எலுமிச்சை சாறு என்பெமைகளை கல்லீரல் உருவாக்க உதவும்.

    * கல்லீரல் நச்சுத் தன்மை நீக்கும்.

    * தொண்டை பாதிப்பு, கிருமி தாக்குதலை வெகுவாய் குறைக்கும்.

    * உடலில் கழிவுப் பொருள் வெளியேற உதவும்.

    * உடல் செயல்பாட்டுத் திறனைக் கூட்டும்.

    * நரம்பு மண்டலம் நன்கு செயல்படும்.

    * ரத்தம் சுத்தப்படும்.

    * உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

    * உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

    * வைட்டமின் `சி' சத்து நிறைந்தது என்பதால் வைரஸ் தாக்குதலை எதிர்க்க முடியும்.

    * சருமம் பொலிவாய் இருக்கும்.

    * நெஞ்செரிச்சலுக்கு நல்ல குணம் தரும்.

    * யூரிக் ஆசிட் பாதிப்பினை குறைக்கும். மூட்டுவலி நன்கு மட்டுப்படும்.

    சிறுநீரக கற்கள் உருவாகுவதனை வெகுவாய் தவிர்க்க, எலுமிச்சை ஜூசுடன் சில துண்டுகள் அண்ணாச்சி பழச் சாறு கலந்தாலே போதும்.

    பக்கவாதம்: இந்த பாதிப்பு உலகெங்கிலும் பரவலாகத்தான் காணப்படுகின்றது. பொதுவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் சற்று கூடுதல் செலுத்தினால் கவனம் இந்த பாதிப்பினை தவிர்க்கலாம். இது காட்டும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனடியாக கவனிக்க வேண்டும். உடனடியாக கவனிக்கப்படும் பொழுது பாதிப்பில் இருந்து குணம் பெறும் வாய்ப்புகள் அதிகம்.

    ரத்த ஓட்டம் மூளையின் சில பகுதிகளில் தடைபடும் பொழுது மூளையின் அப்பகுதி ஆக்சிஜன், சத்து இன்றி ஆகின்றது. அந்த திசு சீர் செய்ய முடியாத அளவு பாதிப்பு அடைகின்றது. எனவே தான் அதிவேகமான மருத்துவ கவனிப்பு அவசியம் ஆகின்றது.

    பக்கவாதம் ஏற்பட ஒன்று ரத்த குழாய் அடைப்பு காரணம் ஆகின்றது. மற்றொன்று ரத்த குழாய் வெடித்து கசிவு ஏற்படுவதாலும் பாதிப்பு ஏற்படுகின்றது.

    உயர் ரத்த அழுத்தம் (அ) பல தொடர் பெரிய நோய்கள் மட்டுமே இதற்கு காரணம் என்று இருந்துவிட முடியாது. புகை பழக்கம் உடையவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. பரம்பரையும் ஒரு காரணம் ஆகின்றது. சிலருக்கு `மினிஸ்ட்ரோக்' கூட ஏற்படுகின்றது. இது மிக குறுகிய கால அளவு, நிலையற்ற தன்மை கொண்டதால் பாதிப்பின்றி இயல்பு நிலை பெறுகின்றது. ஆனால் இப்படி வரும் அறிகுறி முழு பாதிப்பிற்கான முன்னெச்சரிக்கை என்றே கொள்ள வேண்டும். சில மருந்துகளும் இந்த பக்கவாத பாதிப்பினை தூண்டி விடலாம். ஆகவே வலி நிவாரண மருந்து, வைட்டமின்கள் இவற்றினை கூட மருத்துவர் ஆலோசனை இன்றி எடுத்துக் கொள்ளாது இருப்பது பாதுகாப்பாக அமையும்.

    பக்கவாத பாதிப்பினை கூட்டுபவை:

    அதிக எடை, சுறுசுறுப்பு இல்லாத வாழ்க்கை முறை, மிக அதிக மதுபழக்கம், போதை மருந்துகள், புகை பிடிப்பவர், புகை பிடிப்பவர் அருகிலேயே வாழ்பவர், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, பரம்பரை ஆகியவையும் இந்த பாதிப்பின் வாய்ப்பினை கூட்டுகின்றன. மேலும் 55 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், மாதவிடாய் நின்ற பெண்கள், கர்ப்ப காலம் ஆகியவையும் அதிக கவனம் பெற வேண்டியவை.

    ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு இருப்பதை காட்டும் அறிகுறிகள்:-

    * குளறிய பேச்சு, சம்பந்தமில்லாத பேச்சு, ஒருபக்க முகம், தோள் (அ) கால் உணர்வற்று செயலற்று இருத்தல்.

    * பார்வை மங்குதல், வயிற்று பிரட்டல், வாந்தி, தாங்க முடியாத தலைவலி, தலை சுற்றல், இறுகிய தசைகள், மூச்சு விடுவதில் சிரமம், விழுங்குவதில் சிரமம்.

    வரும் முன் தவிர்ப்பது என்பதே எளிதானது.

    முறையான மருத்துவ பரிசோதனை, உடற்பயிற்சி, முறையான உணவு பழக்கம். இவை எப்பொழுதுமே ஆரோக்கியத்திற்கு கை கொடுப்பவை. அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதே நல்ல தீர்வாக அமையும்.

    தண்ணீர்:- அநேகர் தனையறியாமலேயே தேவையான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. இந்த வெய்யில் நேரத்தில் நீர், ஜூஸ், மோர் என 2½ - 3 லிட்டர் வரை குடிப்பது. ஓருவரை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவும். நம் உடலுக்கு நீர் பற்றவில்லை என்று உடல் அறிகுறிகள் காட்டி பேசும் அப்பொழுதாவது நாம் உடனடியாக கவனம் கொடுத்து நீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மிகவும் சோர்வாக இருக்கும். ஜீரணக் கோளாறு இருக்கும். மலச்சிக்கல் இருக்கும். கண்கள் எரியும். சீறுநீரக கல் உருவாகி வலி மிக அதிகமாக இருக்கும்.

    * வாய் துர்நாற்றம் வீசும்.

    * மூட்டுகளில் வலி அதிகமாகும்.

    * தலைவலி ஏற்படும்.

    * கொழுப்பின் அளவு கூடும்.

    * கவனிக்கும் கூர்மை திறன் குறையும்.

    * சிறிய உடற்பயிற்சி கூட கடுமையாக இருக்கும்.

    * தண்ணீர் தேவை என்பதற்காக அளவுக்கு மீறி தண்ணீர் குடிப்பதும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    குடல் ஆரோக்கியம்:

    குடல் ஆரோக்கியம் என்று குறிப்பிடும் பொழுது ஜீரண மண்டலத்தின் முழு வேலை, ஆரோக்கியம், இதனை குறிப்பிடுகின்றது. வாய், உணவு பாதை, வயிறு, சிறுகுடல், பெருங்குடல் என ஆசனவாய் உள்ளது.

    இது டிரில்லியன் நுண்ணுயிர்களின் இருப்பிடம் ஆகின்றது. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை இவை அனைத்தும் நுண்ணுயிர்கள் ஆகும்.

    ஆரோக்கியமற்ற குடலில் செரிமான கோளாறு, குடல் வீக்கம், குடல் சார்ந்த நோய்கள் ஏற்படும். முறையற்ற உணவு, ஸ்ட்ரெஸ், சுற்றுப்புற சூழ்நிலை இவை குடல் ஆரோக்கியத்தினை பாதிக்க கூடியவை. அதிக ஆண்டிபயாடிக், மனம் போன படி எடுத்துக் கொள்ளும் வலி மாத்திரைகள் போன்ற காரணங்களாலும் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு, வாயு தொந்தரவு, குடல் வீக்கம் ஆகியவற்றினை ஏற்படுத்தும்.

    குடலில் ஆரோக்கிய பாக்டீரியாவினை கூட்ட நார்சத்து உணவு, சர்க்கரையினை வெகுவாக குறைத்தல், தேவையான அளவு தூக்கம், தயிர், ஆலிவ் எண்ணெய், பச்சை காய்கறிகள், கீரை, பாதாம் போன்றவை நன்கு உதவும்.

    Next Story
    ×