என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பாதக அதிபதியின் பாதிப்பு நீக்கும் பரிகாரங்கள்- பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
- இன்பம் எப்படி இருக்கும் என்பதை நுகரும் முன்பே வலி எப்படி இருக்கும் என்பதை உணர்த்தி விடுகிறது.
- மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு லக்னங்களும் சரத்தில் அடங்கும்.
ஆரம்பம் என்ற ஒன்று இருந்தால் முடிவும் உண்டுதானே? மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் சக்தி பரிகாரத்திற்கு உண்டு. இன்பம் எப்படி இருக்கும் என்பதை நுகரும் முன்பே வலி எப்படி இருக்கும் என்பதை உணர்த்தி விடுகிறது வாழ்க்கை.பலரின் வாழ்க்கை இப்படித்தான் செல்கிறது.
வாழ்நாள் லட்சியத்தை எட்டிப்பிடித்து விட்டோம் என்று பெருமூச்சு விடுவதற்குள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வலியை வாழ்க்கை பரிசாக தருகிறது.சிலருக்கு வாழ்க்கை ஓட்டத்தில் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.சிலருக்கு வலியே வாழ்க்கையாகி விடுகிறது. வாழ்வியலில் ஏற்படும் வலி அனுபவப் பாடமா?அல்லது வாழ்நாள் முழுவதும் ஆறாத ரணமா என்பது அவரவரின் சுய ஜாதகத்தை பொருத்தது.
ஜோதிடத்தில் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த தோஷம் ராகு/கேது தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம். அதையும் மீறி மனிதர்களின் பல விதமான இன்னல்களைத் தருவது பாதகாதிபதி.ஒருவரின் ஜாதகத்தில் பாதகாதிபதி அமர்ந்த நிலையே பல பிரச்சினைகளுக்கும் காரணமாகவும் அமைகிறது.
ஜாதகத்திலும், பிரசன்னத்திலும் ஒருவருக்கு பலன் சொல்லும் முன்பு பாதகாதிபதிக்கும், அஷ்ட மாதிபதிக்கும் முக்கியத்துவம் கொடுத்து பலன் சொல்ல வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் பாதகாதிபதி வலுப்பெறவே கூடாது. பாதகாதிபதி. சுபருடன் சேர்ந்தால் சுபத்தை கட்டுப்படுத்துவார். அசுபர்களுடன் சேர்ந்தால் அசுபத்தை மிகுதிப் படுத்துபவார்.பாதககாதிபதிகள் அசுப வலிமை பெற்று எந்த பாவகத்தில் நின்றாலும் சுபபலன் கிட்டாது. பாதகாதிபதி சுப வலிமை பெற்றால் தசையின் ஆரம்பத்தில் அனைத்து சுப பலன்களையும் நடத்தி, தசையின் முடிவில் பெரும் பாதகத்தை செய்வார்.பாதகாதிபதியின் தசை அல்லது பாதகத்தில் நின்ற கிரகத்தின் தசை நடந்து மரணம் அல்லது மரணத்துக்கு நிகரான துன்பம் இரண்டில் ஒன்றை வலுப் பெற்ற பாதகாதிபதி தசை நிச்சயம் செய்யும். கிரகங்களின் நகர்வின் அடிப்படையில் பன்னிரு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக நமது ஜோதிட முன்னோடிகள் பிரித்து இருக்கிறார்கள்.
சரம்
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு லக்னங்களும் சரத்தில் அடங்கும். சரம் என்றால் வெகு சலனமுடையது என்று பொருள்.சர லக்னத்திற்கு சுபமோ அசுபமோ எளிதில் வந்தடையும். ஒருவடைய வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழி நடத்தும்.வந்த தடமும்இருக்காது.
போன சுவடும் தெரியாது. சர லக்னங்களுக்கு 11-ம் அதிபதி பாதகத்தை செய்வார்.அதன்படி மேஷத்திற்கு சனியும் கடகத்திற்கு சுக்கிரனும்,துலாத்திற்கு சூரியனும் மகரத்திற்கு செவ்வாயும் பாதகாதிபதிகள்.
சர லக்னத்திற்கு 11-ம் அதிபதியான லாப அதிபதியே பாதகாதிபதியாக வருவதால் தொழில், வேலை ஆகியவற்றில் இயல்பாக வரக்கூடிய லாபம் வெகுவாக அடிபடும்.100 ரூபாய் சம்பாதிக்க 1000 ரூபாய் செலவு செய்யும் சூழ்நிலை அல்லது அடிக்கடி பொருளாதார இழப்பு போன்றவை இயற்கையாக அமைந்து விடும். எனவே சர லக்னத்தினர் சுய ஜாதகக வலுமைக்கு ஏற்ப சுய தொழிலைத் நடத்துவது நல்லது சர லக்னங்களுக்கு பாதாகாதிபதி வழுத்தால் லாபத்தை விட இழப்பு அதிகமாக இருக்கும்.
ஸ்திரம்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கும் ஸ்திர லக்னத்தில் அடங்கும். ஸ்திரம் என்பது சலனமற்றது என்று கூறலாம். சுபமோ, அசுபமோ எதிர்பாராத விதத்தில் வந்தடையும். வந்தால் நீண்ட காலத்திற்கு நிலையாக இருக்கும்.ஏன், வாழ்நாள் முழுவதும் கூட வழி நடத்தும். ஸ்திர லக்னங்களுக்கு 9-ம் அதிபதி பாதகத்தை செய்வார்.அதன்படி ரிஷபத்திற்கு சனியும், சிம்மத்திற்கு செவ்வாயும், விருச்சிகத்திற்கு சந்திரனும், கும்பத்திற்கு சுக்கிரனும் பாதகத்தை செய்பவர்கள் ஸ்திர லக்னங்களுக்கு பாக்கியாதிபதியே பாதகாதிபதியாக இருப்பதால் பாதகாதிபதி பலம் இழந்தால் பாக்கியம் மிகைப்படுத்தலான நன்மைகளை தன் தசாபுத்தி காலங்களில் வாரி வழங்கும்.
பாதகாதிபதி பலம் பெற்றால் மிகுதியான அசுபத்தையும் மீள முடியாத கண்டத்தையும் தருவார்.
ஸ்திர லக்னங்களுக்கு பாதகாதி
பாதகாதிபதி பலம் இழந்தால் தந்தை சமுதாய அங்கீகாரம் மற்றும் செல்வாக்கு மிகுந்தவராகவும் அதிகாரப் பதவியில் இருப்பவராகவும் இருப்பார். ஜாதகருக்கு தந்தையின் அன்பும் ஆசியும் நிறைவாக இருக்கும். ஆனால் அதீத சுதந்திரத்தால் ஜாதகர் கெடுவதற்கு தந்தையே காரணமாக இருப்பார். அதாவது பாதகம் கலந்த பாக்கியமே கொடுப்பார். ஸ்திர லக்னத்திற்கு
பாதகாதிபதி வலிமை பெற்றால் தந்தை வழி செல்வம்,செல்வாக்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கும்.தந்தையால் பயனற்ற நிலை இருக்கும்.ஜாதகர் பிறந்த பிறகு பலபடிகள் கீழே இறங்கி விடுவார்கள். இளமையில் வறுமை,கல்வி தடை என சோதனைகள் மாறி மாறி வரும். பூர்வீகத்தை விட்டு வெளியேறி வெளியூரில், வெளிநாட்டில் வசிக்கும் நிலை ஏற்படும்.
உபயம்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கும் உபய லக்னத்தில் அடங்கும். உபய லக்னம் சரஸ்திர லக்னங்களின் தன்மைமையும் உள்ளடக்கியது. உபய லக்னத்திற்கு 7-ம்மிடமே பாதக, மாரக, கேந்திர ஸ்தானமாக இருப்பதால் சுபத்தை விட அசுபமே மிகுதியாக இருக்கும். சுபமோ, அசுபமோ விருந்தினர் போல் வரும் போகும். மீண்டும் வரும். மீண்டும் போகும். அதன்படி மிதுனம் மற்றும் கன்னி லக்னங்களுக்கு குரு பாதகத்தை செய்வார்.தனுசு மற்றும் மீன லக்னங்களுக்கு புதன் பாதகத்தை செய்வார். உபய லக்னத்திற்கு களத்திர ஸ்தானாதிபதியே பாதகாதி பதியாக வருவதால் வாழ்க்கைத் துணையால், வாழ்க்கைத் துணையின் உறவுகளால் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு காலம் தாழ்த்திய திருமணம் இருக்கும். சிலருக்கு திருமணமே நடக்காது அல்லது நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால், வாடிக்கையாளர்களால் அதிருப்தியே நிலவும்.
பாதகாதிபதி என்ற பெயரே பாதகாதிபதி, பாதகஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் நடத்தும் பாதகம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும்.அதே போல் பாதகாதிபதிகள் வாழ்நாள் முழுவதும் பாதகத்தை தந்து கொண்டே இருக்க மாட்டார்கள்.
பாதகம் வேலை செய்யும் காலகட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். பாதகாதிபதியால் நன்மை நடைபெற வேண்டுமெனில் பாதகாதிபதி நீசம்,அஸ்தங்கம் பெற்று பலம் குறைய வேண்டும்.
ஜாதகத்தில் லக்னம், பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்றவர்களை பாதக தோஷம் பெரியதாக பாதிக்காது.
பாதகாதிபதிக்கு, பாதக ஸதானத்திற்கு அல்லது பாதகத்தில் நின்று தசை நடத்தும் கிரகத்திற்கு குரு பார்வை அல்லது லக்ன சுபரின் பார்வை இருந்தால் ஜாதகரை பாதக தோஷம் பாதிப்பதில்லை.
பெரும்பான்மையாக பாதகாதிபதி, பாதகாதிபதியின் நட்சத்திர சாரம் மற்றும் பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகத்தின் தசை,புத்தி காலங்களில் மட்டுமே பாதிப்பு இருக்கும். மற்ற காலங்களில் பாதிப்பு இருக்காது.
பாதகாதிபதிகள் தனது தசாபுத்தி காலங்களில் நன்மை செய்யும் வாய்ப்பு குறைவு. முதலில் சாதகமாக இருந்தால் முடிவில் பாதகத்தையே தரும் அல்லது பாதகமும் சாதகமும் கலந்தே இருக்கும்.
ஜனன ஜாதகத்தில் பாதகாதிபதி மற்றும் பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகங்களுக்கு ஜனன மற்றும் கோட்சார சனி, ராகு/கேதுக்களின் சம்பந்தம் ஏற்படும் போது அசுப விளைவுகள் ஜாதகரை நிதானமிலக்கச் செய்யும்.
பாதகாதிபதி உச்சம் பெறக் கூடாது. பாதகாதிபதி அல்லது பாதக ஸ்தானத்தில் நிற்கும் கிரகம் சுய சாரம் பெறக்கூடாது..
ஜனன,கோட்சார ரீதியாக அஷ்டமாதிபதி ,பாதகாதிபதி இணைவு ஏற்படும் காலங்களில் பாதிப்பு இருக்கும்.
குரு பார்வைக்கு பாதகத்தை மட்டுப்படுத்தும் சக்தி உண்டு. இது போன்ற பாதிப்பை சந்திப்பவர்கள் பரிந்துரைத்துள்ள பரிகாரத்தை கடைபிடித்து வர பாதகம் நீங்கி சாதகம் கிடைக்கும்.
பரிகாரம்
பொதுவாக பாதகாதிபதியின் தசை, புத்தி அந்தர காலங்களில் அனுபவ அறிவு, தன்னைத்தானே உணரும் சக்தியையும் அதிகரிக்க யோகாசனம் மிக அவசியம். கல் உப்பு இட்ட நீரில் குளித்து வர எதிர்மறை ஆற்றல் மட்டுப்படும்.
பாதக தோஷத்தால் மிகுதியான அசுப பலனை அனுபவிப்பவர்கள் தினமும் ஆஞ்சநேயர் கோவில் செந்தூரத்தை நெற்றியில் இட்டு வந்தால் சுப பலன் கிடைக்கும். வெள்ளியிலான ஆபரணத்தை உடலில் அணிய எதிர்மறை சிந்தனை குறைந்து சிந்தித்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்.
ஜென்ம நட்சத்திர நாளில் துர்க்கை, காளி மற்றும் பிரத்யங்கரா தேவி போன்ற உக்ர தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடவும். சரம்: மேஷம்,கடகம்,துலாம், மகரம்
லக்னங்களுக்கான பரிகாரம். தினமும் வில்வாஷ்டகம் படித்து வர தொழிலில் லாபம் பெருகும். வீண் விரயத்தை தவிர்க்க ஆதரவற்றவர்களுக்கு இயன்ற தானம் தர வேண்டும்.
நேரம் கிடைக்கும் போது கோவில்களில் உலவாரப் பணிகளை செய்ய வேண்டும்.
உடல் ஊனமுற்றவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். சனிக்கிழமைகளில் கருவேப்பிலை சட்னி சாப்பிட வேண்டும்.
ஸ்திரம்: ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் லக்னங்களுக்கான பரிகாரம். வயது முதிர்ந்த அந்தணர்களுக்கு உணவு,உடை தானம் தந்து காலில் விழுந்து நல்லாசி பெற வேண்டும்.
ஜென்ம நட்சத்திர நாளில் ஆன்மீகப் பெரியோர்கள்,மத குருமார்களின் நல்லாசி பெற வேண்டும்.
கோ தானம் செய்ய பல தலைமுறையாக தீராத பித்ரு சாபம் தீரும்.
சனிக்கிழமை காக்கைக்கு எள்ளு சாதம் வைக்க வேண்டும்.
உபயம்: மிதுனம், கன்னி, தனுசு, மீனம் லக்னங்களுக்கான பரிகாரம்.
பாதகாதிபத்திய தோஷத்தால் திருமணத்தடை, திருமண வாழ்வில் உள்ள பிரச்சினைகளை நீங்க செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று விரதமிருந்து சிவபெருமானையும், நந்தியையும் வழிபடுவதுடன் உளுந்து சுண்டல் தானம் தர வேண்டும். தொடர்ந்து பன்னிரன்டு பவுர்ணமிக்கு கிரிவலம் வர வேண்டும்.
வாழும் ஊரின் சிறப்பு வாய்ந்த அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து ஆறு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.






