என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மருத்துவம் அறிவோம்: உடலில் கட்டிகள் உருவாவது ஆபத்தானதா?- கமலி ஸ்ரீபால்
    X

    மருத்துவம் அறிவோம்: உடலில் கட்டிகள் உருவாவது ஆபத்தானதா?- கமலி ஸ்ரீபால்

    • கொரோனா பாதிப்பிற்குப் பிறகு சுகாதாரம் பற்றி சற்று கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
    • நீங்கள் செய்வது சரி என்று புரிய வைக்க படாதபாடுபட்டு உங்கள் சக்தியினை வீணாக்காதீர்கள்.

    இன்றைய கால கட்டத்தில் மக்களின் உடல்நலம் பற்றிய 'விழிப்புணர்வு' சற்று கூடியுள்ளது. குறிப்பாக நகர் புறங்களில் நாகரீகம் என்ற பெயரில் தவறான உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கம் சற்று குறைந்துள்ளது. 'கொரோனா' பாதிப்பிற்குப் பிறகு சுகாதாரம் பற்றி சற்று கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். இது நல்ல மாற்றமே. இந்த விழிப்புணர்வு மேலும் கூட வேண்டும்.

    இருப்பினும் ஏதோ ஒரு உடல் நல பாதிப்பால் மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது கூடிக் கொண்டுதான் இருக்கின்றது. இது ஏன் என்று பார்க்கும் போது அநேகர் ஏதோ ஒரு மன உளைச்சல், மன வலியால் அவதிப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இதனால் தூக்கம் கெட்டு, உணவு முறை கெட்டு, மன உளைச்சலில் மூழ்கி உடல் நலத்தினைக் கெடுத்துக் கொள்கின்றனர். சிலவற்றினை சற்று நாம் முயற்சித்தால் நம்மை நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

    * நீங்கள் சரியான பாதையில் செயல்பட்டாலும், சில பிரச்சினைகள் வரும் போது உங்களை ஆதரிக்காமல் இருப்பவர்கள் இருப்பார்கள். இவர்களிடம் சென்று நீங்கள் செய்வது சரி என்று புரிய வைக்க படாதபாடுபட்டு உங்கள் சக்தியினை வீணாக்காதீர்கள்.

    * யார்-யார் உங்களைப் பற்றி என்ன நினைத்து விடுவார்களோ என்ற கவலையில், சிந்தனையில் உங்கள் சக்தியினை வீணடிக்காதீர்கள்.

    * தேவைப்படும் போது மட்டுமே உங்களை சந்திக்கும் மனிதர்கள் நமக்குத் தேவையில்லை.

    * பிறர் பிரச்சினைகளில் உதவுகிறேன் என்ற பெயரில் மிக அதிகமாக மூழ்க வேண்டாமே. பின் இதுவே பெரிய பிரச்சினையாய் உங்களுக்கு மன வலியினை ஏற்படுத்தும்.

    * பிறரை ஈர்க்க வேண்டி (அல்லது) தேவையில்லாத 2 வார்த்தை புகழுக்காக உங்களை வருத்திக் கொள்ள வேண்டாம். இதுவே மன பளுவினை அதிகமாய் குறைத்து விடும்.

    நம்ம ஊரில் வெயில் அதிகம். வெப்பம் அதிகம். கோடை காலமும் நெருங்கிவிட்டது. காலை எழுந்தவுடன் குளிப்பது நல்லது.

    அதுவும் ஷவர் குளியல் நல்லது. வெந்நீர் வேண்டாம். சாதாரண நீர் போதும். இது சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். அவர்கள் சாதா நிலை நீர் என்பதனை தவிர்த்து விடலாம். மற்றவர்கள் இம்முறையினை பின்பற்றினால் காலையிலேயே உங்கள் மன நிலை நன்கு இருக்கும்.

    * ஸ்ட்ரெஸ் குறையும்.

    * விழிப்புணர்வு அதிகரிக்கும்.

    * சருமம், முடி நன்கு இருக்கும்.

    * நிண நீர் குழாய்கள் நன்கு இயங்கும்.

    * தசைகள் சோர்வு நீங்கி வலுப்பெறும்.

    * மன உளைச்சல், மன அழுத்தம் நீங்கும்.

    * ஆழ்ந்து நிதானமாக மூச்சு விடுவீர்கள்.

    (நாம் அதிகம் மன உளைச்சல், அழுத்தத்திற்கு உள்ளாவது நம்மிடம் அதிகம் திறமை (அல்லது) அடிப்படை திறன் கூட இல்லாத போதுதான். கீழ்க்கண்ட திறன்களை நம் முயற்சியின் மூலமே நாம் வளர்த்துக் கொள்ள முடியும். அவை

    * நாம் நினைப்பதனை சொல்லத் தெரிய வேண்டும்.

    * பிறர் பேசுவதனை குறுக் கிடாது கேட்க, கற்க தெரிய வேண்டும்.

    * தடைகளை எதிர் கொள்ளும் தைரியம் வேண்டும்.

    * தேவைப்படும் போது நியாயமான உதவியினை கேட்க வேண்டும்.

    * சுய ஆய்வு செய்து தன்னைத் தானே எடை போட வேண்டும்.

    * ஆக்கப்பூர்வமாய் இருக்க வேண்டும்.

    * நிமிடத்திற்கொரு முறை புத்தி மாறும் தன்மை கூடாது. இந்த திறமைகள் நம் வாழ்விற்கு பெரிதும் அவசியமானவை)

    சில மனோதத்துவ ஆய்வாளர்கள் கூறுவது என்ன தெரியுமா?

    * எதற்கெடுத்தாலும் அதிகமாக சிரிக்கும் மனிதன் ஆழ் மனதில் மிகவும் தனியாக இருக்கின்றானாம்.

    * மிக அதிகமாக தூங்கும் மனிதன் மனதில் சோகமாக இருப்பானாம்.

    * அடிக்கடி சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படும் மனிதன் அதிக அன்பினை பிறரிடம் எதிர்பார்க்கிறான். ஏங்குகிறான் என்கின்றனர்.

    * அதிக நேரம் உட்கார்ந்தபடி இருக்கக் கூடாது. இவர்கள் எதிலும் ஒரு சுறுசுறுப்பு தன்மை இன்றி இருக்கின்றனர். இவர்களுக்கு மன உளைச்சல், ஸ்ட்ரெஸ் நீங்க சில உணவுப் பொருட்களையும் பரிந்துரைக்கின்றனர் ஆய்வாளர்கள்.

    * கொட்டை வகை உணவுகள் மனச்சோர்வு, ஸ்ட்ரெஸ் நீங்க உதவுகின்றது.

    * அடர்ந்த சாக்லேட் மன நலம் நன்கு இருக்க உதவும்.

    * கிரீன் டீ ஞாபக சக்தி திறனை கூட்டும்.

    * ஒமேகா-3, சர்க்கரை வள்ளி கிழங்கு இவை ஆரோக்கிய மன நலம் அளிக்கும்

    கழுத்து பின்புறம், காதுக்கு பின்புறம் ஒரு கட்டி அல்லது வீக்கம் போன்று திடீரென யாருக்கும் எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் இப்படி திடீரென ஏற்படும்பொழுது அநேகர் கலங்கிவிடுவர். எல்லா கட்டிகளும் புற்றுநோய் கட்டிகள் கிடையாது. இருப்பினும் அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் அல்லவா?

    Lipoma : இவ்வகை கட்டிகள் முதலில் எந்த இடத்திலும் ஏற்படலாம். வலியில்லாதது. எந்த ஆபத்தும் இல்லாதது. இதனை கொழுப்பு கட்டி எனக் கூறுவர். இவை பெரிதாக வளர்ந்தால் தான் அன்றாட செயல்பாடுகளில் சற்று தொந்தரவாக இருக்கும்

    Sabeceouscyst : சிறிய உருண்டை கட்டி வடிவில் இருப்பவை. இவையும் அபாயமற்றவை தான். ஆனால் கிருமி தாக்குதல் ஏற்பட்டால் வலி போன்ற அசவுகரியங்கள் கொடுக்கலாம்.

    Lymph nodes: இவை பீன் வடிவம் கொண்டவை. நோய்க்கிருமிகளை எதிர்ப்பவை. உடல் முழுவதும் இருப்பவை. இவை சற்று பெரிதாகி காணப்படும் பொழுது உடலில் கிருமி உள்ளது, வீக்கம் உள்ளது என்பதின் அறிகுறிகள் ஆகும்.

    Thyroid nodutes: இது தைராய்டு சுரப்பி மீது உருவாகுவது. கழுத்தில் தெரியக்கூடியது. தைராய்டு சுரப்பி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாக இருக்கலாம்

    Fibroma: இதனை தசை-நார் கட்டி என்று சொல்லுவர். பொதுவில் இது வலியில்லாதது. ஆனால் அன்றாட வாழ்வில் பல சமயங்களில் பிரச்சினைகளை கொடுக்கலாம். கிருமி தாக்குதலும் ஏற்படலாம்.

    Cystic fibromas: இது சற்று அரிதானது. திரவம் நிரம்பிய கட்டி. முறையற்ற நிண நீர் கணுக்கள் செயல்பாட்டால் ஏற்படலாம். வேகமாக பெரிதாக கூடியது. மூச்சு விடுதல், விழுங்குதல் இவற்றில் பிரச்சினை ஏற்பட்டால் அவசர சிகிச்சையாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    Lipa sarcoma என்பது கொழுப்பு செல்களில் இருந்து ஏற்படும் புற்றுநோய் வகை பிரிவு. உடலில் எங்கும் ஏற்படலாம் மிகவும் ஆபத்தானதே.

    இப்படி இன்னமும் சிலவற்றினைக் கூறலாம். ஆனால் எந்த பிரிவு எத்தகையது என்பதனை மருத்துவர் மூலம் பரிசோதித்துக் கொண்டு அதன்படி சிகிச்சை பெற வேண்டுமே அன்றி அலட்சியமாக இருந்து விடக் கூடாது என்பதற்காகவே இவை எழுதப்படுகின்றன.

    பூசணி விதை:

    இதன் முக்கியத்துவம் இன்று அதிகமாக பேசப்படுகின்றது. முன்பெல்லாம் தரமான வாசனை பாக்கில் இதனை கலந்திருப்பார்கள். இனிப்பு வகை உணவுகளில் இதனை சேர்ப்பார்கள். அதிக சத்து நிறைந்தது. இந்த பூசணி விதை. புரதம், நார் சத்து, நல்ல கொழுப்பு வைட்டமின் சத்துகள், தாது சத்துகள் நிறைந்தது.

    * ஒரு அவுன்ஸ் (28கி) பூசணி விதையில் 7கி புரதம் உள்ளது.

    * நல்ல கொழுப்பு நிறைந்தது. இதன் காரணமாக வீக்கத்தினை குறைக்கும். இருதய ஆரோக்கியத்தினை கூட்டும்.

    * ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 1.7 கி நார் சத்து உள்ளது. இது சீரான ஜீரணத்திற்கு உதவுகிறது.

    * இதிலுள்ள வைட்டமின் 'ஏ' மற்றும் பீட்டா கரோட்டின் கண் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. முதுமை கால கண் தேய்மான பாதிப்புகளில் இருந்து காக்கிறது.

    * நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகின்றது. இதனால் நோய், கிருமிகள் பாதிப்பில் இருந்து உடலும் பாதுகாக்கப்படுகின்றது.

    * வீக்கங்களை குறைப்பதால் மூட்டுவலி, இருதய நோய், புற்றுநோய் பாதிப்புகள் வெகுவாய் குறைகின்றன.

    * இதில் உள்ள நார்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி சத்து உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கவும் இருதய நோய் பாதிப்பில் இருந்து காக்கவும் உதவுகின்றது.

    * ஆரோக்கியமான சருமத்திற்கு உதவுகின்றது.

    * சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் ஆலோசனையின் பேரில் சிறிது எடுத்துக் கொள்ளலாம்.

    * சிறந்த சக்தி அளிக்கின்றது.

    * மக்னீசியம் சத்து நிறைந்தது. எலும்பு, தசை, இருதய ஆரோக்கியத்திற்கு மக்னீசியம் அவசியமாகின்றது.

    * சிங்க் சத்து நிறைந்தது. சிங்க் நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டுகிறது. காயங்கள் ஆற உதவும்.

    * இரும்பு சத்து நிறைந்தது.

    * பாஸ்பரஸ் சத்து நிறைந்தது. இது எலும்பு, சிறுநீரகம், திசுக்கள், ரிப்பேர் இவற்றிற்கு பெரிதும் உதவுகின்றது.

    * இதில் உள்ள பி வைட்டமின்கள் சக்தி உருவாக்கம், மூளை செயல்பாடு இவற்றிற்கு உதவுகிறது.

    இவ்வளவு சத்து நிறைந்த பூசணி விதையினை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு நன்கு மென்று சாப்பிடலாமே.

    நம் உடலையும் நம் மனதினையும் கவனித்துக் கொள்வது என்பது நாம் நமக்கு கொடுக்கும் மரியாதை. உங்கள் உடல், உங்கள் மனம் இதற்கு நீங்கள் முக்கியத்துவம் தரவில்லை என்றால் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு எதுவும் நல்லது செய்ய முடியாது. இத்தோடு ஒருவர் தனக்குத்தானே மரியாதை கொடுக்கும் விதமாக மேலும் சிலவற்றினை பழக வேண்டும்.

    * யாரிடமும் எதற்காகவும் கெஞ்சக் கூடாது.

    * தேவைக்கு அதிகமான பொருள் வேண்டாம்.

    * யாராவது உங்களை மரியாதை குறைவாக நடத்தினால் அந்த நொடியே அதனை நொறுக்கி விடுங்கள்.

    * உங்களை மகிழ்ச்சியாய் வைக்க முறையாய் என்ன தேவையோ அதனை செய்து கொள்ளுங்கள்.

    * பிறரைப் பற்றி புறம் பேச வேண்டாம்.

    * மதியாதார் தலைவாசல் மிதியாதே.

    * எதனையும் பேசுவதற்கு முன்னால் சில நொடிகள் மவுனமாக இருங்கள். அநேக பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.

    * எப்பொழுதும் 'பளிச்' சென்று சுத்தமாய் இருங்கள்.

    * சாதிக்கப் பிறந்தவரே ஒவ்வொருவரும். நீங்களும்தான்.

    * உண்மையாக எப்பொழுதுமே நல்லது செய்ய வேண்டும்.

    * உங்களிடம் மற்றவருக்கு ஒரு பயம் கலந்த மரியாதை இருக்க வேண்டும்.

    * உங்கள் நேரம் பொன்னானது. ஒவ்வொரு நொடியிலும் உபயோகமாக செலவழியுங்கள். அவ்வளவுதான். வாழ்வு வெற்றிதான்.

    Next Story
    ×