என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தமிழன்னையின் தவப்புதல்வர் காமராஜர்: காமராஜருக்கு பச்சை தமிழர் என்று பெயர் சூட்டிய தந்தை பெரியார்
    X

    தமிழன்னையின் தவப்புதல்வர் காமராஜர்: காமராஜருக்கு பச்சை தமிழர் என்று பெயர் சூட்டிய தந்தை பெரியார்

    • கல்வி ஒருவனுக்கு கிடைத்துவிட்டால் மற்ற செல்வங்கள் எல்லாம் ஒன்றுக்கு பின்னாலே ஒன்றாக அவனிடம் வந்து சேர்ந்துவிடும் என்ற காமராஜரின் அதீதமான நம்பிக்கை தான்.
    • காமராஜர் ஆட்சிக்கு வந்து பல அணைக்கட்டுகளை கட்டி விவசாயத்தை பெருக்கி இருக்கிறார்.

    தந்தை பெரியார் எந்த கூட்டத்தில் பேசினாலும் "பச்சை தமிழர் காமராஜர்" என்ற சொற்றொடரை பயன்படுத்தியே பேசி வந்தார். அதற்கு காரணம் 1924 முதல் 1954 வரை தமிழை தாய் மொழியாக கொண்ட ஒரு தமிழன் கூட தமிழகத்தின் முதல்-அமைச்சராக வர முடியவில்லை. இப்போது காமராஜர் முதல்வராக வந்ததன் மூலம் அது நடந்திருக்கிறது. இது தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி அல்லவா. இந்த வெற்றியை கொண்டாடுவது மட்டுமல்ல, கிடைத்த இந்த அரிய வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா என்ற வகையில் பெரியார் காமராஜரை பாராட்டிக் கொண்டே வந்தார்.

    ஒவ்வொரு தமிழனும் கல்வி கற்றுவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார் காமராஜர். அதற்கு காரணம் கல்வி ஒருவனுக்கு கிடைத்துவிட்டால் மற்ற செல்வங்கள் எல்லாம் ஒன்றுக்கு பின்னாலே ஒன்றாக அவனிடம் வந்து சேர்ந்துவிடும் என்ற காமராஜரின் அதீதமான நம்பிக்கை தான். இதை தானே 2000 ஆண்டுகட்கு முன்னாலேயே நமது அய்யன் வள்ளுவரும் திருக்குறளில்...

    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

    மாடு அல்ல மற்றையவை

    என்று ஒருவனுக்கு அழிவில்லாத சிறப்புடைய செல்வம் ஒன்று உண்டென்றால் அது கல்வி மட்டுமே. மற்ற செல்வம் அனைத்தும் கல்வியை விட சிறப்பானதும் அல்ல நிலையானதும் அல்ல என்பதே இக்குறளின் பொருளாகும். மேலும் ஒருவன் இப்பிறப்பில் கற்ற கல்வியானது அவனுக்கு ஏழு பிறப்பிலும் உயிரோடு சென்று சேர்ந்து உதவும் தன்மையுடையது என்பதை

    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

    எழுமையும் ஏமாப் புடைத்து

    என்ற குறளில் கல்வியின் சிறப்பினை எடுத்தியம்புகிறார் வள்ளுவர். திருக்குறளில் நல்ல பயிற்சியும் ஈடுபாடும் உடையவர் காமராஜர் என்பதை ஏற்கனவே வந்த கட்டுரையில் சொல்லி இருக்கிறோம் அல்லவா.

    ராஜாஜி முதல்வராக இருந்த பொழுது அவனவன் பகுதிநேரம் பள்ளிக்கூடம் போய்விட்டு, மீதி நேரம் அப்பன் தொழிலை செய்ய வேண்டும் என்று "வருணாசிரம" கொள்கையை அல்லவா கொண்டு வந்துவிட்டார். கொண்டு வந்ததோடு விட்டாரா? 3000 பள்ளிகளை அல்லவா மூடிவிட்டார். திறக்க இருந்த ஆயிரம் பள்ளிகளையும் அல்லவா திறக்காமல் செய்துவிட்டார். இது நம் தமிழ் சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய கேடு, தீங்கு என்பதை ஒவ்வொரு தமிழனும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கினார் பெரியார்.

    காமராஜர் பதவிக்கு வந்த உடனேயே 8-ம் வகுப்பு வரை இலவச கல்விக்கு உத்தரவு போட்டுவிட்டாரே. மேலும் 11-ம் வகுப்பு வரை இந்த இலவச கல்வியை விரிவுபடுத்துவேன் என்று சொல்லி இருக்கிறாரே. இதைவிட நமது தமிழ் சமுதாயத்திற்கு வேறு என்ன வேண்டும். "பசி வந்தால் பத்தும் பறந்து போகும்" என்று நமது முன்னோர்கள் சொன்னதை மனதில் வைத்து, மதிய உணவு திட்டத்தையும் கொண்டு வந்துவிட்டாரே. மாணவச் செல்வங்களுக்கு சீருடையும் கொடுத்துள்ளாரே. பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை இப்போது பன்மடங்காக பெருகிவிட்டதே என்று மகிழ்ச்சியடைந்தார் பெரியார்.

    இப்போது காமராஜர் ஆட்சியில் 30 ஆயிரம் பள்ளிகள் வந்துவிட்டதே. ஏற்கனவே 550 உயர்நிலைப் பள்ளிகளே இருந்தன. இப்போது அந்த எண்ணிக்கை 1500 ஆக உயர்ந்திருக்கிறதே. இதன் மூலம் நமது தமிழ்நாட்டில் படித்தவர்கள் நூற்றுக்கு 15 பேர் தான் என்று இருந்த எண்ணிக்கை, இப்போது 32 பேராக இருக்கிறதே என்று புள்ளி விவரத்தோடு பேசினார் பெரியார்.

    ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் மொத்த வருமானமே ரூ.16 கோடி தான். அதிலே கல்விக்கு செலவிட்ட தொகை ஒன்னே முக்கால் கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் காமராஜர் ஆட்சியில் மொத்த வருமானம் ரூ.116 கோடி. அதிலே கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை மட்டும் ரூ.25 கோடி. நீதி கட்சி ஆட்சியில் ரூ.16 சம்பளம் வாங்கிய வாத்தியார், இப்போது காமராஜர் ஆட்சியில் 75 ரூபாய் வாங்குகிறார் என்றால் காமராஜர் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பேசி காமராஜருக்கு புகழாரம் சூட்டினார் பெரியார்.

    டாக்டர் படிப்புக்கும் என்ஜினீயரிங் படிப்புக்கும் முந்தைய ஆட்சி காலத்தில் நம்ம வீட்டுப் பிள்ளைகளுக்கு இடமே கிடைக்காது. 10 முதல் 20 வரை தான் கிடைக்கும். இப்போது காமராஜர் ஆட்சிக்கு வந்த பின்பு அந்த எண்ணிக்கை 60க்கு மேலே உயர்ந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    உத்தியோகத்துறையில் இப்போதுதான் நம்மவர்களுக்கு உரிய பங்கு கிடைத்து வருகிறது. ஐகோர்ட் ஜட்ஜ் பதவிகளில் எல்லாம் நம்மவர்கள் அமர்ந்திருக்கிறார்களே. இன்று ஐ.ஜி. பதவியில் ஒரு தமிழர், கல்வி இலாகாவின் டைரக்டர் ஒரு தமிழர், கூட்டுறவு ரிஜிஸ்ட்ரார் ஒரு தமிழர், அரசாங்க பப்ளிக் பிராசிகியூட்டர் ஒரு தமிழர், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர் பதவியில் ஒரு தமிழர், சிட்டி சிவில் கோர்ட்டில் சீப் ஜஸ்டிஸ் ஒரு தமிழர், இப்படிப்பட்ட வாய்ப்புகள் எல்லாம் இதற்கு முன்னாலே நமக்கு கிடைத்தது உண்டா? என்று விடுதலை நாளேட்டில் நாளுக்கு நாள் எழுதிக் கொண்டே வந்தார் பெரியார்.

    அது மட்டுமல்ல... இந்தியாவில் இப்போது இருக்கிற மந்திரி சபைகளிலே ஒழுக்கமானதும் நாணயமானதும் கோஷ்டி சண்டை இல்லாததும் ஆன ஒரு மந்திரி சபை உண்டு என்றால் அது காமராஜர் மந்திரி சபை தான் என்பதை நினைவிலே கொள்ளுங்கள் என்று பேசினார் பெரியார். கிராமப்புறங்களுக்கு மின்சாரம் அளிப்பதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்வது நம்ம தமிழ்நாடு தான். இந்தியா முழுக்க 20,000 கிரா மங்களுக்கு மின் வசதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அவற்றில் 11,500 கிராமங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    காமராஜர் ஆட்சிக்கு வந்து பல அணைக்கட்டுகளை கட்டி விவசாயத்தை பெருக்கி இருக்கிறார். பல ஏரிகள், குளங்களை தூர்வாரி, பல வாய்க்கால்களை உருவாக்கி, அதன் காரணமாக ஆறரை லட்சம் ஏக்கர் பொட்டல் காடுகளை நன்செய் நிலமாக ஆக்கியிருக்கிறார்.

    இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் இந்த ஆட்சி காலம் இந்திய வரலாற்றிலேயே பொற்கால ஆட்சி காலம் ஆகும். ராஜாஜியின் இருண்ட கால ஆட்சி காலத்தில் இருந்து விடுதலை ஆகி இந்த பொற்காலத்திற்கு இப்போது வந்திருக்கிறோம். இந்த பொற்காலம் வைரத்தைப் போல ஒளி வீசும் காலமாக மாற வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இது மட்டும் நடக்கவில்லை என்றால் பழையபடி நாம் இருண்ட காலத்திற்கு போய் விடுவோம் என்று எச்சரிக்கை செய்தார் பெரியார்.

    இப்படி காமராஜரின் பெருமைகளை விடுதலை பத்திரிக்கையில் எழுதியும் நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து மேடைகளில் தொடர்ந்து பேசியும் வந்தார். பெரியார் இப்படி பேசிய பேச்சுகளில் தேவகோட்டையிலே 9-7-1961-ல் நடைபெற்ற ராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் நான்காவது மாநாட்டிலே பெரியார் பேசிய பேச்சு ஒரு முத்திரையாக அமைந்தது. இந்த பேச்சினை தனது மரண வாக்குமூலம் என்று குறிப்பிடுகிறார் பெரியார். அதனை அப்படியே தருகிறேன்.

    "தோழர்களே எனக்கோ வயது 82 ஆகிவிட்டது. நான் எந்த நேரத்திலும் இறந்து விடலாம். ஆனால் நீங்கள் எல்லாம் இருப்பீர்கள். உங்களை விட வயது முதிர்ந்த நான் மரண வாக்கு மூலமாக ஒன்று கூற விரும்புகிறேன். மரண வாக்கு மூலத்தில் பொய் கூற வேண்டிய அவசியம் இல்லை.

    இன்றைய காமராஜர் ஆட்சியில் நமது தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றம் என்பது 2000, 3000 ஆண்டுகளில் எப்போதுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர் ஆட்சி காலத்திலும் ஆகட்டும் அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், பிறகு வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் ஆகட்டும் இவர்களில் எவரும் நமது கல்விக்கு வகை செய்யவில்லை.

    தோழர்களே... நீங்கள் எனது சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். அவரது ஆட்சியில் சுகமடையுங்கள். காமராஜரை நாம் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேற ஆளே இல்லை" என்று தேவகோட்டையில் பேசி முடித்தார் பெரியார்.

    பெரியாரின் இந்த பேச்சு 18-7-1961 விடுதலை நாளேட்டில் மிகப்பெரிய அளவில் பிரசுரமாகி இருந்தது. காமராஜர் எவ்வளவு நல்ல காரியங்கள் செய்தும், இதுவரை யாரும் செய்யாததை செய்தும், அவருக்கு எதிர்ப்பாக சிலர் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் வேறொன்றுமில்லை. தங்களின் ஆதிக்கம் பறிபோகின்றதே.. தங்களின் செல்வாக்கு குறைகின்றதே.. என்பதுதான். இந்த உண்மையினை நமது தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்குள்ளே ஒளிந் துள்ள சூட்சுமத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    ஒன்று சொல்லுகிறேன் தோழர்களே... திராவிட கழக சார்புடையவர்களாக இருந்தாலும் சரி, அனுதாபிகளாக இருந்தாலும் சரி, அவர்கள் காங்கிரசிலே சேர்ந்து தொண்டாற்ற ஆசைப்படு வார்களேயானால் தாராளமாய் அவர்கள் இஷ்டப்படி நடந்து கொள்ளலாம்.

    எந்த தமிழர் வேண்டுமானாலும் அவர் காங்கிரசிலே சேர்ந்தால் தமிழர்களுக்கு தொண்டு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று கருதுவாரானால் அவர்கள் தாராள மாக காங்கிரசில் சேரலாம்.

    பதவிக்காக காங்கிரசிலே சேருவதும் பதவி கிடைக்கவில்லை என்று ஏமாற்றம் அடைந்தால் காங்கிரசை வெறுப்பதுமான தன்மை உள்ள எந்த திராவிட கழகத்தினரும், ஆதரவாளரும் அதில் சேராமல் இருப்பது நலமும் மானமும் உடைய காரியமாகும். எனவே இன்று தமிழர் சமுதாய நலன் உணர்ச்சி உள்ள ஒவ்வொரு தமிழனும் காங்கிரசை ஆதரித்து, அதனை வலுவடையச் செய்வதே நமது சமுதாய கடமை ஆகும் என்று ஒரு உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தி தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தினார் பெரியார்.

    மேலும் சாதாரண மக்கள் என்னை கேட்கலாம்... காமராஜரை மட்டும் எப்படி நம்பிக்கை வைத்து ஆதரிப்பது என்று... அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், காமராஜர் இயல்பிலேயே எளிமையானவர். என்னுடைய மதிப்பின்படி மனித சுபாவத்தில் 100க்கு 90 பங்கு சுயநலமில்லாதவர். மக்கள் யாவருக்கும் சுயநலம் என்பது இயற்கையான ஒன்றுதான். என்றாலும் அந்த சுயநலம் அவரவர் தேவையை அவரவர் வாழ்க்கை நிலையை பொறுத்தது. காமராஜருக்கு அடிப்படை தேவைகளை விட வேறு எதுவுமே வேண்டியதில்லை.

    ஒரு மனிதனுக்கு நாணயம், நேர்மை, ஒழுக்கம் என்பது அவன் கொண்டிருக்கும் தேவையையும் லட்சியத்தையும் பொறுத்தது. அப்படிப்பட்ட தேவை என்பது காமராஜர் வாழ்க்கையில் அடிப்படை தேவை மட்டுமே. அவருக்கு எல்லாவற்றையும் விட இந்த தமிழ்நாட்டினை, தமிழர் நலனை உயர்த்திப் பிடிப்பது ஒன்றுதான் அவரது லட்சியம். வேறு எதுவும் இல்லை என்று குறிப்பிட விரும்புகிறேன் என்று பேசி, காமராஜரின் கொள்கைக்கும் நோக்கத்திற்கும் அவர் மேற்கொண்டிருக்கும் பயணத்திற்கும் விளக்கம் அளித்தார் பெரியார்.

    இப்படி விழுந்து விழுந்து நான் ஆதரிக்கின்ற காமராஜருக்கு நமது திராவிட கழகத்தின் எல்லா கொள்கைகளிலும் சம்மதம் இல்லை என்பதையும் நான் அறிவேன். அதுவே முழுக்க முழுக்க உண்மையாகும்.அதற்கான காரணத்தையும் நானே சொல்வது தான் பொருத்தமானதாகும்.

    இந்தியர்களுக்கு ஆட்சியில் பங்கு தரலாம் என்று நினைத்து வெள்ளைக்காரன் முதன் முதலில் 1919 -ல் இந்தியாவில் இரட்டை ஆட்சி முறையைக் கொண்டு வந்து வரி செலுத்துவோருக்கு மட்டுமே வாக்குரிமை தந்து நடத்திய தேர்தலின் போது காங்கிரசுக்கு பிரதான எதிர்க் கட்சியாக இருந்தது திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கட்சியான நீதி கட்சி தான். அது மட்டுமல்ல 1919 -ல் நடந்த முதல் தேர்தலில் இருந்து 1936 வரை நடந்த ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் சென்னை மாகாணத்தில் காங்கிரசை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்ததும் நீதிக் கட்சியே... எனவே நம் மீது காமராஜருக்கு கோபம் இருக்கலாம்... ஒரு உண்மையான கட்சிக்காரனுக்கு கொள்கையிலே, லட்சிய பிடிப்புள்ளவனுக்கு அப்படி ஒரு கோபம் இருப்பதை யாரும் தவறாக கருத முடியாது..

    காமராஜரின் குருநாதராக கருதப்பட்டவர் தானே சத்தியமூர்த்தி... அதே சத்திய மூர்த்தி தான் சட்ட மன்றத்திலும் வெளியிலே நடந்த பொதுக்கூட்டங்களி லும் நீதி கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியவர். அப்படிப்பட்ட சத்தியமூர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்டு அரசியலில் பயிற்சி அளிக்கப்பட்டு ஆளாக்கப்பட்டவர் தானே காமராஜர். ஆகவே திராவிடக் கட்சியின் மீதும் அதற்கு முன்னோடியாக இருந்த நீதிக் கட்சியின் மீதும் காமராஜருக்கு எந்த பரிவும் இருந்ததில்லை என்பது ஆச்சரியப் படத்தக்க விஷயமன்று என்று கருதியவர் தான் பெரியார். அதற்காக காமராஜர் மீது எந்த வருத்தமும் கொள்ளவில்லை. மாறாக... அவரவர் கட்சி கொள்கை அவரவருக்கு என்று தான் பெரியார் நினைத்தார்...

    தமது வாழ்நாளில் தான் சார்ந்திருக்கும் காங்கிரஸ் ஒன்றையே நேசித்தார் காமராஜர். காங்கிரசுக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தார் என்பது தானே அவரது வரலாறு. திராவிட இயக்கம் காங்கிரசை எதிரியாக நினைத்தாலும் காமராஜர் செய்யும் நன்மைகளை பார்த்து அவரை பாராட்டவே செய்தது.

    இதிலே பெரியார் மட்டுமல்ல.. பேரறிஞர் அண்ணாவும் 'காமராஜர் ஒரு வைரமணி' என்று காஞ்சி பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் காமராஜர் படத்தை திறந்து வைத்து பேசினார் என்பதையும் மகிழ்ச்சியோடு இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

    அடுத்த வாரம் சந்திப்போம்.

    Next Story
    ×