search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    5 விதான தோஷங்கள்
    X

    5 விதான தோஷங்கள்

    • நம்மிடம் பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழிவாங்குதல் பந்த தோஷமாகும்.
    • ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு பாதிப்பு ஏற்படலாம்.

    ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதி வைத்துள்ளனர். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது.

    அந்த தோஷங்கள் 1.வஞ்சித தோஷம், 2.பந்த தோஷம் 3.கல்பித தோஷம் 4.வந்தூலக தோஷம் 5. பிரணகால தோஷம் எனப்படும்.

    1. வஞ்சித தோஷம்:

    பார்க்கக் கூடாத படங்கள், வெறியூட்டும் காட்சிகள் காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி. அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சிததோஷம் எனப்பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும்.

    2. பந்த தோஷம்:

    நம்மிடம் பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழிவாங்குதல் பந்த தோஷமாகும்.

    இந்த தோஷத்துக்கு தந்தை,தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பந்த தோஷம் விலகும்.

    3. கல்பித தோஷம்:

    பிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும்.

    இத்தகைய தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்.

    4. வந்தூலக தோஷம்:

    ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு பாதிப்பு ஏற்படலாம். இவ்வாறு உருவாகும் தோஷம் வந்தூலக தோஷம் எனப்படும். வந்தூலக தோஷம் நீங்க வேண்டுமானால் வயதான தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். வேஷ்டி, புடவை, துண்டு, ரவிக்கைத் துணி ஆகியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலைத் தலத்திற்குச் சென்று முருகனைத் தரிசித்துப் பின் ஏழைத் தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.

    5. பிரணகால தோஷம்:

    திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல், பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு பிரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷத்தை தவிர்க்க வேண்டுமானால் அநாதை விடுதியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பிரணகால தோஷங்கள் நிவர்த்தியாகும்.

    இதே போன்று மேலும் சில தோஷங்கள் உள்ளன.


    தீட்டு தோஷம்

    சுபகாரியம் நடக்கும் வேளையில் அல்லது ஆலயத்தில் பெண்களுக்குத் தீட்டு ஏற்பட்டு விட்டால் அதனை ஒரு தோஷமாக நினைத்து இறைக்குற்றத்திற்கு ஆளாகி விட்டதாகப் பெண்கள் நிலை குலைந்து போவார்கள்.

    தீட்டு ஏற்பட்டுவிட்டால் அதனால் தோஷம் எதுவும் வராமல் இருக்க, கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து பெண்கள் நிம்மதி காணலாம்.

    ஆலயத்துக்குள் இருக்கும் போது தீட்டு ஏற்பட்டுவிட்டால், அந்த தோஷம் விலக ஆலயத்துக்கு வெளியில் வந்து ஆலய வாசலில் ஒரு கைப்பிடி மண் எடுத்து, வீட்டிற்குக் கொண்டு வந்து பசும்பாலில் போட வேண்டும். அதனைத் தேய்த்துக் குளிக்க வேண்டும். தீட்டு முடிந்த மறுநாளே எந்த ஆலயத்தில் தீட்டு ஏற்பட்டதோ அந்த ஆலயத்துக்கு ஒரு லிட்டர் பசும்பாலை அபிஷேகத்துக்காக கொடுத்து விட்டு வரவேண்டும். இப்படிச் செய்வதால் ஆலயத்துக்குள் ஏற்பட்ட தீட்டு தோஷம் விலகும்.

    ஆலயத்துக்குச் செல்ல முடியாதவர்கள் தீட்டு முடிந்த பிறகு ஒன்பது நாட்களுக்குத் தொடர்ந்து சூரிய நமஸ்காரம் செய்து வர தீட்டு தோஷம் விலகும்.

    பிறரிடம் ஏமாறும் தோஷம்

    ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லாமல் இருந்தால் அது அவயோகம் அல்லது கேமத்துருவ யோகம் என்று அழைக்கப்படும். இத்தகையோர் பலரால் ஏமாற்றப்படுவர்.

    மகாபாரதத்தில் தர்மர் இந்த அவயோகத்தில் பிறந்ததால் துரியோதனனிடம் சூதாட்டத்தில் நாட்டை இழந்தார். துரியோதனர்களால் ஏமாற்றப்பட்ட தர்மர். பகவான் கிருஷ்ணனைத் தஞ்சமடைந்தார். அவயோகத்தை நீக்கி மீண்டும் தர்மரிடம் நாட்டை மீட்டுக் கொடுப்பதற்காக, அவல் பொரி பாயாசம் வைத்து நைவேத்தியம் செய்து யாகம் செய்தார் கிருஷ்ண பகவான். அதன் பலனாக தர்மர் முற்பிறவி தோஷம் நீங்கி போர் செய்து நாட்டை மீட்டார்.

    எனவே தாங்கள் தங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லாமல் இருந்தால் கிருஷ்ணன் கோவிலில், வளர்பிறை ஏகாதசி திதியில் அவல் பொரி பாயாசம் வைத்து நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு வழங்கி, அவயோக தோஷம் நீங்க பெறலாம்.

    கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்ய முடியாதவர்கள் வளர்பிறை ஏகாதசி திதியில் தங்கள் வீட்டிலேயே அவல் பொறி பாயாசம் வைத்து நைவேத்தியம் செய்து, பாயாசத்தை முதலில் பசுமாட்டிற்குக் கொடுத்து விட்டு தனக்குத் தெரிந்தவர்களுக்கும் அயலாருக்கும் கொடுத்தால் தோஷம் நீங்கும்.


    கடன் தோஷம்

    லக்கனத்துக்கு 1 முதல் 12 வரை உள்ள கிரகங்கள் 6-வது வீட்டில் அமர்வதால் கடன் தொல்லை ஏற்படுகிறது. எளிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் கடன் தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    பரிகாரம்-1

    சென்ற பிறவியில் செய்த தவறுகளால் இந்தப் பிறவியில் ஏற்பட்ட கடன் தொல்லையில் இருந்து மீள, 3 பவுர்ணமி நாட்களில் அவரவர் குலதெய்வங்களை வழிபட்டு வந்தால் கடன் தொல்லை படிப்படியாகக் குறையும். கடனை அடைத்துவிடலாம்.

    பரிகாரம் -2

    குலதெய்வம் அருகில் இல்லாமல் வெகு தூரத்தில் வசிப்பவர்கள் அவர்கள் வீட்டிலேயே குலதெய்வ படத்தை வைத்து அல்லது குலதெய்வம் உள்ள ஊர் திசையை நோக்கி 5 முக நெய்விளக்கு ஏற்றி, 9 பவுர்ணமி நாட்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் கடன் சுமை குறையும். 90 நாட்களுக்குள் கடனை அடைத்துவிடலாம். உங்களுக்கு வர வேண்டிய பாக்கி இருந்தாலும் வசூலாகிவிடும்.

    பரிகாரம்-3

    9 பவுர்ணமி நாட்கள் குலதெய்வப் பூஜை செய்வதோடு, படித்தவர்களாக இருந்தால் கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலையில் ஒரே நேரத்தில் 9 முறை சொல்லி வழிபட்டு வந்தால், கடன் சுமை படிப்படியாகக் குறைந்து, 90 நாட்களில் பெருமளவு கடனைக் கட்டி நிம்மதி பெறலாம். வரவேண்டிய பாக்கிகளும் வசூலாகி விடும்.

    கல்வி மந்த தோஷம்

    கல்வியில் மந்தம் உள்ள பிள்ளையை அருகில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு சனிக்கிழமை தோறும் அழைத்துச் சென்று வணங்கச் செய்யுங்கள்.

    கிரக தோஷங்கள்

    சோழிங்கரில் தக்கான் திருக்குளத்தில் நீராடி ஸ்ரீசுமிந்த பலவல்லி தாயார் சமேத ஸ்ரீயோக நரசிம்மரை. ஸ்ரீயோக ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும். அதர்வண வேதத்தில் அடங்கியுள்ள அனைத்து மந்திர சக்திகளும் ஸ்ரீநரசிம்மனின் வலது கால் கட்டை விரலின் நுனியில் அடங்கியுள்ளதாக புராதன நூல்கள் விளக்கியுள்ளன

    ஆதலால் மனநலம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக உள்ள அனைத்து கிரக தோஷங்கள் மற்றும் பில்லி, சூன்யம், வைப்பு ஆகிய அனைத்து செய்வினை தோஷங்களும் இந்த தாயார், ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீயோக ஆஞ்சநேயர் ஆகிய மூவரையும் ஒரே தினத்தில் அதுவும் கார்த்திகை ஞாயிறு தினத்தில் தரிசிப்பதால் நீங்கி விடும்

    பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷம்

    மனிதர்களுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று எடுத்து கூறும் சக்தியும். தகுதியும் பல்லிக்கு உள்ளது. எனவே மதிக்கத் தகுந்த ஜீவராசியாக பல்லி கருதப்படுகிறது. ஆதலால் அதனைக் கொன்றால் தோஷம் ஏற்படும்.

    அத்தகைய தோஷம் ஏற்பட்டால், காஞ்சி புரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் சந்திர, சூரியர்களாக காட்சி தரும் பல்லி உருவங்களை தொட்டு வணங்குவதும், மூகாம்பிகை கோவில்களில் உள்ள பல்லி உருவத்தை தொட்டு வணங்குவதும் இதற்கு பரிகாரமாக கூறப்படுகிறது. பொதுவாக எந்த ஜீவராசிகளையும் கொல்லாது இருப்பது சந்ததிக்கு சிறப்பையும், மேன்மையையும் தரும்.

    தோஷங்கள் தொடர்ச்சி

    அடுத்த வாரம் தொடரும்....

    Next Story
    ×