என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சட்டமேதை அம்பேத்கர் பற்றியும், தோழர் ஜீவா பற்றியும் கண்ணதாசன் கவிதைகள்
- உன்னுடைய பூத உடல் மறைந்து போனாலும் நீ கொடுத்துச் சென்ற ஊக்கம் எனும் ஆயுதம் எங்களிடம் இருக்கிறது.
- ஜீவாவின் இறுதிக்காலம் சென்னையை அடுத்துள்ள தாம்பரத்திலே ஒரு குடிசை வீட்டிலேதான் கழிந்தது.
ஒரு நாட்டினுடைய சட்டம் என்பது தோட்டத்திற்கு வேலி போன்றது. நாட்டினுடைய கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும் என்றால் அரசின் நிர்வாகம், பொருளாதாரம், சுகாதாரம், கல்வித்துறை, நீதித்துறை, பாதுகாப்பு அனைத்தும் சிறப்பாக இருக்க வேண்டும்.
இவற்றிலே நீதித்துறையிலே வருகிற அரசியல் சட்டத்தை உருவாக்கிய பெருமைக்குரியவரே அம்பேத்கர் அவர்கள். ஆங்கிலேய ஆட்சியில் இருந்து நாம் விடுதலை ஆகி சுதந்திரம் பெற்றவுடனேயே இந்திய அரசியலமைப்பு சாசன சட்டத்தை உருவாக்கிட ஒரு குழு அமைக்கப்பட்டு விட்டது. அந்த குழுவிற்கு தலைமை ஏற்று இரவு பகலாக கண்விழித்து, உழைத்து இந்திய அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கினார் அம்பேத்கர். இவரது திறமையை போற்றும் வகையில் இவரை எல்லோரும் சட்ட மேதை என்றே அழைத்தார்கள்.
தாழ்த்தப்பட்ட ஓர் ஏழைக் குடும்பத்திலே பிறந்த அம்பேத்கரின் கல்வி நாட்டத்தை அறிந்த பரோடா மன்னர் இவரை உயர்கல்வியும், சட்டப் படிப்பும் படிப்பதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். அமெரிக்கா சென்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெற்றிகரமாக திரும்பிய முதல் இந்தியர் இவரே.
ஆரம்பக் கல்வி பயிலுகின்ற காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மாணவர்களை பள்ளியிலே தள்ளி வைத்து நடத்துகிற கொடுமை கண்டு மிகவும் வேதனைப்பட்டு கொதித்து குமுறினார் அம்பேத்கர். இந்த தீண்டாமை கொடுமையை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உணர்ச்சித் தீ அவர் மனதிலே இளமையிலேயே கொழுந்து விட்டு எரிந்தது.
இவரது பன்முக ஆற்றலை உணர்ந்த நேரு அவர்கள் இவரை தனது அமைச்சரவையிலே இணைத்துக் கொண்டார். முதலிலே பல்வேறு துறைகளில் அமைச்சராக செயலாற்றி விட்டு இறுதியிலே தான் சட்ட அமைச்சராக பணியாற்றினார்.
பெண்களுக்கு சம உரிமை வேண்டும், மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாராளுமன்றத்திலே சட்ட அமைச்சராக இருந்தபோது இவர் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியுற்றதால் தனது அமைச்சர் பதவியை 1951-ல் துறந்துவிட்டு வெளியேறினார் அம்பேத்கர். அதனால் தான் இவரை பற்றி முழுவதும் உணர்ந்திருந்த கவியரசர் கண்ணதாசன் அவர்கள்
ஒருவனால் கோடி மக்கள்
உயர்ந்தனர் என்றால்; அந்த
ஒருவனே நீ தான்! உன்னால்
உயர்ந்தவர் தாழ்த்தப்பட்டோர்
செறுமினால் குற்றம்; எம்மைத்
தீண்டினால் குற்றம் என்றே
குறுமதி வீணர் சொன்ன
குலத்திடை விளக்கம் தந்தாய்
என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்து பாடுபட்ட அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டுகிறார் கண்ணதாசன்.
எல்லோருடைய ரத்தமும் சிவப்புதான். இதிலே மேலோர் கீழோர் என்ற பேச்சுக்கே இடமில்லை. சாதியெனும் பாம்பு சீறி வந்த போது அதை எதிர்க்க துணிந்தவன் என்பதை தனது போராட்டத்தினால் நிரூபித்து காட்டியவர் அம்பேத்கர். தாழ்த்தப்பட்டவர்கள் மேல் சாதி பெண்ணை மணக்க கூடாது என்ற நிலை இருந்த காலகட்டத்தில், உடல் நலிவுற்று இருந்தபோது தனக்கு உதவியாக இருப்பதற்காக, மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஒரு மேல் சாதி பெண்ணை மணந்து கொண்டார் அம்பேத்கர். இதை தான்...
என்புதோல் யார்க்கும் ஒன்றே
எப்படி இவர்கள் மேலோர்
அன்பரீர் எழுவீர்! என்றாய்
ஆர்த்ததே இந்துப் பாம்பு
மின்படு கணத்தில் அந்த
விரியனைக் கொன்றாய்! சாதி
என்செயும் என்பதைப் போல்
எடுத்தனை மேலோர் பெண்ணை!
என்ற கவிதையில் சிறப்பாக குறிப்பிடுகிறார் கண்ணதாசன்.
இவரை நீரிழிவு நோய் வந்து கண் பார்வை மங்கும் அளவுக்கு தாக்கிய போது, படுத்த படுக்கையாய் இருக்கும்போது, தூக்கத்திலேயே இவரது உயிர் பிரிந்தது. இது குறித்துதான் கவியரசர் கண்ணதாசன் தனது கவிதையில்
தூக்கமே சாக்காடாக
தூய நீ சென்றாய்! அந்த
ஏக்கமே நோக்காடாக
இளைத்தனர் தாழ்த்தப்பட்டோர்.
என்று அம்பேத்கரின் மறைவு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பு என்பதை 'இளைத்தனர்' என்ற சொற்றொடரில் குறிப்பிடுகிறார் கண்ணதாசன்.
உன்னுடைய பூத உடல் மறைந்து போனாலும் நீ கொடுத்துச் சென்ற ஊக்கம் எனும் ஆயுதம் எங்களிடம் இருக்கிறது. அதன் மூலம் ஆக்கம் பெறுவோம் என்பதையும் மூடநம்பிக்கை நிறைந்த அந்த சாதிப் பாம்பினை தாக்குவோம். அதற்கான வீரம் செறிந்த ஆற்றல் என்ற தடியும் தளறாமல் போராடுவதற்கான கரங்களும் எங்களிடம் உண்டு என்று அந்த தாழ்த்தப்பட்ட மக்களும் அவரது தொண்டர்களும் உரைப்பது போல
ஆக்கமே பெறுவோம்! சார்ந்த
அறிவறு சாதி பாம்பைத்
தாக்குவோம்! நின்பாற் பெற்ற
தடியுண்டு! கைகளுண்டே!
என்று கவிதையை நிறைவு செய்கிறார் கண்ணதாசன்.
"கோயில்களிலே ஆடுகளைத் தான் பலியிடுவார்கள். சிங்கங்களை அல்ல. நீங்கள் சிங்கங்களாக இருங்கள்" என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய எழுச்சி உரை இன்றும் எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது.
அதேபோன்று "கற்பி.. ஒன்று சேர்.. புரட்சி செய்.." என்ற பொன்மொழியும் சுதந்திரம்.. சமத்துவம்.. சகோதரத்துவம்.. என்று அவர் உரைத்த நன்மொழியும் நமது காதுகளிலே இன்றும் விழித்துக் கொண்டே இருக்கிறது.
இப்படிப்பட்ட மாமனிதர்க்கு வி.பி.சிங் ஆட்சி காலத்தில் 1990-ம் ஆண்டு இந்திய அரசின் உயர்ந்த விருதான "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.
தோழர் ஜீவானந்தம் அவர்களை பற்றி... தமிழக அரசியல்வாதிகளில் மூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், காங்கிரஸ் கட்சியில் இலக்கிய செல்வர் குமரி அனந்தன், கம்யூனிஸ்ட் கட்சியில் தா.பாண்டியன் போன்றவர்கள் இலக்கிய அறிவு நிரம்ப பெற்றவர்கள். இந்த பட்டியலில் முக்கிய இடம் பிடித்தவர் தான் தோழர் ஜீவா அவர்கள்.
நாஞ்சில் நாட்டில், பூதப்பாண்டி கிராமத்தில் பிறந்து வளர்ந்து, சுதந்திரப் போராட்ட வீரர் வ.வே.சு. ஐயரால் உருவாக்கப்பட்ட சேரன் மாதேவி குருகுலத்தில் சில காலம் தங்கிவிட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள "சிராவயல்" என்னும் கிராமத்தில் காந்தி பெயரில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தவர் தான் ஜீவா.
அண்ணல் காந்தியடிகள், தந்தை பெரியார், தமிழறிஞர்கள் ராய சொ.சா. கணேசன், திரு.வி.க. மற்றும் ந.மு. வேங்கடசாமி நாட்டார் போன்ற தலைவர்கள் எல்லாம் இந்த ஆசிரமத்திற்கு வருகை தந்து சிறப்பித்துள்ளார்கள்.
ஒரு முறை ஜீவாவின் ஆசிரமத்திற்கு வருகை தந்த காந்தியடிகளிடம், இந்த ஆசிரமம் தான் இப்போது எனது சொத்து என்று ஜீவா கூற... இல்லை இல்லை.. "இந்த நாட்டிற்கே நீங்கள் சொத்து" என்று காந்திஜியே ஜீவாவின் சேவையைப்பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். நூல் நூற்றல், நூல்கள் பல கற்றல், கற்பித்தல் போன்ற பணிகளை சிறப்பாக செய்து வந்தார் ஜீவா. பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றி, காந்தீய பண்புகளை கற்றுக் கொடுத்து வந்தார் ஜீவா.
ஆரம்ப காலத்தில் சமய நெறிகளில் ஜீவாவுக்கு ஓரளவு பற்று இருந்தது. நாளடைவில் இந்தச் சமயங்கள் எல்லாமே சாதிய கட்டுமானங்களில் கட்டுண்டு கிடப்பதை உணர்ந்ததால், நாத்திகவாதியாகவும் சுயமரியாதைக்காரராகவும் மாறிவிட்டார்.
சிராவயல் ஆசிரமம் மூடப்பட்டு, அருகிலே உள்ள நாச்சியாபுரத்திலே அமைந்திருந்த "உண்மை விளக்க" நிலையத்தில் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி கற்றுத் தந்தார். பின்னர் அந்தப் பள்ளி கோட்டையூருக்கு இடம் பெயர்ந்ததால், ஜீவாவின் போக்கிலே மாறுதல் ஏற்பட்டது. ஒரு புரட்சியாளராக மாறி, ஏற்பட்ட தடைகளை எல்லாம் மீறி ஜீவா பல முறை சிறை செல்ல நேர்ந்தது. காந்தியவாதியாக சிறைக்குள்ளே சென்ற ஜீவா, ஒரு கம்யூனிஸ்ட் சிந்தனையாளராக வெளியே வந்தார் என்பதுதான் வரலாறு...
அதற்குப் பிறகுதான் அரசியல் வாழ்க்கையும் சூடு பிடித்தது. இலக்கிய வாழ்க்கையும் சூடு பிடித்தது. மகாகவி பாரதியின் கவிதைகளில் ஜீவாவுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு சாதாரணமானதல்ல... அவர் தமிழகம் எங்கும் சுற்றி சுற்றி வந்து பாரதி கவிதைகளை உணர்ச்சியோடு மேடைதோறும் முழங்கினார்... பாரதியின் மறுஉருவமாகவே வாழ்ந்து காட்டினார்...
கம்பன் அடிப்பொடியாக திகழ்ந்த சா.கணேசனின் அழைப்பினை ஏற்று காரைக்குடி கம்பன் கழகத்தில் "கம்பன் கண்ட தமிழகம்" என்ற தலைப்பிலே 1954-ம் ஆண்டு பேசி தமிழறிஞர்களை வியக்க வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் பேசுகிற வாய்ப்பு அமைந்தது. ஜீவா பேசுகிறார் என்றால் கூட்டம் வெள்ளம் போல் கூடியது. இப்படிப்பட்ட பெருமைக்குரிய தலைவராக விளங்கிய ஜீவாவைப் பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய கவிதையைக் காண்போம்.
மேடையில் ஒரு வேங்கை பாயுமே
விண்ணோக்கி வீசி வருமே
வீறு கொண்டோர் யானை போரிற் கிளம்புமே
வெஞ்சேனை முறுக்கேறுமே...
கோடையின் இடி கொண்டு கொட்டுமே வார்த்தையில்
கொஞ்சுதமிழ் விளையாடுமே...
குன்றங் கொடுத்த தோள் மன்றாட ஆடுமே
கொற்றவன் எழில் தோன்றுமே
என்று ஜீவாவின் குரல் வளத்தையும், தோற்றப் பொலிவையும் வேங்கைக்கு ஒப்பிட்டு வர்ணித்து எழுதுகிறார் கண்ணதாசன்.
"நாடென்றும் நாடுமே நாடுவன யாவுமே
நாட்டிற்களிக்க வருமே
நற்கொள்கை ஏற்றுமே நாளெல்லாம் வீதியில்
நடை போட்டசைந்து வருமே...
பாடென்னு முன்னமே பலபாடல் ஊறுமே
பகைவர்க்கும் அமுதாகுமே
பற்றுவன பற்றுமே பற்றியதை முற்றுமே
பாலாக்கி உண்டு விடுமே"
என்று ஜீவாவின் மேடை முழக்கம் பகைவர்களையும் ஈர்க்கிற விதமாக இருக்கும் என்பதை தனது கவிதையில் எழுச்சியுடன் எடுத்துரைக்கிறார் கண்ணதாசன்.
ஜீவாவின் இறுதிக்காலம் சென்னையை அடுத்துள்ள தாம்பரத்திலே ஒரு குடிசை வீட்டிலேதான் கழிந்தது. ஒரு ஆரம்ப பள்ளிக்கூடத்தை திறந்து வைக்க அந்த வழியாகச் சென்ற காமராஜர் காரை நிறுத்தச்சொல்லி, ஜீவாவைப் போய்ப் பார்த்து கண்கலங்கினார்... வேட்டியை துவைத்து காயப்போட்டுவிட்டு, அது காயட்டுமே என்று இடுப்பிலே ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு அப்போது அமர்ந்திருந்தார் ஜீவா. வேட்டி காயும் வரை காமராஜரும் அங்கே காத்திருந்து பின்னர் இருவரும் சென்று அந்தப் பள்ளியை திறந்து வைத்தது எல்லோரையும் கண் கலங்க வைத்தது... கூடியிருந்த மக்கள் வெள்ளம் ஆனந்த கண்ணீர் வடித்தது.
விழாவில் இருந்து விடைபெற்றுச் சென்ற காமராஜர் ஜீவாவின் மனைவிக்கு ஒரு வேலைக்கும் ஏற்பாடு செய்து, ஜீவா தங்குவதற்கு ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
ஜீவா நோய் வாய்பட்டு சென்னை பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கடைசி வார்த்தை... "காமராஜருக்கு தெரியப்படுத்துங்கள்... தகவல் சொல்லுங்கள்" என்பதுதான்.
எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்தது காமராஜர் வாழ்க்கை என்றால்... இலக்கியமாக அமைந்தது ஜீவாவின் வாழ்க்கை. இப்படிப்பட்ட மாமனிதர்களை இந்த பூமி இனி எப்போது காணுமோ என்பது விடை காண முடியாத ஒரு கேள்விக்குறிதான். இதனைத்தான் கண்ணதாசன் ஜீவாவைப் பற்றி எழுதிய கடைசி பாராவில்
'ஆடியும் ஓடியும் அறமே வளர்க்குமே
ஐயகோ ஏழை மனமே
அம்மேனி சாய்ந்ததே! அம்மேனி வெந்ததே
அண்ணல் ஜீவானந்தமே'- என்று கண்ணீரோடு கவிதையை நிறைவு செய்கிறார்...
அடுத்த வாரம் சந்திப்போம்.






