என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பாரதியையும் பாரதிதாசனையும் ஒப்பீடு செய்து கண்ணதாசன் கவிதைகள்
- இருபதாம் நூற்றாண்டு கவிஞர்களில் இரு பெரும் இமயங்களாக திகழ்ந்தவர்கள் பாரதியும் பாரதி தாசனும் ஆவார்கள்.
- சமதர்மமும் சகோதரத்துவமும் கொண்டு யாருக்கும் தீமை செய்யாது வாழ்ந்தால் அதுவே அன்பின் அடையாளம் என்கிறார் பாரதி.
இருபதாம் நூற்றாண்டு கவிஞர்களில் இரு பெரும் இமயங்களாக திகழ்ந்தவர்கள் பாரதியும் பாரதி தாசனும் ஆவார்கள். கவிதை உலகில் வீர ஆவேசத்தோடு சிலிர்த்தெழுந்து புறப்பட்ட இவர்களை இலக்கிய சிங்கங்கள் என்றும் அழைக்கலாம்.
இந்திய விடுதலைக்கும் சமுதாய விடுதலைக்கும் ஒருசேர பாடி சோம்பிக்கிடந்த மக்களை தட்டி எழுப்பி தலை நிமிர வைத்த பெருமைக்கு சொந்தக்காரன் பாரதி...தான் எழுதிய தெய்வீக பாடல்களிலே கூட இந்த சமுதாய கொடுமைகளையும் நிலவும் சாதி வேற்றுமைகளை நீக்க மாட்டாயா? என்றும் பராசக்தியிடம் கேட்டவன் தான் பாரதி... எங்கும் புதுமை எதிலும் புதுமை என்று புரட்சி கருத்துக்களை தனது கவிதைகளில் விதைத்து இலக்கிய உலகில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவனும் அவனே...
அதேபோன்றுதான் பாவேந்தர் பாரதிதாசனும் சுப்புரத்தினம் என்ற தனது இயற்பெயரை பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டவர்... பாரதியை தனது குருவாகவே ஏற்றுக்கொண்டவர்...ஆரம்ப காலத்திலே சுப்பிரமணியர் துதி அமுது போன்ற தெய்வீக பாடல்களை எழுதியவர் தான் பாரதிதாசன். காலப்போக்கிலே தெய்வீக பாடல்கள் எழுதுவதில் இருந்து விடுபட்டு சமுதாய சீர்திருத்த கருத்துக்களை, பகுத்தறிவு சிந்தனைகளை, பெண் விடுதலை, பெண்ணுரிமை, தமிழ் உணர்வு, தமிழர் நலன் என்று பல்வேறு துறைகளில் பயணித்து வெற்றி பெற்றவர் தான் பாரதிதாசன்.
'பழைய மொந்தையில் புதிய கள்'' என்று சொல்வது போல புதிய கருத்துக்களை கூறுவதற்கு பாரதிதாசன் தேர்ந்தெடுத்தது பழந்தமிழ் மரபினை தான்...பழந்தமிழ் மரபே அவரிடம் புது தமிழ் உணர்வு பொங்க காரணமாக அமைந்தது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. மரபு பிறழ்ந்து எழுதுகிற புதுமைகள் மாய்ந்து போகின்றன... மரபை ஒட்டி எழுதுகிற புதுமைகள் நிலைத்து நிற்கின்றன என்ற கருத்துக்கு உதாரணம் பாரதிதாசனே...
இப்படி இந்த இரண்டு சிங்கங்களின் ஆளுமையை எடுத்து இயம்புகிற வகையிலே நமது கவியரசர் கண்ணதாசன் இருவரையும் ஒப்பீடு செய்து மிக அருமையான கவிதைகளை நமக்கு வழங்கியுள்ளார். "பாரதியும் பாரதிதாசனும்" என்னும் தலைப்பில் எழுதப்பட்ட அந்த கவிதையினை அப்படியே தருகிறேன்.
"களைமண்டிக் கிடந்த கனித்தமிழ் மொழியை
களை நீக்கி வடித்த கவிஞன் பாரதி
களைநீக்கித் தந்த களநியிற் பலவாய்
கனிக்காடு கண்டவர் பாரதிதாசன்
இருள் சூழ்ந்திருந்த இவ்வைய முழுதும்
எழுகதிரான இளைஞன் பாரதி
எழுந்த கதிர்முன் மானிட சாதிக்கு
இரத்தம் ஊட்டினார் பாரதிதாசன்
ஆதிபத்திய வேரறுக்குந் திறன் கொண்டு
ஆக்கித் தந்த வல்லவன் பாரதி
அந்த வேரை அறுத்தபின் மறுவேர்
அண்டாது காத்தவர் பாரதிதாசன்
நிலைகுலைந் திருந்த நெஞ்சினைத் தூக்கி
நில்லெனச் சொன்ன வல்லோன் பாரதி
நிற்க வைத்த நெஞ்சினைத் தட்டி
நிலைக்க வைத்தவர் பாரதிதாசன்
எங்கள் நாடு எங்கள் மொழியென
இயம்புந் திறனை தந்தவன் பாரதி
இயம்ப மறுத்து ஏளனம் செய்தோர்
எலும்பை முறித்தவர் பாரதிதாசன்...
முன்னவர் சொன்ன பண்பாடனைத்தும்
முறையாய் தந்த மூத்தவன் பாரதி
முறையாய் தந்ததை வகை வகையாக்கி
முளைக்க விட்டவர் பாரதிதாசன்
செந்தமிழ் மலரின் தேனுண்ண வாசலைத்
திறந்து விட்ட தலைவன் பாரதி
திறந்த வாசலின் வழிப்புறம் மாடுகள்
செல்லாது காத்தவர் பாரதிதாசன்
வகுத்தவன் முன்னோன்! காத்தவன் பின்னோன்!
வாழும் தமிழின் காவலர் இவர்கள்"... என்பதே அக்கவிதையின் வைர வரிகள்.
உலகிலேயே மூத்த மொழி முதல் மொழி தமிழ் என்பதை எல்லோருமே ஏற்றுக் கொண்டுள்ளனர். அறிஞர் பெருமக்கள் பலர் இதனை ஆதாரத்துடன் நிறுவியுள்ளனர். நமது பாரத பிரதமர் மோடியே தமிழின் தொன்மை குறித்தும் பெருமை குறித்தும் பல பொழிவுகளில் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அகத்தியர்,தொல்காப்பியர்,வள்ளுவர், ஔவை, இளங்கோ, சங்க புலவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், கம்பன், வள்ளுவர் என்று தமிழை உயர்த்திப் பிடித்த சான்றோர்கள் பட்டியல் மிக நீளமானது. அதற்குப் பிறகு ஏற்பட்ட ஆங்கிலேய ஆட்சியில்தான் தமிழுக்கு பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது...தமிழுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது ...
ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தி இருந்த கால கட்டத்தில் ஆங்கிலேய மோகமும் நம்மை ஆட்டிப்படைத்தது என்பது மறுக்க முடியாத பேருண்மை யாகும்.அந்த காலகட்டத்தில் தான் பாரதியும் பாரதிதாசனும் தோன்றி தமிழ் வளர்ச்சியின் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து தமிழன்னைக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்தார்கள்... இவ்விரு இமயங்களும் தோன்றாவிட்டால் தமிழின் வளர்ச்சி என்பதே இல்லாமல் படு பாதாளத்திற்கு போயிருக்கும் என்பதே உண்மை.
வறண்டு போய் கிடந்த தமிழ் நிலத்தை பண்படுத்தி விதை விதைத்து நீர்பாய்ச்சி உரமிட்டவன் பாரதி என்பதையும் அங்கே படர்ந்திருந்த களைகளை நீக்கி அப்பயிர்களை கட்டிக் காத்து வளர்த்த பெருமை பாவேந்தர் பாரதிதாசன் என்பதையும் உறுதிப்பட ஆணித்தரமாக சொல்லுகிறார் கண்ணதாசன் ...
இருள் மண்டிக் கிடந்த தமிழ் உலகிற்கு பரிதியாய்த் தோன்றி ஒளியூட்டியவன் பாரதி என்பதையும் உணர்வூட்டி ரத்தம் கொடுத்தவன் பாரதிதாசன் என்பதையும் மிக அருமையாக இக்கவிதை வரிகளில் நிறுவியிருக்கிறார் கண்ணதாசன்.
மனித ஆற்றல் என்பது மகத்தான சக்தி உடையது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓராயிரம் அறிவும் ஆற்றலும் சக்தியும் ஒளிந்து கிடக்கின்றன... ஆனால் அந்த பெருமையினை ஒருநாளும் நாம் உணர்ந்ததே இல்லை...புன்மைத் தேரைகளாய் பூச்சிகளாகவே வாழ்ந்து பழகி விட்டோம்.. இது நமது நாடு, இது நமது மொழி என்ற உணர்வே இல்லாத சூழ்நிலையில் தான் பாரதியும் பாரதி தாசனும் இந்த சமுதாயத்திற்கு விடிவெள்ளிகளாக தேற்றி விளக்கேற்றி வைத்தார்கள் என்ற பெருமையினைத் தான் நமது கவியரசர் கண்ணதாசன் இக்கவிதைகளில் எடுத்தியம்பியிருக்கிறார் ..
அடுத்து வரும் பாரதி... பாரதிதாசன்... ஒப்பீட்டுக் கவிதையினையும் அற்புதமாக வடித்திருக்கிறார் கண்ணதாசன். இதனை புதிய சந்தத்தில் புனைந்திருக்கிறார். அதன் அழகினையும் அருமையினையும் பார்ப்போம்.
பாருக்குள்ளே சமதர்மமும் - ஒன்றிப்
பற்றுஞ் சகோதரத் தன்மையும் சொல்லி
யாருக்கும் தீமை செய்யாமலே- என்றும்
அன்பு கொளுந்திறந் தந்தவன் முன்னோன்
உண்மையின் பேர் தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்! பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்!
அன்பே தெய்வம், அறிவே தெய்வம் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பாரதி ஒரு படி மேலே போய் உண்மையை தெய்வம் என்கிறார். மற்றபடி நாம் உச்சரிக்கும் தெய்வங்களின் பெயரெல்லாம் பொய்தான். இந்த உண்மை வேதங்களிலே சொல்லப்பட்டிருக்கிறது. பிறிதுள்ள மறைகள் எல்லாமே வெறும் கதைகள் என்று சொன்னவன் தான் பாரதி. சமதர்மமும் சகோதரத்துவமும் கொண்டு யாருக்கும் தீமை செய்யாது வாழ்ந்தால் அதுவே அன்பின் அடையாளம் என்கிறார் பாரதி.
கடலினை தாவும் குரங்கும்- வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததாலே-தெற்கில்
வந்து சமன் செயும் குட்டை முனியும்
நதியினுளே முழுகி போய் -அங்கு
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுறவே மணம் செய்த-திறல்
வீமனும் கற்பனை என்றவன் முன்னோன்.
இதிகாச புராணங்களில் எல்லாம் பாரதிக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. அனுமன் படைப்பும் அக்னியில் பிறந்து வரும் சீதை பாத்திரமும் அகத்தியர் வரலாறும் நாகராஜன் மகளை வீமன் மணந்ததாக சொல்லப்படுகிற அனைத்துமே கற்பனை தான் என்பது பாரதியின் கருத்து.
ஆனால் அதே சமயம் வீமனின் கைகள் பட்டாலே போதும் அழுத கண்ணீரும் ரத்தமாக மாறி வீரம் வெளிப்படும். கன்னியற்கு யாரும் தீமை செய்தால் அவன் காட்டு விலங்காகி விடுவான் வீமன் என்பதை பாஞ்சாலி சபதத்தில் பாரதி உரைத்ததை அழகாக கீழ்காணும்
அன்னவன் கைகளிற் பட்டால் - பிள்ளை
அழுத கண்ணீரிலும் உதிரங் கொதிக்கும்
கன்னியர் நன்னெறி வீழ மறம்
காட்டுப்பவர்க்கவன் காட்டு விலங்காம்
என்ற வரிகளில் விளக்குகிறார் கண்ணதாசன்.
காதல் என்பது மகத்துவம் நிறைந்தது. மாபெரும் சக்தி உடையது. ஓர் உயிரை உருவாக்கக் கூடிய வல்லமை உடையது. காதலினால் வீரம் பெருகும். காதலினால் அறிவு வளரும். காதலினால் கவிதை உருவாகும். பாரதி சொன்னான் என்றால் முதியவர்கள் கூட காதல் வசப்படுவார்கள். என்றெல்லாம் பாரதி உரைத்த அனைத்தையும் பாரதிதாசனும் தனது கவிதைகளில் பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். "கன்னியர் கடைக்கண் பார்வை காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்" என்று சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே பாரதிதாசன் எழுதியிருக்கிறார்.
காதலினால் உயிர் தோன்றும் - இங்கு
காதலினால் உயிர் வீரத்திலேறும்
காதலினாற் வெய்தும் இங்கு
காதல் கவிதை பயிரை வளர்க்கும்...
பாரதி சொன்னதனாலே - காதல்
பட்டவர்கள் நெஞ்சிலும் ஏறுந் தன்னாலே
பாரதிதாசனும் சொன்னார் - எனின்
பாரதி சொன்னதன் பின்பவர் சொன்னார்.
என்று தனது குருநாதர் பாரதி வழியிலேயே பாரதிதாசனும் பயணிக்கிறார் என்பதை எடுத்துரைக்கிறார் கண்ணதாசன்.
ஒரே ஒரு விதை தான் ஒரு சோலை வனத்தையே உருவாக்கி விடுகிறது. அதற்காக சோலையே பொய்யெனச் சொல்வது பொருத்தம் இல்லாத ஒன்று. அப்படி சொல்பவர்கள் அறிவிலிகளாகத்தான் இருப்பார்கள். ஆண்களைப் போலவே தான் பெண்களையும் இறைவன் படைத்துள்ளான். இவர்களில் பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்பது எத்தனை மூடத்தனம் நிறைந்தது...? பெண்களுக்கு கல்வி கொடுத்தால் அது நாட்டில் உள்ள பேதமையை அகற்றிடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. "அடுப்பெரிக்கும் பெண்களுக்கு படிப்பெதற்கு" என்று கேட்பது எவ்வளவு பெரிய மூடத்தனம். இதைத்தான்
கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் - அங்கே
புல் விளைவதன்றி நல்ல புதல்வர்கள் விளைவதில்லை
என்று பாரதிதாசன் பாடியிருக்கிறார்.
ஆக பாரதி எடுத்துக் கொடுத்ததை உள்வாங்கிக் கொண்டு அதை தொடுத்து முடித்து வைத்தவர் பாரதிதாசன் என்கிறார் கண்ணதாசன்.
சோலை மரங்கள் அனைத்தும் - தினம்
தோன்றுவதேயொரு விதையினி தென்றால்
சோலைகள் பொய்யெனலாமோ? இதைச்
சொல்லொடு சேர்ப்பவர் மூடர்களன்றோ...
பெண்ணுக்குள்ளே ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதறிவைக் கெடுத்தார்...
எண்ணித் துடித்தவன் சொன்னான் - கண்கள்
இரண்டினி லொன்றைக் கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையகம்
பேதமை யற்றிடும்! ஆம் இது உண்மை
பாரதி, பாரதிதாசன் - இரு
பைந்தமிழ்ப் பாவலர் தம்மிடை யேயும்
பாரதி பல்லவி சொன்னான் - தாசன்
பாக்கியைப் பாடித் தன் பாட்டை முடித்தான்...
ஆக பாரதி விதைத்த விதையை, நீரூற்றி உரமிட்டு பயிர் செய்தார் பாரதிதாசன் என்கிறார் கண்ணதாசன். ஒரு பாட்டிற்கு பல்லவி தான் மூலம்... அந்த மூலத்தை கையிலே எடுத்துக்கொண்டு ஞாலத்தின் பார்வைக்கு கொண்டு சென்றவர் பாரதிதாசன் என்று குருநாதரான பாரதியின் பெருமையையும் சீடரான பாரதிதாசன் பெருமையையும் உயர்த்திப் பிடிக்கிறார் கண்ணதாசன்.
ஆக இருவருக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசம் தான். திராவிட எழுச்சி பற்றி பாரதி பாடாததை பாரதிதாசன் என்னும் வீரன் தான் பாடினான் என்கிறார் கண்ணதாசன்.
"பாரதி பாட மறந்த - ஒரு
பக்கம் திராவிட நாட்டின் எழுச்சி
யாரது பாடிய வீரன் - வேறு
யாரவன்? பாரதிதாசனல்லாமல்...
இன்றைய மாந்தரின் எண்ணம் - நன்கு
ஏற்றமுறத் தந்த பாரதிதாசன்
பின்றைய நாளில் தனக்கே - ஒரு
பேரிடம் தந்தனன் மூடுதற்கில்லை."
என்று பாடி... பாரதிதாசன் புகழை உயர்த்திப் பிடிக்கிறார் கண்ணதாசன்.
சாத்திரக் குப்பைகளை கண்டிப்பதிலும் சாத்திரங்களை தலையிலே தூக்கி வைத்துக் கொண்டாடுபவர்களை தண்டிப்பதிலும் பாரதியும் பாரதிதாசனும் ஒரே நேர்கோட்டில் பயணித்துள்ளனர் என்பதே உண்மை! மிகவும் நுணுக்கமாக சிந்தித்துப் பார்த்தால் பாரதி தந்தையாக காட்சியளிக்கிறார்... இதனை பாரதிதாசனே பதிவு செய்துள்ளார் என்கிறார் கண்ணதாசன். இப்படி பாரதியையும் பாரதிதாசனையும் இதுவரை எந்த கவிஞரும் சொல்லாத அளவுக்கு படம் பிடித்து நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் கண்ணதாசன்.
அடுத்த வாரம் சந்திப்போம்.






