என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சர்வமும் சக்தி மயம்- பெருவாழ்வு அளிக்கும் லலிதாம்பிகை
- ஸ்ரீ தேவி மகாத்மியத்தில், கவச தோத்திரம் என்றொரு பகுதி உண்டு.
- தேவர்களின் யாகத்தில் அம்பிகை தோன்றினாள். யாக குண்ட சம்பூதா. அதுகூட, எத்தகைய யாக குண்டம் தெரியுமா? சிதக்னி குண்டம்.
ஸ்ரீ தேவி மகாத்மியத்தில், கவச தோத்திரம் என்றொரு பகுதி உண்டு. சஷ்டி கவசம் போல், குரு கவசம் போல், ஒவ்வொரு உடல் பாகத்தையும் மனத்தையும் பாதுகாப்பதற்கான தோத்திரம். இந்தக் கவச தோத்திரத்தில் இப்படியொரு வரி: அகங்காரம் மனோ புத்தி ரஷேன்மமே தர்மதாரிணீ - என்னுடைய அகங்காரத்தையும் மனத்தையும் புத்தியையும் தர்மதாரிணீ தேவியானவள் காக்கட்டும்! இவ்வாறு நம்மைப் பாதுகாப்பதற்காக அம்பிகை ஏற்றுக்கொண்ட திருவடிவமே, லலிதாம்பிகை வடிவம்.
தியானத்தில் அமர்ந்திருந்த சிவப்பரம்பொருளிடம் நெருங்கினான் மன்மதன். நெற்றிக் கண்ணால் அவனைச் சுட்டுப் பொசுக்கினார். சாம்பலாகி வீழ்ந்தான். அவனுடைய சகதர்மிணியான ரதிதேவியும் அழுதுகொண்டே தவம் செய்யப் போனாள்.
சாம்பல் குவியல் திருக்கைலாயத்தின் வாயிலில் கொட்டிக் கிடந்தது. சிவபூத கணங்களில் சித்ரகாமன் என்றொரு இளைஞன். சாம்பல் குவியல் அருகில் சென்று, விளையாட்டுத்தனமாகப் பார்த்தான்; அதே விளையாட்டுத் தனத்தில், சாம்பல் குவியலை நீர் விட்டுப் பிசைந்து உருட்டினான். அப்படியே பிசைந்து பிசைந்து உருவம் ஒன்றைச் செய்துவிட்டான். முகம், கண்கள், கை கால்கள் எல்லாம் இருந்த அந்த பொம்மையைக் கொண்டுபோய் சிவனாரிடம் காட்டினான். அருள்பார்வையை அதன்மீது பரம்பொருள் செலுத்த, அந்த பொம்மை உயிர் பெற்றது. பொம்மை உயிர் பெற்றதைக் கண்டு பூதகணங்கள் வியந்து நிற்க, அப்போது அங்கே வந்த பிரம்மாவும் இன்னும் சிலரும், 'நல்லது நல்லது' என்னும் சுபச் சொற்களைப் பேசினர். 'பண்ட, பண்ட' (பண்ட=நல்ல) என்னும் சுபச் சொற்களை வைத்து, 'பண்டன்' என்னும் பெயரே அவனுக்கு ஏற்பட்டது; அதுவே நிலைத்தது. சித்ரகாமனின் மகனாகவே வளர்க்கப்பட்ட பண்டன், சத ருத்ரீய மந்திரங்களையெல்லாம் கற்றான். தவமும் செய்தான்.
தன்னை எதிர்க்கும் எதிரியின் பலம் பாதியாகக் குறைந்து, அதுவும் தன்னையே வந்து சேரும் என்றொரு வரம்; யாருடைய ஆயுதத்தாலும் தனக்கு எவ்விதத் தீங்கும் நேரக் கூடாதென்றொரு வரம்; அறுபது ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி நடத்தும் அதிகாரம் – இத்தனையையும் பெற்றுக் கொண்டான்.
கையில் பலம் வந்துவிட்டால், அடுத்தென்ன? அட்டகாசம்தானே! அசுர பலமும் பெற்று அசுரத்தனத்தோடு அடுத்தவர்களைத் துன்பப்படுத்தி அட்டகாசம் செய்த அவனை, இப்போது எல்லோரும் 'பண்டாசுரன்' என்றழைக்கத் தொடங்கினார்கள்.
அசுரகுருவான சுக்கிராசார்யாருக்குப் பரம சந்தோஷம். பலவேறு மந்திரங்களையும் மாயாஜாலங்களையும் அவனுக்குப் பயிற்றுவித்து ஆசீர்வதித்தார். எல்லாமாகச் சேர்த்து, தன்னுடைய இடது தோளில் இருந்து விசுக்ரன் என்னும் அசுரனையும் வலது தோளில் இருந்து விஷங்கன் என்னும் அசுரனையும் தோற்றுவித்த பண்டன், தூமினி என்னும் பெண்ணையும் தன்னுடைய எண்ணங்களிலிருந்து உருவாக்கினான். இவர்களே அவனுக்குச் சகோதரர்களும் சகோதரியும் ஆனார்கள்.
அதெல்லாம் சரி, அறுபதாயிரம் ஆண்டுகள் எங்கே ஆட்சி நடத்துவது? தேவலோகமும் மற்றைய பிரதேசங்களும் அவனுக்குத் துச்சமாகத் தெரிந்தன. சுக்கிரரிடமே ஆலோசனை கேட்டான். விடுவாரா? மயனை வரவழைத்து புதிய பட்டணத்தை நிர்மானிக்கச் சொன்னார். முன்னர் எந்த இடத்தில் அசுர சாம்ராஜ்ஜியம் செழித்திருந்ததோ, அந்த இடத்திலேயே 'சோணித புரம்' என்னும் ராஜ்ஜியத்தை மயன் உருவாக்கினான். இந்திரனின் அமராவதியைக் காட்டிலும் அழகானதாகவும், குபேரனின் அழகாபுரியைக் காட்டிலும் வளம் நிறைந்ததாகவும் பண்டாசுரனுக்கென்று தலைநகரம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த நகரத்திற்குச் 'சூன்யகப் பட்டணம்' என்றும் பெயர் சூட்டப்பட்டது.
சிம்மாசனத்தில் அமர்ந்தான். கிரீடம் சூடிக் கொண்டான். அதீதமான பலம். இப்படிப்பட்ட நிலையில், ஆட்சி மட்டும் திருப்தி தந்துவிடுமா என்ன? அடுத்தவர்களை ஆட்டிப் படைப்பதுதானே அசுரகுணம். ஆரம்பித்தான் அட்டகாசத்தை!
விசுக்ரனையும் விஷங்கனையும் இளவரசர்கள் ஆக்கினான். சம்மோஹினி, சித்ராங்கி, சுந்தரி, குமுதினி ஆகிய நான்கு அழகிகளை மணந்தான். தேவர்களை வெற்றிகொண்டு அடிமைகள் ஆக்கிக்கொண்டான்.
நாளாக நாளாக அவனுடைய அமர்க்களம் அதிகமானது. தேவர்களைத் தலைதூக்க விடக் கூட்டாது என்பதில் கவனமாக இருந்தான். நேரடியாகப் போர் செய்யாமல், காற்று வடிவில் அவர்களின் வடிவங்களுக்குள் புகுந்தான். அவர்களின் ஆற்றலையும் ஜீவசக்தியையும் உறிஞ்சிக்கொண்டான். நாளடைவில், தேவர்களும் மனிதர்களும் முனிவர்களும் நடைபிணங்கள் ஆகினர்.
பண்டனுடைய படைகள், தேவலோகத்தை வற்றச் செய்தன. விசுக்ரன் பூலோகத்தில் இதேபோல் செய்தான். விஷங்கன், பாதாளத்தை ஒரு கை பார்த்தான். ஆக, அனைத்து உலகங்களும், அண்டங்களும் வளம் குன்றி வாடின.
நல்ல உணர்வுகளான மகிழ்ச்சி, உற்சாகம், கருணை, இரக்கம், அன்பு, பொறுமை, தருமம், பெருமை, வளர்ச்சி, நலம் போன்றவை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயின. மொத்தத்தில், எங்கு பார்த்தாலும், அகங்காரம், ஆணவம், அட்டகாசம், பொறாமை, மதம் அவ்வளவே!
இந்த நிலையில்தான், பிரம்மாவும் தேவர்களும் திருமாலை நாட, அவரோ, அம்பிகையைத் தவிர யாரும் காப்பாற்றமுடியாது என்னும் உண்மையை விளக்கினார்.
அனைவரின் வேண்டுகோளும் செவிகளில் நுழைந்ததுதான் தாமதம், அம்பிகை தனது அருளைப் புகுத்தினாள்.
தேவர்கள் யாகம் செய்தார்கள். யாக யஜமானராகச் சிவபெருமானே அமர்ந்தார். எனினும், பண்டாசுரன் யாகத்தைத் தடை செய்ய முனைந்தான். என்ன செய்வது என்று சிந்தித்த தேவர்கள், தத்தமது உடல்களை, எந்த உடல் இளமையும் அழகும் பெருமையும் கொண்டது என்று இத்தனை காலம் எண்ணினார்களோ, அந்தந்த உடல்களையே யாகத்தில் ஆகுதி ஆக்கினார்கள். உடலற்றவர்களாக மாறினார்கள். யாகம் தொடர்ந்தது. ஆயினும், அன்னை ஆவிர்பவிக்கவில்லை.
சிவப்பரம்பொருள் புன்னகைத்தார். தேவேந்திரனுக்குப் புரிந்தது. உடல்கள் போனாலும், உருவமில்லாமல் பரவிக் கிடக்கும் ஆணவம், அகங்காரம், மமகாரம், கர்வம் போன்றவை போகவேண்டுமே… அவற்றையெல்லாமும் யாக நெருப்பில் போட்டு, பரிபூரண காணிக்கைகள் ஆக்கி, பரிபூரண சரணாகதிக்கு ஆட்பட்டான். தேவர்கள் அனைவரும் இவ்வாறே செய்தார்கள்.
அவ்வளவுதான், அம்பாள் ஆவிர்பவித்துவிட்டாள். லலிதாம்பிகையாக வெளிப்பட்டாள். யாகத்தின் அக்னிப் பிழம்பிலிருந்து, பேரொளிப் பிரகாசமான வடிவம் ஒன்று, பேரழகில், மங்கை ரூபத்தில், ஸ்ரீ சக்கர ராஜ பீட நாயகியாக வெளிப்பட்டது. இப்பேரழகியே ஸ்ரீ மாதா, ஸ்ரீ மகா ராணி, ஸ்ரீ மகா சிம்மாசனேஸ்வர். பண்டாசுரனை அழிப்பதற்காக லலிதாம்பிகை ஆவிர்பவித்தாள் என்னும் இக்கதை, ஏதோ போகிறபோக்கில் தெரிந்து கொள்கிற கதையன்று. இது நம்முடைய கதை. பண்டாசுரன் என்னும் பெயரே வித்தியாசமானது. பண்டனாகத் தோன்றியவன், அசுரன் ஆனான், தோன்றும்போது நாமெல்லோருமே நல்லவர்களாகத்தான் இருக்கிறோம், அல்லது இருக்கக் கருதுகிறோம். ஆனால், பின்னர் என்ன நடக்கிறது? பலமும் வல்லமையும் பணமும் அதிகாரமும் கிடைத்தவுடன், நல்லவன் எப்படி அசுரத்தனம் செய்யத் தொடங்கினானோ, அப்படியே நம்மில் பலரும் செய்கிறோம். அசுரத்தனம் அங்கேதான் ஆரம்பமாகிறது.
சரி, பண்டன் எங்கேயிருந்து தோன்றினான்? மன்மதனின் சாம்பலில் இருந்து! மன் மதன் என்பவன் யார்? நம்முடைய மனத்தின் அடையாளம். இப்படியும் அப்படியுமாக ஆசைப்பட்டு ஆட்டம் போடும் மனத்தின் அடையாளம். மனத்தை முறையாகக் கட்டுப்படுத்தாமல் ஆட்டம் போடவிட்டால், கனலாகக் கனன்று பொசுங்கிப் போகும். கடைசியில் சாம்பல்தான் மிஞ்சும். அந்தச் சாம்பலும் எசகுபிசகாகப் பிதுங்கி வழிந்து பண்டனாகத் தோற்றமெடுக்கும். கட்டுப்படுத்தப்படாத, தேய்மானம் மிக்க மனத்திடம் ஆணவமும் அதிகாரமும் பணமும் பொருளும் சேர்ந்துகொண்டால், என்ன ஆகும்? அவ்வளவுதான், அசுரத்தனத்தின் தலைவிரித்தாட்டத்தை சொல்லவே முடியாது.
தேவர்களின் யாகத்தில் அம்பிகை தோன்றினாள். யாக குண்ட சம்பூதா. அதுகூட, எத்தகைய யாக குண்டம் தெரியுமா? சிதக்னி குண்டம். அதாவது, அறிவு என்னும் அக்னி குண்டம். அறிவினாலும் ஞானத்தாலும் இறைமையின் ஒளியை உணர்ந்தால், அப்படிப்பட்டவர்களே தேவர்கள். தேவர்களின் யாகத்தில் முதலில் வராத அம்பாள், எல்லாவற்றையும், ஆணவம், வக்கிரம், பொறாமை உள்ளிட்ட தீமைகள் அத்தனையையும் நெருப்பில் இட்டவுடன் வடிவெடுத்து வந்தாள். தேவர்கள் என்பவர்கள் யாரோ தனி உலகப் பிறப்புகள் அல்லர். தீமைகள் இன்றி நன்மைகளைக் கொண்ட உயிர்களே, தேவத்தன்மை பொருந்தியவர்கள். தேவர்கள் என்றால் பிரகாசிப்பவர்கள் என்று பொருள். நன்மை கொண்டவர்களாக இருப்பவர்களை, 'பார்க்கும்போதே பிரகாசமாக இருக்கிறார்கள்' என்று சிலாகிக்கிறோமா, இல்லையா? நல்லவர்களின் அறிவு யாகத்தில் அம்பாள் ஆவிர்பவிப்பாள்.
தொடர்புக்கு - sesh2525@gmail.com






