என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சிவனருள் தரும் பதிகங்கள்- மாணிக்கவாசகரும் திருவெம்பாவையும்
- ஆண்டவனும் அருட்கண்ணால் நோக்கி, அழைத்து ஞானோபதேசம் செய்தார்.
- சிவபெருமான் கனவில் வந்து நாம் குதிரைகளுடன் வருகிறோம்.
பாண்டி நாட்டு, வைகைக்கரை வாதவூரில், அந்தணர் குலத்தில் பிறந்தவர் மாணிக்கவாசகர். பெற்றோர் இட்டு அழைத்த பெயர் 'வாதவூரன்'. பதினாறு வயதிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து வேதம் தொடங்கிய அனைத்துக் கலைகளையும் கற்று குறைவற்ற பேரறிவுடன் விளங்கினார். அவர் புகழ் நாடெங்கும் பரவியது. திறமையையும் புகழையும் கேள்வியுற்ற பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் தமது அமைச்சரவையில் தலைவன் ஆக்கினான். வாதவூரரும், அவரும் நடு நிலை நின்று நீதியை நிலைநாட்டிக் குடிகளைக் காத்து வந்தார்.அவரது பணிகண்டு மகிழ்ந்த மன்னன் 'தென்னவன் பிரமராயன்' என்னும் பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தான்.
சிலகாலத்தில் ஞானம் கற்றுணார்ந்த பிரமராயரின் மனத்தில் ஒரு மாற்றம் உண்டானது. நில்லாவுலகில் இன்பம் பொய். சிவன் திருவடி இன்பமே உண்மையெனவும் அவருக்குத் தோன்றியது. வாதவூரர சிவபெருமானுடைய திருவடிகளை அடைவதற்குரிய முயற்சியைக் கைகொண்டார். அறிஞர்களுடன் கலந்து பேசி விவாதித்து. கடைசியில், கடவுளைக் கல்வி கேள்விகளால் காண முடியாது என உணர்ந்தார். அதனால், ஞானம் தேடி பல இடங்களுக்குப் பயணித்தார்.
ஒருநாள், சோழநாட்டைச் சேர்ந்த கீழ்க்கடற்கரைக்குச் சென்று மேன்மை பொருந்திய குதிரைகளை வாங்கி வரும்படி பிரமராயருக்குக் கட்டளையிட்டான் பாண்டிய மன்னன். வாதவூரரும் அத்தகைய குதிரைகளை வாங்கிவர திருப்பெருந்துறை என்னும் பதியைச் சென்றடைந்தார். ஆண்டவன் அவரை ஆட்கொள்ள, ஓர் அந்தணர் வடிவத்தோடு அடியவர்கள் பலர் சூழத் திருப்பெருந்துறையில் கோயிலுக்கருகில் ஒரு குருந்த மரத்தடியில் எழுந்தருளியிருந்தான்.
குருந்தடியில் எழுந்தருளியிருந்த சிவகுருவைக் கண்ட பிரும்மராயர் சென்று அடி பணிந்து 'தன்னையும் ஆட்கொள்ள வேண்டினார். அவரை ஆண்டவனும் அருட்கண்ணால் நோக்கி, அழைத்து ஞானோபதேசம் செய்தார். இறைவனின் அருள் மொழியால் தொழுத கையும் அழுத கண்ணும் உடையவராகப் பெருமானைப் வலம்வந்து பணிந்து, கோவண உடை தரித்தார்.
அப்போது வாதவூரருக்குத் தம்மை அறியாமலேயே இறைவனைப் பாடும் எண்ணம் எழுந்தது. பாடினார். மகிழ்ந்த இறைவன் 'மாணிக்க வாசகன்' என்னும் திருநாமத்தைத் தந்து சிலநாள் திருப்பெருந்துறையிலேயே தங்கித் திருப்பணி செய்ய கட்டளையிட்டான்.
அப்போது, அவரோடு வந்திருந்த அரசனின் வேலையாட்கள் அவர் குதிரை வாங்க வந்த பணியை நினைவுபடுத்தினர். அவரும் குதிரைகளை ஒரு மாதத்திற்குள் அனுப்பிவைப்பதாக அரசனுக்குத் தகவல் சொல்லச் சொன்னார்.
மாணிக்கவாசகர் குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருளை எல்லாம் திருப்பெருந்துறைக் கோயில் திருப்பணிக்காகச் செலவு செய்து வந்தார். குறிப்பிட்ட நாள் வந்தும் குதிரைகள் வந்து சேராததைக் கண்ட பாண்டியன் அவருக்கு ஓலை அனுப்ப, வாதவூரர் இறைவனிடத்தில் முறையிட்டார்.
சிவபெருமான் கனவில் வந்து "நாம் குதிரைகளுடன் வருகிறோம். நீ முன்னர் சென்று, ஆவணி மூலநாளில் குதிரைகள் வரும் என்று கூறுவாயாக" என்றார். மாணிக்கவாசகரும் அவ்வாறே மன்னனிடம் கூறினார். மன்னன் பெருந்துறையில் குதிரைகள் இருக்கின்றனவா என்று அறிந்து வர தனது ஒற்றர்களை அனுப்பினான். பெருந்துறையில் எங்கும் குதிரைகள் இல்லையென மன்னனுக்கு அறிவித்தார்கள். சினம் கொண்ட அரசன், மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்து சித்திரவதை செய்ய. கொடுமை பொறுக்காத மாணிக்கவாசகர் இறைவனிடம் முறையிட்டார்.
பிரமராயருக்கு குதிரைகளைக் கொண்டுவர எண்ணம் கொண்ட, ஈசன் ஓடிய நரிகளை குதிரைகளாக்கினான் சிவகணங்களையெல்லாம் குதிரை சேவகர்களாக ஆக்கி அவனே குதிரை வியாபாரி வேடமிட்டு வெள்ளைக் குதிரையில் மதுரை விரைந்தான்.
குதிரைக் கூட்டம் வருவதை அறிந்த அரசன், வாதவூரரைச் சிறையிலிருந்து விடுவித்து,வாதவூரருக்குப் பரிசுகள் கொடுத்தனுப்பினான். அரசனுடைய வேலைக்காரர்கள் குதிரைகளை லாயத்தில் கட்டினார்கள்.
இரவில் குதிரைகள் நரிகளாகவே மாறி; ஊளையிட்டுக் கொண்டு வீதிதோறும் ஓடின. பாண்டியன் சினம் கொண்டு வாதவூரரை மீண்டும் சிறையிலடைத்தான். ஈசனும் பாண்டியனுக்கு பாடம் புகட்ட வைகை ஆற்றை பெருகச் செய்தான்.
வைகை வெள்ளம், மதுரைமாநகர் முழுவதும் விரைந்து பரவத்தொடங்கியது. ஊர்மக்கள், ஊழிக்காலமே வந்துவிட்டதென்று அஞ்சி, மன்னனிடம் முறையிட்டனர். பாண்டியனும், அமைச்சர்களோடு ஆராய்ந்து, வாதவூரரைத் துன்புறுத்தியதன் விளைவு என்றுணர்ந்து, அவரை விடுவித்து; மதுரை மாநகரை; இவ்வெள்ள நீர் அழிக்காதவாறு காப்பாற்ற வேண்டும்; என்று வேண்டிக் கொண்டார். வாதவூரரும் இறைவனை வேண்ட வெள்ளத்தின் வேகம் முற்றும் நில்லாமல் சிறிது குறைந்தது. முற்றும் வெள்ளம் குறையவில்லை. பாண்டியன் மக்களைக்கூட்டி பங்கு என்று அளந்து கொடுத்து; ஆற்றின் கரையை அடைக்க கூறினான். பிட்டு விற்கும் கிழவிக்கு சோம சுந்தரர் கூலியாளாக வந்து வேலை செய்யாமல் கிடந்தவனை மன்னன் பிரம்பால் அடிக்க கூலியாளாக வந்த பெருமான் ஒருகூடை மண்ணை; உடைப்பிற்கொட்டி மறைந்தான், பாண்டியன் அடித்த அப்பிரம்படி; அரசன் முதல் அனைத்து உயிர்களின் மீதும் பட்டது.
வாதவூரார்; இறைவன் தன் அடியவர் பொருட்டுக் கூலியாளாக வந்தததை எண்ணி வியந்தார். பாண்டிய மன்னன்; வாதவூரார் பெருமையை அறிந்து மன்னித்தருள வேண்டினான்.
சிவபெருமான் அசரீரியாக நரிகளைப் பரிகளாக்கியதையும் ஆற்றில் வெள்ளம் வரச்செய்ததையும் கூற , அரசன் வாதவூரரிடம் மன்னிப்புக் கேட்டான். வாதவூர்அடிகள் தவக்கோலம் தாங்கி திருப்பெருந்துறையில் இறைப்பணி செய்து, சிதம்பரம் சென்று சபாபதியை வணங்கிப் பரமனுக்குப் பாமாலைகள் பல சூட்டி வந்தார்
இயற்றிய நூல்கள்:மணிவாசகர் திருவருட் போகத்தில் திளைத்து வாழும் நாள்களில், நமச்சிவாய வாழ்க என்று தொடங்கும் சிவபுராணம் முதல், அற்புதப் பத்து, அதிசயப்பத்து, குழைத்த பத்து, சென்னிப் பத்து, ஆசைப்பத்து, வாழாப்பத்து, அடைக்கலப் பத்து, செத்திலாப் பத்து, புணர்ச்சிப் பத்து, அருட் பத்து, திருவார்த்தை, எண்ணப் பதிகம், திருவெண்பா, திருப்பள்ளியெழுச்சி, திருவேசறவு, ஆனந்த மாலை, உயிருண்ணிப்பத்து, பிரார்த்தனைப் பத்து, திருப்பாண்டிப் பதிகம் முதலிய பதிகங்களைத் திருவாய் மலர்ந்தருளி, அடியார் கூட்டத்துடன்; பலநாள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தார்.
தில்லையில் அடிகள் குலாப்பத்து, கோயில் திருப்பதிகம், கோயில் மூத்த திருப்பதிகம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளோணம், திருவுந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பூவல்லி, திருப்பொன்னூசல், அன்னைப்பத்து, திருக்கோத்தும்பி, குயில் பத்து, திருத்தசாங்கம், அச்சப்பத்து, என்னும் நூல்களை அருளிச்செய்தார்.
ஈழத்தை ஆண்டபௌத்த அரசன் புத்த குருமார்களோடு வந்து அவர்களும் சைவர்களோடு வாதம் செய்து வெல்ல தன் ஊமை மகளுடன் தில்லையை அடைந்தான். மாணிக்கவாசகர் சாக்கியர்களுடன் வாதம் செய்து விடை அளித்து ஈழ மன்னன் வேண்டியபடி பேசாத மகளையும் பேசச் செய்தார்.
சிதம்பரத்தில் தில்லை எம்பெருமான் வேதியராய் தோன்றி திருவாசகம் அருளுமாறு கேட்டுக்கொண்டார். வாசகர் பாடல் சொல்ல, அம்பலவாணர் தம் திருக்கரத்தால் ஏட்டில் எழுதி "திருவாதவூரர் சொல்லிய இந்தத் திருவாசகம் பொன்னம்பலத்திலே நடனமாடுகின்ற அழகிய திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்தாகும்" என்று எழுதிச் சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்து அற்புதம் புரிந்தான். மறுநாள் இது குறித்து ஊரார் விவரம் கேட்க இறைவனே திருவாசகம் சொல்ல சொல்ல எழுதினார் எனச்`சொல்லி அவரும் அம்பலத்தில் மறைந்தார். அதுமுதல் அவர் "மாணிக்கவாசகர்" என்பது உறுதியானார்.திருவெம்பாவை:மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது திருவெம்பாவை. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது.திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. முதல் எட்டு பாடல்கள் சிவபெருமானின் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலைக் குறிப்பது. ஒன்பதாவது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல் நீராடுதலையும் குறிக்கின்றன.
தத்துவம்:சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றாகி சிவனைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.
பாவை நோன்பு: பெண்கள் நோன்பு நோர்க்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி, சிவலோகன், தில்லைச்சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் விளித்து நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது.
திருவெம்பாவை நோன்பு: மார்கழி மாத திருவாதிரை (நட்சத்திரம்) நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும்.இந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து கோயில் சென்று சிவகாமி உடன் இருக்கும் நடராஜரைக் கண்டு அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்குபற்றுவர். இந்நோன்புக் காலத்தில் ஒரு நேர உணவாகவே உணவு மட்டுமே உண்பர்.
இந்நோன்பைக் கன்னிப் பெண்களே பெரும்பாலும் கடைப்பிடிப்பர். நோன்புக் காலத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரையும் அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று சிவபெருமான் புகழ்பாடி நீராடுவர். இதனைக் கண்ணுற்ற மாணிக்கவாசகப் பெருமான் இந்நிகழ்ச்சியையே திருவெம்பாவையாக 21 பாடல்களாகப் பாடினார். இப்பாடல்களையே இன்றும் திருவெம்பாவைக் காலங்களில் கோயில்களில் பாடுவது வழக்கத்தில் உள்ளது.
திருவெம்பாவை பூசைக்குரிய நெய்வேதியமாக பிட்டு படைக்கப்படுகின்றது. இதனால் இப்பூசை பிட்டுப்பூசை எனவும் அழைக்கப்படும்.
கூடுதல் சிறப்பு: 1)திருவெம்பாவை, தொள்ளாயிரம் ஆண்டுகளாக சிவத்தலங்களில் ஓதப்படுகிறது."தமிழ் மந்திரம்" என்ற பெயரில் அந்தக்காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும், சில திருவிழாக் காலத்திலும், சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர். ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் "ஏலோர் எம்பாவாய்!" என்ற சொற்றொடர் காணப்படும். அது மருவி வந்து இப்போது சயாமியரால், " லோரி பாவாய்" என்று அழைக்கப்படுகிறது.
சில கோவில்களில் உள்ள மாணிக்கவாசகரின் செப்பு பிரதிமைகளில் கையில் உள்ள ஓலைச் சுவடிகளில் அக்காலத்து வரிவடிவில் "நமசிவாய" என்று எழுதப்பட்டிருக்கும்.






