என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மருத்துவம்  அறிவோம்- ரத்த அழுத்த நோய்க்கு தீர்வு வேண்டுமா?
    X

    மருத்துவம் அறிவோம்- ரத்த அழுத்த நோய்க்கு தீர்வு வேண்டுமா?

    • இளம் வயதினர் கூட உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது என்று கூறுகின்றனர்.
    • ஐந்து நிமிடம் அமைதியாய் ஓய்வு இருக்க வேண்டும்.

    இப்பொழுது இளம் வயதினர் கூட உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது என்று கூறுகின்றனர். ரத்த அழுத்தம் என்பது ரத்த குழாய்களின் சுவற்றில் ரத்தம் கொடுக்கும் அழுத்தமாகும். இதனை இருவகை எண்களாக mm /mm Hg என்று அளக்கின்றோம்.

    உதாரணமாக 120 /80 mm Hg என்பதில் மேலிருக்கும் எண்ணை சிஸ்டாலிக் அழுத்தம் எனவும் கீழிருக்கும் எண்ணை டயஸ்டாலிக் அழுத்தம் எனவும் பதிவு செய்கின்றோம். உயர் ரத்தம் என்பது இருதயம், பக்கவாதம் என்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இதற்கு அதிக கவனம் கொடுக்கின்றோம்

    அளவான முறையான ரத்த அழுத்தம் என்பது 120/80 mm Hg.இதனை சரியான அளவு என்கின்றோம்.

    உயர் ரத்த அழுத்தம் சற்று கூடி இருப்பது என்பது மேல் உள்ள எண் 120-129 mm Hg. கீழ் எண் 80mm Hg க்கு நெருங்கி இருக்கும்.

    பிரிவு 1 உயர் ரத்த அழுத்தம் என்பது மேல் எண் 130- 139 mm Hg எனவும் கீழ் எண் 80-89 mm Hg அளவும் இருக்கலாம்.

    பிரிவு 2 உயர் ரத்த அழுத்தம் என்பது மேல் எண் 140mm Hg அல்லது அதற்கும் மேல் இருப்பதும் கீழ் எண் 90 அல்லது அதற்கும் மேல் உள்ளது எனவும் சொல்லப் படுகின்றது.

    உயர் ரத்த அழுத்தம் இருதயம், பக்கவாதம் மட்டுமல்லாமல் சிறுநீரகம், கண் இவற்றினையும் பாதிக்க கூடியது. இவை வாழ்க்கை முறை மாறுதல்களால் ஏற்படலாம். உதாரணமாக அதிக எடை, புகைபிடித்தல், உடல் உழைப்பு இன்றி இருத்தல், பரம்பரை மருத்துவ காரணங்கள் ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படக்கூடும் .

    இன்று வீட்டிலேயே அவர்களே சோதித்துக் கொள்ளும் வகையில் ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வந்துள்ளன. இருப்பினும் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வதே நல்லது .

    ரத்த அழுத்தம் பரிசோதித்துக் கொள்வதற்கு முன்னால்

    * ஐந்து நிமிடம் அமைதியாய் ஓய்வு இருக்க வேண்டும்

    * புகை பிடித்துவிட்டு, காபி, டீ அருந்தி விட்டு, அதிக உடல் உழைப்பு செய்துவிட்டு உடனே ரத்த அழுத்தம் பரிசோதிக்க கூடாது.

    * குறைந்தது 30 நிமிட இடைவெளியாவது இருக்க வேண்டும்.

    * சிறுநீர் சென்று விட்டு 5 நிமிட இடைவெளி விட்டு பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    * வசதியாக அமர்ந்து கால் தரையில் படும்படி இருக்க வேண்டும்.

    * ஒரே கையில் ஒவ்வொரு முறையும் பரிசோதிக்க வேண்டாம்.

    * ஒவ்வொரு நாளும் எடுப்பதாயின் அதே குறிப்பிட்ட நேரத்தில் எடுப்பது நல்லது.

    * எடுத்த அளவினை நேரத்தோடு பதிவு செய்து வைக்க வேண்டும்.

    * முடிந்தால் இரு கைகளிலும் எடுத்து பதிவு செய்து வைத்து மருத்துவரிடம் காண்பிக்கலாம்.

    உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் அதிக உப்பு, கொழுப்பு, அதிக சர்க்கரை உள்ள பதப்படுத்திய உணவுகள், பாஸ்ட் புட், வறுத்த பொறித்த உணவுகள், மது இவற்றினை கண்டிப்பாக தவிர்ப்பதே சிறந்த வழி .

    பழ வகைகள் ,காய்கறிகள், முழு தானிய உணவுகள் ,கொழுப்பு குறைந்த பால் வகை உணவுகள், அடர்த்தி இல்லாத புரதம் இவற்றினை எடுத்துக் கொள்வது மிக மிக நல்லது.

    * ஆப்பிள், பேரிக்காய், திராட்சை

    * காய்கறிகள், கீரை வகைகள், புரோகலி, காலிபிளவர், தக்காளி, பூண்டு, வெங்காயம்

    * ஓட்ஸ், முழு தானியங்கள், மீன், பாசிப்பருப்பு, அடர்த்தி குறைந்த சிக்கன், கொழுப்பு குறைந்த பால் பிரிவு உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்.

    * பால், பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழம், சர்க்கரை வள்ளி கிழங்கு

    * மக்னீசியம் சத்து நிறைந்த பசலை பாதால், ராஜ்மா

    * ஒமேகா 3 போன்ற உணவுகள், சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றையும் மருத்துவர் ஆலோசனை பெற்றே செய்ய வேண்டும்.

    உயர் ரத்த அழுத்தம் என்பது மக்களுக்கு நம் நாட்டில் அதிகம் என்றாலும் தென்னிந்தியாவில் சற்று கூடுதல் என்றே குறிப்பிடுகின்றனர்.

    பரம்பரை, உணவு முறை, அதிக உடல் உழைப்பு இன்மை, அதிக உடல் எடை, ஸ்ட்ரெஸ் இவைகளே முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.

    இவை அனைத்துடன் உயர் ரத்த அழுத்தம் இருப்பின் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தும் முறைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதனை நன்கு உணர வேண்டும்.

    சிலருக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டுமென்றாலோ பரிசோதித்தாலோ உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.எனவே மற்ற நேரங்களில் எப்படி இருக்கின்றது என்பதனை அறிய 24 மணி நேர ரத்த அழுத்தம் பார்க்கும் கருவியினை உடலில் பொருத்தி விடலாம். இதன் மூலம் ரத்த அழுத்தம் கூடும், குறையும் நேரங்களை சரியாய் கவனிக்க முடியும்.

    கண்டிப்பாக வயது கூடும் பொழுது ரத்தக்குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை குறையும்.

    இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.

    * எடை கூடுவது ரத்தக் குழாய்களின் மீது அழுத்தத்தினை கொடுக்கின்றது.

    * அடிக்கடி டீக்கடைகளில், ஓட்டல்களில், வீட்டில் நொறுக்கு தீனி உண்பவர்கள்

    * இன்றைய முக்கிய காரணமாக கருதப்படும் ஸ்ட்ரெஸ்

    * புகையிலை போடுபவர்கள்

    காரணம் என ஒன்று இல்லாமல் பரம்பரை சொத்தாக சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு இவர்களின் கைகோர்த்த நண்பனாக இருந்தால் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படலாம்.

    இவர்களுக்கு மருத்துவரின் நேரடி ஆலோசனை மிக மிக அவசியம்.

    அன்றாடம் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதனையும் 15 நிமிடமாவது யோகா செய்வதனையும் 15 நிமிடமாவது தியானம் மூச்சு பயிற்சி செய்வதனையும் கட்டாய திட்டமாக நமக்கு நாமே வகுத்துக்கொள்ளலாமே.

    உயர் ரத்த அழுத்தத்தினை முழுமையாக இல்லாமல் செய்துவிட முடியுமா என்ற கேள்வி பலரிடம் உள்ளது.

    உயர் ரத்த அழுத்தத்தினை சில வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள், மருந்து இவற்றின் மூலம் நல்ல கட்டுப்பாட்டில் வைக்க முடியும். உறுப்புகளுக்கு ரத்தக் குழாய்களுக்கு ஏற்படும் பாதிப்பினை மேலும் கூடாமல் கட்டுப்படுத்த முடியும். ஆகவே தான் வருமுன் தவிர்ப்பதே நல்லது என்பதனை மருத்துவ உலகம் வலியுறுத்துகின்றது.

    சிலர் செய்யும் தவறு ஒன்று உள்ளது. மருந்து எடுத்துக் கொள்பவர்கள் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வரும் பொழுது தானே மனம் போன படி மருந்தை நிறுத்தி விடுகின்றனர் அல்லது குறைத்து விடுகின்றனர். மருத்துவர் அறிவுரை இன்றி இவ்வாறு செய்வது தானே சென்று ஆபத்தினை தேடிக்கொள்வது ஆகும்.

    இந்த உண்மையை நன்கு உணர வேண்டும்.

    உயர் ரத்த அழுத்தம் என்பதனை போல் குறைந்த ரத்த அழுத்தம் என்பதனையும் கவனம் செலுத்த வேண்டும். ரத்தக் குழாய்களில் தொடர்ந்து அழுத்தம் குறையும்பொழுது குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுகின்றது. இதனால் தலை சுற்றல், மயக்கம், சோர்வு ஏற்படலாம் .

    உடலில் நீர் வற்றுதல், சில மருந்துகள், இருதய பாதிப்பு, ஹார்மோன் பிரச்சினை இவை காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படலாம்.

    காரணம் எதுவாக இருப்பினும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படும் போது மயக்கம், தலைசுற்றல், மூளைக்கு தேவையான அளவு ஆக்சிஜன் சத்துக்கள் கிடைக்காத நிலை ஏற்படலாம்.

    மயங்கி விழும்போது பலத்த காயங்கள் ஏற்படலாம்.

    எப்பொழுதும் சோர்வாக இருப்பதால் வேலைகள் செய்ய இயலாது.

    தெளிவாக சிந்திக்க இயலாது

    மூளை, இருதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படலாம்.

    ரத்த அழுத்தம் நபருக்கு நபர் சற்று மாறுபடலாம். என்றாலும் மேல் எண் 100 mmHg க்கு கீழ் இருந்தாலும் கீழ எண் 70mm Hgக்கு கீழ் இருந்தாலும் உடனடியாக கவனம் கொடுக்க வேண்டும்.

    * குறைந்த ரத்த அழுத்தத்தினை தவிர்க்க தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும்.

    * காய்கறிகள், பழங்கள் இவற்றினை அன்றாடம் உணவில் சேர்க்க வேண்டும்.

    * உடற்பயிற்சி அன்றாடம் செய்வது அவசியம்.

    * சரியான அளவு எடை அவசியம். திடீரென வேகமாய் ஓடுவது,வேகமாய் திரும்புவது வேகமாய் படுக்கையில் இருந்து எழுவது போன்றவற்றினை தவிர்க்க வேண்டும்.

    சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய் இவைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். கண்டிப்பாக மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், குறைவான ரத்த அழுத்தம் இவை தொடர் மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டியவை.

    அவசர சிகிச்சை என ஏற்படும் போது துரித நடவடிக்கையாய் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு சென்று விட வேண்டும். சற்று மெத்தன போக்கு காட்டினாலும் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

    பீன்ஸ்:- பச்சை பசேல் என்று காய்கறி கடைகளில் கொட்டி கிடக்கும் காய். சுவையும் நிறமும் நிறைந்தது. சமைப்பது எளிது. ஆனாலும் இதனை சற்று மரியாதை குறைவாக பார்ப்பவர்கள் ஏராளம். எளிதாய் ஏதேனும் கிடைத்தால் அதன் அருமை அநேகருக்கு புரிவதில்லை. இதனை பொரியல், கூட்டு, சப்ஜி என பல வகைகளில் சமைக்க நமக்கு தெரியும். பின் ஏன் நல்ல பலன்கள் தரும் இதனை தவிர்க்கின்றோம்.

    பச்சை பீன்ஸ் நிறைந்த நார்ச்சத்து கொண்டது. நார்ச்சத்து பல நோய்களை தவிர்க்க வல்லது. சர்க்கரை நோயாளிகள் ஒரு சிறிய கப் சாதம், பெரிய கப் பீன்ஸ் என எடுத்துக் கொள்ளலாமே!

    ஆண்டி ஆக்சிடன்ட் சத்து மிக அதிகம் கொண்டது என்பதால் உடல் பாதிப்பில் இருந்து மிகவும் காக்கின்றது.

    கலோரி சத்து குறைந்தது. எடை குறைய விரும்புபவர்களும் இதனை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    பீன்ஸில் பி வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்களாக பொட்டாசியம், ப்போலேட், மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துகள் உள்ளன.

    புரதச்சத்துக்கொண்டது. சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு மிகவும் நல்ல புரதம் கிடைக்கும் உணவு .இதில் உள்ள சத்து மிகுந்த பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் பாதிப்புகளை வெகுவாய் குறைக்க வல்லது. இரும்பு சத்து கொண்டது. ரத்த சோகை நீக்க பெரிதும் உதவும். வீக்கங்களை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டும். இதில் உள்ள வைட்டமின் கே சத்து எலும்புகளுக்கு பலம் அளிக்கும். இதில் உள்ள வைட்டமின் கே சத்து எலும்பு உறுதி, ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதில் உள்ள யூடியூப் சத்து கண்களை வெகுவாய் பாதுகாக்கின்றது இத்தனை சத்துக்கள் கொண்ட பீன்ஸ் மார்க்கெட்டில் கொட்டி கிடக்கும் போது இனியாவது நன்கு பயன்படுத்தி பலன் பெறுவோமே!

    Next Story
    ×