என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பாசமிகு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு கண்ணதாசன் எழுதிய கையறு நிலைக்கவிதை
- மாபெரும் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை யாரைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை முழுக்க எழுதப் போகிறேன்.
- பட்டுக்கோட்டையில் இருந்து ஒரு இளைஞன் பாட்டெழுத வந்துள்ளார்.
கண்ணதாசன் என்ற பெயர் மிகப்பெரிய ஆளுமையைப் பெற்றிருந்தாலும், அவரைப் பொறுத்தவரையில் மிக மிக எளிமையானவர். இயல்பானவர். பந்தாவோ, படாபடமோ எதுவும் இல்லாதவர். சக கவிஞர்களையும் சமமாகப் பாவித்துப் பழகுகிற பண்பாளர்.
ஆரம்ப காலத்தில் எப்படி அன்போடுப் பேசி பண்போடு பழகினாரோ அப்படியேதான் மிகப்பெரிய உயரத்தை எட்டிப்பிடித்து புகழின் உச்சியில் இருந்த காலத்திலும் இருந்தார். மூத்த கவிஞர்களாக இருந்த உடுமலை நாராயண கவி, கவி. காமு, ஷெரீப், கம்பதாசன். எஸ்.டி.சுந்தரம், கொத்தமங்கலம் சுப்பு, திரிேலாக சீத்தாராம், திருமதி சவுந்தரம் கைலாசம், தஞ்சை ராமய்யாதாஸ், கவிஞர் மருதகாசி, கவிஞர் சுரதா, குமாமா மற்றும் குசாகி ஆகியோரிடம் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார்.
அடுத்த வரிசையில் வளர்ந்து வந்த, கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் மு.மேத்தா, கவிப்பேரரசு வைர முத்து, கங்கை அமரன், மாயவநாதன், குமாரதேவன் என திரைப்படக் கவிஞர்களிடமும் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், கவிஞர் பொன்னடியான், பூவை செங்குட்டுவன், உளுந்தூர்பேட்டை சண்முகம், தஞ்சை வாணன், கவிஞர் நேதாஜி, போன்ற கவிஞர்களிடமும் மிகுந்த பாசத்தோடும், அன்போடும் பழகி வந்தவர் கண்ணதாசன்.
மூத்த கவிஞர் என்ற முறையில் பாவேந்தர் பாரதிதாசனிடமும், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை யாரிடமும் ஒரு குருநாதருக்குரிய மதிப்போடும் மரியாதையோடும், நடந்து பணிவு காட்டியவர் கண்ணதாசன். நான் குறிப்பிட்டிருக்கும் இந்த வரிகளால் என்னுடைய நினைவாற்றலில் ஒருசில கவிஞர்கள் விடுபட்டுப் போயிருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்.
எல்லாம் சரி. ஒரு மிகப்பெரிய சரித்திர சாதனையை குறுகிய காலத்தில் படைத்துச் சென்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை விட்டு விட்டீர்களே என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.
அந்த மாபெரும் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை யாரைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை முழுக்க எழுதப் போகிறேன். அதுவும் கண்ணதாசனும், பட்டுக்கோட்டை யாரும் எப்படி அண்ணன் தம்பிகளாகப் பழகினார்கள். பாசமழை பொழிந்தார்கள். புரிதல் உணர்வோடு ஒருவருக்கொருவர் எப்படி எல்லாம் விட்டுக் கொடுத்து, பரிந்துரை செய்து பாட்டுலகில் கொடி கட்டிப் பறந்தார்கள் என்பதைத் தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
கண்ணதாசன் திரைத்துறையிலே கால்பதித்து 1948 வாக்கிலேயே "கலங்காதிரு மனமே, உன்கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே" என்று கன்னியின் காதலி படத்திற்கு பாட்டு எழுதி விட்டார். அதற்குப் பிறகு சின்னச்சின்ன இடைவெளி ஏற்பட்டு படிப்படியாக எழுதிக் கொண்டிருந்தார். வாய்ப்புகள் குறைவாக வந்து சேர்ந்த கால கட்டம் அது. அந்த நேரத்தில்தான் அதாவது 1555-ம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரை உலகில் காலடி எடுத்து வைக்கிறார். மகேஸ்வரி என்ற படத்திற்கு முதல் பாட்டை எழுதுகிறார். அது பெரிதாகப் பேசப்படவில்லை, என்றாலும் அடுத்த ஆண்டு அதாவது 1956-ம் ஆண்டு "பாசவலை" என்ற படத்திற்கு எழுதிய பாட்டுத்தான் அவரைப் பற்றி திரை உலகையே பேச வைக்கிறது.
"குட்டி ஆடு தப்பி வந்தால்
குள்ள நரிக்குச் சொந்தம்
குள்ள நரி மாட்டிக்கிட்டா
கொறவனுக்குச் சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்...
சட்டப்படி பார்க்கப் போனா
எட்டடிதான் சொந்தம்"
அப்போதெல்லாம் தகவல் தொடர்பு விஞ்ஞானம் வளராத காலம் அது. இருந்தாலும் பட்டுக்கோட்டையில் இருந்து ஒரு இளைஞன் பாட்டெழுத வந்துள்ளார். அவர் புதுமையான கருத்துக்களை எதார்த்த நடையில் எளிமையான எழுதுகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாகப் பரவி, திரை உலகம் முழுக்க போய்ச் சேர்ந்தது.
அப்போது பிரபலமாக விளங்கிய நடிகர் ஒ.ஏ.கே.தேவரும், நகைச்சுவை நடிகரும், நகைச்சுவை வசனங்கள் எழுதுவதில் பிரபலமாக விளங்கிய ஏ.வீரப்பனும் சேர்ந்து பட்டுக்கோட்டையாரை, பிரபல திரைப்பட வசன கர்த்தா ஏ.எல்.நாராயணனிடம் கொண்டு போய் அறிமுகம் செய்து வைத்தனர். "படித்த பெண்" என்ற படத்திற்காக அப்போது எழுதியதுதான்.
தேனாறு பாயுது
செங்கதிரும் சாயுது.... ஆனாலும்
மக்கள் வயிறு காயுது... என்ற பாட்டு.
இந்தப் பாட்டும் அப்போது எல்லோராலும் பேசப்பட்டது. இந்த தகவல்களை எல்லாம் முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள "ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே" என்ற தனது நூலில் அழகாகப் பதிவு செய்துள்ளார்.
"கற்றாரை கற்றாரே காமுலுவர்"- என்ற பொன்மொழிக் கேற்ப திறமையாளர்களைப் பாராட்டத் தவற மாட்டார் கண்ணதாசன். தனக்கு முன்பாகவே திரை உலகில் வந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் கண்ணதாசன் பாட்டுக்களில் மனதைப் பறிகொடுத்திருந்தார் பட்டுக்கோட்டையார் என்பதால், இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும், அவரவர் ஆற்றலை அறிந்து கொண்டும் அண்ணன்-தம்பி போலப் பழக ஆரம்பித்தனர்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசனை விட வயதில் 3 வயது இளையவர். எனவே கண்ணதாசனை மிகுந்த பாசத்துடன் "அண்ணே" என்றுதான் பட்டுக்கோட்டை அழைப்பார். அதே போல "தம்பி" என்றுதான் கண்ணதாசன் அழைப்பார். இருவருக்குமிடையே எழுத்தில் வடிக்க இயலாத பாசம் இழையோடியது என்று சொல்லலாம்.
தாலாட்டு வகையை சார்ந்த இந்த பாட்டை நான் எழுதுவதை விட கண்ணதாசன் அண்ணன் எழுதுவதே பொருத்தமாய் இருக்கும் என்று பட்டுக்கோட்டையார் சொல்ல அப்படி எழுதப்பட்ட பாட்டு தான் பாகப்பிரிவினை படத்தில் வரும், 'ஏன் பிறந்தாய் மகனே.. ஏன் பிறந்தாயோ.. நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே' என்ற புகழ்பெற்ற பாட்டாகும்.
இந்தப் பாட்டு எழுத படுகிற நேரத்தில் சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடு இருந்த காலகட்டம் அது. பாட்டினுடைய மகத்தான வெற்றியால் மீண்டும் சிவாஜியும் கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்களாயினர். இருவரையும் இணைத்த பெருமை பட்டுக்கோட்டையாரையே சாரும்.
பாகப்பிரிவினையில் அடுத்த பாட்டை பட்டுக்கோட்டையாரை வைத்து எழுதிவிடலாம் என்று நினைத்த நேரத்தில் தான் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டது. அதனால் 'தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா' என்ற பாடலையும் கண்ணதாசனே எழுதினார். அந்த பாட்டும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
மூக்கிலே வளர்ந்த ஒரு சதையை நீக்கிட அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது மூளைக்கு செல்கிற ஒரு நரம்பு துண்டிக்கப்பட்டு பட்டுக்கோட்டையார் யாரும் எதிர்பாராத வகையில் மரணம் அடைய நேரிட்டது.
எதிர்பாராத இந்த சோகம் திரை உலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக கண்ணதாசன் தான் நினைந்து நினைந்து கண்ணீர் பெருக்கினார். அவரால் அந்த துயரத்தை, துக்கத்தை தாங்க முடியவில்லை. தன் உடன் பிறந்த சகோதரன் இறந்தது போல் மிகுந்த சோகத்திற்கு உள்ளானார். கல்யாணசுந்தரனே.. கண்ணியனே என்று தலைப்பிட்டு கண்ணதாசன் எழுதிய கவிதையை அப்படியே தருகிறேன்.
சின்ன வயது மகன்
சிரித்த முகம் பெற்ற மகன்
அன்னை குணம் படைத்த
அழகு மகன் சென்றானே
கன்னல் மொழி எங்கே
கருணை விழி தானெங்கே
மன்னர் முடியும் மணிமுடியில்
வாழ்ந்திருந்த செந்தமிழை
தென்னவர் பொருளாக்கி
தங்கவிதை தந்த மகன்
கண்மூடி தூங்குகிறான்
கனவு நிலை காணுகிறான்
விழுது விட வந்த மகன்
விழுந்து விட்டான் சாவினிலே
அழுதால் வருவானா?
அரற்றுவதால் கிடைப்பானா?
ஆறோடி நீரோடி
அழகிழந்த விழிகளெல்லாம்
போராடிக் கொண்டு வரப்
போமோ? அவனுயிரை
தன்னுயிரை தருவதனால்
தங்க மகன் பிழைப்பானா?
என்னுயிரை தருகின்றேன்
எங்கே என் மாக்கவிஞன்
என்று உருகி கரைந்து தன் உயிரையே தருவ தாக எழுதினார் கண்ணதாசன். இதற்கு முன்னால் நிகழ்ந்த எந்த மரணத்திற்கும் இப்படி ஒரு கருத்தை அவர் எழுதியதில்லை. பட்டுக்கோட்டையார் மீது அத்தனை பாசம் கொண்டிருந்தார் என்பதற்கு இக்கவிதை வரிகளே சான்று.
வெற்றிலை வாயிலே
விளையாடும் வேளையிலே
நெற்றியிலே சிந்தை
நிழலோடி நின்றிருக்கும்
கற்றதமிழ் விழியில்
கவியாக வந்திருக்கும்
அண்ணே என உரைத்தால்
அதிலோர் சுவை இருக்கும்
கழுத்தில் தவழ்ந்து வரும்
கைத்தறியின் துண்டெல்லாம்
பழுத்த தமிழ் பாடும்
பண்புரைக்கும்.. வாழ்கவெனும்
வாழும் வயது மகன்
வளர்ந்து வரும் தேன் கவிஞன்
ஆண்டிரண்டு செல்லவில்லை
அன்பு மனை கைபிடித்து
பிஞ்சு முகம் பாராமல்
பேதை குரல் கேளாமல்
நெஞ்சொடிய ஓலமிடும்
நேயர் முகம் காணாமல்
காத்திருக்கும் படவுலகின்
கையணைவை கருதாமல்
நின்றது போல் நின்று
நெடுந்தூரம் பறந்து விட்டான்
என்று கவிதையில் புலம்புகிறார் கண்ணதாசன்.
"ஆரம்பமாவது பெண்ணுக்குள்
ஆடி அடங்குவது மண்ணுக்குள் என்றானே"
தங்க மகன் போன பின்னர்
தமிழுக்கு கதியிலையே
வெங்கொடுமைச் சாக்காடே
விழுங்குவதற் கேற்ற பொருள்
மங்காத செங்குறுதி
மகனென்றோ... எண்ணமிட்டாயா?
கல்யாணசுந்தரனே
கண்ணியனே ஓர் பொழுதும்
பொல்லாத காரியங்கள்
புரியாத பண்பினனே
சாவது இயற்கை தான்
சாவதற்கும் நீதி உண்டு
நீதியிலாச் சாவுஉனை
நெருங்கி விட்டது என்றாலும்
வாழும் தமிழ்நாடும்
வளர் தமிழும் கலைஞர்களும்
வாழ்கின்ற காலம் வரை
வாழ்ந்து வரும் நின் பெயரே.... என்று கவிதையை கனத்த நெஞ்சோடு நிறைவு செய்கிறார் கண்ணதாசன். இந்தக் கவிதையை தனது "தென்றல்" இதழில் வெளியிட்டார் கண்ணதாசன். இக்கவிதையைத் தொடர்ந்து ஒரு கட்டுரையையும் எழுதி வெளியிட்டார் கண்ணதாசன். இறந்தவர்கள் அனைவரையும் எளிதாக மறந்து விடும் நாடு இது.
ஆனால் என் ஆயுள் காலம் முழுவதும் மறக்க முடியாத பெயர் உன் பெயர்தான். இப்போது என் உடம்பில் ஓடிக் கொண்டிருப்பது உன் உயிர்தான். என் வரையில் நீ சாகவில்லை. என் சாவிலேதான் உன் சாவடங்கும் என்று மனமுருகி எழுதி கட்டுரையை நிறைவு செய்கிறார் கண்ணதாசன். அடடா பட்டுக்கோட்டையாார் மீது கண்ணதாசன் கொண்டிருந்த பாசம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
அடுத்த வாரம் சந்திப்போம்.






