என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
- ரத்தம் கொடுப்பவரின் உடலில் இயற்கையாக புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
- 100 முறை ரத்த தானம் செய்தாலும் அவர்கள் உடலில் எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி நலமுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
தானம்...
மற்றவர்களுக்கு தேவைப்படும் போது நாம் செய்யும் உதவிக்கு தானம் என்று பெயர். தானங்களில் எத்தனையோ வகை உள்ளன. பசித்தவர்களுக்கு உணவு வழங்குவது அன்னதானம், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிப்பது ஞானதானம், ஏழைகளுக்கு ஆடைகள் கொடுப்பது ஆடை தானம். இதேபோல பல தானங்கள் உள்ளன.
இவற்றில் சிறந்த தானமாக ரத்த தானம் கருதப்படுகிறது. உடலில் எத்தனையோ உறுப்புகள் இருந்தாலும் நாம் உயிர் வாழ வேண்டும் என்றால் மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய 5 உறுப்புகள் மிக முக்கியமானவை. இதையும் விட ஒன்று முக்கியம் என்றால் அது ரத்தம். முக்கியமான 5 உறுப்புகள் மட்டுமல்லாமல் அனைத்து உறுப்புகளும் இயங்க வேண்டுமானால் அதற்கு ரத்தம் இன்றியமையாதது. ரத்தம் நமது உடலில் உள்ள திரவ உறுப்பு ஆகும்.
இதயம் சுருங்கி விரியும் போது அதில் இருந்து உடலில் உள்ள அனைத்து ரத்த நாளங்களுக்கும் ரத்தம் செல்கிறது. ரத்தம் செல்ல வில்லை என்றால் எந்த உறுப்பும் செயல்படாது. விபத்தில் சிக்குபவர்களில் பலர் ரத்தம் அதிகளவில் வெளியேறி உயிரிழக்கிறார்கள். அவர்கள் உடலில் பெரிய அளவில் காயங்கள் ஏற்பட்டு இருக்காது. ஆனால் ஏதாவது ஒரு இடத்தில் ரத்த நாளம் உடைந்து அதில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறி விடுகிறது. உடலில் ரத்தம் இல்லையென்றால் உறுப்புகள் இயங்காமல் உயிர் பிரிந்து விடுகிறது. சில நேரங்களில் சிக்கலான பிரசவத்தின் போது பெண்களுக்கு அதிக ரத்தம் வெளியேறி அவர்கள் உயிரிழக்கிறார்கள். இதனால் ரத்தமானது நாம் உயிர் வாழ இன்றியமையாததாகிறது.
பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கூடுதலாக ரத்தம் தேவைப்படுகிறது. விபத்தினால் ரத்த இழப்பு ஏற்பட்டவர்களுக்கும், தீக்காயம் அடைந்தவர்களுக்கும், ரத்த சோகை உள்ளவர்களுக்கும், பிரசவ காலத்தில் ஏற்படும் ரத்த இழப்பிற்கும், ரத்த புற்றுநோய் தாக்கியவர்களுக்கும் உயிர்காக்கும் மருந்தாக ரத்தம் தேவைப்படுகிறது. இதுதவிர தலசீமியா நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் ரத்தம் அதிகம் தேவைப்படுகிறது.
ஒரு நபருக்கு மேஜர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள 4 பாட்டில் ரத்தமும், கல்லீரல், கர்ப்பப்பை அகற்றம், வயிறு, பெரிய புற்று நோய் கட்டிகள் அகற்றம் போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு 6 முதல் 8 பாட்டில்கள் ரத்தம் தேவைப்படும். இதேபோல பைபாஸ் அறுவை சிகிச்சைக்கும் அதிக ரத்தம் தேவைப்படும்.
ரத்தம் என்பது ஆலையில் தயாரிக்கப்படு வதில்லை. செயற்கை ரத்தம் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அது உடலில் தானாக ஊறக்கூடியது. அதனால் ஒருவருக்கு தேவைப்படும் ரத்தத்தை மற்றொருவர் தானமாக கொடுக்கிறோம். உதாரணத்துக்கு எதாவது ஒரு பிரச்சினையால் தாயாருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொ ள்வோம். உடனே அவருக்கு ரத்தம் வழங்க மகளோ, மகனோ முன் வருகிறார்கள். அவர்களது ரத்தம் தாயாரின் ரத்தத்துடன் ஒத்துப்போக வேண்டும். அதனை சோதிப்பதற்கே 6 மணி நேரம் ஆகி விடும். உடனடி தேவைக்கு அந்த தாயாரின் ரத்த வகையுள்ள ஏற்கனவே சேமிக்கப்பட்ட கொடையாளியின் ரத்தத்தை செலுத்துவதே சிறந்ததாக இருக்கும். அப்போது தான் அந்த தாயின் உயிரை காப்பாற்ற முடியும்.
18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைத்து ஆண்களும், பெண்களும் ரத்த தானம் செய்யலாம். அரசு ரத்த வங்கிகள் மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் ரத்த வங்கிகளில் மட்டுமே ரத்த தானம் செய்ய வேண்டும். அரசு ரத்த வங்கிகள் நடத்தும் ரத்த தான முகாம்களிலும், அனுமதி பெற்ற தனியார் ரத்த வங்கிகள் நடத்தும் முகாம்களிலும் ரத்த தானம் செய்யலாம். நம் ஒவ்வொருவருடைய உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் ரத்த தானத்தின் போது எடுக்கப்படும் ரத்தம் 350 மில்லி லிட்டர் மட்டுமே.
நாம் கொடுக்கும் ரத்தம் உடனடியாக தேவைப்படாத நிலையில் ரத்த வங்கிகளில் சேமித்து வைக்கப்படுகிறது. தேவைப்படும்போது அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். ரத்த வங்கியில் வெவ்வேறு வகையாக ரத்தம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். மைனஸ் 4 டிகிரியில் இருந்து மைனஸ் 20 டிகிரி அளவில் பாதுகாப்பாக வைத்திருப்பர். கொடையாளி அளிக்கும் ரத்தம் அதற்கென உள்ள கருவி மூலம் பிரிக்கப்படும். அதில் பிளாஸ்மா என்ற ஒரு மஞ்சள் நிற திரவம் இருக்கும். ரத்தத்தில் 40 சதவீதம் பிளாஸ்மா இருக்கும். மேலும் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் ஆகியவையும் ரத்தத்தில் இருந்து பிரிக்கப்படும். இதில் பிளாஸ்மா தீக்காயம் பட்டவர்களுக்கு உபயோகப்படுத்தப்படும்.
ரத்த சிவப்பணுக்கள் ரத்த சோகை உள்ளவர்களுக்கு பயன்படுத்தப்படும். டெங்கு போன்ற காய்ச்சல் வருபவர்களுக்கு ரத்த தட்டணுக்களும், தொற்று அதிகமாக இருப்பவர்களுக்கு ரத்த வெள்ளையணுக்களும் பயன்படுத்தப்படும். இவ்வாறு நாம் கொடுக்கும் 350 மில்லி ரத்தம் 4 பேர் உயிரை காப்பாற்றும். எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் காப்பாற்ற முடியாத உயிரை உங்கள் ரத்தம் காப்பாற்றுகிறது. எனவே ரத்த தானம் தான் உயிர் தானம், பெரிய தானம்.
ஒரு நபர் 3 மாதத்துக்கு ஒரு முறை என கணக்கில் எடுத்துக் கொண்டு ஆண்டுக்கு 4 முறை ரத்த தானம் செய்யலாம். எனக்கு தெரிந்து பலர் 100 முறைக்கு மேல் ரத்தம் கொடுத்துள்ளனர். 100 முறை ரத்த தானம் செய்தாலும் அவர்கள் உடலில் எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி நலமுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
ரத்த தானம் செய்த அன்றே உணவு சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்லலாம். அன்று ஒரு நாள் மட்டும் கடினமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது. மற்றபடி எந்த பிரச்சினையும் இருக்காது. நம்மிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் ஒரு வாரத்துக்குள்ளோ, 10 நாளைக்குள்ளோ ஊறி விடும். எனவே ரத்த தானம் தர தகுதி உடையவர்கள் ரத்த தானம் செய்ய தயங்க வேண்டாம். பாதுகாப்பான ரத்தத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த தேவையை பூர்த்தி செய்வதில் தன்னார்வ ரத்த கொடையாளர்களின் பங்கு பாராட்டக்கூடியது ஆகும்.
ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல, நாமும் தான். ரத்தம் கொடுப்பவரின் உடலில் இயற்கையாக புதிய ரத்தம் உற்பத்தியாகும். இதனால் புத்துணர்வு கிடைக்கும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும். மேலும் மாரடைப்பு வருவது குறைக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தம் கொடுப்பவர்களின் உடல் எடை குறைந்தது 45 கிலோ மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராம் அளவுக்கு மேல் இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.
தானமாக பெறப்பட்ட ரத்தம் நோய் தொற்று இருக்கிறதா என பரிசோதிக்கப்படும். எச்.ஐ.வி. மஞ்சள் காமாலை, பால்வினை மற்றும் மலேரியா போன்றவை இருந்தால் சேகரிக்கப்பட்ட ரத்தம் பயன்படுத்தப்படுவது இல்லை. பால்வினை, எச்.ஐ.வி. நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. அவர்களின் ரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்தினால் அந்த நோய் அவர்களுக்கும் வந்து விடும். எனவே அவ்வாறு நோய் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் சேகரிக்கப்படாது. ஸ்டீராய்ட், ஹார்மோன் தொடர்பான மருந்துகள் உட்கொள்ளும் போதும், போதை மருந்து உட்கொள்பவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. பல்வேறு நோய் தடுப்பூசிகள், மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது ரத்த தானம் செய்யக்கூடாது.
பெரிய அறுவை சிகிச்சை செய்த 6 மாதங்களுக்கும், சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட 3 மாதங்களுக்கும் ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். மலேரியா நோய் சிகிச்சை பெற்ற மூன்று மாதங்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது. மஞ்சள் காமாலை சிகிச்சை பெற்ற ஒரு ஆண்டு வரை தவிர்ப்பது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களும் ரத்த தானம் செய்வதை தவிர்க்கலாம். பெண்கள் கருவுற்றிருக்கும் போதும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் போதும் தவிர்க்கவும். மாதவிடாய் நேரங்களில் பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.
மனிதர்களுக்கு உள்ள ரத்த வகைகள் ஏ, பி, ஏபி, ஓ என 4 வகைப்படும். அதில் பாசிட்டிவ், நெகட்டிவ் என மொத்தம் 8 வகைகளில் பிரித்துள்ளனர். இவற்றை தவிர பாம்பே ரத்தம் எனப்படும் அரிய வகை ரத்தம் ஒன்றும் உள்ளது. அந்த வகை ரத்தம் உலகில் மிக குறைந்த எண்ணிக்கையிலான நபர்களிடம் தான் உள்ளது.
ரத்த சிவப்பணுக்களின் உள்ளே ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உள்ளது. அது தான் ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை கொடுக்கிறது. ஹீமோகுளோபின் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்தச்சோகை ஏற்படும்.
ஹீமோகுளோபின் அளவு சாதாரணமாக இருக்க வேண்டியது 10 கிராம் முதல் 16 கிராம் வரைக்கும் இருக்கலாம். ரத்தச் சோகை இருப்பவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 6, 7 கிராமில் தான் இருக்கும். சில நேரங்களில் ரத்த புற்றுநோய் கூட ரத்த சோகை போல் தான் தோன்றும். எனவே ரத்த சோகை இருப்பவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவசியம் இருந்தால் மஜ்ஜையில் இருந்தும் ரத்தத்தை எடுத்து சோதித்து பார்ப்பார்கள். இதற்கு சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர்.
அவர்கள் ரத்த சோகை சீராக மருந்து சாப்பிட வேண்டுமா, இரும்புச்சத்து ஊசி போட வேண்டுமா அல்லது ரத்தம் ஏற்ற வேண்டுமா? என்பதை முடிவு செய்வார்கள்.
உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில் சிறுநீரக பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நல்ல உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற வழிமுறைகளை பின்பற்றினால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்.
தொடர்புக்கு:
info@kghospital.com, 98422 66630






