என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தெய்வங்களுக்கும் அருள் புரிந்த அம்பிகை
    X

    தெய்வங்களுக்கும் அருள் புரிந்த அம்பிகை

    • ராமனும் கண்ணனும் மட்டுமல்ல, அம்பிகையின் நோன்பையும் விரதத்தையும் சிவபெருமானும் செய்தார்.
    • அனைத்து திசைகளிலும் இவர்கள் வந்து நின்று, அடியார்களைச் சூழ்ந்துகொள்வார்கள். தடைகளும் துயரங்களும் வாராமல் பாதுகாப்பார்கள்.

    உலகத்தின் சிருஷ்டிக்குக் காரணமானவள் அம்பிகை. உயிர்களைப் படைத்து, நல்வழி காட்டிப் பாதுகாத்து, நல்கதியை அடையச் செய்வதற்காகவே, பிரபஞ்சத் தோற்றத்தையும் சுழற்சியையும் இவள் ஏற்படுத்துகிறாள். இது மட்டுமல்லாமல், உயிர்களுக்கு ஆற்றலையும் ஆக்கத்தையும் தருகிறாள். இதனால், இவளே ஜீவசக்தியாகவும் விளங்குகிறாள். இதனால்தான், எந்தச் செயலைச் செய்யவேண்டுமென்றாலும். எந்தப் பணியை நிறைவேற்றவேண்டுமென்றாலும், அம்பிகையின் அருள் தேவைப்படுகிறது.

    பத்துத் தலை ராவணனை அழிப்பதற்காகவே, திருமால் இராமாவதாரம் எடுத்தார். திருமாலே மனிதச் சட்டைப் போர்த்துக்கொண்டு பிறந்தாலும் அம்பிகையின் அருள் அவசியமானது. பத்துத் தலையன் சீதையைத் தூக்கிக்கொண்டு போய்விட்டான். சீதை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து, ராவணனை வெல்லவேண்டும். இந்த நிலையில், மழைக்காலம் வந்துவிட்டது. மழைக்காலம் முடியும்வரை வனத்திலேயே வருத்தத்தோடு ராமன் தங்கியிருக்க, அடுத்து என்னென்ன செய்யவேண்டும் என்பதைத் திட்டமிட்டார்கள். மழைக்காலம் முடிந்தவுடன், சரத் காலம் என்றழைக்கப்படும் பருவம் வரும். இந்தப் பருவத்தில்தான், அம்பிகைக்கான நவராத்திரி விரதம் செய்வது வழக்கம்.

    அமாவாசையில் தொடங்கி, அந்தக் காட்டுப் பகுதியிலேயே ராமன் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தார். காட்டிலே என்னென்ன பொருட்கள் கிடைத்தனவோ, அவற்றைக் கொண்டே எளிமையாக, ஆனால், பக்தி சிரத்தையோடு செய்தார்.

    அஷ்டமி நாளின் முன்னிரவில், அருகிலிருந்த மலையுச்சியில், சிங்கவாகனத்தின்மீது அமர்ந்த வளாக அம்பிகை தோற்றம் தந்தாள். 'இராமா, நீ மிகுந்த பராக்கிரமசாலி. சாட்சாத் திருமாலே ஆன நீ, முன்னர் மச்ச அவதாரம் எடுத்து வேதங்களைக் காத்தாய். கூர்ம அவதாரம் கொண்டு, மந்தர மலையை நிலைக்கச் செய்து, அமுதம் அளித்தாய். வராகமாக பூமிக்கு வந்து பூமாதேவியை நிலைபெறச் செய்தாய். நரசிங்கமாகத் தோன்றி, பிரகலாதனைப் பாதுகாத்தாய். உபேந்திரனாக, வாமனன் என்னும்படித் தோன்றி, உலகளந்து, மகாபலியிடம் இடம் யாசித்து, அவனைப் பாதாளத்திற்குத் தள்ளிவிட்டாய். ஜமதக்னியின் மகனாக அவதரித்து, அதர்மங்களை அழித்தாய். இப்போது, தசரதகுமாரனாக கோசலை மகனாக வந்துள்ளாய். உனக்கு வெற்றியே கிட்டும். உன் தம்பியான லட்சுமணன், இந்திரஜித்தனை அழிப்பான். நீயே ராவணனை நிறைவேற்றி, உலகில் தர்மத்தை நிலைநிறுத்துவாய். கவலைப்படாதே. துன்பங்களும் துயரங்களும் வந்தாலும் தர்மமும் அன்பும் உனக்குத் துணை இருக்கும்', என்று அருளினாள்.

    தொடர்ந்து வந்த காலத்தில், சேதுவை நிர்மாணித்து ராமன் இலங்கை சென்றதும், ராவணனை வென்று சீதையைச் சிறைமீட்டதும், அயோத்தி திரும்பி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆட்சி நடத்தியதும் நாம் அறிவோம். அம்பிகையின் அருளும் அரவணைப்பும் இருந்தால் எதுதான் நடக்காது?

    கண்ணனும்கூட அம்பிகையின் அருளால் அகமகிழ்ந்த தருணம் உண்டு.

    விதர்ப்ப நாட்டு இளவரசியும், திருமகளின் அம்சமுமான ருக்மிணியைக் கண்ணன் மணந்தாரில்லையா? இந்தத் திருமணம், அமைதியாகவும் களிப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெறவில்லை. காரணம் – ருக்மிணியின் அண்ணனும் பட்டத்து உரிமையுடவனுமான ருக்மி, தன்னுடைய தங்கையைச் சேதி நாட்டு இளவரசன் சிசுபாலனுக்கு மணமுடிக்கவேண்டும் என்று நினைத்தான். இதனால் விளைந்த சண்டையில் வென்றுதான், கண்ணன் ருக்மிணியை மணக்கவேண்டியதானது. கண்ணனுக்கும் ருக்மிணிக்கும் பிறந்த மகன் பிரத்யும்னன்.

    குழந்தை பிறந்தது என்று கண்ணனாலோ ருக்மிணியாலோ மகிழ்ச்சி அடையமுடியவில்லை. பத்து நாட்கள்கூட ஆகாத குழந்தை காணாமல் போனது. தேடினார்கள்; தேடினார்கள்; துவாரகை எங்கும், கடலுக்கு உள்ளும் புறத்தும், நிலத்தில் எங்கணும் தேடினார்கள். கடைசியில் தெரிந்தது – சம்பரன் என்னும் அசுரன் தூக்கிச் சென்றுவிட்டான். இந்தக் குழந்தை கண்ணனின் குழந்தை என்பதால், தூக்கித் தண்ணீரில் வீசிவிட்டான்.

    இதற்கிடையில், அம்பிகையே கதி என்று கண்ணனும் ருக்மிணியும் சரண் புகுந்தனர். காத்யாயினி தேவியையும் லலிதா பரமேச்வரியையும் பூஜித்து நின்றனர்.

    கடலில் வீசப்பட்ட குழந்தையை மீன் விழுங்கியது. வலைஞர்களால் எதேச்சையாகப் பிடிக்கப்பட்ட அதே மீன், மீண்டும் சம்பரன் அரண்மனைக்கே வந்தது. சமையற்காரர்கள், மீனை வெட்டும்போது குழந்தையைக் கண்டு, மாயாவதி என்னும் பணிப்பெண்ணிடம் கொடுத்தனர். அம்பிகை மாயாவதிக்குள் புகுந்தாள். குழந்தையைப் பாதுகாக்கும் வழிகளைக் கூறினாள்.

    ஏறத்தாழ 15 ஆண்டுகள் மாயாவதியின் பாதுகாப்பில் வளர்ந்த பிரத்யும்னன், சோக வடிவங்களாக வாழ்ந்துகொண்டிருந்த துவாரகை மக்களிடத்து, ஒருநாள் திடீரென்று குதித்தான். கருநீலநிறத்தையும் சுருள் கேசத்தையும் பேரழகையும் கண்டு கண்ணனே இப்படி வந்திருப்பதாக அனைவரும் எண்ணினர். ருக்மிணி மட்டும் மகனைக் கண்டுகொண்டாள். வெளியே போயிருந்த கண்ணன் திரும்பிவந்து பார்த்தபோது – கொண்ட மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் போதா!

    சிறிய துயரமோ, பெரிய துயரமோ, இப்போதைய துன்பமோ, நாட்பட்ட துன்பமோ, அம்பிகையைச் சரண் புகுந்தால், அன்னையிவள் அரவணைத்துக் காப்பாள்.

    ராமனும் கண்ணனும் மட்டுமல்ல, அம்பிகையின் நோன்பையும் விரதத்தையும் சிவபெருமானும் செய்தார். எப்போது தெரியுமா?

    தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்று மூன்று அரக்கர்கள். வழக்கம்போல் தவம் செய்து, வழக்கம்போல் அதீத வரங்களைப் பெற்றவர்கள். தங்களின் பலத்தைக் கொண்டு மூவுலகங்களைத் துன்புறுத்தினார்கள். வித்தியாசமான வரத்தையும் பெற்றவர்கள். மூவரும் தங்கம், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று உலோகங்களைக் கொண்டு கோட்டை கட்டிக்கொண்டார்கள். இந்தக் கோட்டைகள் விண்ணில் பறக்கும். தங்களின் கோட்டைகள் விண்ணில் பறக்கையில், ஒரே நேர்கோட்டில் வரும்போது, ஒரேயொரு அம்பால் மட்டுமே தங்களை வீழ்த்தமுடியும் என்பதுதான் இவர்கள் வாங்கிக்கொண்ட வரம். எப்படி சாத்தியம்? மூன்று கோட்டைகளும் ஒரே நேர்கோட்டில் வரவேண்டும்; அந்த சமயம்பார்த்து, ஒற்றை அம்பை எய்யவேண்டும்; அப்போது, அந்த அம்பு, மூன்று கோட்டைகளையும் துளைக்கவேண்டும்; மூவரும் விழவேண்டும். எண்ணிப் பார்க்கவே குழம்புகிறது, இல்லையா?

    இந்த நிலையில்தான், மூன்று பேரையும் அழிப்பதற்காகப் புறப்பட்டார் சிவபெருமான். கோட்டைகளுக்கு நிகராகத் தாமும் நிற்கவேண்டுமெனில், தேர் வேண்டும். உலகையே தேராக்கினார். சூரிய சந்திரர்களைத் தேர்ச் சக்கரங்களாக்கினார். அவனி ரதமும் அர்க்கேந்து சரணங்களும் கிடைத்துவிட, தேர்ச்சாரதியைத் தேடினார். பிரம்மாவையே தேர்ச் சாரதியாக நியமித்தார். அரக்கர்களை ஒரே தருணத்தில் துளைப்பதற்குத் தக்க அம்பும், அதனைச் செலுத்தும்வகையிலான வில்லும் வேண்டுமே – மேரு மலையை எடுத்து வில்லாக வளைத்து நிற்க, திருமால் தாமே அம்பாகிக் கொள்வதாக வாக்களித்து வந்தார். ஆயுதங்கள் ஆயத்தமாக இருந்தாலும், அம்பிகையை எண்ணவேண்டுமல்லவா! என்ன இருந்தாலும் பரமனாருக்கும் இவள்தானே பராசக்தி!

    அம்பிகையை நினைந்து ஸ்ரீ சக்கர பூஜை செய்தாராம் பரமேச்வரர். அம்பிகையின் அருள் கிட்டியது.

    இதன் விளைவு என்ன தெரியுமா? ஒரே சமயத்தில் ஒற்றை அம்பு மூன்று கோட்டைகளையும் துளைக்கவேண்டும் என்பதுதானே எழுதப்படாத விதி? வில்லை வளைக்கவும் இல்லை; அம்பை எடுக்கவும் இல்லை. சின்ன புன்சிரிப்பு சிரித்தார். இச்சா சக்தியும் கிரியா சக்தியும் ஞான சக்தியும் இணைந்தவளான அம்பிகையின் ஆற்றல் கிளர்ந்தது; சிரிப்பிலேயே தங்கமும் வெள்ளியும் இரும்பும் எரிந்தன; எரிந்து உருகின; மொத்தமாகக் காணாமல் போயின. அரக்கர்கள் அழிந்தார்கள்; துயரமும் துன்பமும் நெருப்பில் இட்ட தூசாகத் தீர்ந்தன.

    அம்பிகையை வழிபடுவது என்பது வெகு சுலபம். கிரமமான பூஜைகள் செய்து, நோன்புகளெல்லாம் கடைப்பிடித்து வழிபடுவது ஒரு வகை. இது எல்லோருக்கும் சரியாக வராது. எளிமையானவர்கள், மந்திரங்கள் தெரியாதவர்கள், வழிமுறைகள் புரியாதவர்கள்கூட அம்பிகையின் திருநாமத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் போதும்; அதையே தனக்கான தோத்திரமாக ஏற்றுக்கொண்டு, குழந்தையைக் காக்கும் தாயாக அம்பிகை வந்து நிற்பாள்.

    தன்னை நாடியவர்களைத் தன்னுடைய அம்ச தேவதைகளைக் கொண்டு அனைத்து திசைகளிலும் அம்பிகை காப்பாற்றுகிறாள். இவர்களின் பெயர்களைச் சொல்லி இவர்கள் காக்கவேண்டும் என்று வேண்டினால் போதும், அனைத்து திசைகளிலும் இவர்கள் வந்து நின்று, அடியார்களைச் சூழ்ந்துகொள்வார்கள். தடைகளும் துயரங்களும் வாராமல் பாதுகாப்பார்கள்.

    பிராச்யாம் ரக்ஷது மாம் ஐந்த்ரீ ஆக்ஞேய்யாம் அக்னிதேவதா

    தக்ஷிணே வது வாராஹி நைர்த்யாம் கட்கதாரிணீ –

    கிழக்கில் என்னை ஐந்திரி என்பவள் காக்கட்டும்; தென்கிழக்கில் அக்கினிதேவதை காக்கட்டும்; தெற்கில் வாராஹி காக்கட்டும்; தென் மேற்கில் (நிருதியின் திசை) கட்கதாரிணி காக்கட்டும்.

    பிரதீச்யாம் வாருணீ ரக்ஷேது வாயவ்யாம் ம்ருகவாஹினீ

    ரக்ஷேதுதீச்யாம் கௌபேரீ ஈசான்யாம் சூலதாரிணீ -

    மேற்கில் வாருணி காக்கட்டும்; வாயுவின் திக்கில் (வடமேற்கில்) மிருகவாஹிணி (மான் மீது ஆரோகணித்தவள்) காக்கட்டும்; வடக்கில் குபேரி காக்கட்டும்; வடகிழக்கில் சூலதாரிணி காக்கட்டும்.

    ஊர்த்வம் ப்ராஹ்மணி மே ரக்ஷேத் அதஸ்தாத் வைஷ்ணவி ததா

    ஏவம் தச திசோ ரக்ஷேச் சாமுண்டா மேலேயிருந்து பிராம்மணி காக்கட்டும்; கீழிருந்து வைஷ்ணவி காக்கட்டும்; பத்து திசைகளிலும் (எட்டு திசைகள் + மேலே + கீழே) சாமுண்டா காக்கட்டும்.

    ஜயா மே சாக்ரத: பாது விஜயா பாது ப்ருஷ்டன:

    அஜிதா வாமபார்ச்வே து தக்ஷிணே ச அபராஜிதா எனக்கு முன்னால் ஜயா செல்லட்டும்; பின்னால் விஜயாவும், இடது பக்கத்தில் அஜிதாவும், வலது பக்கத்தில் அபராஜிதாவும் காக்கட்டும்.

    ஸ்ரீ தேவி மஹாத்மியம் காட்டுகிற இந்த நிகழ்வுகளுக்கும் துதிக்கும் என்ன பொருள்? ஒன்றே ஒன்றுதான். அம்பிகையை வணங்கினால், சுற்றிலும் கவசமாக இருந்து இவளே வழிநடத்துவாள்; வாஞ்சையுடன் பாதுகாப்பாள்.

    தொடர்புக்கு:- sesh2525@gmail.com

    Next Story
    ×