என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சத்து நிறைந்த கோதுமை ரவை-கொய்யா பழம்
    X

    சத்து நிறைந்த கோதுமை ரவை-கொய்யா பழம்

    • உப்புமா, கிச்சடி என வீட்டில் கொடுத்தால் ஊரை விட்டே ஓடி ஒளியும் பிள்ளைகளும் உண்டு.
    • வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்திக்கும், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதற்கும் உதவுகின்றது.

    உடைத்த கோதுமை ரவை:- கோதுமை குறுனை, இதனை ஏதோ வயதானவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்று ஒதுக்கி விடுபவர் பலர் உள்ளனர். இதில் உப்புமா, கிச்சடி என வீட்டில் கொடுத்தால் ஊரை விட்டே ஓடி ஒளியும் பிள்ளைகளும் உண்டு. ஏனெனில் கோதுமை ரவைக்கு ஸ்டைல் கிடையாது. இதன் அருமைகளை நாம் பயன்படுத்தினால் மட்டுமே தெரியும்.

    நல்லவைகள் எப்போதும் சற்று அசடு போல் தான் இருக்கும். இந்த கோதுமை ரவையின் நன்மைகளை பார்ப்போம்.

    * இதில் உள்ள நார் சத்து சர்க்கரை நோயினை கட்டுப்படுத்துவதில் உதவியாய் இருக்கின்றது. ½ கப் ரவையில் சுமார் 1.4கி நார்சத்து உள்ளது. இதுவே சடார் என சர்க்கரை ஏறுவதினை கட்டுப்படுத்துகின்றது.

    * இதில் உள்ள மக்னீசியம் இருதயத்தின் சீரான துடிப்பிற்கு உதவுகின்றது. பொட்டாசியம் சத்து உயர் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்துகின்றது. இதில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகை ஏற்படுத்துவதினை தடுக்கின்றது. சோர்வு ஏற்படாமல் உள்ளது.

    * கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது சத்துக்கள் இருப்பதால் எலும்புகள் பாதுகாக்கப்படுகின்றன.

    * மிக நல்ல புரதம் கிடைக்கின்றது. எளிதில் ஜீரணம் ஆவது. * மலச்சிக்கல் இராது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. * கெட்ட கொழுப்பினை நீக்கி நல்ல கொழுப்பினை சீராய் வைக்கின்றது.

    * உடல் எடை குறைய உதவும். மார்பக புற்றுநோயினை எதிர்க்க வல்லது என ஆய்வுகள் கூறுகின்றன. வளரும் குழந்தைகளுக்கு இது சிறந்த உணவு. சமைப்பதும் மிக எளிது. பி சத்து வைட்டமின்கள் கொண்டது. பின் என்ன காரணத்திற்காக இதனை ஒதுக்கி வைக்கின்றோம். நாக்குக்கு என்ன அவ்வளவு அதிகாரமா? கோதுமை ரவை சாப்பிடவும் ருசியானது தான். இப்போதே பழக்கத்தில் கொண்டு வந்து விடுவோமே.

    தூக்கம்: இதனை பற்றி கூறுவது என்றால் இரவு தூங்க வேண்டிய ஆரோக்கியமான தூக்கத்தினை பற்றி தான். நாள் முழுவதும் பள்ளியிலும், அலுவலகத்திலும் தூங்கும் தூக்கத்தினை பற்றியது அல்ல. இப்படி முறைகெட்ட நேரத்தில் ஏன் தூங்குகின்றோம்? எப்படி சரி செய்வது என்பது பற்றியும் பார்ப்போம். சிலர் பெருமையாக சொல்வார்கள். நான் 3-4 மணிநேர அளவில் தான் தூங்குகிறேன் என்று. இவ்வாறு தொடர்ந்து செய்வதால் காலப்போக்கில் சோர்வு, பலவீனம், எடை கூடுதல் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள். குறைந்த அளவு தூக்கம் கொண்டவர்கள் எப்போதும் சோர்வாக உணவின் ருசித்தன்மை இல்லாதவர்களாகவும், அதிகம் தன்னை சுறுசுறுப்பாக்கிக்கொள்ள காபி, டீ போன்ற பானங்களை அருந்துபவர்களாகவும் இருப்பார்கள். யோகா பயில்பவர்கள். அதிகம் தியானம் செய்பவர்கள் குறைந்த அளவே தூங்கு வார்கள். இங்கு நாம் பேசுவது சாதாரண இயல்பு வாழ்க்கை வாழும் மனிதர்களை பற்றியது ஆகும்.

    குறைவான தூக்கம் கொடுக்கும் பக்கவிளைவுகள்

    * எரிச்சலாக பேசுவார்கள் (உங்கள் ஆபீசில் பாஸ் காலையிலேயே எரிந்து விழுந்து பேசினால் நீங்கள் பொறுமையாக சார், உடம்பு சரியாக இருக்கீங்களா? உடம்பு நல்லா இருக்கிறதா? சரியா தூங்கவில்லையா? என்று கேட்கலாம். * கூர்மையாய் கவனிக்கும் திறன் குறையும். மறதி ஏற்படும். * ஸ்ட்ரெஸ் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும், இருதய துடிப்பு மாறுபாடு, கூடுதல் இருதய நோய் பாதிப்பு, மூளை செயல்பாட்டில் கூர்மைத்திறன் குறைவு, வலி, உடல் படபடப்பு ஆகியவை இருக்கும்.

    தீர்வு என்ன? இரவு 10 மணிக்கு தூங்கி காலை 5 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கத்தினை கொண்டு வர வேண்டும். உடல் ரீதியான பாதிப்புகளை உடனடியாக சரி செய்துகொள்ள வேண்டும்.

    (பலமுறை ஒரு செய்தியினை வலியுறுத்தி கூறுவதன் காரணம் அதன் முக்கியத்துவத்தினை மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே) அந்த வகையில் பூண்டின் மருத்துவ மகிமைகளை அடிக்கடி வலியுறுத்துகின்றோம். பூண்டு இருதய பாதிப்புகளை வெகுவாக குறைக்கின்றது. 80 சதவீதம் சர்க்கரை நோயாளிகளுக்கு இருதய நோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பூண்டு வைட்டமின் பி6, சி சத்து மிகுந்தது. மாவுச்சத்து வளர்ச்சிதை மாற்றத்துக்கு பி6 அவசியமாகின்றது.

    வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்திக்கும், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதற்கும் உதவுகின்றது. * சளி, ஜலதோசம் இவற்றுக்கு வேகமான நிவாரணம் அளிக்கின்றது. * குடல் கிருமிகளை அழிக்கின்றது. ரத்தம் சுத்தமாகின்றது. ஆக இதனை கூடுதல் அக்கறை கொடுத்து உணவில் சேர்த்துக் கொள்ளலாமே!)

    உடல் எடை குறைவது என்பது அவ்வளவு கஷ்டம் இல்லை. இதெல்லாம் விட்டுவிட்டால் போதும். அவ்வளவே தான்.

    * வறுத்த, பொரித்த உணவுகள் வேண்டாம். இவைதான் உடலின் நடுப்பகுதியில் (பெரிய, அகன்ற வயிறு) கொழுப்பினை கொண்டு வந்து சேர்த்து விடுகின்றது. * இதே தான் கேக், சுவீட்ஸ் இவற்றுக்கும் பொருந்தும். * எண்ணை, வெண்ணை என்று சொல்லக்கூட வேண்டாம். * இரவு உணவு 7 மணிக்குள் இருந்தாலே பாதி வெற்றி

    * அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சும்மாவா சொன்னார்கள். ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அளவு முறை வேண்டும். இனிப்பு பானகங்களை நம் உணவு அகராதியில் இருந்து நீக்கிவிடலாமே. துரித உணவு, பழ ஜூஸ், ஐஸ்க்ரீம் வேண்டாமே. இதெல்லாம் செய்தால் உடல் உடலாகவே இருக்கும். உடல் ஊதி படுத்தாது.

    கொய்யா பழம் என்றால் குறைத்து மதிப்பு போடக் கூடாது. நமக்கு ஒரு பழக்கம். ஏதாவது கொட்டிக் கிடைத்தால், நினைத்த பொழுதெல்லாம் கிடைத்தால் அது அமிர்தமே என்றாலும் அதற்கு மதிப்பு கிடையாது. அப்படி நமக்கு எளிதில் கிடைப்பது தான் வாழைப்பழமும், கொய்யா பழமும். இவைகள் நகர்புறங்களில் அதிக விலையில்தான் கிடைக்கின்றன. ஆயினும் எளிதில் கிடைக்கின்றன. இதில் வாழைப் பழத்தினை கூட போகும் வழியில் வாங்கி சாப்பிட்டுவிட்டு நடு ரோட்டில் தோலை விட்டெறிபவர் உண்டு. ஆனால் கொய்யா பழத்தினை நன்கு அதன் பயனை அறிந்தவர்கள் மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். அநேகர் வீட்டிலேயே மரம் இருந்தாலும் கண்டு கொள்ளமாட்டார்கள். இதன் பலனை இப்பொழுது அறிந்து கொள்ளமாட்டார்கள். இதன் பலனை இப்பொழுது நன்கு அறிந்த பிறகாவது இதனை உணவில் சேர்த்துக் கொள்வோமாக.

    கொய்யா பழம் சத்துக்கள் நிறைந்த பழம். அதிக வைட்டமின் `சி' சத்து நிறைந்தது. மக்னீசயம் சத்து, ப்போலேட் சத்து நிறைந்தது. இதில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தத்தினை சீர் செய்ய உதவுகின்றது. கொய்யாவில் உள்ள வைட்டமின் `சி' சத்து ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமானது. இது நிறைந்த நோய் எதிர்ப்பு சக்தியினை தருகின்றது. சரும பாதுகாப்பு தருகின்றது. வாழைப்பழத்திலும், கொய்யா பழத்திலும் ஒரே அளவு பொட்டாசியம் சத்து உள்ளது.

    கொய்யா ஆரோக்கியமான கண் பார்வைக்கு சிறந்தது. புற்றுநோய் அபாயத்தினை வெகுவாய் குறைக்கின்றது. முழு பழமாக பழுக்காத சற்று காய் தன்மையுடன் உள்ள கொய்யா பழம் எடுத்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது.

    ஆரோக்கியமான இருதயத்திற்கு நல்லது. நல்ல கொலஸ்டிரால் கூடுகின்றது. கெட்ட கொலஸ்டிரால் குறைகின்றது. கூடுதல் நார் சத்து இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. வைட்டமின் `ஏ' சத்து இருப்பதால் கண் பார்வை திறன் சிறந்து இருக்கும். வைட்டமின் பி-9 சத்து இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றது. குழந்தையின் நரம்பு மண்டலத்திற்கு இச்சத்து பெரிதும் உதவுகின்றது. இதில் உள்ள மக்னீசியம் ஸ்ட்ரெஸ் பாதிப்பினை நீக்குகின்றது.

    இதில் உள்ள வைட்டமின் பி3, பி6 மூளைக்கான ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் மூளையின் கூர்மைத்திறனை அதிகரிக்கின்றது. முதுமையை குறைக்கின்றது. இனியாவது கொய்யாவிற்கு மரியாதை கொடுத்து வைட்டமின் `சி' சத்து பற்றி நிறைய படிப்போம், கேட்போம். பொதுவில் சத்தில்லாத உணவு மனச்சோர்வு, அழுத்தமான, மது, புகைபிடித்தல், டயாலிசிஸ் போன்றவை முக்கிய குறைபாடாகின்றன.

    இதன் குறைபாடு வெளிப்படுத்தும் அறிகுறிகளே இதன் முக்கியத்துவத்தினை உணர்த்தும். கொலோ ஜென் எனும் புரதம் உருவாகுவதற்கு வைட்டமின் பி மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. சருமம், முடி, மூட்டு, எலும்பு, ரத்தக் குழாய்கள் இவற்றிற்கு வைட்டமின் `சி' சத்து உதவியால் உருவாக்கப்படும் கொலோஜென் மிக அவசியம்.

    சருமம் வறண்டு, பொலி வற்று இருந்தால் வைட்டமின் `சி' சத்து குறைபாடு உள்ளதா என மருத்துவர் மூலம் அறிய வேண்டும். சிறு, சிறு கட்டிகள் போன்று மேல் கையின் வெளிப் புறம், தொடை, பின்பகுதி இவற்றில் ஏற்பட வைட்டமின் `சி' சத்தும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    முடி அதிகம் சுருண்டு வளையம் போல் செய்து கொள்வது நாகரிக ஸ்டைல் என இளம் வயதினர் சொல்வர். ஆனால் இயற்கையில் அதிகம் முடி சுருண்டு இருப்பது `வைட்டமின் சி' சத்து குறைபாடு ஆகும். இது எளிதிலும் கொட்டிவிடும் என்பதால் கண்டுபிடிப்பதும் சற்று கடினம். சருமத்தில் சிறு, சிறு முடிகள் இருக்கும். அதன் கீழ் மிக மிக சிறிய ரத்த குழாய்களும், ரத்த ஓட்டமும் இருக்கும். வைட்டமின் `சி' சத்து குறைபாடு ஏற்படும் பொழுது இந்த ரத்த குழாய்கள் எளிதில் உடைந்து விடும். வைட்டமின் `சி' சத்து குறைபாட்டினை சரி செய்யும் பொழுது இவை சரியாகி விடும். இந்த ரத்த குழாய்கள் உடையும் பொழுது முடி கால்களை சுற்றி சிகப்பு திட்டு இருக்கும். இதனை வைத்தே குறைபாடு இருப்பதனை மருத்துவர் மூலம் உறுதி செய்து கொண்டு அவர் குறிப்பிடும் அளவில் சத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    நீண்ட, சொறசொறப்பான சருமத்திற்கு மருத்துவர் உங்களுக்கு வைட்டமின் குறைபாட்டினை பரிசோதனை செய்வார். சிறிய அடிகூட சிராய்ப்பு புண் ஆகின்றதா? வைட்டமின் `சி' குறைபாட்டால் தேவையான அளவு கொலோஜென் இல்லாமல் ரத்த குழாய்கள் பலவீனம் ஆகி இருக்கும். இது எளிதில் உடைந்து ரத்த கசிவினை ஏற்படுத்துகின்றது. குழி போன்ற ஸ்பூன் வடிவில் நகங்கள் இருக்கின்றதா? உடைந்த நகத்தின் அடியில் சிகப்பு புள்ளிகள் போன்று இருக்கின்றதா? வைட்டமின் சி குறைபாடு உள்ளதா என மருத்துவர் பதிசோதிப்பார். சரியாவதற்கு கூடுதல் காலம் எடுக்கின்றதா? இது `டி' சத்து குறைபாடு கூடுதலாக இருப்பதனை காட்டும் அறிகுறி. வைட்டமின் `சி' சத்து குறைபாடு எலும்பு கரைதலை கூட்டி விடுகின்றது. இதனால் எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு வரை ஏற்படுகின்றது.

    மூட்டுகளில் வலி, வீக்கம் இவற்றுக்கு வைட்டமின் `டி' சத்து குறைபாடும் முக்கிய காரணம் ஆகின்றது.

    எலும்புகளில் வீக்கம், ரத்த கசிவு, தொய்வு போன்றவை வைட்டமின் `சி' சத்து குறைபாடுகளே. இது மேலும் கூடும் பொழுது பல்கூட விழுந்து விடும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பதற்கு `சி' சத்து குறைபாடு ஒரு முக்கிய காரணம் ஆகும். எப்பொழுதும் இரும்பு சத்து குறைபாடு, ரத்த சோகை இருப்பவர்களுக்கு `சி' சத்து குறைபாடு அதிகமாக இருக்கும். மருத்துவரிடம் இதற்கான சிகிச்சை பெற வேண்டும்.

    வைட்டமின் `சி' செல்கள்பாதிப்பினை தடுக்கின்றது. உடலில் வீக்கங்கள் ஏற்படுவதனை தவிர்க்கின்றது. குறைந்த அளவு `சி' சத்து இருதய பாதிப்புகளை 40 சதவீதம் கூடுதலாகத் தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சத்து குறையும் பொழுது வயிற்று பகுதி கொழுப்பு கூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இத்துடன் உணவு முறையும் `சி' சத்து குறைபாடும் உடல் பருமன், வயிற்று பகுதி கொழுப்பு, சோர்வு, உற்சாகமான மனநிலை இன்மை ஆகியவற்றிற்கு காரணம் ஆகின்றது.

    கொய்யாப்பழம், சிவப்பு குடைமிளகாய், எலந்தை பழம், ஆரஞ்சு, நெல்லிகனி - பொதுவாக பழ வகைகளில் `சி' சத்து நன்கு உள்ளது. அதிலும் கொய்யா பழத்தில் அதிகமாகவே உள்ளது. வானவில் காய்கறிகள், பழங்கள் இவற்றின் மூலம் இச்சத்தினை பெறுவது சிறந்த முறை. மனம் போன படி தானே `சி' சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள கூடாது மருத்துவர் பரிந்துரை தேவை என்பதனை உணர வேண்டும். வைட்டமின் `சி' சத்து தண்ணீரிலும் உள்ளது. உடல் தேவையான அளவு, எடுத்து கொண்டு அதிகமானதை வெளியேற்றி விடும். சத்து மாத்திரை எனும் பொழுது மருத்துவரே அளவினை பரிந்துரைக்க வேண்டும். ஆனால் அதிக அளவினை தானே எடுத்துக் கொள்ளும் பொழுது வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிரட்டல், வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். வைட்டமின் `சி' சத்து குறைவு சீறுநீரக கல் உருவாகவும் காரணமாகி வருகின்றது.

    Next Story
    ×