என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கடன் வாங்கி முன்னேற முடியுமா?
- மனிதனாக பிறந்த அனைவருக்கும் நிறைந்த பொருளாதார வசதிகளுடன் வாழவேண்டும் என்ற ஆசைகள் இருக்கும்.
- ஜோதிட ரீதியாக கடனால் இன்பமான பலன் யாருக்கு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
மனிதனாக பிறந்த அனைவருக்கும் நிறைந்த பொருளாதார வசதிகளுடன் வாழவேண்டும் என்ற ஆசைகள் இருக்கும். அந்த ஆசைகள் வெகு சிலருக்கு மட்டுமே நிறைவேறும். பலருக்கு அது கானல் நீராகவே இருக்கும். சிலர் வெயில், மழை பாராமல் கடுமையாக உழைத்து எந்த பலனும் இல்லாமல் குறைந்த லாபம் அடைவார்கள். சிலர் ஏசி ரூமில் உட்கார்ந்து குறைவான நேரத்தில் அதிக லாபம் சம்பாதிப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் பொருளாதார தேவையை ஈடு செய்ய கடன் பிரச்சினைகளில் சிக்குவது சாதாரணமான விஷயமாகி விட்டது. கடன் இல்லாத மனிதர்களை காண்பது அரிது. இதில் கடன் வாங்கிக்கொண்டு வாங்கிய கடனை திருப்பி அடைப்பவர்களும் இருக்கிறார்கள். அதேபோன்று கடன் வாங்கி வாழ்நாள் முழுவதும் வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு பிரச்சினையில் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
நடைமுறை வாழ்வில் சிலர் கடன் வாங்கி ஆரம்பித்த தொழில் இன்று கற்பக விருட்சமாகி பலருக்கு பயன் தரும் விதத்தில் வளர்ந்துள்ளது என்று கூறுவார்கள். சிலர் எந்த நேரம் கடன் வாங்கினேன் என்று தெரியவில்லை வாழவும் முடியவில்லை, மீளவும் முடியவில்லை என்று வருந்துவதையும் கேள்விப்பட்டு இருக்கிறோம். எல்லோருக்குமே கடன், பணக் கஷ்டங்கள் பண பிரச்சினைகள்,பணம் சேமிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், விரயச் செலவுகள் வருவது கிடையாது. ஒரு சிலர் நிறைய பணம் சம்பாதிப்பார்கள் ஆனால் அவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அந்தப் பணத்தை சேமிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுவார்கள். சம்பாதிக்கும் பணம் அனைத்தும் கடனிற்கோ தேவையில்லாத விரையச் செலவுகளுக்கோ சென்று கொண்டிருக்கும்.
இன்னும் சிலரின் வாழ்க்கையில் வருமானம் இல்லாமல் எப்போதுமே பணக் கஷ்டங்கள், வரவிற்கு மீறிய செலவுகள், விரயங்கள் மிக அதிகமாக இருக்கும். இது போன்ற கடன் தொடர்பான பிரச்சினைகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஜோதிட ரீதியாக கடனால் ஒருவர் வாழ்வதற்கும் வீழ்வதற்கும் சுய ஜாதக ரீதியான தசா புத்திகளே காரணம். சிலர் மோசமான தசை இருக்கும் போது வாங்கிய கடனை சுப தசை ஆரம்பித்தவுடன் அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். இவர்களுக்கு கடன் வாங்கிய சுவடே தெரியாது. சிலர் சுப தசையில் கடன் வாங்கி மோசமான தசையில் வாங்கிய கடன் தொகைக்கு மேல் வட்டி கட்டி மீள முடியாத மன வேதனையை அனுபவிப்பார்கள். இவர்களுக்கு கடன் ஆறாத வடுவாகவே இருக்கும்.
வெகு சிலர் வாங்கிய கடனால் பல மடங்கு உயர்வான பலன்களை அனுபவிப்பார்கள். பெற்ற கடனால் வாழ்வாதாரம் உயர்வதே சிறப்பான பலன். ஜோதிட ரீதியாக கடனால் இன்பமான பலன் யாருக்கு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
ஒருவரின் சுய ஜாதக ரீதியான ஆறாம் அதிபதியே கடன் தொடர்பான நிகழ்விற்கு காரணகர்த்தா. ஆறாமிடம், ஆறாம் அதிபதி, ஆறில் நின்ற கிரகத்தின் வலிமையும், தசா புத்தியுமே கடனையும், கடனால் கிடைக்கும் இன்ப, துன்பத்தையும் நிர்ணயம் செய்கிறது. ஆறாம் பாவகம் எனும் பொருள் கடன் இருந்தால் மட்டுமே தன் முயற்சியால் (3-ம் பாவகம்) தொழில் செய்து (10-ம் பாவகம்) லாபம்(11-ம் பாவகம்) எனும் இன்பத்தை அனுபவிக்க முடியும்.
இதையே வேறு விதமாக சொன்னால் பொருள் கடன் மிகுதியாக இருக்கும் ஒருவரே பொருளீட்ட,உழைக்க முயற்சி செய்து லாபம் ஈட்டுவார். ஒருவருக்கு எல்லாவிதமான வாழ்வியல் வெற்றியைப் பெற்றுத் தருவது ஆறாம் பாவகமே.
அப்படியென்றால் ஆறாம் பாவகம் நன்மை செய்யும் பாவகம் தானே. அது கெட்ட பாவகம், நோய், கடன் என்று பயப்படுகிறார்கள்.வாங்கிய கடனை திரும்பச் செலுத்தினால் ஆறாம் பாவகம் நன்மை செய்யும் பாவகம் தான்.வாங்கிய கடனை திரும்ப அடைக்க முடியாதவர்களுக்கு ஆறாம் பாவகம் சாபம்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மனிதர்கள் வாழ்வில் நடக்கும் எந்த செயலும் 3 விதமாக மட்டுமே இருக்கும். இதை ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தோடு ஒப்பிடுவோம்.
1. குறுகிய கால பிரச்சினை என்பது ஒருவடைய வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழி நடத்துவது.
2 . நீண்ட கால பிரச்சினை என்பது ஒருவருடைய வாழ்நாளில்நீண்ட காலத்தை வழி நடத்தும். ஏன் வாழ்நாள் முழுவதும் வழி நடத்துவது.
3 . விட்டு, விட்டு வரும் பிரச்சினை ஒரு வரின் வாழ்க்கையில் விருந்தினர் போல் சில காலம் வந்து சரியாகும். மீண்டும் வரும் பின்னர் சரியாகும் நிகழ்வுகள் என்று ருண, ரோக, சத்ரு ஸ்தானம் இயக்கத்தை 3 விதமாக பிரிக்கலாம். ராசிச் சக்கரத்தை நமது ஜோதிட முன்னோடிகள் சரம், ஸ்திரம், உபயம் என்று 3 பிரிவாக பிரித்து இருக்கிறார்கள். சரம் என்பது நகரும் தன்மையை குறிக்கும். ஸ்திரம் என்பது நிலையாக இருக்கும் தன்மையை குறிக்கும். உபயம் என்பது இரு தன்மைகளையும் குறிக்கும்.
சரம்
ஜாதகத்தில் ஒருவருடைய 6-ம் அதிபதி சர ராசியுடன் சம்பந்தம் பெறும் போது ருணம், ரோக, சத்ரு ஸ்தான இயக்கம் பலம் குறைந்ததாக இருக்கும். வந்த தடமும் இருக்காது . போன தடமும் தெரியாது. அதாவது 6-ம் அதிபதி அல்லது 6ல் நின்ற கிரகம் தசாபுத்தி வந்த காலங்களில் மட்டும் சிறு பாதிப்பு இருக்கும். மற்ற நேரங்களில் எந்த பாதிப்பும் இருக்காது. 6ம் அதிபதி அல்லது 6ல் நின்ற கிரகம் மேஷம், கடகம், துலாம், மகர ராசிகளுடன் சம்பந்தம் பெறும் போது எளிதாக விடுதலை கிடைத்து விடும். இவர்களுடைய ஜாதகத்தில் 1,5,9 வலிமையும் சிறப்பாக இருக்கும். 6-ம் அதிபதியின் தசையோ அல்லது 6-ல் நின்ற கிரகத்தின் தசையோ வராத போது வாழ்க்கையில் துன்பம் என்றால் என்னவென்றே தெரியாத அமைப்பினர். பாக்கியசாலிகள். பாதிப்பு இருக்கும் காலங்களில் இஷ்ட, குல, உபாசனை தெய்வ வழிபாட்டுடன் எளிதாக காலம் கடத்தி விடலாம்.
ஸ்திரம்
ஒருவருடைய 6-ம் அதிபதி அல்லது 6-ல் நின்ற கிரகம் ஸ்திர ராசியுடன் சம்பந்தம் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ருண, ரோக, சத்ரு ஸ்தான இயக்கம் இருந்து கொண்டே இருக்கும். இவர்களில் பலர் தவறான முடிவு எடுப்பது அல்லது தலைமறைவு வாழ்க்கை வாழ்வது என்று மீள முடியாத துயரத்தில் இருக்கிறார்கள். 6-ம் அதிபதி அல்லது 6ல் நின்ற கிரகம் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்ப ராசியாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் ருண, ரோக, சத்ரு ஸ்தான தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கு 1,5,9 வலிமை இருக்காது. கடன், தீர்க்க முடியாத நோய், எதிரி தொல்லையால் அவதிப்படுவார்கள். ஒரு கடன் தீர்ப்பதற்குள் அடுத்த கடன் முளைத்து விடும் . புதிய கடன், முளைத்துக் கொண்டே இருப்பவராக இருந்தால் அரசுடமை வங்கியில் நீண்ட காலத்திற்கு தவணை செலுத்தக்கூடிய நிலை உண்டாகும்.
அவரவர் தகுதிக்கு ஏற்ப கடனாக வாங்கி தவணை செலுத்தி வந்தால் நிச்சயமாக தப்பிக்க முடியும். வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடும் விதமான நோய் தொல்லைகள் இருக்கும். மேலும் இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு குடியிருப்பிற்கு அருகில் உள்ளவர்களால் எப்பொழுதும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு பரிகாரமாக தினமும் காலை எழுந்தவுடன் ஒரு மிளகை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தெரியும். வேறு ஏதாவது காரணத்தினால் சத்ருக்கள் தொல்லை அதிகமானால் ஞாயிறு மாலை ராகு வேளையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.
உபயம்
அத்துடன் 6-ம் அதிபதி அல்லது 6-ல் நின்ற கிரகம் உபய ராசிகளான மிதுனம் , கன்னி, தனுசு, மீனத்துடன் சம்பந்தம் பெற்றால் ருண, ரோக, சத்ரு ஸ்தான இயக்கம் விட்டு விட்டு இருக்கும். சில நேரங்களில் சரியாகும் , சில நேரங்களில் அதீத தாக்கம் தரும். இவர்களுடைய ஜாதகத்தில் லக்னம் வலிமையாக இருக்கும். இந்தப் பிரிவினர் நித்திய பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்தால் நல்ல பலன் தரும்.
எல்லா கிரகங்களும் பண கஷ்டங்களையும் பண பிரச்சினைகளையும் பணம் சேமிப்பு சார்ந்த பிரச்சினைகளையும் கொடுப்பது கிடையாது.சில குறிப்பிட்ட கிரகங்கள் மட்டுமே இது போன்ற பிரச்சினைகளைக் கொடுக்கும். லக்னத்திற்கு 2ம் இடமான தன ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் மூன்றும் அல்லது ஏதேனும் ஒன்று இருந்தால் கடன், பணக் கஷ்டங்கள், பணம் சேமிப்பதில், பிரச்சினைகள் பண விரையங்கள் போன்ற பிரச்சினைகள் அதிகம் ஏற்படும். இவர்கள் யாருக்காவது கடன் கொடுத்தால் அந்தப் பணம் திரும்பவராது ஏமாந்துதான் போவார்கள், அதே சமயம் இவர்கள் கடன் வாங்கினால் வாங்கிய கடனை இவர்களால் திருப்ப செலுத்த முடியாது.
லக்னத்திலிருந்து 2-ம் பாவகத்தில் குரு, சுக்கிரன், ராகு மூன்றும் அல்லது ஏதேனும் ஒன்று, இரண்டு இருந்தால் அவர்களுக்கு சரளமான பணப்புழக்கம், உபரி வருமானம், அதிக சேமிப்பு, மிகுதியான பொன், பொருள் சேர்க்கை இருக்கும்.
சுருக்கமாக ஆறாம் பாவகம் சரகராசியான மேஷம், கடகம், துலாம், மகரத்துடன் சம்பந்தம் பெற்றவர்கள் கடனால் மன நிறைவு, நிம்மதி அடைகிறார்கள். ஆறாம் பாவகம் ஸ்திரம் எனும் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பத்துடன் சம்பந்தம் பெறுபவர்களுக்கு கடனால் ஏற்படும் உபத்திரம் சற்று மிகைப்படுத்தலாகவும், உபயம் எனும் மிதுனம், கன்னி, தனுசு, மீனத்துடன் சம்பந்தம் பெற்றால் சற்று நிதானமாக இருக்கும் என்பதை அறிய முடிகிறது.
அதே போல் ஆறாம் அதிபதியை விட லக்னாதிபதி வலிமை பெற்று இருந்தால் வாங்கிய கடனால் நன்மை பெருகி வாழ்வா தாரம் உயரும். ஆறாம் இடத்தில் பாவ கிரகங்களான சனி செவ்வாய் ராகு கேது தனித்து அமர்ந்து இருக்க வேண்டும். ஆறாம் அதிபதி தன் வீட்டிற்கு 6,8,12ல் மறைந்து குரு பார்வை பெற்றால் கடனால் வளர்ச்சி ஏற்படும். கடனை அடைக்க கூடிய சூழல் உண்டாகும். எந்த நிலை யிலும் கடன் சார்ந்த பிரச்சினை இருக்காது. கடன் பெற்று தொழில் தொடங்கும். அமைப்பு உண்டாகும் தசா புத்தி சிறப்பாக இருக்கும் நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
பரிகாரம்
குடும்பத்தில் நிலவும் வரவிற்கு மீறிய கடன், விரயம் நீங்கி சேமிப்பு உயர அருகில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு செவ்வாய் கிழமை 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.






