search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திருப்பதி மலைவாழும் வெங்கடேசா!
    X

    திருப்பதி மலைவாழும் வெங்கடேசா!

    • திருவேங்கடம் என்பது எதைக் குறிக்கிறது? வடமொழியில் வேம் என்றால் பாவம் என்று பொருள். கடா என்றால் அழித்தல்.
    • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது உண்மையல்லவா? திருமாலின் அவதாரமான கண்ணன் முழுமுதல் கடவுள் என்ற உண்மையை அவன் மறந்தான்.

    பன்னிரண்டு தமிழ் மாதங்களில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு மிகவும் விசேஷமான மாதம் புரட்டாசி. அதிலும் அவருக்கு இன்னும் கூடுதல் விசேஷமான நாள் புரட்டாசி சனிக்கிழமை.

    இந்த நாளில் விரதமிருந்து திருமலையில் உறையும் வேங்கடவனை வழிபட்டுத் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பெறும் பக்தர்கள் பற்பலர்.

    அசைவம் உண்பவர்கள் புரட்டாசி புண்ணிய மாதம் என்பதால் அந்த மாதத்தில் அசைவ உணவைத் தவிர்ப்பது வழக்கம். புரட்டாசி மாதம் தூய நினைவுகளோடு வெங்கடாசலபதியை வழிபடுவதற்குரிய புனித மாதம்.

    திருவேங்கடம் என்பது எதைக் குறிக்கிறது? வடமொழியில் வேம் என்றால் பாவம் என்று பொருள். கடா என்றால் அழித்தல். வேங்கடவன் என்றால் பாவங்களை அழிப்பவன் என்று பொருள்.

    தன்னை தரிசிக்கும் அன்பர்களின் பாவங்களையெல்லாம் அடியோடு வேரறுத்து அழிக்கும் கடவுளாக வேங்கட மலையில் காட்சி தருகிறான் திருமாலாகிய வேங்கடவன்.

    எனவே வேங்கடவனை தரிசித்துப் பாவங்களை நீக்கிக் கொண்டு, இனிப் பாவம் புரியாமல் இருக்கும் மன உறுதியையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அப்படியானால் நம் வாழ்வில் மிக எளிதாக நாம் முன்னேறலாம். படிப்படியாகத் தன்னை நாடி மேலே மலையேறி வரும் பக்தர்களை வேங்கடவன் படிப்படியாக வாழ்வில் மேலே மேலே உயர்த்துகிறான்.

    பன்னிரண்டு ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் என்ற பெருமையை உடையது திருப்பதி.

    `ஊனேறு செல்வத்து உடற்பிறவி

    யான்வேண்டேன்

    ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்

    கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து

    கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே'.

    `ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ

    வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்

    வேண்டேன்

    தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச்

    சுனையில்

    மீனாய்க் கிடந்தியங்கும் விதியுடையன்

    ஆவேனே'.

    `செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

    நெடியானே வேங்கடவா நின்கோயில்

    வாசலிலே

    அடியாரும் வானவரும் அரம்பையரும்

    கிடந்தியங்கும்

    படியாய்க் கிடந்துநின் பவழவாய்

    காண்பேனே!'.

    என்றெல்லாம் திருவேங்கடத்தில் மீனாகவும் வாயிற்படியாகவும் கொக்காகவும் செண்பக மரமாகவும் காட்டாறாகவும் இன்னும் பலவாறாகவும் இருந்து வேங்கடவன் பேரழகை தரிசித்துக் கொண்டே இருக்க விரும்புவதாகக் குலசேகர ஆழ்வார் பாடிப் பரவுகிறார்.

    துவாபர யுகத்தில் திருமாலின் கிருஷ்ணாவதாரம் நடைபெற்றது. அப்போது கண்ணன் கோகுலத்தில் வசித்த கோபர்களால் கொண்டாடப்பட்ட கடவுளாக விளங்கினான்.

    திரேதா யுகத்தில் ராமன், தான் கடவுள் என்பதை ஒளித்து வாழ்ந்தான். ஆனால் துவாபர யுகத்தில் கண்ணன் தான் கடவுள் என்பதை அறிவித்து வாழ்ந்தான்.

    `வழக்கம்போல் இந்திரனுக்கு பூஜை செய்ய வேண்டாம், கோவர்த்தனகிரி தானே நமக்கெல்லாம் செல்வங்களை அள்ளித் தருகிறது, நாம் மேய்க்கும் ஆனிரைகளுக்கு வேண்டிய புல் முழுவதும் கோவர்த்தனகிரியில் தானே விளைகிறது.

    நாம் பறித்து உண்ணும் சுவை மிகுந்த கனிகளையெல்லாம் கோவர்த்தன கிரியில் உள்ள மரங்கள் தானே கொடுக்கின்றன! இந்த ஆண்டு கோவர்த்தன கிரிக்கே பூஜை செய்யுங்கள்!` என கோபர்களுக்கு அறிவுறுத்தினான் கண்ணன்.

    கண்ணன் வாக்கைப் பெரிதும் மதித்த கோபர்கள், கண்ணனின் வளர்ப்புத் தந்தை நந்தகோபன் தலைமையில் ஒன்றுகூடி ஆலோசித்தனர். கண்ணன் சொன்னபடி கோவர்த்தன கிரிக்கே பூஜை செய்வது என முடிவு செய்தனர்.

    கோவர்த்தன கிரி பூஜை முன்னெப்போதும் இல்லாத அளவு பிரமாண்டமான முறையில் கோலாகலமான திருவிழாவாக நடைபெற்றது.

    ஒவ்வோர் ஆண்டும் தனக்கு பூஜை செய்யும் கோபர்கள் இவ்வாண்டு தனக்கு பூஜை நிகழ்த்தாமல் கோவர்த்தன கிரிக்கு பூஜை நிகழ்த்தியதால் கடும் ஆத்திரமடைந்தான் தேவர்களின் அரசனான தேவேந்திரன்.

    ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது உண்மையல்லவா? திருமாலின் அவதாரமான கண்ணன் முழுமுதல் கடவுள் என்ற உண்மையை அவன் மறந்தான்.

    பெருமழை பொழிந்து கோபர்களுக்கு இடையூறு தருமாறு வருணனை ஏவினான் இந்திரன். தேவலோக அரசனான இந்திரனின் ஆணையை வருணன் தட்ட இயலாதே? கோகுலத்தில் பிரளய கால மழைபோலப் பெருமழை தொடர்ந்து விடாமல் பொழியத் தொடங்கியது.

    கோகுலத்து மக்கள் அனைவரும் அடுத்து என்ன நடக்குமோ என எண்ணி அச்சமடைந்தனர். கண்ணன் திருவடியைத் தஞ்சமடைந்தனர்.

    அவர்கள் அனைவரையும் தன் அருகே வரச் செய்த கண்ணன் கோவர்த்தனகிரியைத் தன் சுண்டு விரலால் தூக்கி நிறுத்தி, அதனடியில் அவர்களை நிற்க வைத்தான். ஒரு சொட்டு மழை கூட அவர்கள் மேல் விழாதவாறு அவர்களைக் காத்தான்.

    இவ்விதம் ஏழு நாட்கள் மழை மக்கள்மேல் விழாதவாறு தாங்கி நின்றான்.

    அதன் பின்னர் இந்திரன், கண்ணன் முழுமுதல் கடவுளே என்ற உண்மையை உணர்ந்து மழையை நிறுத்தி கண்ணனின் திருவடிகளைப் பணிந்து மன்னிப்புக் கேட்டான் என்கிறது கண்ணன் கதையை விரிவாகச் சொல்லும் பாகவத புராணம்.

    கோவர்த்தனகிரி ஏழு நாட்கள் தன்னைத் தாங்கிய திருமாலை, அதன் நன்றிக் கடனாகவே, கலியுகத்தில் ஏழுமலையாகித் தாங்குகிறது என்று சொல்லப்படுகிறது.

    சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய இந்த ஏழும் இங்குள்ள அழகிய ஏழு மலைச் சிகரங்களின் பெயர்கள்.

    திருப்பதி வெங்கடேஸ்வர ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது எனத் தெரியவில்லை. மிகப் பழங்காலத்தில் இருந்தே இந்தக் கோவில் இந்த மலைமேல் காணப்படுகிறது.

    இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம், சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலை ஆகிய சங்க காலத்தை ஒட்டி எழுந்த பழங்காப்பியங்களிலேயே வேங்கடம் பற்றிய குறிப்பு உள்ளது.

    சோழர், பாண்டியர், பல்லவர், சாளுக்கியர், விஜயநகர மன்னர்கள் போன்றோரால் வழிவழியாக இந்தக் கோவில் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப் பட்டு வந்திருக்கிறது.

    வேங்கடவன் எழுந்தருளி இருக்கும் திருப்பதி கோவிலைப் பராமரிப்பதை ஒரு புனிதச் செயலாக அன்றைய மன்னர்கள் கருதியிருக்கிறார்கள். இங்கேயுள்ள பல கல்வெட்டுகள், முக்கியமாகத் தமிழ்க் கல்வெட்டுகள் இத்தகவல்களைத் தெரிவிக்கின்றன.

    விஜயநகரத்தை ஆண்டுவந்த மன்ன ரான ஸ்ரீகிருஷ்ண தேவராயர் திருப்பதி வேங்கடவன்மேல் அளவற்ற பக்தி கொண்ட வராக வாழ்ந்திருக்கிறார். அவர் இந்தத் திருக்கோவிலுக்குப் பல விலைமதிப்புடைய ஆபரணங்களை வழங்கியுள்ளார்.

    பின்னர் வந்த பற்பல மன்னர்களும் கூட, வேங்கடவனின் செல்வத்திற்குத் தங்களால் இயன்ற வகையில் வளம் சேர்த்திருக்கிறார்கள்.

    சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான நம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் என்கிற கோதை நாச்சியார் பாடிய திருப்பாவைத் தமிழ்ப் பாடல்கள் மார்கழி மாதத்தில் திருப்பதியில் நாள்தோறும் ஒலிக்கின்றன.

    கண்ணன்மேல் ஆண்டாள் கொண்ட காதலைப் போற்றும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் உன்னதமான பக்தியைத் திருப்பதி கொண்டாடுகிறது.

    திருமலைக் கோவிலில் தினமும் அதிகாலையில் ஒலிப்பது ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் என்ற சமஸ்கிருத சுலோகம். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரால் எழுதப்பட்ட புகழ்பெற்ற சுலோகம் இது.

    திருப்பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயிலெழுப்புகிற முறையில் அமைவது. ஆன்மிக விழிப்பின்றி மாயை என்ற நித்திரையில் தோய்ந்திருக்கும் ஆன்மாவைத் துயிலெழுப்பி அதற்கு பரமான்மாவைச் சென்று சேர வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் திருப்பள்ளியெழுச்சி பாடப் படுவதாகச் சொல்லப்படுகிறது.

    சமஸ்கிருதத்தில் அமைந்துள்ள திருப்பள்ளி எழுச்சிப் பாடலான வெங்கடேச சுப்ரபாதம் `கவுசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே` எனத் தொடங்குகிறது.

    அயோத்தியில் இருந்து சிறுவர்களான ராம லட்சுமணர்களைக் கானகத்திற்கு தம் வேள்வியைப் பாதுகாக்கும் பொருட்டு அழைத்துச் சென்றார் விஸ்வாமித்திர மகரிஷி.

    அதிகாலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராமபிரானின் பேரழகைக் கண்ணால் பருகியவாறே, `கோசலையின் புதல்வனே துயிலெழுவாய்!` எனக் கூறி அவர் துயிலெழுப்பினாராம்.

    வெங்கடேச சுப்ரபாதப் பாடலைப் பாடி இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி பெரும்புகழ் பெற்றார். பக்திச் சுவை நனிசொட்டச் சொட்ட வெங்கடேச சுப்ரபாதத்தைப் பாடிய எம்.எஸ். சுப்புலட்சுமிக்குத் திருப்பதியில் சிலை வைக்கப் பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

    பழனி என்றால் உடனே முருகப் பெருமானுடன் இணைந்து நமக்கு ஞாபகம் வருவது பஞ்சாமிர்தம். அதுபோல, திருப்பதி என்றால் நம் அனைவரின் நினைவிலும் தோன்றி நம் மனத்தைத் தித்திக்க வைப்பது வேங்கடவன் பிரசாதமான லட்டு. திருப்பதி லட்டு உலகப் புகழ்பெற்று விட்டது.

    இந்த லட்டு சர்க்கரை கடலைப் பருப்பு நெய் முந்திரிப் பருப்பு உலர் திராட்சை பச்சைக் கற்பூரம் ஏலக்காய் குங்குமப்பூ போன்ற பொருட்களால் பிரத்தியேகமான ஒரு கூட்டுக் கலவை முறையில் தயாரிக்கப்படுகிறது.

    திருப்பதி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வேங்கடவனின் திருவருளை லட்டு மூலம் இனிக்க இனிக்கப் பெற்றுக் கொள்கிறார்கள்.

    இந்தியாவிலேயே மிக அதிக வருமானம் உள்ள கோவில் வேங்கடவன் திருக்கோவில்தான். ஏழுமலையானுக்கு வேண்டிக் கொண்டு முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் ஏராளமானோர். முடி காணிக்கை வருமானத்தின் மூலமே பற்பல கோடிகளைச் சம்பாதிக்கிறது தெய்வீகத் திருத்தலமான திருப்பதி.

    எண்ணற்ற அடியவர்களை இன்றளவும் தன்னை நோக்கி இழுக்கின்ற சக்தி திருப்பதி வேங்கடவனுக்கு அமைந்துள்ளது. எல்லா மாதத்திலும் வேங்கடவனைத் தொழலாம் என்றாலும், புரட்டாசி மாதத்தில் மலையப்பனான வேங்கடவனைத் தொழுதால் அவன் பொங்கிப் பெருகும் தன்னுடைய அருளால் நம்மை இன்பத்தில் ஆழ்த்தி மலைக்க வைப்பான்.

    புரட்டாசி மாதம் அவன் அருளை விரைந்து பெற ஏற்ற மாதம். புரட்டாசியில் வேங்கடவனைத் தொழுது புண்ணியம் அடைவோம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×