search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தமிழன்னையின் தவப்புதல்வர் காமராஜர்: நாகர்கோவில் பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற காமராஜர்
    X

    தமிழன்னையின் தவப்புதல்வர் காமராஜர்: நாகர்கோவில் பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற காமராஜர்

    • காமராஜருக்கு ஏற்பட்ட தோல்வி எனும் கறை 1969-ல் நாகர்கோவிலில் கிடைத்த மாபெரும் வெற்றியால் துடைத்து எறியப்பட்டது.
    • நேர்மை என்பது சில நேரங்களில் சரிவுகளைச் சந்திக்கலாமே தவிர, தோல்விகளை சந்தித்ததில்லை.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நிஜலிங்கப்பா பொறுப்பேற்றதற்கு பின்னாலே காமராஜரின் பணிச்சுமை ஓரளவு குறைந்தது. முன்பு இருந்தது போல கட்சி நெருக்கடிகள், கட்சி பிரச்சினைகள் அதிகமாக இல்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் நிஜலிங்கப்பா அனைத்தையும் பார்த்துக் கொண்டார். சென்னையில் காமராஜருக்கு சிறிதளவு ஓய்வு கிடைத்தது.

    நிஜலிங்கப்பாவும் காமராஜரும் அண்ணன் தம்பி போல பழகியவர்கள். தமிழகத்தில் காமராஜர் எப்படி நேர்மையான ஆட்சி தந்து எப்படி நற்பெயர் எடுத்தாரோ.. அதேபோல கர்நாடகாவில் நேர்மையான ஆட்சி செய்து பேரெடுத்தவர் நிஜலிங்கப்பா. கர்நாடகாவின் முதல்வர் பதவியை விட்டுவிட்டு வருவதற்கு நிஜலிங்கப்பாவிற்கு விருப்பமில்லை. காமராஜரின் வற்புறுத்தலுக்காக இறுதியில் இசைவு தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

    நேருவின் புதல்வி என்பதால் இந்திராவிடமும் மிகுந்த மதிப்பு கொண்டு இருந்தார் நிஜலிங்கப்பா .இப்பொழுது உள்ள சூழ்நிலையில் நிஜ லிங்கப்பா தான் சரியான தீர்வு என்று காமராஜரும் இந்திராவும் ஒன்றாக சிந்தித்து இந்த முடிவினை எடுத்திருந்தனர்.

    தன்னிச்சையாகவே சில முடிவுகளை எடுத்து கட்சியின் ஆலோசனை பெறாமலே சில அறிவிப்புகளை செய்து அவற்றை நடை முறைப்படுத்துகின்ற காரியங்களை இந்திரா காந்தி ஆட்சியில் நடத்திக் கொண்டிருந்ததால் மூத்த தலைவர்கள் மத்தியில் கொஞ்சம் புகைச்சல் இருந்து வந்தது. 'நேரு' ஒரு முடிவு எடுக்கும் போது தனது ஆட்சிக் காலத்தில் எல்லா தலைவர்களையும் தவறாமல் அழைத்து ஆலோசனை கலந்த பிற்பாடு தான் அறிவிப்பார். ஆனால் இந்திரா காந்தியிடம் அந்த ஜனநாயக நடைமுறை இல்லையே என்ற வருத்தம் மேலோங்கி இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கட்சியின் கட்டுக்கோப்பு குழைந்து விடக்கூடாது என்ற கவலையில் தலைவர்கள் மத்தியிலே ஒரு இணக்கமான சூழ்நிலை அமைவதற்காக காமராஜர் அரும்பாடுபட்டார். நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ற போக்கினை காட்டிலும், கட்சி பெரிது அதைவிட நாடு பெரிது என்பதுதான் காமராஜரின் திடமான கொள்கையாகும்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மார்ஷல் நேசமணி தனது உடல்நிலை குன்றிய நிலையில் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்த துயரமான சம்பவம் நடந்தது. நாகர்கோவிலில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    1967-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வியாலும் காமராஜர் பெற்ற தோல்வியாலும் காங்கிரஸ் தொண்டர்கள் துவண்டு போய் இருந்த காலகட்டம் அது... அண்ணா முதல்வராக இருந்து தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம் அது. அவரவர் கட்சி அவரவருக்கு பெரிது என்பது பொதுவான சித்தாந்தம். அந்த வகையில் காங்கிரசுக்கு ஏற்பட்டிருந்த பின்னடைவை போக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி காங்கிரசுக்கு புத்துயிர் ஊட்டும் பல நிகழ்வுகளை காங்கிரசார் மேற்கொண்டிருந்தனர்.

    1967-ல் காங்கிரஸ் தோல்வி கண்டதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் தான்... காங்கிரஸ்காரர்கள் இந்திக்கு ஆதரவானவர்கள் என்ற தவறான கருத்து முதலில் தகர்த்தெறியப்பட வேண்டும். அதனால் தேசிய மாணவர்கள் எல்லாம் ஒன்று திரண்டு காமராஜரை சென்று சந்தித்து அவரது வாழ்த்துக்களோடு "தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சி குழு" என்ற அமைப்பினை அப்போது மாணவர் தலைவராக இருந்த தஞ்சை ராமமூர்த்தி தலைமையில் தோற்றுவித்தனர். சொல்லின் செல்வர் சம்பத், கவியரசர் கண்ணதாசன், சிறுகதை மன்னர் ஜெயகாந்தன், எழுத்தாளர் பி.சி. கணேசன் ஆகியோர் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல மாணவ நிகழ்வுகளில் பங்கேற்று ஊக்கப்படுத்தினர்.

    காமராஜரின் ஏற்பாட்டில் டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து இந்தி பேசாத மக்களுக்கு நேரு கொடுத்த உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும் என்பதையும், எந்த வகையிலும் இந்தியை திணிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டனர். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தேசிய மாணவர்களை ஒன்று திரட்டி ஒரு மாணவர் பெரும் படையை உருவாக்கினர். அப்படித்தான் மாணவர் காங்கிரஸ் என்ற அமைப்பு தமிழகத்தில் தோற்றம் கண்டது. அப்போதுதான் மாணவர் தலைவர் தண்டாயுதபாணி, குழந்தை ராமலிங்கம், ஹக்கீம், வெ.கி. திருமாறன் ,ஜெயச்சந்திரன், வாழப்பாடி கூ.ராமமூர்த்தி, ஆர்.வி. கே அப்பாசாமி, ராசேந்திரன், கவிஞர் நேதாஜி, ஜெ வீரபாண்டியன் போன்றோர் ஏற்பாட்டில் 10.9.1967 அன்று சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டமான காங்கிரஸ் கூட்டம் காமராஜர் தலைமையில் நடைபெற்றது. அதேபோன்று சட்டக் கல்லூரியிலும் பீட்டர் அல்போன்ஸ், தனுஷ்கோடி ஆதித்தன், பி.எஸ். ஞான தேசிகன், பசுபதி தனராஜ் போன்றோர் சட்டக் கல்லூரி மாணவர் காங்கிரசை தோற்றுவித்தனர்.

    அதேபோன்று அப்போது தமிழக இளைஞர் காங்கிரசின் அமைப்பாளராக இருந்த குமரிஅனந்தன் காங்கிரசை பலப்படுத்தும் வண்ணம் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குமரியில் இருந்து சென்னை வரை கால்நடையாகவே நடந்து வரும் மிகப்பெரிய பாதயாத்திரை ஒன்றினை தொடங்கினார்.

    தொடர்ந்து 44 நாட்கள், 625 மைல்கள், 98 இளைஞர்களோடு புறப்பட்டு பாத யாத்திரையாக அழைத்துக் கொண்டு 98-வது அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளினை முன்னிட்டு 1967 அக்டோபர் இரண்டாம் நாள் கன்னியாகுமரியில் தொடங்கி நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் நாள் சென்னையிலே வந்து நிறைவு செய்தார் குமரி அனந்தன். காந்தீய நெறியில் காங்கிரசை உயர்த்தி பிடிக்கும் இந்த பாதயாத்திரை பயணத்தை வாழ்த்தும் வகையில் அத்தனை தொண்டர்களையும் வருகிற வழியிலே அச்சரம்பாக்கம் சென்று நேரிலே வாழ்த்தி மகிழ்ந்தார் காமராஜர். பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் கண்ணதாசன், ஜெயகாந்தன், சொல்லின் செல்வர் சம்பத், சிம்மக்குரலோன் குமரி அனந்தன் பேசிய கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

    அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தலைவராக அப்போது பதவி வகித்த என்.டி.திவாரி அவர்கள் (இவர்தான் பின்னாளில் உ.பி.யின் முதல்வராக இருந்தவர்) நேரிலே வருகை தந்து, லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்த மெரினா கடற்கரை கூட்டத்தில் உணர்ச்சிமிகு உரையாற்றி பாதயாத்திரைத் தலைவர் குமரி அனந்தனை பாராட்டி வாழ்த்தியதோடு பங்கேற்ற அத்தனை இளைஞர் காங்கிரஸ் செயல் வீரர்களுக்கும் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்.

    குமரி அனந்தனின் அரசியல் வரலாற்றில் இந்த பாதயாத்திரை ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகுதான் இலக்கியச் செல்வர் என்ற அடைமொழியோடு தமிழகம் எங்கும் வலம் வந்து இளைஞர் காங்கிரசை குமரி அனந்தன் வலுப்படுத்தினார், வளப்படுத்தினார். மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக பின்னாளில் இளைஞர் காங்கிரஸ் உருவெடுத்தது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நாகர்கோவில் பாராளுமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருந்தது. காமராஜர் இந்த தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமே விரும்பியது. தொண்டர் முதல் தலைவர்கள் வரை காமராஜரை சந்தித்து போட்டியிடுமாறு வற்புறுத்திய வண்ணம் இருந்தனர். வழக்கம்போல "ஆகட்டும் பார்க்கலாம்" என்று எல்லோரிடமும் சொல்லி வந்தார் காமராஜர். இதற்காக மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை வந்த பழ.நெடுமாறன், கண்ணதாசனையும் அழைத்துக் கொண்டு போய் நாகர்கோவிலில் போட்டியிட வேண்டியதன் அவசியத்தை காமராஜரிடம் சொல்லி வற்புறுத்தினார்கள்.

    ஏற்கனவே விருதுநகரில் மக்கள் தந்த தோல்விக்கு ஏற்பட்ட காயத்திற்கு நாகர்கோவில் மக்கள் வெற்றிக்கனி பறித்து மருந்து போட நினைக்கிறார்கள் என்பதை பக்குவமாக எடுத்துச் சொன்னார் பழ. நெடுமாறன். அப்படி என்றால் நீங்கள் போய் நேரிலே நாகர்கோவில் மக்களை சந்தித்து அவர்களின் அபிப்ராயத்தை அறிந்து வாருங்கள் என்று நெடுமாறனை அனுப்பி வைத்தார் காமராஜர். நெடுமாறன் தொகுதி முழுக்க சுற்றுப் பயணம் செய்து மிகவும் சாதகமான சூழ்நிலை நிலவுவதாகவும் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்பதையும் காமராஜரிடம் எடுத்துச் சொன்னார்.

    இருப்பினும் நாகர்கோவில் மக்களின் எண்ண ஓட்டத்தை நேரிலே சந்தித்து அறிந்து கொள்ள விரும்பிய காமராஜர், நாகர்கோவில் தொகுதி முழுக்க ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். போகிற இடமெல்லாம் "அப்பச்சி காமராஜர் வாழ்க" என்ற முழக்கமே ஒலித்தது. எங்கள் ஓட்டு அனைத்தும் அப்பச்சி காமராஜருக்கே என்று தொகுதி மக்கள் திரண்டு வந்து காமராஜரிடம் தங்களின் ஆதரவை தெரிவித்தனர். அதற்கு பிறகு தான் தன்னுடைய இசைவினை தெரிவித்தார் காமராஜர். பிரதமர் இந்திரா காந்தியும் தலைவர் காமராஜர் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக டெல்லி வரவேண்டும் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

    விருதுநகர் தேர்தலிலேயே மிகுந்த தயக்கத்தோடு தான் தி.மு.க.வின் வேட்பாளரை அண்ணா நிறுத்தினார். இப்போதும் காமராஜரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த விரும்பாத அண்ணா, கூட்டணி கட்சியான சுதந்திராக் கட்சிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

    சொல்லின் செல்வர் சம்பத், கண்ணதாசன், ஜெயகாந்தன், குமரி அனந்தன், பழ. நெடுமாறன், சின்ன அண்ணாமலை போன்ற முக்கியமான பேச்சாளர்கள் எல்லாம் ஏறக்குறைய ஒரு மாத காலம் தொகுதியிலேயே தங்கி இருந்து தேர்தல் பணிகளை கவனித்தனர்.

    மாவட்ட தலைவர்களாக இருந்த இஸ்மாயில், மகாதேவன் பிள்ளை, ஜேம்ஸ், தாணுலிங்க நாடார் போன்றோர் இரவு பகலாக உழைத்தனர். காமராஜர் அமரர் நேசமணியின் இல்லத்திலேயே தங்கி இருந்து தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

    "தினமும் ஒரு கடிதம்" என்ற வகையிலே கவியரசர் கண்ணதாசன் காமராஜர் வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தை நவசக்தி நாளேட்டில் மிக உருக்கமாக எழுதி, தொண்டர்களை நாகர்கோவிலுக்கு வருமாறு அழைத்த வண்ணமிருந்தார்.

    தொகுதி முழுக்க காங்கிரஸ் தொண்டர்கள் பெட்டி படுக்கைகளோடு வருகை தந்து, தங்குகிற வசதியெல்லாம் பொருட்படுத்தாது, கிடைத்த இடங்களில் தூங்கிக் கொண்டு உழைத்த காட்சி மனதை உருக்குவதாக இருந்தது. நாகர்கோவில் முழுக்க ஒரே திருவிழா கூட்டம் தான்... அப்பச்சி காமராஜர் முழக்கமே தொகுதி முழுக்க எதிரொலித்த வண்ணமிருந்தது.

    எதிர்த்துப் போட்டியிட்ட டாக்டர் மத்தியாஸ் பிரபலமான மருத்துவர் என்று பேரெடுத்திருந்தாலும், காமராஜர் என்னும் இமயத்திற்கு முன்னால் ஈடு கொடுத்து நிற்க முடியவில்லை.

    தொகுதியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 4,01,600 ஆகும். காமராஜர் பெற்ற வாக்குகள் 2,49,437 ஆகும். எதிர்த்துப் போட்டியிட்ட சுதந்திராக்கட்சி வேட்பாளர் மத்தியாஸ் பெற்றது 1,21,236 ஆகும். ஆக 1,28,201 வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் மாபெரும் வெற்றி பெற்று, ஓட்டு மொத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும், கட்சிக்கும் பெருமை சேர்த்தார். பொதுமக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.

    எதிர்கட்சியினரிடம் இருந்து எவ்வித விமர்சனங்களும் எழவில்லை. அண்ணா விடுத்த அறிக்கையில் "காமராஜர் அனைத்திந்தியப் பெருந்தலைவர், இந்திய அரசியலுக்கு அவருடைய ராஜ தந்திரம் மிக மிகத் தேவையானது. அவர் புகழ் ஒளிமிக்கவர் என்று நாகரீகமாகவும், நாசூக்காகவும் குறிப்பிட்டிருந்தார்.

    குமரியில் காலூன்றி, இமயத்தில் வெற்றிக் கொடியைப் பறக்கவிட்ட வீரத் தலைவரே. ஜனநாயகக் காவலரே, சமுதாயச் சிற்பியே வருக வருக வென்று வாழ்த்து முழக்கங்களோடு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார் காமராஜர். பல்லாயிரக்கணக்கான மக்கள் புடை சூழ, சத்தியமூர்த்தி பவனுக்கு காமராஜர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

    புதுடெல்லியில் இருந்து பாரதப் பிரதமர் இந்திராகாந்தி காமராஜரின் வெற்றியை வரவேற்று, தனது மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்த சி.சுப்பிரமணியம், காமராஜர் பெற்ற வெற்றியை தமிழகம் முழுவதும் கொண்டாடும் வகையில் ஜனநாயக உரிமை பதுகாப்புத் தினமாகக் கொண்டாடுங்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். காமராஜரும், கொஞ்சமும் தாமதிக்காமல், ஜனவரி 20,21-ந் தேதிகளில் நாகர்கோவில் தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 1967-ல் காமராஜருக்கு ஏற்பட்ட தோல்வி எனும் கறை 1969-ல் நாகர்கோவிலில் கிடைத்த மாபெரும் வெற்றியால் துடைத்து எறியப்பட்டது. நேர்மை என்பது சில நேரங்களில் சரிவுகளைச் சந்திக்கலாமே தவிர, தோல்விகளை சந்தித்ததில்லை என்பது தான் காமராஜர் வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் வரலாறு.

    அடுத்த வாரம் சந்திப்போம்...

    Next Story
    ×