என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  கடன் அடைக்க உதவுபவர் யார்?
  X

  கடன் அடைக்க உதவுபவர் யார்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் மீள முடியாத பல சூழ்நிலைகளை கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
  • சிறிய கடன் பிரச்சினைக்காக அவமானத்தால் உயிரை துட்சமாக மாய்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

  மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் மீள முடியாத பல சூழ்நிலைகளை கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் தீராத, தீர்க்க முடியாமல் அனுபவிக்கும் அவஸ்தைகளில் ஒன்று கடன் பிரச்சினை என்றால் அது மிகையாகாது. இந்தியாவிற்கே கடன் இருக்கு எனக்கு கடன் இருப்பது ஒரு பெரிய விசயமா? என்று எதார்த்தமாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

  சிறிய கடன் பிரச்சினைக்காக அவமானத்தால் உயிரை துட்சமாக மாய்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

  சாதாரண மனிதர்கள் முதல் வசதியானவர்கள் வரை அவரவரின் சக்திக்கு ஏற்ப கடன் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது.எந்த விதத்தில் பார்த்தாலும் கடன் என்பது ஒரு நரக வேதனை என்பது அதை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.

  இது ஒரு புறம் இருக்க எப்படியாவது கடனை அடைத்து நிம்மதி பெருமூச்சு விட வேண்டும். யாராவது நமக்கு உதவ மாட்டார்களா என்பது பலரின் ஆதங்கம். ஆரம்பம் என்ற ஒன்று இருந்தால் அதற்கு முடிவும் உண்டு.

  மனிதர்களின் பிரார்த்தனைகளை நிறைவு செய்ய கடவுள் மனித ரூபத்தில் வருவார் என்கிறது சாஸ்திரம். இந்த கட்டுரையில் ஒருவருக்கு எப்படி கடன் பிரச்சனை உருவாகும். அதை தீர்க்க உதவுபவர் யார் என்று பார்க்கலாம்.

  ருணம், ரோகம், சத்ரு ஸ்தானம்

  ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணித்து பலன் சொல்லும் போது லக்னம் என்ற முக்கிய புள்ளியை வைத்தே பலன் சொல்லப்படுகிறது. லக்னத்திற்கு ஆறாமிடம் என்பது ருண ரோக சத்ரு ஸ்தானம். ருணம் என்றால் கடன், ரோகம் என்றால் நோய், சத்ரு என்றால் எதிரியாகும்.

  ஒருவரின் ஜனன ஜாதகம் எப்படி அமைகிறதோ அதன்படி தான் கடன் வாழ்க்கை, கடன் படாத வாழ்க்கை அமைகிறது. ஒருவரின் ஆறாம் அதிபதியோ, ஆறில் நின்ற கிரகமோ அல்லது ஆறாம் அதிபதியின் நட்சத்திரங்களில் நின்ற கிரகங்களுமே ருண ரோக சத்ரு ஸ்தானத்தை இயக்குபவர்கள். ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலிருந்து 3,6,8,12 ஆகிய 4 பாவகங்களும் " துர் ஸ்தானங்கள்" அல்லது "மறைவு ஸ்தாதானங்கள்" ஆகும் . ஒருவர் கர்ம வினைப் படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களை பரிபூரணமாக தருவது இந்த மறைவு ஸ்தானங்களே. இந்த மறைவு ஸ்தானங்கள் ஆட்சி, உச்சம் பெறாமல், கேந்திர, திரிகோணம் பெறாமல் வலு குன்றினால் விபரீத ராஜ யோகம் எனப்படும் திடீர் அதிர்ஷ்டம், புதையல் ஏற்படும். இவர்கள் அடுத்தவர் பொருளை அனுபவிக்கும் யோகம் பெற்றவர்கள். எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? என்று ஜாதகருக்கே புரியாத வகையில் கதவை தட்டி கொட்டும்.

  மறைவு ஸ்தானங்கள் வலுபெற்றவர்களுக்கு நோயும் கடனும் கதவை தட்டி வரும்.மறைவு ஸ்தானங்கள் வலிமை பெற்ற ஜாதகருக்கு நித்திய கண்டம் பூர்ண ஆயுள். இவர்கள் கடன், நோய் அல்லது எதிரி தொல்லை, மன உளைச்சல் இவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.ஆக ருண, ரோக, சத்ரு தொல்லை பணம் என்ற காகி தத்திடம் இருந்து தான் பிள்ளையார் சுழி போடுகிறது.

  ஜோதிட ரீதியாக கடன் ஏற்படக் காரணங்கள்.

  குடும்ப கடன்

  1, 2, 6-ம் பாவகங்கள் ஒன்றோடொன்று இணைவு பெறும் போது ஜாதகரின் நடவடிக்கையாலும், குடும்பத்தின் அத்தியாவசிய தேவைக்காகவும் நோயினாலும் கடன் ஏற்படுகிறது.

  1,3,6,8,12-ம் பாவக இணைவால் போலீஸ், கோர்ட், கேஸ், கட்டப்பஞ்சாயத்து, நஷ்டம் அவமானமும், தற்கொலை எண்ணம், சிறை தண்டனையும் உண்டாகும் இவர்களில் பெரும்பான்மையானோர், ஷேர், சீட்டு, ரேஸ், தவறான நடவடிக்கைகள் மூலம் பணத்தை தொலைத்து கடனாளியானவர்கள்.

  6, 7-ம் பாவக இணைவால் தொழில் கூட்டாளியாலும், களத்திரத்தின் மூலமும் கடன் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு 6, 7-ம் பாவகம் தொடர்பு இருக்கக் கூடாது.

  6, 7, 8-ம் பாவக தொடர்பு பெற்ற தம்பதியினர் மற்றும் தொழில் கூட்டாளிகள், போலீஸ் கோர்ட், கேஸ், விவாகரத்து என்று அலைந்தே பாதி வாழ் நாளை தொலைத்து எஞ்சிய வாழ்நாளில் விரக்தியின் உச்ச கட்டத்திற்கு சென்று தவறான முடிவு எடுக்கிறார்கள். பல சந்தர்பங்களில் கணவனால், மனைவியும், மனைவியால் கணவனும் கடன் தொல்லையால் பிரிகிறார்கள். 5,6,9-ம் பாவக இணைவால் பூர்வீக சொத்தைக் காப்பாற்ற கடன், பூர்வீகச் சொத்து வழக்கு, தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மூலமும் உருவாகும்.

  தொழில் கடன்

  6, 10-ம் பாவக இணைவால் தொழில் இழப்பு, தொழில் நட்டமும் ஏற்படுகிறது. இத்துடன் சூரியன், சுக்கிரன் இணைவு பெற்றவர்கள் தொழில் நிர்வாகத்திற்கும், ஆடம்பரத்திற்கும் செலவு செய்தே கடனாளியாகிறார்கள். 6,7,10-ம் பாவகம் தொடர்பு பெற்றவர்கள் கூட்டுத் தொழிலால் கடனாளியாகிறார்கள்.

  நம்பிக்கைத் துரோக கடன்

  3, 11-ம் பாவகம் 6-ம் பாவகத்தோடு இணைவு பெறும் போது உடன் பிறந்த சகோதர, சகோதரிகளாலும், இளைய மனைவியாலும், காதலர்கள் அதீத அன்பால் ஒருவர் பிரச்சினையை அடுத்தவர் சுமப்பது போன்றவைகளாலும் ஏற்படுகிறது.

  6-ம், 6-ம் இணைவு பெற்றால் பரிவு மிகுதியால் ஜாமின் போட்டு கடனையும் சத்ருவையும் உருவாக்கி வட்டிக்கு வட்டிகட்டி சொல்ல முடியாத துயரம் ஏற்படும்.

  சுப கடன்

  4 மற்றும் 6-ம் பாவக இணைவால் வீடு, வாகனம் , நிலம், விவசாயம் , தாய் மற்றும் தாய் வழி உறவினர் மூலமும் கடன் உருவாகும். சுகஸ்தானத்தில் கோச்சார அஷ்டமாதிபதி அல்லது பாதகாதிபதி பயணம் செய்யும் போது நகை அடமானத்திற்கு சென்று விடுகிறது.

  5, 6-ம் பாவகம் இணைவால் குழந்தைகளின் கல்வி, திருமணம், நோயினால் கடன் ஏற்படும்.

  பேராசை கடன்

  6-ம் அதிபதி 11-ம் அதிபதியுடன் சம்மந்தப்பட்டால் மூத்த சகோதரிகளால் நஷ்டம், கடன் உருவாகும். சிலர் பேராசை மிகுதியால் உத்தியோகத்தில் இருக்கும் காலத்தில் லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டி வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். அல்லது சேர்மார்க்கெட், சூதாட்டத்தால் கடன்படுகிறார்கள்.

  சிலர் ஆடம்பரச் செலவினால் கடனை விலை கொடுத்து வாங்குகிறார்கள். சிலர் இளைய தாரம் எனும் வைப்பாட்டி கொடுமையால் உடம்பில் உயிரைத் தவிர மீதி அனைத்தையும் கடனுக்காக இழக்கிறார்கள். தங்களுடைய வரவிற்கு அதிகமாக கடன் வாங்கிய பலர் கடன் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் பணக்காரனாக வாழ முடியாவிட்டாலும் பரவாயில்லை கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்ற மன நிலைக்கு வந்து விடுகிறார்கள்.

  6-ம் அதிபதியுடன் புதன், குரு, ராகு, கேதுக்கள் இணைவு பெறும் போதும் தசா நடக்கும் போதும் 80 சதவீதம் பேர் தங்களின் தகுதிக்கு மீறிய கடனை சுமக்கிறார்கள். புதனுடன் தொடர்புடைய கடனானது வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையையும், குருவுடன் தொடர்புடைய கடனானது கந்து வட்டியிலும் சிக்க வைக்கிறது.

  ஜனன கால ஜாதகத்தில் குரு, ராகு கேதுவுடன் உள்ள தொடர்பே கடன் ஏற்படும் காலத்தையும் நிவாரணம் ஏற்படும் காலத்தையும் உணர்த்தும்.

  கடன் அடைக்க உதவுபவர் யார்?

  ஒருவரின் சுய ஜாதக ரீதியாக 5-ம் இடத்துடன் சம்பந்தம் பெற்ற கிரக காரக உறவே ஒருவரை கடனில் இருந்து மீட்கும் வலிமை படைத்தவர்.

  சூரியன்

  5-ம் இடத்துடன் சூரியன் சம்பந்தம் பெற்றவர்களுக்கு தந்தை, மாமனார், அரசியல்வாதிகள் அல்லது சூரியனின் ஆதிக்கம் நிறைந்த பெயர் கொண்டவர்கள், சிவனின் பெயர் கொண்டவர்கள் மூலம் கடனை தீர்க்க உதவி கிடைக்கும்.

  சந்திரன்

  5-ம் இடத்திற்கு சந்திரன் சம்பந்தம் பெற்றவர்களுக்கு தாயார், மாமியார் அல்லது வயதான உறவுப் பெண்கள், சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த பெயர்கள் கொண்டவர்கள், அம்மன் பெயர் கொண்டவர்கள் கடன் தீர்க்க உதவுவார்கள்.

  செவ்வாய்

  5-ம் இடத்திற்கு செவ்வாய் சம்பந்தம் இருந்தால் உடன் பிறந்த சகோதர, சகோதரிகள், மைத்துனர்கள், முருகனின் பெயர் கொண்டவர்கள் உதவி செய்வார்கள். சிலருக்கு வீடு, நிலம் போன்ற சொத்துகளை விற்பதன் மூலம் கடன் அடையும்.

  புதன்

  5-ம் இடத்திற்கு புதன் சம்பந்தம் பெற்றால் தாய் மாமன், நண்பர்கள், காதலன், காதலி, மகா விஷ்ணுவின் பெயரில் உள்ளவர்கள், வங்கி கடன், நிலம் விற்பனை மூலம் கடன் தீரும்.

  குரு

  5-ம் இடத்திற்கு குரு சம்பந்தம் பெற்றால் பிள்ளைகள், பாட்டனார் சித்தர்களின் பெயரை கொண்டவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

  சுக்ரன்

  5-ம் இடத்திற்கு சுக்ரன் சம்பந்தம் இருந்தால் அத்தை, பெரியம்மா, மனைவி, மகாலட்சுமியின் பெயர் உள்ளவர்கள் மூலம் கடன் தீரும்.

  சனி

  5-ம் இடத்திற்கு சனி சம்பந்தம் பெற்றால் ரத்த பந்த உறவுகளான சித்தப்பா, பங்காளிகள், சின்ன மாமனார், வேலையாட்கள் , நம்பிக்கையான விசுவாசிகள், காவல் தெய்வத்தின் பெயரைக் கொண்டவர்கள் மூலம் உதவி கிடைக்கும். பலர் சுயமாக உழைத்து கடன் தீர்க்கிறார்கள்

  ராகு/கேது

  5-ம் இடத்துடன் ராகு/கேது சம்பந்தம் பெறுபவர்கள் குல தெய்வ வழிபாட்டால் கடனில் இருந்து விடுபட முடியும். மேலே குறிப்பிட்டது போல் 6-ம் பாவக அதிபதியோடு தொடர்பு பெறும் கிரகம் கடனையும், 5-ம் பாவகத்தோடு தொடர்பு பெறும் கிரகம் கடனிலிருந்து விடுபடும் காலத்தையும் உணர்த்தும்.

  கடன் வாங்கும் முன்பே சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் , ருண ஸ்தானம் , பாக்கிய ஸ்தானம், அஷ்டம ஸ்தானங்களையும் தசா, புத்திகளை ஆய்வு செய்து கடன் வாங்குவதை முடிவு செய்தல் சிறப்பு. எவர் ருணம், ரோக சத்ரு ஸ்தானத்தை பரிபூரணமாக அனுபவித்து அவதியுறுகிறார்களோ அவர்களுக்கு தான் ஞானம் பிறக்கும். ஞானம் பிறந்தவன் தான் முக்திக்கு வழி தேடுகிறான்.

  சென்ற பிறவியில் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

  Next Story
  ×