என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

உச்ச சுக்கிரன் வழங்கும் உல்லாச வாழ்க்கை
- உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவராக ஜாதகர் வாழ்வார்.
- ஜாதகரின் எண்ணங்கள் விருப்பங்கள் ஆசைகள் லட்சியங்கள் கனவுகள் எளிதில் நிறைவேறும்.
ஒருவர் நல்ல வசதி வாய்ப்புகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தால் அவருக்கு சுக்கிர கடாட்சம் உள்ளது என்று பொருள். ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவராக ஜாதகர் வாழ்வார். காதல், காமம், அன்பு, எதிர்பாலின ஈர்ப்பு, நல்ல குடும்ப உறவுகள், உறவுகளால் ஏற்படும் மகிழ்ச்சி, புற அழகியல் சார்ந்த விஷயங்கள், உலகியல் இன்பங்கள், சொகுசான வாழ்விற்கு தேவையான விஷயங்கள், ஆடம்பரமான வீடு, வாகனங்கள், அணிகலன்கள், போன்றவற்றிற்கு காரக கிரகம் சுக்கிரன். சுக்கிரன் பலமாக இருந்தால் அன்பான மனைவி, அழகான வீடு, ஆடம்பரமான கார், சொகுசான இன்பமயமான வாழ்க்கை அனைத்தும் ஒருவருக்கு தேடிவரும்.
கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்து பெரிய உயரமும் தொட வைக்கும். சுக்ரன் பலம் குறைந்தால் வறுமை, தரித்திரம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். சம்பாத்தியம், ஆடம்பரம் என்ற எண்ணமே வராமல் போகும்.
சுக்ரனின் நட்சத்திரமான பரணி, பூரம், பூராடத்தில் பிறந்தவர்கள் ரிஷபம், துலாம் ராசி அல்லது லக்னத்தில் பிறந்தவர்கள், ராசி அல்லது லக்னம் அல்லது ஏழாம் இடத்தில் சுக்கிரன் இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் சுக்கிர கடாட்சம் நிச்சயமாக கிடைக்கும். சுக்கிரன் மீன ராசியில் 27-வது டிகிரியில் உச்சமடைவார். அதே போல் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் இரு பாவகத்திற்கும் உள்ள பலன்களை நடத்தியே தீரும். இனி பனிரென்டு லக்னத்திற்கும் உச்ச சுக்ரனால் ஏற்படும் நன்மை தீமைகளை பார்க்கலாம்.
மேஷ லக்னத்திற்கு 2,7-ம் அதிபதியான சுக்ரன் 12-ம்மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் பொருளாதார வெற்றி, வீடு மனை வாகனம் போன்றவை கிடைக்கும். வாழ்க்கை துணை அழகு, காதல் உணர்வு, நல்ல புரிந்துணர்வு உள்ளவராக இருப்பார். திருமணத்திற்கு பிறகு அதிர்ஷ்டம் திருப்புமுனை உண்டாகும். சிலருக்கு காலதாமத திருமணம் நடைபெறும். சிலருக்கு திருமண வாழ்க்கையில் பிரிவினை அல்லது மனக்கசப்பு அதிகமாக இருக்கும். அல்லது தம்பதிகள் தொழில் உத்தியோக நிமித்தமாக ஆளுக்கு ஒரு ஊரில் பிரிந்து வாழ்வார்கள். வரவுக்கு மீறிய செலவுகளால் அவதி இருக்கும். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கையில் ஆர்வம் மிகுதியாக இருக்கும்.
ரிஷப லக்னத்திற்கு ராசி அதிபதி மற்றும் 6-ம் அதிபதியான சுக்கிரன் 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். ஜாதகரின் எண்ணங்கள் விருப்பங்கள் ஆசைகள் லட்சியங்கள் கனவுகள் எளிதில் நிறைவேறும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. தொட்டது துலங்கும். நிலையான நிரந்தரமான உத்தியோக அனுக்கிரகம் உண்டு. ஜாதகர் அதிர்ஷ்டப் பிறவி பொன்னும் பொருளும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் நிறைந்தவராக இருப்பார். எவ்வளவு கடன் சுமை இருந்தாலும் எளிதில் தீர்க்கக் கூடிய வல்லமை படைத்தவராக இருப்பார். பிறருக்கு கடன் கொடுப்பது ஜாமீன் போடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஜாதகரின் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் எதிரியை அதிகப்படுத்தும். தீய பழக்க வழக்கங்களால் நோய் ஏற்படும்.
மிதுன லக்னத்திற்கு 5,12-ம் அதிபதியான சுக்ரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் ஜாதகர் குல கவுரவம் நிரம்பியவர்கள். பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடி வரும். நன்மக்கட்பேறு உண்டாகும். அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள். அரசியல் அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். கவுரவ பதவிகள் தேடி வரும். முதல் தொழிலில் தோல்வியை சந்திப்பார்கள் இரண்டாவது தொழிலில் வெற்றியை எட்டிப் பிடிப்பார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் தனி முத்திரை பதிப்பார்கள். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் நன்மை நடக்கும். அதற்கு இணையான சில தீமைகளும் உண்டாகும்.
கடக லக்னத்திற்கு 4,11-ம் அதிபதியான சுக்கிரன் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பு. தாயும் தந்தையும் உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். பரம்பரையாக குலத்தொழில் செய்வார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பது போன்றவற்றில் ஆர்வம் மிகுதியாக உள்ளவர்கள். கற்றக்கல்வி பலன் தரும். சொத்துக்கள் மூலமாக வாடகை வருமானங்கள் ஜாதகருக்கு கிடைக்கும். பல தொழில் வல்லுநராக இருப்பார்கள். ஆசிரியர், ஜோதிடர், வங்கிப் பணிகளில் தனித்திறமையுடன் மிளிர்வார்கள். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்கக் பலர் விரும்புவார்கள். அரசியல் அரசாங்க ரீதியான நன்மைகள் ஜாதகரை தேடிவரும். நல்ல ஆரோக்கியமான தேக சுகம் உண்டு. நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கை துணை மூலமாக பொருளாதார மேன்மை உண்டாகும். அதே நேரத்தில் பாதகாதிபதியாகிய சுக்கிரன் அதிகவலு உடன் இருப்பதால் சுக்கிர தசை புத்தி காலங்களில் சொத்துக்களால் சொந்தங்களால் மன உளைச்சல் மிகுதியாக இருக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
சிம்ம லக்னத்திற்கு 3,10 அதிபதியான சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் உச்சமடைவார். ஒப்பந்த அடிப்படையான தொழில் மூலமாக வருமானம் ஈட்டுவார். யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் ஜாதகருக்கு வருமானம் வரும். புதிய தொழில் முயற்சியால் சுய வருமானத்தில் செல்வம் சேரும். சுய தொழில் ஆர்வம்மிகும். கவர்ச்சியான விளம்பரத்தால் தொழிலில் உச்சத்தை அடைவார்கள். உடன் பிறந்தவர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்வார்கள். தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரிடும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகமாக இருக்கும். பாகப்பிரிவினை சார்ந்த பிரச்சினைகள் ஜாதகருக்கு மன உளைச்சலைத் தரும். அண்டை அயலாருடன் ஒத்துப்போக முடியாது. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும்.
கன்னியா லக்னத்திற்கு 2,9-ம் அதிபதியான சுக்கிரன் சம சப்தம ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பாகும். திருமணத்திற்குப் பிறகு வாழ்வாதாரம் பல மடங்கு உயரும் பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழில் மூலம் ஜாதகருக்கு வருமானம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் வெளிநாட்டு வாழ்க்கையை விரும்புவார்கள். குலத்தொழில் விருத்தியடையும். தனது புத்தி சாதுர்ய பேச்சால் பிறரை நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். உற்றார் உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். பலவிதமான யுக்திகளால் பொருளை ஈட்ட வல்லவர். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வாழ்வாதாரம் பல மடங்கு பெருகும். தந்தையால் ஆதாயம் உண்டு. தந்தையின் குலத்தொழில் ஜாதகரை வந்து சேரும். கல்வி நிறுவனங்கள் நடத்தும் பாக்கியம் பெற்றவர்கள். புண்ணிய பலன்களை அதிகரிக்க அடிக்கடி ஆன்மீக யாத்திரை செய்வார்கள்.
துலாம் லக்னத்திற்கு ராசி அதிபதி மட்டும் அஷ்டமாதிபதியான சுக்கிரன் ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் உச்சமடைவார்.
லக்னாதிபதி ஆறாம் இடத்தில் உச்சமடைவதால் ஜாதகருக்கு கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகள் உபரியாகி கொண்டே இருக்கும். அடிக்கடி நோய்க்கு வைத்தியம் செய்து மன உளைச்சல் கூடும். சிலருக்கு நோயின் தன்மையை எளிதில் அறிய முடியாது. நிலையான தொழில் அமையும். வருமானத்திற்கு மீறி கடன் வாங்க கூடாது. உயில் சொத்து காப்பீட்டு பணம் லாட்டரி போன்ற அதிர்ஷ்ட பணம் பொருள் வரவு உண்டு. ஒரு நல்லது நடந்தாலும் ஒரு கெட்டது நடந்தாலும் அதற்கு ஜாதகரே காரணமாக இருப்பார். தசை ஆரம்பத்தில் சில யோகத்தைச் செய்தால் தசை முடியும் போது அவயோகம் உண்டு. துலாம் ராசிக்கு சுக்ர தசை வராமல் இருப்பது நல்லது.
விருச்சிக லக்னத்திற்கு 7, 12-ம் அதிபதியான சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் உச்சம் பெறுவதால் ஜாதகருக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.இதற்கு குரு பார்வை இருந்தால் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடக்கும். குலதெய்வ அருள் கிடைக்கும். அழகு, ஆடம்பரத்திற்கு அதிகம் செலவு செய்வார்கள். பூர்வீகம் குலதெய்வம் அதிர்ஷ்டம் காதல் சார்ந்த விஷ யங்களில் ஜாதகருக்கு சாதகமான பலன்கள் நடக்கும். சிலருக்கு 2-வது குழந்தை பிறந்த பிறகு மண வாழ்க்கையில் மன கஷ்டம் வரும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் விரயங்கள் அதிகரிக்கும். 2-வது குழந்தை பிறந்ததற்கு பிறகு அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும்.
தனுசு லக்னத்திற்கு 6,11-ம் அதிபதியான சுக்கிரன் சுகஸ்தானத்தில் உச்சமடைவதால் நன்மை தீமை கலந்த பலன்கள் கிடைக்கும். ஆறாம் அதிபதி உச்சம் பெறுவது சிறப்பித்துச் சொல்லக் கூடிய பலன் அல்ல. சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்தால் கடன்படுவார்கள். தாய்மாமன் வாழ்நாள் முழுவதும் மதி மந்திரியாக இருப்பார். அதே நேரத்தில் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக லாபமும் உண்டு. பலர் அடிக்கடி ஒரு சொத்தை விற்று புது சொத்து வாங்கிக் கொண்டே இருப்பார்கள். சிலருக்கு சொத்துக்களை விற்று கடன் அடைக்க கூடிய சூழ்நிலைகள் இருக்கும். எவ்வளவு கடன் சுமை இருந்தாலும் அதை அடைக்கும் திறமையும் உண்டு. சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக கடன் தொகை தள்ளுபடியாகும். நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோக அமைப்பு அமையும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள்.
மகர லக்கினத்திற்கு 5,10-ம் அதிபதியான சுக்கிரன் மூன்றாம் இடமான சகாய வெற்றி ஸ்தானத்தில் உச்சமடைவது மிகச் சிறப்பான அமைப்பாகும். தொட்டது துலங்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நல்ல பண்பான, பணிவான புத்திரர்கள் பிறப்பார்கள். குலதெய்வ கோவிலில் அதிக தானம், தர்மம் செய்பவர்கள். பல தொழில் திறமை நிறைந்த வல்லுநர்களாக இருப்பார்கள். கமிஷன் அடிப்படையான தொழிலில் நல்ல வருமானம் ஈட்டுவார்கள். இனக்கவர்ச்சியாலும், போகத்திற்காகவும் ஒன்றுக்கு மேற்பட்ட காதல் வரும். கவுரவ பதவி உள்ளவர்களுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். அரசியலில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதிப்பார்கள். சொந்த முயற்சியில் தொழில் செய்வார்கள். தொழிலுக்கு கிளை நிறுவனங்கள் உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் அமையும். பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் வல்லவர்கள். பிற நாட்டு தொடர்பாலும் அரசு மூலமாகவும் செல்வம் சேரும். தர்ம காரியங்களின் மூலம் புகழ் பெறுவார்.
அரச பதவி, அரசு உத்தியோகம் அந்தஸ்து உண்டு. கும்ப லக்னத்திற்கு 4, 9 அதிபதியான சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது சிறப்பித்து சொல்ல கூடிய சுப பலனாகும். நிறைவான சொத்து சுகத்தையும் நிறைந்த லாபத்தையும் உறவுகளின் அனுசரனையும், வழக்குகளில் வெற்றியையும் முன்னோர்களின் நல்லாசியையும் வழங்கும். நன்றாக படிப்பார்கள். கற்ற கல்வியால் பயன் உண்டு. பெயர் சொல்லக் கூடிய குடும்பம். அரசு உத்தியோகம், கவுரவ பதவி உண்டு. சிலர் குலத்தொழில் செய்பவர்கள். சமூதாய அங்கீகாரம் நிறைந்தவர்கள். குடும்பச் சொத்துக்கள் அதிகமாக இருக்கும். தான தர்மங்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். கடமையே கண்ணாக உள்ளவர்கள். தெய்வ காரியங்களிலும் ஈடுபாடு கொண்டவர்கள்.தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மீது பற்றும் பாசமும் உண்டு.
மீன லக்கினத்திற்கு 3,8-ம் அதிபதியான சுக்ரன் ராசியில் உச்சம் அடைவார். அஷ்டமாதிபதி ராசியில் உச்சம் அடைவதால் விபரீத ராஜ யோகமாக சில அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு சாதகமாக இருக்கும் ஆனால் அந்த அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு ஒரு விபரீதம் ஏற்பட்ட பிறகு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் ஜாமீன் பிரச்சினை ஏற்படலாம். முறையற்ற பாகப்பிரிவினை சந்திக்க நேரிடும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் அவமானம் வம்பு வழக்கு சர்ஜரி போன்ற பாதிப்புகள் இருக்கும். தொழிலில் உடன் பிறந்தவர்களால் ஏமாற்றம் உண்டு. முயற்சி குறைவுபடும். திட்டமிடுதல் இருக்காது எந்த ராசி லக்னமாக இருந்தாலும் சுக்கிரன் உச்சம் பெறுவதால் சொகுசு வாழ்க்கையை அடையக்கூடிய பாக்கியம் உண்டாகும்.
செல்: 98652 20406






