என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

அதிசயமே அசந்து போகும் கயிலாயமலை!
- வாழ்வில் கைலாயதரிசனம் காணவேண்டும் என்று கனவு காணாதவர்களே இல்லை.
- நம்மை ஆகர்ஷிக்கும் கைலாயநாதனால் நாம் அனைத்தையும் மறந்து அவனோடு ஒன்றிவிடுவோம்.
நாம் வாழும் பூமியில் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது ஆண்டாண்டு காலமாக நடந்துவரும் சர்ச்சை.
கடவுள் மறுப்பாளர்கள்,``நாங்கள் கண்ணால் பார்க்காத ஒன்றை எப்படி நம்புவது?'' என்பார்கள்.
நம் கண்ணுக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் நாம் கடவுள் மறுப்பாளர்களோடு விவாதம் செய்ய வரவில்லை.
இந்த பூவுலகில் நம் கண்ணுக்கு மட்டுமில்லை, நம் அறிவிற்கும் எட்டாத அதிசயங்கள், அற்புதங்கள் இருக்கின்றன. ஏன், எப்படி என விவரிக்க முடியாத விஷயங்கள் இருக்கின்றன. அதைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்...
வாருங்கள் இந்தத் தொடரில் அப்படிப்பட்ட அற்புதங்களை, அமானுஷ்யங்களைப் பார்ப்போம்...
முதலில் கைலாஷ் எனச் சொல்லப்படும் கைலாயமலை...
இது இந்தியாவின் வடபகுதியில், திபெத் நாட்டைச் சேர்ந்ததாக உள்ளது. உயரம் 6638-மீட்டர்தான். இதைவிட இரண்டாயிரம் மீட்டர் உயரமுடைய எவரெஸ்ட் சிகரத்தில் ஆயிரக்கணக்கான மலைஏறும் விருப்பம் உள்ளவர்கள் ஏறி சாதனை படைத்துள்ளனர். ஆனால் இன்றுவரை கைலாயமலையில் ஏறியவர்கள் யாருமில்லை. ஏறவும் முடியாது...ஏன்?
கைலாயமலை சிவன் வாழும் இடமாகக் கூறப்படுகிறது.சிவனும், பார்வதியும், சிவகணங்களும் இங்குதான் வசிக்கிறார்கள் என்பது சிவனடியார்களின் நம்பிக்கை.இந்துக்கள் அனைவருக்கும் கைலாய யாத்திரை என்பது வாழ்வின் லட்சியம். வாழ்வில் கைலாயதரிசனம் காணவேண்டும் என்று கனவு காணாதவர்களே இல்லை.
புத்தமதத்தினரும் கயிலாயம் புத்தரின் புனித இடம் என்கிறார்கள்.
சமணர்கள் அவர்களுடைய தீர்த்தங்கரரான ரிஷபானந்தா இங்கேயே இருந்து முக்தி அடைந்தார் என்கிறார்கள். அவர்களுக்கும் இது புனிதமான இடம்.
கைலாயமலைக்குச் செல்லுதல் என்பது மிகவும் கடினமான யாத்திரை. நேபாளம் வழியாகச் செல்பவர்கள்தான் அதிகம். மேலே செல்லச் செல்ல உயரம் காரணமாக நம் மனித உடலுக்குப் பழக்கமில்லாத `ஆல்டிடியூட்' பிரச்சினை ஏற்படும். அதனால்தான் ஒவ்வொரு இடமாகத் தங்கிச் செல்லும் போது மனித உடல் அங்குள்ள ஆக்சிஜன் குறைவிற்குப் பழகிக்கொள்கிறது.
கடைசியாகக் கைலாயமலையை அடையும்போது கடும்குளிர், மிகவும் ஆக்சிஜன் குறைபாடு என இருக்கும்.
ஆனால் அங்கே சென்றுவிட்டால் அங்கு திகழும் தெய்வீகத்தால் சூழப்பட்டு நாமே மாறிவிடுவோம். நம்மை ஆகர்ஷிக்கும் கைலாயநாதனால் நாம் அனைத்தையும் மறந்து அவனோடு ஒன்றிவிடுவோம்.
அந்த அற்புதமான பயண அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்கு முன் அதன் அமானுஷ்யங்களை, அதிசயமே அசந்து போகும் ஆச்சர்யங்களை பகிர்ந்துகொள்கிறேன்.
ஏற்கனவே சொன்னதுபோல கைலாயமலை மேல் ஏறியவர்கள் இன்றுவரை யாரும் இல்லை. இவ்வளவு விஞ்ஞான முன்னேற்றங்கள், ராக்கெட்டுகள், டிரோன்கள் என இருந்தும் யாராலும் அதன் உச்சியை அடையமுடியவில்லை என்பது ஆச்சர்யம் தானே...
ஏற முயற்சி செய்யாமல் இருப்பார்களா? பலரும் முயற்சி செய்தார்கள். குறிப்பாக ரஷ்யர்கள் இதைப் பற்றி ஆராயவிரும்பி மிகச்சிறந்த மலையேற்றக் குழுவினரை அனுப்பிவைத்தனர். உலகின் தலைசிறந்த டிரெக்கிங்குழு அடைந்த அனுபவங்கள் திகிலானவை.
*கைலாயமலையில் ஏற ஆரம்பித்த உடனேயே அவர்களுக்கு திசைகள் தெரியாமல் போய்விடுகிறது.
*பெரும் மனக்குழப்பம் ஏற்படுகிறது.
*பெரும் அதிசயமாக காலம் வேகமாக நகர்ந்து அவர்களின் உடல் முதுமை அடைய ஆரம்பித்துவிடுகிறது. இதிலே அவர்கள் எங்கிருந்து மலை ஏறுவது? அப்புறம்தானே உச்சியை அடையும் விஷயம்?
*சிவபிரான் வாழும் புனிதமான இடம் என்பதால் இந்த மானிட உடலுடன் அம்மலையை அடையமுடியாது என்பதுதான் நாம் புரிந்துகொள்ளும் உண்மை.
*இங்கே பல குகைகள் இருக்கின்றன. அவற்றுள்ளிருந்து வாத்திய சப்தங்கள் கேட்பதாகக் கூறுகின்றனர். இவை சிவகணங்கள் வாசிக்கும் சப்தமாகவும் இருக்கலாம்.
*ஏராளமான முனிவர்கள் இங்கிருக்கும் குகைகளில் தவம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
*இங்கு திபெத்திய இனத்தவர்களான மனிதர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு மரணம் என்பதே இல்லை என்றும் கூறுகிறார்கள்.
இச்செய்திகள் அனைத்துமே இக்கடுமையான மலைப்பகுதிகளில் விரும்பி வாழும் தவசிகளால் கண்டு சொல்லப்பட்டவை.
*கைலாயமலை உலகின் அச்சாணி, அதுவே அனைத்திற்கும் ஆதாரம் என்கிறார்கள். அதை நிரூபிக்கும் வகையில் அது இரண்டு துருவங்களுக்கும் மிகச்சரியான மையப்பகுதியில் காணப்படுகிறது.
*இது இயற்கையாகத் தோன்றிய மலை இல்லை என்பது ரஷ்ய ஆராய்ச்சியாளர்களின் கருத்து. எகிப்தில் பிரமிடுகள் அதிசயமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும், கதிர்வீச்சுக்கள் கொண்டதாகவும் இருப்பதுபோல, கைலாயமலையும் ஒரு பிரமிடுதான் என்கிறார்கள்.
ஆனால் கண்டிப்பாக இதை மனித சக்தியால் செய்யமுடியாது. ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக மக்களால் உருவாக்கப்பட்டது என்பது அவர்களின் கருத்து. அதற்கு ஏற்றார்போல பறக்கும் தட்டுக்களைப் போன்ற அமைப்புகள் மலையின் நடுவில் நின்று கொண்டிருப்பதை பலரும் பார்த்து இருக்கிறார்கள்.
இன்னும் நிறைய அமானுஷ்யச் செய்திகள் கயிலையைப் பற்றி உண்டு. ஆன்மிகத்தில் திளைப்பவர்களுக்கு அது சிவபிரான் பிரத்யட்சமாக வாழும் இடம். அங்கு சென்றவர்கள் ஏராளமான இறை அனுபவங்களைப் பெற்று இருக்கிறார்கள்.
நம்முடைய சிதம்பரம் பொற்கோயில் கூரை கயிலைமலையைக் கண்டே வேயப்பட்டது.
கயிலையைச் சுற்றி வருவதை` பரிக்ரமா' என்பார்கள். இதற்கு மூன்று நாட்கள் ஆகும். இது மிகவும் கடினம் என்றாலும் வாழ்நாளில் மறக்கவேமுடியாத அனுபவமாக இருக்கும்.
இங்கிருந்துதான் சிந்து, சட்லெஜ், பிரம்மபுத்திரா நதிகள் உற்பத்தி ஆகின்றன. நாம் செல்லும் வழியெல்லாம் இந்த நதிகள் சலசலவென்று ஓடிக்கொண்டு இருக்க , கடுமையான குளிரில் உயர்ந்தோங்கிய மலைகளுக்கு நடுவே பயணப்படுவது...ஆகா...என்ன அற்புதம்!
இதில் முதல் நாள் இரவு தங்குமிடம் மலைப்பகுதி. கயிலைமலைக்கு மிக அருகில்.மறுநாள் அதிகாலையில் நீங்கள் எழுந்து வெளியே வந்தால் அப்படியே திகைத்து நின்றுவிட வேண்டியதுதான். ஆம், அதிகாலை சூரியன் கயிலைநாதனை தன் கிரணங்களால் பூஜிக்க, அந்த மலையே கதிரவனின் கிரணங்களால் தங்கமாக தகதக'வென்று ஜொலிப்பதைக் கண்டு சொல்லொணா பரவசத்தில் ஆழ்ந்துபோவீர்கள்.
இதைத்தான் அப்பர் பெருமான்,
"காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி" என்றும்,
``பொன்னார் மேனியனே'' என்றும் பாடினார்.
இதைக் கண்டுதான் சிதம்பரம் கோயில் கூரையையும் தங்கத்தால் வேய்ந்தார்கள்.
இந்தப் பயணம் மேற்கொள்ளும்போது பல தெய்வீகக் காட்சிகளை, தெய்வத் தோற்றங்களைக் கண்டவர்கள் உள்ளனர்.
நம்புபவர்களுக்கு ஒரு செய்தி- நாங்கள் சென்றபோது மந்தாதா மலைகளிலே சூலத்துடன் நின்ற சிவபிரானின் உருவத்தை நாங்கள் தரிசித்தோம்.
அது மட்டுமில்லை, இரண்டாம் முறை சென்றபோது பரிக்ரமா சமயத்தில் நான் நடக்க முடியாமல் நின்றுவிட்டேன். அங்கே சென்றுகொண்டிருந்த சீன அரசின் ஜீப்களை உதவி கேட்கலாம் எனக் கைகாட்டினேன். அது எங்களுடைய வழிகாட்டியின் ஜீப். அவர் என்னை சீட்டுகளுக்கு நடுவில் ஒளித்து வைத்து மேலே அழைத்துச் சென்றார். காரணம் முடியவில்லை என்றால் சீனர்கள் சிறிதும் இரக்கம் காட்டாமல் கீழே கொண்டு விட்டுவிடுவார்களாம்.
என்னை அப்படிக் கொண்டுவிட்டிருந்தால் இரவில், குளிரில் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியாது.
இப்படி, `திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை' எனும்படி எவ்வளவோ அனுபவங்கள்.
கயிலைக்கு முன்பு நாம் காணும் மானசரோவர் ஏரியும், ராஷஸ் ஸ்தல் ஏரியுமே அப்படித்தான். மானசரோவர் ஏரியில் இரவில் முனிவர்கள் நட்சத்திரவடிவில் இறங்கி புனிதநீராடுவார்கள். நாங்கள் நடுங்கும் குளிரில் இரவு இரண்டு மணிக்குக் காத்திருந்தோம். இரண்டு ஒளி வட்டங்கள் சுற்றிச் சுற்றி வந்ததை தரிசித்தோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் கிட்டும்.
உலகின் மிக உயரமான இடத்தில் இருக்கும் நன்னீர் ஏரி மானசரோவர். அதிலே தங்க அன்னப்பட்சிகள் வசிக்கின்றன என்பார்கள்.
அதற்கு அருகிலேயே ராஷஸ் ஸ்தல் ஏரி உள்ளது. அது உப்புத்தன்மை கொண்ட நீரைக்கொண்டது. அருகருகே இருந்தாலும் இரண்டிலும் இரண்டு விதமான நீர் எப்படி உண்டானது என்பதும் அதிசயம்தான்.
இப்படித் தொட்ட இடமெல்லாம் பிரமிக்கவைக்கும் அதிசயங்கள் கொண்ட புனித கைலாயமலை மானிடர்களின் அறிவிற்குப் புரியாததாகவே இருக்கிறது. தெய்வீகம் பொழியும் கயிலைநாதன் அறிவிற்கு அப்பால் நின்று நம் அகங்காரத்தை அறுத்து அருள் செய்துகொண்டு இருக்கின்றான்.
இன்னும் நம் ஆன்மிகத்தில் ஏராளமான அதிசயங்கள் உண்டு...
[தொடர்ந்து பார்ப்போம்]






