என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மங்கல சீர் தரும் சித்திரை
    X

    மங்கல சீர் தரும் சித்திரை

    • ராசி மண்டலத்தில், முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது சித்திரை முதல் நாளாகும்.
    • சித்திரை முதல் நாளில் எல்லா நதிகளும் தங்கள் பாவங்களை தீர்த்துக் கொள்வதற்காக தாமிரபரணியில் நீராடி தூய்மை பெற்றன.

    சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. இக்காலத்தில் மாமரங்களில் மலர்கள் பிஞ்சுகளாகி வடுக்களாகி பால் பிடித்து காயாக உருமாறும் பருவமாகும்.

    தமிழ் நாட்டில் சித்திரை தொடங்கியே வருடம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது. குறிப்புகளில் சித்திரையை 'முதல் மாதம்' என்றும், பங்குனியைக் 'கடை மாதம்' என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல சித்திரையில் சூரியன் சஞ்சரிக்கும் மேஷ ராசியைத் 'தலை' என்றும், 'தலை ராசி' என்றும் சொல்லியுள்ள குறிப்புகள் உள்ளன.

    தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும் என்பதால் தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை ஆகும். புதிய ஆண்டுக்கு தொடக்கமும் ஆகும்.இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்

    சித்திரை முதல் நாள். தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ராசி மண்டலத்தில், முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது சித்திரை முதல் நாளாகும்.

    அன்று அதிகாலை எழுந்ததும் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மங்களப் பொருட்களைக் காண்பது வழக்கம். முக்கிய நாளான அன்று கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு ஆண்டை துவங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

    பல முக்கிய அவதாரங்கள் மட்டுமில்லாமல் சித்திரை மாதத்தில் மகான்கள் அவதரித்துள்ளனர். திருமாலின் நரசிம்ம அவதாரம், பரசுராமர் அவதாரம் போன்ற அவதாரம் நிகழ்ந்தது இம்மாதத்தில் ஆகும்.

    ஸ்ரீராம நவமி சித்திரையிலும் வரும். சில கோயில்களில் கர்ப்ப உற்சவமாகவும், சில கோயில்களில் ஜனன உற்சவமாகவும் வெவ்வேறு தினங்களில் அதனைக் கொண்டாடுகின்ற வழக்கம் உண்டு.

    சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியே "சித்ரா பவுர்ணமி" ஆகும். சூரியனின் மறைவும், சந்திரனின் உதயமும் அன்று பெரும்பாலும் ஒரே நேரத்தில் நிகழும் நாள் இதுவாகும். சம பகல் சம இரவு நாள் எனவும் கூறுவார்கள்.

    இம்மாதம் அட்சய திருதியை வரும், அட்சய திருதியையன்று எந்த நல்ல காரியமும் ஆண்டவனை துதித்துச் செய்தால் வெற்றி உண்டாகும், அட்சயதிருதியை நாட்களில் வீட்டுக்குத்தேவையான பொருட்கள் வாங்கினால் குடும்பம் நன்கு விளங்கும் என்பது நம்பிக்கை.

    அன்றைக்கு இலக்குமி வாசம் செய்யும் உப்பை ஒரு குறைந்த அளவாவது வீட்டுக்கு வாங்க வேண்டும். தங்கத்தாலான ஆபரணங்கள் வாங்கினால் வருடம் முழுவதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.

    வளர்பிறையில் வரும் திருதியை. இந்தத் திருதியை திதியில் தான் பெருமாள் மச்ச அவதாரம் எடுத்தார். குதிரை முகம் கொண்ட சோமுகாசுரனை அழித்து வேதங்களை மீட்டெடுத்தார். எனவே பெருமாளுக்கு மிகவும் உரிய இந்த அட்சய திருதியை நாளில் துவங்கப்படும் எந்தக் காரியங்களும் வளர்பிறை போல் வளர்ந்து நிறைவான பலனைக் கொடுக்கும் என்று ஜோதிட சாத்திரம் தெரிவிக்கிறது.

    அன்றைய தினம் பொருள் வாங்கினால் அது பன்மடங்கு வளரும் என்கிற நம்பிக்கையில், தங்கம், வெள்ளி, போன்ற பொருள்களை வாங்குகின்றோம். அட்சய திருதியை அன்று நாம் முன்னோருக்கு திதி செய்து, தானம் செய்ய வேண்டும். அன்று தயிர் சாதத்தை தானம் செய்தால் ஆயுள் பலம் அதிகரிக்கும். இனிப்பு தானம் செய்தால் திருமணத் தடைகள் அகலும். கால்நடைகளுக்கு தீவனம் போட்டால் வாழ்வு வளம் பெறும். அன்று எந்த தானத்தையும் முழுமனதோடு செய்யலாம். அந்த தானம் அதனுடைய பலனை ஆயிரம் மடங்குகளாக வளர்ப்பதுதான் அட்சய திருதியை. அட்சய திருதியை அன்று கும்பகோணம் வீதிகளில் 12 கருடசேவை மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    சித்திரை முதல் நாளன்று நம்முடைய தமிழகத்தில் மட்டும் இல்லாமல், கேரளாவிலும் சைத்ர விஷூ கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதத்தின் கடைசி நாளில் அவர்கள் தங்கள் பூஜை அறையில், தங்கம், வெள்ளி, மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், பழங்கள், காய்கறிகள், புத்தாடைகள், கண்ணாடி, தானியங்கள், தேங்காய் முதலிய அத்தனை மங்கலப் பொருட்களையும் வைப்பார்கள். சித்திரை முதல் நாள் காலையில் விடிந்ததும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு நேராக பூஜை அறைக்குச் சென்று இந்த மங்கலத்தில் கண் விழிப்பார்கள். இதனை விஷுக்கனி காண்டல் என்பர். இதன்மூலமாக அந்த வருடம் முழுக்க மங்கல நாட்களாக அமையும் என்பது நம்பிக்கை.

    கேரளாவில் கோவில்களில் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணயம் வழங்குவார்கள். இதற்கு கை நீட்டம் என்று பெயர். அதுமட்டுமன்றி புது வருடப் பிறப்பன்று, சிறியவர்கள் பெரியவர்களிடம் ஆசி பெற்று நாணயம் பெறுவதும் கைநீட்டம் எனப்படுகிறது.

    இந்திர விழா தேவர்களின் தலைவனான இந்திரனைச் சிறப்பிக்க எடுக்கப்பட்ட விழாவாகும். சிலப்பதிகாரத்தில் பூம்புகாரில் இந்திர விழா, சித்ராபவுர்ணமி அன்று நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    சித்திரை மாதத்தின் முதல் நாளில், பஞ்சாங்க படனம் நடக்கும். அன்று பஞ்சாங்கம் படிப்பது என்பது சிறப்பாகும். பஞ்சாங்கம் என்பது திதி, நட்சத்திரம், நாள் (வாரம்),யோகம், கரணம் என்ற ஐந்து அங்கங்களைப் படிப்பது. இதில் திதியைச் சொல்வதால் மகாலட்சுமியின் அருளும், நட்சத்திரத்தைச் சொல்வதன் மூலமாக பாவங்களில் இருந்து விடுதலையும், நாளைச் சொல்ல ஆயுள் விருத்தியும், யோகத்தைச் சொல்ல நோயிலிருந்து விடுதலையும், கரணத்தைச் சொல்வதால் செய்கின்ற செயலில் வெற்றியும் கிடைக்கும்.

    சித்திரை மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் நடக்கும் நடராஜர் அபிஷேகம், பரணி நட்சத்திரத்தில் பைரவ விரதம் முக்கியமானவை. அன்றைக்கு ஒரு நேர உணவருந்தி, விரதம் இருந்து, காலபைரவரை வழிபடுவதன் மூலமாக, பற்பல நன்மைகள் உண்டாகும். சித்திரை முதல் நாள் திருச்செந்தூரில் அன்னாபிஷேகம், இரவிலே உற்சவர் திருவீதி வலம் வருவார்.

    சித்திரை முதல் நாள் நெல்லை மாவட்டத்திலே மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல் நாளில் எல்லா நதிகளும் தங்கள் பாவங்களை தீர்த்துக் கொள்வதற்காக தாமிரபரணியில் நீராடி தூய்மை பெற்றன. பங்குனி உத்திரத்தில் திருமணம் கொண்ட பார்வதி பரமேஸ்வரர் அகத்தியர் தரிசனத்திற்காக பொதிகை மலைக்குச் சென்றது சிஃத்திரை முதல் நாள். பாபநாசத்தில் பக்தர்கள் தாமிரபரணி தீர்த்தத்தில் நீராடி பார்வதி பரமேஸ்வரரை வணங்குகின்றார்கள். ரிஷப வாகனத்தில் கல்யாண சுந்தரராக காட்சிதர அருகே அகத்தியரும் அவர் மனைவி லோபா முத்திரையும் வணங்கிய கோலத்தில் காட்சி தருகின்றனர்.

    சித்திரை மாதத்திலே கொண்டாடப்படும் நாயன்மார்கள் விறல் மிண்ட நாயனார், உமாபதி சிவாச்சாரியார், இசைஞானியார், திருக்குறிப்புத் தொண்டநாயனார், அப்பர் சுவாமிகள், சிறுத்தொண்ட நாயனார், மங்கையர்க்கரசியார் திருநட்சத்திரங்களும், புகழ்பெற்ற வைணவ மதுரகவியாழ்வார், ராமானுஜர், நடாதூர் அம்மாள், அனந்தாழ்வார், வடுக நம்பிகள், போன்ற ஆச்சாரிய பெருமக்கள் சித்திரையில் அவதரித்து இருக்கின்றனர்.

    சித்திரை ரேவதி திருவரங்கம் பெருமாளின் நட்சத்தி்ரமாதலால் அன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இப்படி மாதங்களிலேயே சித்திரை மாதம் பல சமய விழாக்கள் கொண்டாடி முத்திரையைப் பதிக்கும் மாதமாக விளங்குகின்றது.

    சித்திர குப்தன் தோன்றியது சித்ரா பவுர்ணமியன்றுதான். யமனுக்கு உதவ சிவன் ஒரு தங்கப் பலகையில் சித்திரம் வரைந்தார். அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்து அவருக்கு சித்திரகுப்தன் என்று பெயர் வைத்தார்கள். நீலாதேவி கர்னிகாதேவி என இரண்டு துணைவியாருடன் காட்சி அளிக்கக் கூடிய யமனுக்கு உதவியாளராக இருந்து மக்களின் புண்ணிய பாவங்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு், கணக்கெடுத்துக் கொண்டும் இருப்பவர் இவரே. இந்த சித்திரகுப்தருக்கு காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகில் நெல்லுக்கார வீதியில் ஒரு ஆலயம் இருக்கிறது. அந்த ஆலயத்தில் சித்ரகுப்தருக்கு விசேஷமான பூஜைகள் நடக்கின்றன.

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடாங்கி பட்டி எமதர்மன் கோயிலிலும் கோவை அருகே உள்ள சிங்காநல்லூர் எமதர்மன் கோயிலிலும் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக நடைபெறுகிறது.

    மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்டால், அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகமாகும். சித்திரை விழா சித்திரை பவுர்ணமியை ஒட்டி நடக்கிறது.

    கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி, வைகை ஆற்றில் இறங்குவதும், மதுரை மீனாட்சி திருக்கோயிலில் 12 நாட்கள் விழாவும் நடக்கும். சித்திரைத்தேர் வடம் பற்றி இழுத்தால் எந்த வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும் என்கிற நம்பிக்கை உண்டு. மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் தரிசித்தவர்களுக்கு திருமணத் தடைகள் விலகிவிடும்.

    சித்திரை மாதத்தில் சுக்கிலபட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. எனவே, ஆங்காங்கே அம்மன் கோயில்களில் பால்குடம் எடுப்பது, திருவிளக்கு பூஜைகள் நடப்பது சிறப்பாக இருக்கும். காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் தங்கத்தேர் அன்று வெளி வீதிகளிலும் வருகின்ற காட்சி மிக அற்புதமான காட்சியாக இருக்கும்.

    தில்லை திருச்சித்திர கூடத்தில் சித்திரை மாதப் பிறப்பு அன்று காலை, பெருமாள் கோயிலில், தேவாதி தேவனுக்கு உபய நாச்சியார் மற்றும் ஆண்டாளுடன் விசேஷமான அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும். அன்று பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் இரவு பிரகார புறப்பாடு கண்டருளுவார்.

    அதைப்போலவே சித்ராப் பவுர்ணமியன்று கஜேந்திர மோட்சம் நடைபெறும். அன்று தெய்வப் புள்ளான பெரிய கருடவாகனத்தில் சித்திரகூடத்துள்ளான் பெயர் தாங்கிய உற்சவ மூர்த்தி, நான்கு வீதிகளிலும் புறப்பாடு கண்டருளுவார். கஜேந்திர மோட்ச விழாவானது ஸ்ரீரங்கத்திலும் மிகச் சிறப்பாக நடைபெறும்.

    மக்களுக்கு அருட் கொடை தரும் சித்திரை மாதம் சீர்மிகு மாதமாகும்.

    Next Story
    ×