என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மகளிர் நலனில் சித்த மருத்துவம்- மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வும் தடுப்பு முறையும்
- உலக அளவில் அதிக பாதிப்பை உண்டாக்கும் முதல் மூன்று இடங்களை பிடிக்கின்ற புற்றுநோய் வகைகளில் இந்த மார்பகப் புற்றுநோயும் ஒன்று.
- பெண்களுக்கு உண்டாகும் மேற்கூறிய புற்றுநோய் வகைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்த மார்பகப் புற்றுநோய் தான்.
45-வயதினை கடந்த பெண்கள் பொதுவான முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும் சமயத்தில், எதிர்பாராத விதமாக மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படுவது என்பது தற்போது சாதாரணமாகிவிட்டது. ஆரோக்கியத்தில் அக்கறைகொண்டுள்ள பெண்கள் பலரும் கூட இந்த மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே அதற்கு முதன்மைக் காரணம். இன்றைய நாட்களில் பெண்கள் எதிர்நோக்கும் மிகப்பெரிய ஆரோக்கிய சவாலும் இந்த மார்பகப் புற்றுநோய் தான்.
உலக அளவில் அதிக பாதிப்பை உண்டாக்கும் முதல் மூன்று இடங்களை பிடிக்கின்ற புற்றுநோய் வகைகளில் இந்த மார்பகப் புற்றுநோயும் ஒன்று. பெண்களில் புற்றுநோயானது பெரும்பாலும் மார்பகம், கருப்பை வாய்ப்பகுதி, சினைப்பை ஆகிய பகுதிகளில் ஏற்படுகிறது. பெண்களுக்கு உண்டாகும் மேற்கூறிய புற்றுநோய் வகைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்த மார்பகப் புற்றுநோய் தான்.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 20 லட்சம் பெண்களுக்கு புதிதாக மார்பகப் புற்றுநோய் உள்ளதாக கணிக்கப்படுவது என்பது வருத்தமளிக்கிறது. இத்தகைய பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்கள் பெண்களை மட்டுமின்றி, ஒட்டுமொத்த குடும்பத்தையும், சமுதாயத்தையும் பாதிக்க செய்கிறது.
'உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்குமா, உங்க வீட்ல யாருக்காவது இருந்ததா?' என்று மருத்துவரின் கேள்விக்கு 'இல்லை' என்று பதில் தரும் பெண்கள் பலர், எனக்கு ஏன் இந்த புற்றுநோய் வந்தது? என்று விடை கிடைக்காத வினாவை எண்ணி மனம் உடைகின்றனர்.
ஜெனிடிக் காரணி என்று மரபணு மூலமாக அடுத்த தலைமுறைக்கு தொடரும் நோய்களுள் புற்றுநோயும் ஒன்று. ஆனால் நவீன வாழ்வியலை பின்பற்றும் பல நாடுகளில் இந்த ஜெனிடிக் காரணி இல்லாமலே புற்றுநோய் ஏற்படுவது என்பது வருத்தம் தரும் நிகழ்வாகிவிட்டது.
சமீபத்திய ஆய்வுகளின்படி, அனைத்து புற்றுநோய் வகைகளிலும் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் புற்றுநோய்கள் வரை மட்டுமே பரம்பரை மரபணு மாற்றத்துடன் தொடர்புடையது. அப்போது மீதமுள்ள 90 சதவீதம் புற்றுநோய்களுக்கு காரணியாக அமைவது உணவு முறை தான் என்றால் பலருக்கும் அச்சம் தான் வரும்.
நாம் உண்ணும் உணவில் அதிகப்படியான இறைச்சி உணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும், குறைந்து போன தாவர உணவு வகைகளும், மது, புகை போன்ற பழக்க வழக்கங்களும், மறந்து போன பாரம்பரிய உணவு வகைகளும் காரணம் என்கின்றன சில ஆய்வுத்தரவுகள்.
அசைவ உணவுகளை 175 டிகிரி வெப்பநிலைக்கு மேல் சமைத்து உணவாக்கும் போது அதில் ஹெட்டிரோசைக்ளிக் அமைன் எனும் வேதிப்பொருள் உற்பத்தியாகிறது. இது புற்றுநோய்க்கு காரணியாக அமைவதை நவீன அறிவியல் எச்சரிக்கை செய்கின்றது. நம் பாரம்பரிய உணவிலோ பக்குவமாய், புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் இஞ்சியும்,மஞ்சளும் சேர்த்து இறைச்சிகளை உணவாக்கி பரிமாறும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்றைய ஆடம்பர வாழ்வியலில் துரித உணவாக இறைச்சிகளை நெருப்பில் வாட்டி உணவாக்குவது நோய்களை தீர்ப்பதற்கு மாறாக நோய்களை வரவழைக்கும்.
நவீன வாழ்வியலில் பெண்கள் மது அருந்துவதும், புகை பிடித்தலும் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாகின்றது. மது அருந்துவதால் கல்லீரல் தானே கெடும் அதை சரிசெய்து கொள்ளமுடியும் என்ற தவறான கணிப்பு புற்றுநோயை வீட்டு வாசலில் கொண்டு வந்து சேர்க்கும். ஆல்கஹால் எனும் மதுவை உட்கொள்ளும் போது, நம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தின் விளைவாக ஆல்டிஹைட் எனும் வேதிப்பொருள் உருவாகும். இந்த வேதிப்பொருள் மார்பக புற்றுநோய்க்கு மட்டுமல்லாது பல்வேறு புற்றுநோய்க்கும் காரணமாக அமைகிறது.
புற்றுநோய்க்கு மிக முக்கிய மற்றொரு காரணி புகையிலை. அதில் உள்ள 'நிகோடின்' எனும் வேதிப்பொருள் மார்பகப் புற்றுநோய் மட்டுமல்லாது பல்வேறு புற்றுநோய்க்கும் பாதை அமைத்துக் கொடுக்கக்கூடியது. அத்தகைய புகைப்பிடித்தலை, சமீப காலமாக பெண்களும் அதிகம் பயன்படுத்துவது என்பது வருத்தத்திற்குரியது. இந்தியாவில் கிட்டத்தட்ட 14 விழுக்காடு பெண்கள் புகைபிடிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.
உணவு முறைகள் ஒருபுறமிருக்க, வாழ்வியல் முறையும் புற்றுநோய்க்கு காரணமாகின்றன. இரவில் விரைவில் படுக்கைக்கு சென்று அதிகாலையில் எழுந்து சூரிய வணக்கம் செய்யும் பழக்க வழக்கத்தை நம் முன்னோர்கள் பழகி, ஆரோக்கியமான வாழ்க்கையும் வாழ்ந்தனர். ஆனால், இன்றைய நவீன வாழ்வியல் நெறிமுறையை பின்பற்றும் இளம் தலைமுறையினருக்கு ஆரோக்கியம் எட்டாக்கனியாக மாறிவிட்டது.
நம் உடலில் மூன்றாவது கண் என்று அடைமொழியிட்டு கூறப்படுவது பீனியல் சுரப்பி. இது நம் மூளைக்குள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கும் மார்பகப் புற்றுநோய்க்கும், தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த பீனியல் சுரப்பி 'மெலடோனின்' எனப்படும் ஹார்மோனை சுரக்கும் உறுப்பு. இது இரவில் தூக்கத்தின் போது செயல்பட்டு மெலடோனின் ஹார்மோனை சுரக்கிறது. இரவு தூக்கம் கெட்டால் இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்து ஹார்மோன் மாற்றக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
மேலும் இந்த ஹார்மோன் மார்பகப் புற்றுநோய்க்கு காரணமாகும் காரணிகளை தடுப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இதனை சித்த மருத்துவம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து, நித்திரை குறைந்தால் தீராத வாத நோய்கள் உண்டாகும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இரவுப்பணியில் ஈடுபடும் பெண்களுக்கு மெலடோனின் சுரப்பு பலருக்கு குறைவதால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது என்பது நவீன நாகரிக வாழ்வியலுக்கு கிடைத்த பரிசு தான்.
நோய் வந்த பின் சிகிச்சை என்பது கண் கெட்ட பின் சூரிய வணக்கம் போன்றது. இதைத்தான் நம் முன்னோர்கள் 'வரும் முன் காப்போம்' என்று கூறி உணவை மருந்தாக பயன்படுத்தி ஆயுட்காலத்தை நீட்டி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். அந்த வகையில் எளிய சித்த மருத்துவ மூலிகைகளில் பல வெளிநாடுகளில் இன்று புற்றுநோய் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் நிறமி வேதிப்பொருள் புற்று நோயின் பல நிலைகளிலும் சிறந்ததாக உள்ளதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூண்டு, மிளகு, துளசி, வில்வம், நெல்லி, மாதுளை, நிலவேம்பு, திராட்சை, கருஞ்சீரகம் போன்ற பல எளிய மூலிகைகள் மரபணுக்கள் சிதைவை தடுப்பதாகவும், அதன் மூலம் புற்றுநோய் வராமல் தடுப்பதாகவும் தெரிவிக்கின்றன.
மூலிகைகளில், பச்சைக் காய்கறிகளில், பழங்களில் உள்ள இயற்கை நிறமிகளும், ஆன்தோசயனின்களும் புற்றுநோயை தடுப்பதாக உள்ளன. ஆக பெண்கள் செயற்கை நிறங்களை கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவை விடுத்து, இயற்கை உணவுகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.
நெல்லிக்காயும், கொய்யாவும் அதிகப்படியான வைட்டமின் சி-யை கொண்டுள்ளது. இந்த வைட்டமின் சி புற்றுநோயை வரவொட்டாமல் தடுக்கும் சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட் தன்மை இதற்குண்டு. அதாவது செல்கள் மற்றும் மரபணு சிதைவை தடுக்கும் தன்மை இதற்குண்டு. எனவே வைட்டமின் சி நிறைந்த நம் நாட்டு பழங்களை கொண்டாடுவது நல்லது.
உணவில் நார்ச்சத்து குறைபாடும் மார்பகப் புற்றுநோய்க்கு ஒரு காரணியாக நவீன அறிவியல் எச்சரிக்கின்றது. இத்தகைய நார்ச்சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள சித்த மருத்துவமும், 'மண் பரவு கிழங்குகளில் கருணை இன்றி புசியோம்' என்று கூறுகின்றது. இவ்வாறு உணவு நம் ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை என்பதை இன்றைய அறிவியலுக்கு முன்னரே நம் முன்னோர்கள் கணித்து ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். அந்த வகையில் அதிக நார்ச்சத்து கொண்ட மற்றொரு எளிய மூலிகை ஆளி விதை. இதில் உள்ள முக்கிய வேதிப்பொருட்களான லிக்னேன், ஒமேகா 3 ஆகியன புற்றுநோயை தடுக்கக் கூடியது.
தினசரி கிரீன் டீ குடிப்பதாலும் மார்பகப் புற்றுநோய் மட்டுமல்லாது பிற வகை புற்றுநோய்களும் வராமல் தடுக்கும் தன்மை உடையது. இதில் உள்ள கடிசின் எனும் இயற்கை மூலக்கூறு புற்றுநோய்க்கு காரணமாகும் மரபணு சிதைவை தடுக்கும் தன்மையுடையதாம். இதே வேதி மூலக்கூறு சித்த மருத்துவ மூலிகை மருந்தான திரிபலை சூரணம் மற்றும் கடுக்காய் சூரணம் இவற்றில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தினசரி இந்த சித்த மருந்துகளை வெந்நீரில் கலந்து இரவு வேளையில் எடுத்துக்கொண்டால் புற்றுநோயை தடுக்கலாம். இவை நோய்க்கு காரணமாகும் கபக் குற்றத்தை போக்கும் என்கிறது சித்த மருத்துவம்.
தினசரி சூரிய குளியல் எடுக்கும் வெளிநாட்டினருக்கு வைட்டமின்- டி3 அதிகம் உற்பத்தி ஆவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவதாக கூறுகின்றனர். இதனை கருத்தில் கொண்டே சூரிய வணக்கம் என்பதை சித்த மருத்துவம் வலியுறுத்தியுள்ளது. இன்றைய நவீன வாழ்வியலில் வெயிலே படாமல் வாழ்வது என்பது வாடிக்கை ஆகிவிட்டது. இது ஆடம்பரம் தானே தவிர ஆரோக்கியம் இல்லை. ஆக பெண்கள் தினசரி சூரிய வெயில் தோலில் படும்படி உடற்பயிற்சிகளை மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு அடிப்படை.
மார்பகப் புற்றுநோயை கண்டுபிடிக்க பல்வேறு பரிசோதனை முறைகளை நவீன மருத்துவ அறிவியல் அறிவுறுத்துகின்றது. எளிமையான சுய மார்பக பரிசோதனை துவங்கி மேம்மோகிராம், அல்ட்ராசவுண்ட் எனும் ஸ்கேன் பரிசோதனை போன்ற பல பரிசோதனைகளை அவ்வப்போது பெண்கள் சோதனை செய்துகொள்ள வேண்டும். முக்கியமாக 40 வயதைக் கடந்த பெண்கள் 54 வயது ஆண்டுக்கொரு முறை பரிசோதனையும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இந்த நோயுடன் தொடர்புடைய வரலாறு உள்ள பெண்கள் தொடர்ந்து பரிசோதனையில் இருப்பது நலம்.
தினசரி 4 பல் பூண்டும், பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடியும் பெண்களை மார்பகப் புற்றுநோயிலிருந்து காக்கக் கூடியது. பரிசோதனை செய்து நோயை முன்கூட்டியே கண்டறிந்து, அறுவை சிகிச்சை என்பது ஒருபுறமிருக்க, சித்த மருத்துவம் கூறும் இயற்கை மருந்தும், பாரம்பரிய உணவும், வாழ்க்கை முறைகளும் இன்றைய இளம் தலைமுறைப் பெண்கள் அனைவரும் பின்பற்ற துவங்குவது அவசியம். அதுவே அவர்களை கொடிய மார்பகப் புற்றுநோயில் இருந்து தடுத்து ஆரோக்கியத்தையும், வாழ்நாளையும் கூட்டும் என்பது இதில் வெளிப்படை.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com






