என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மருத்துவம் அறிவோம்- ஆரோக்கியத்தை தரும் கொண்டை கடலை, எலுமிச்சை
- கொண்டை கடலை, மூக்கடலை, சன்னா என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த பருப்பு சத்து நிறைந்தது.
- பொதுவில் பகல் உணவில் இதனை பூரி, சப்பாத்தி இவற்றிக்கு செய்து கொடுப்பார்கள்.
கொண்டை கடலை, மூக்கடலை, சன்னா என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த பருப்பு சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகளை மாலை ஸ்நாக் என்ற வகையில் மூக்கடலை சுண்டல் எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல ஆரோக்கியமானவர்கள் குழந்தைகள் இவர்களுக்கும் சுண்டல் கொடுக்க அறிவுறுத்துவார்கள். பொதுவில் பகல் உணவில் இதனை பூரி, சப்பாத்தி இவற்றிக்கு செய்து கொடுப்பார்கள். தெரிந்தோ, தெரியாமலோ இதனை சமைக்கும் தாய்மார்கள் அதிகம். விரும்பி உண்ணும் பிள்ளைகளும் அதிகம். இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று அறிந்து கொள்வோம்.
* கால்ஷியம் சத்து நிறைந்தது * கொழுப்பினை குறைக்க வல்லது * நார்சத்து மிகுந்தது * முடிக்கு வலுவு கொடுக்கின்றது * இரும்பு சத்து நிறைந்தது. * சருமத்திற்கு நன்மை அளிப்பது.
இத்தனை நன்மைகள் இருந்தாலும் இதனை அளவோடு உண்ண வேண்டும். சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது ஒரு கப்பில் ஊற வைத்த சன்னாவினை உங்கள் வீட்டில் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவு வேக வைக்கலாம். இதனை குழம்பு, சாம்பார், கூட்டு, பொரியல், ரசம் என சேர்த்து விடலாம். இதன் மூலம் தேவையான அளவே அன்றாடம் எடுத்துக் கொள்ள முடியும். எளிதாய் கிடைக்கும் இந்த நல்ல புரதத்தினை முறையாய் பயன்படுத்தி பலன் பெறலாம்.
* எடை குறைப்பிற்கு கூட உதவுகின்றது. * சிறிதளவு எடுத்துக் கொண்டாலே வயிறு நிறையும். நார்சத்து மிகுந்தது.
* இதனால் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். * மூளைக்கு நல்ல உணவு. * வறுத்த கொண்டை கடலையினை 'ஸ்நாக்ஸ்' முறையில் எடுத்துக் கொள்வது கால்ஷியம் சத்தினை அளிக்கும்.
* உயர் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும். * கொலஸ்டிராலினை கட்டுப்படுத்துவதால் இருதய பாதிப்புகள் குறைகின்றன.
* வறுத்த கொண்டை கடலையில் கிடைக்கும் 'செலினியம்' உள் வீக்கத்தினை குறைக்கின்றது.
கறுப்பு சன்னா, வெள்ள சன்னா என்று பார்க்கும் போது வெள்ளை சன்னாவில் உள்ள புரதச்சத்து கறுப்பு சன்னாவில் இருப்பதனை விட அதிகம்.
எலும்பு வலுவு, இரும்பு சத்து இவை இரண்டும் வெள்ளை சன்னாவில் அதிகம்.
வெள்ளை சன்னாவில் வைட்டமின், தாது உப்புகள் சத்து கறுப்பினை விட அதிகம்.
நார் சத்து கூடுதல் உள்ள வெள்ளை சன்னா மலச்சிக்கலை நீக்குகின்றது.
பல விதங்கள் வெள்ளை சன்னா கறுப்பினை விட கூடுதல் சத்து அளிப்பதாக உள்ளது. இதனால் கறுப்பு சன்னாவினை ஒதுக்கத் தேவையில்லை. வெள்ளையில் சத்து சற்று கூடுதல் என்பதனைத் தவிர இரண்டுமே மிக பயனுள்ள ஒன்றுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எளிதாகக் கிடைக்கும் சன்னா போலத்தான் நம்ம ஊரு 'பாலக்' கீரையும். வட இந்தியர்கள் சன்னா, பாலக் இவற்றினை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். நமக்கு 'பாலக்' கீரை பழக்கத்தில் சற்று குறைவாகத்தான் இருக்கின்றது.
பசலை கீரையில் அதிக வைட்டமின்கள், தாது உப்புகள் கொட்டிக் கிடக்கின்றது. வைட்டமின் ஏ.சி.கே., போலேட், மங்கனீஸ், மக்னீசியம், இரும்பு கால்ஷியம் சத்து இருக்கின்றது. உடல் உள் வீக்கத்தினைக் குறைக்கின்றது.
நார் சத்து கூடுதலாக இருப்பதால் ஆரோக்கியமான ஜீரணத்திற்கு உதவுகின்றது.
கொலஸ்டிரால் அளவினை சீராக்குகின்றது. இதனால் இருதய பாதிப்பின் அபாயத்தினை குறைக்கின்றது. இதில் உள்ள வைட்டமின் 'கே' சத்து எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. எலும்பு தேய்மானத்தினை வெகுவாய் குறைக்கின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி கூடுகின்றது. கண் பாதிப்பினை குறைக்கின்றது. குடல், மார்பக, சினைப்பை புற்று நோய் பாதிப்பு அபாயத்தினை குறைக்கின்றது. இதிலுள்ள போலேட் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படாமல் காக்கின்றது.
கலோரி சத்து குறைந்த ஆரோக்கியமான உணவு. இவ்வாறு சிறு சிறு எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பெரிய பயனை அடையலாம். இவ்வாறு மிக நல்ல பலன் அளிக்கும் எலுமிச்சை சாறு பற்றி பார்ப்போமோ!
எலுமிச்சை போன்று புத்துணர்ச்சி தரும் மற்றென்று அரிதுதான். வெறும் புத்துணர்ச்சி மட்டும்தானா. அநேக மருத்துவ பயன்கள் கொட்டி உள்ளது. இங்கு உடலின் நச்சுப் பொருட்களை எளிதாய் நீக்கி விடுகின்றது.
கிருமி நாசினி, தாது உப்புகள் நிறைந்தது. வைட்டமின் 'சி' சத்து நிறைந்தது. ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜுஸ். இதிலுள்ள ஜெலடின் சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு உதவுகின்றது.
ரத்த சுத்திகரிப்பின் காரணமாக சருமம் சுத்தமாய் இருக்கும். வாய் துர்நாற்றம் நீங்கும். தொண்டை பாதிப்புகளை நீக்கும். சிறுநீரக பாதையை சுத்தம் செய்யும்.
வெகு வெகுப்பான நீரில் ½ மூடி எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர (குறிப்பாக காலை நேரத்தில்) சுறுசுறுபாய் ஆரோக்கியமாய் இருப்போம்.
இரவு நேரத்தில் பலமுறை சிறுநீர் செல்ல எழுந்திருப்பது- இதனை மருத்துவ ரீதியாக Noctuna (அ) Nocturnal Polyuria என்று சொல்வார்கள். தூங்கும் நேரத்தில் உடல் குறைந்த அளவு சிறுநீரினை உருவாக்கும். இதன் காரணமே அநேகர் இரவு தூங்கி காலை வரை சுமார் 6-7 மணி நேரம் சிறுநீர் செல்லாது இருப்பர். ஆனால் சிலர் இருமுறை அல்லது அதற்கு மேலும் தூக்கத்தின் நடுவே எழுந்திருப்பர்.
இவ்வாறு ஏற்படுவதற்கு வாழ்க்கை முறை மற்றும் மருத்துவ காரணங்கள் உள்ளன. முதுமையில் இது பொதுவாய் காணப்படும் என்றாலும் எந்த வயதிலும் ஏற்படலாம்.
மருத்துவ ரீதியாக பார்க்கும் பொழுது சிறு நீரக பை, சிறுநீரக குழாய் இவற்றில் கிருமி தாக்குதல் ஏற்படும் பொழுது அடிக்கடி சிறுநீர் செல்ல வேண்டிய உணர்வு இருக்கும். சிறுநீர் செல்லும் பொழுது எரிச்சல் ஏற்படும். இதற்கு மருத்துவர் பரிசோதனைக்கு பிறகு ஆன்டிபயாடிக்ஸ் கொடுப்பார்.
மேலும் மருத்துவ காரணங்களாக ஆண்களுக்கு புரோஸ்டேட்- இதில் கிருமி தாக்குதல் மற்றும் இது விரிவடைந்து இருக்கலாம்.
* சிறுநீரக பை கீழ் இறங்கி இருக்கலாம்.
* சிறுநீரக பை அதிகமாக சுருங்கி விரியலாம்.
* புரோஸ்டேட், சிறுநீரக பை, சுற்றியுள்ள பகுதி- எங்காவது கட்டிகள் உருவாகி இருக்கலாம்.
* சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் அடிக்கடி சிறுநீர் செல்ல வேண்டி இருக்கும்.
* சிறுநீரகத்தில் கிருமி பாதிப்பு இருக்கலாம்.
* கீழ் கால் வீக்கம்
* நரம்பு மண்டல பாதிப்பு
* இருதய, கல்லீரல் பாதிப்பு ஆகியவைகள் இருக்கலாம்.
* கர்ப்ப காலத்திலும் அடிக்கடி சிறுநீர் செல்ல வேண்டி இருக்கலாம்.
* சில மருந்துகளாலும் ஏற்படலாம்.
* அதிக திரவ உணவு, அதிக நீர் குடித்தல், மது ஆகியவையும் காரணங்கள் ஆகும். * காரணத்தினை கண்டறிய வேண்டும்.
* எவ்வளவு திரவ உணவு (நீர், ஜூஸ், மோர், சூப்) போன்றவை எடுத்து கொள்கிறோம், இரவில் தூங்க சென்றது முதல் காலை எழுந்திருக்கும் வரை எத்தனை முறை எழுந்து சிறுநீர் சென்றோம், மிக குறைந்த அளவே செல்கின்றதா? சில நேரம் படுக்கையினை நனைத்து விடுகின்றமோ? வேறு பிரச்சினைகள் அறிகுறிகள் இருக்கின்றதா? உட் கொள்ளும் மருந்துகள் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு உடையவரா? குடும்பத்தில் ரத்த உறவுகளில் யாருக்கேனும் இதற்கு பாதிப்பு இருக்கின்றதா? என்று விவரங்களை மருத்துவரிடம் கூற வேண்டும்.
மருத்துவர் சர்க்கரை மற்றும் முழு ரத்த பரிசோதனை சிறுநீர் பரிசோதனை மற்றும் தேவைக்கேற்ப சில பரிசோதனைகளை செல்வார். அதற்கேற்ப சிகிச்சை முறையும் பரிந்துரைக்கப்படும்.
* தவிர்ப்பு முறையாக டீ, காபி, கேபின் பானகங்களை தவிர்த்து விட வேண்டும். * உடல் எடை சீராக இருக்க வேண்டும். * மதியத்தில் ½ மணி நேரம் ஓய்வு தேவை.
இரவில் அடிக்கடி எழுந்து சிறுநீர் செல்லும் பொழுது தூங்கும் நேரம்,முறை கெடுவது பல ஆரோக்கிய குறை பாடுகளை ஏற்படுத்தும் என்பதால் உரிய கவனம் தர வேண்டும்.
ஒமேகா-3 இன்று அதிகமாக பேசப்படும், வலியுறுத்தப்படும் பரிந்துரைக்கப்படும் ஒன்று ஒமேகா-3 ஏன் தெரியுமா? இதன் குறைபாடுகள் தரும் பாதிப்பு, எடுத்து கொள்வதால் பெறும் நன்மைகளை தெரிந்து கொண்டால் அனைவரும் அவரவர் குடும்ப மருத்துவர் ஆலோசனை பெற்று முறையாய் எடுத்து கொள்வர்.
* மனச்சோர்வு பாதிப்பு என்பது இன்று உலகம் முழுவதும் அநேகரிடையே காணப்படுகின்றது. சோகம், சுறுசுறுப்பின்மை, வாழ்வில் பிடித்த மின்மை என இவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஒமேகா-3 சத்து மாத்திரைகளை எடுத்து கொள்ளும் பொழுது மிக நல்ல முன்னேற்றத்துடன் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
* ஒமேகா-3 கண் பார்வை, கண் பாதுகாப்பிற்கு மிகவும் உகந்தது.
* ஒமேகா-3 கால காலத்திலும் சிறு குழந்தைக்கும் நல்ல மூளை வளர்ச்சி பெற உதவுகின்றது. * இருதய பாதிப்புகள் குறையும் வாய்ப்புகள் கொண்டது. * ஒமேகா-3 வயிற்று கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வீக்கம் இவைகளை கட்டுப்படுத்த வல்லது. * தன்னுடல் தாக்கு நோய்களின் தீவிரத்தினை குறைக்க கூடியது.
* மறதி நோயினை கட்டுப்படுத்த வல்லது. * புற்றுநோய் அபாயத்தினை வெகுவாய் குறைக்கவல்லது.
* சிறு குழந்தைகளின் ஆஸ்துமா பாதிப்பினை கல்லீரல் கொழுப்பினை நீக்குகின்றது. * எலும்பு, மூட்டுகளை வலுவாக்குகின்றது.
* மாத விலக்கின் போது ஏற்படும் வலி வெகுவாய் குறையும். * சீரான தூக்கம் இருக்கும். சரும பாதுகாப்புக்கு நல்லது. தேவையான அளவு உங்கள் உணவின் மூலம் கிடைக்கவில்லை என்றால் மருத்துவர் ஆலோசனை படி சத்து மாத்திரைகள் எடுத்து கொள்ள வேண்டும்.
கல்லீரலில் கவனம் தேவை
கல்லீரலில் பாதிப்பு என்று நாம் உணர்வதற்குள் பாதிப்பு மிக அதிகமாய் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. ஆகவே சில அறிகுறிகளுக்கு நாம் நல்ல கவனம் கொடுக்க வேண்டும்.
வயிறு வீக்கம். உணவுப் பாதையில் வலி, பசியின்மை, உணவில் ஒருவித நாட்டம் இன்மை, உண்ணும் அளவு குறைதல், மஞ்சள் காமாலை, கணுக்கால்களில் வீக்கம், அடிக்கடி வயிற்றுப் போக்கு இவற்றில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* கல்லீரலில் வைரஸ் தாக்குதல் இல்லாது இருக்க வேண்டும்.
சில குறிப்பிட்ட பிரிவு வைரஸ் தாக்குதலை தவிர்க்க இன்று 'வாக்சின்' வந்துள்ளன. பிறந்த குழந்தைகளை இப்போது குழந்தை நல மருத்துவரே அட்டவணை போட்டு தேவையான 'வாக்சின்'களை கொடுத்து விடுகின்றார். பெரியோர் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
* எடை கூடாது இருக்க வேண்டும்
* தொடர்ந்து வயிற்று வலி என்பது கவனிக்கப்பட வேண்டிய அவசர சிகிச்சை ஆகும்.
* பசியின்மை இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
* மஞ்சள் நிற சருமம், கண் இவற்றினை நாமே அறிவோம். உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மற்றொன்றினையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு வயிற்று பகுதியில் இருப்பது.
* இருதய நோய், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், பக்க வாதம், நீரிழிவு பிரிவு 2 பாதிப்பு, ஆஸ்துமா, மார்பக புற்று நோய், குடல் புற்று நோய், மறதி ஆகியவற்றினை ஏற்படுத்தி விடும்.
அதிக சர்க்கரை உணவு கேக், சோடா, அதிக பழரசம் போன்றவை எடையினைக் கூட்டுகின்றது. உடலின் 'மெட்டபாலிசத்தில்' வேகம் குறைந்து விடுகின்றது.
அதிக வயிற்று பகுதி கொழுப்பு நீரிழிவு பிரிவு2 பாதிப்பு அபாயத்தினை கூட்டி விடுகின்றது. வயிறு கொழுப்பு குறையும் போது கட்டுப்பாடான சர்க்கரை அளவும் ஏற்படும்.
* வயிறு கொழுப்பு குறைந்தால் உயர் ரத்த அழுத்தம் குறையும்.
* வயிறு கொழுப்பு குறைந்தால் கொலஸ்டிரால் அளவு சீராய் இருக்கும்.
* வயிறு கொழுப்பு குறையும் போது பக்கவாத பாதிப்பு அபாயம் குறையும். * மன அழுத்தம் நீங்கும்.குறைந்த அளவு உடல் உழைப்பு, நடக்காமல இருப்பதே வயிறு கொழுப்பு கூட ஒரு காரணம் ஆகின்றது. எனவே நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா இவையே வயிற்று கொழுப்பினை குறைக்க உதவும், கண்டிப்பாய் முறையான உணவும் அவசியம். அதிக ஆல்கஹால், ஸ்ட்ரெஸ், பரம்பரை இவைகளும் முக்கிய காரணம். 7,8 மணி நேர தூக்கமும் அவசியம் என்பதனை உணர்வோமாக.






