என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

இதயம் ஒரு கோவில்: தவிர்க்க வேண்டிய உணவுகளும், நன்மை பயக்கும் காய், கனிகளும்
- உடலில் கொழுப்பு அளவை அதிகரிக்கும் உணவுகள் இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைவது கண்டறியப்பட்டுள்ளது.
- உப்பு அதிகம் சேர்த்தால் ரத்த அழுத்தம் ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகமானால் மாரடைப்பு வரும். உப்பு குறைவாக போட்டு சாப்பிட பழகிக் கொள்ளுங்கள்.
உணவு எதற்காக சாப்பிடுகிறோம். நமது உடலுக்கு சக்தி தேவைப்படுகிறது. அதற்காக உணவு உண்கிறோம். சுவைக்காக மட்டும் உணவை சாப்பிடக் கூடாது. ஒரு கார் இயங்க வேண்டும் என்றால் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் தேவை. பெட்ரோல் ஊற்றினால் தான் கார் ஓடும். அதேபோல தான் உணவு உட்கொண்டால் தான் நம்மால் தொடர்ந்து இயங்க முடியும்.
அவ்வாறு நாம் உண்ணக்கூடிய உணவு உடலுக்கு பலன் அளிக்க கூடியதாக இருக்கவேண்டுமே தவிர எதிர் வினையாற்றக் கூடியதாக இருக்க கூடாது. இந்த உணவை சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்று தெரிந்தும் பல உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். பச்சை காய்கறிகள் நல்ல பலனை கொடுக்க கூடியது. உதாரணத்துக்கு கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், பேபி கார்ன் போன்ற காய்கறிகளை தண்ணீரில் நன்றாக கழுவி பச்சையாக அப்படியே சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடும் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்து சிந்தாமல், சிதறாமல் நமக்கு கிடைக்கிறது. நமக்கு பலனையும் கொடுக்கிறது.
நாம் பேசும் பேச்சினால் எதிரிகளை உருவாக்கி விடுவது நாக்கு. நமக்கு நாமே எதிரியாக (சுவை மூலமாக) மாற்றுவதும் இந்த நாக்கு தான். அதனால் நாக்கு ருசிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் நலனை கெடுத்துக் கொள்ளக் கூடாது.
உடலில் கொழுப்பு அளவை அதிகரிக்கும் உணவுகள் இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அதிக கொழுப்பு அளவைத் தூண்டும் உணவுகளைக் குறைப்பது நிச்சயமாக இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். சில உணவுகளைத் தவிர்த்தால் மட்டும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்க முடியாது. ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை ஒருவர் சேர்க்க வேண்டும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இதய நோய் வராமல் எதிர்ப்பு சக்தியையும் வளர்க்கும்.
மாரடைப்பை தடுக்க என்ன உணவு சாப்பிடலாம், என்ன உணவு சாப்பிடக் கூடாது என்பதை இந்த வாரம் பார்க்கலாம்.
உப்பு: உப்பு அதிகம் சேர்த்தால் ரத்த அழுத்தம் ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகமானால் மாரடைப்பு வரும். அதனால் உப்பே சேர்க்க கூடாது என்று சொல்லவில்லை. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். உப்பு போடாவிட்டால் உணவு ருசி இருக்காது. அதனால் உப்பு குறைவாக போட்டு சாப்பிட பழகிக் கொள்ளுங்கள்.
ஊறுகாய், உருளைக்கிழங்கு சிப்ஸ், மட்டன் வறுவல், சிக்கன் பிரை, மீன் வறுவல், ஆம்லெட், பிரியாணி போன்ற உணவுகளில் உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. இதுபோன்ற உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். முடியாவிட்டால் எப்போதாவது சாப்பிடுங்கள். அடிக்கடி சாப்பிடுவதை தவிருங்கள்.
உதாரணத்துக்கு ஒரு மாதம் குறைவாக உப்பு போட்டு சாப்பிட்டு பாருங்கள். அடுத்த மாதம் நிறைய உப்பு போட்டு சாப்பிட்டு பாருங்கள். 2 முறையும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யுங்கள். உப்பு குறைவாக சாப்பிட்ட போது 130-ல் இருந்த ரத்த அழுத்த அளவு 160- ஐ கடந்து இருப்பதை பார்க்கலாம்.
இதேபோல சிவப்பு நிறத்தில் உள்ள இறைச்சியில் அதிக கொழுப்பு இருக்கும். அதனால் அந்த இறைச்சியை தவிர்க்கவும். வெள்ளை சர்க்கரை அதிகம் எடுத்துக் கொள்ளாதீர்கள். கரும்பு சர்க்கரை, கருப்பட்டி பயன்படுத்துங்கள். மைதா மாவு வேண்டாம், கோதுமை மாவு பயன்படுத்தலாம். பழுப்பு அரிசி, கோதுமை, பார்லி மற்றும் ஓட்ஸ் சாப்பிடுங்கள். கொட்டைகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
முடிந்தவரை அசைவ உணவு சாப்பிடுவதை தவிருங்கள். இல்லை, நான் அசைவ பிரியர், சாப்பிட்டே தீருவேன் என்றால் மாதத்துக்கு ஒருமுறை சாப்பிடுங்கள். முட்டை சாப்பிட்டால் அதனை அவித்து உட்கொள்ளுங்கள். காலையில் அவித்த முட்டை சாப்பிடுவது பலன் தரும். மீன் சாப்பிட விரும்பினால் குழம்பில் போட்டு அவித்து சாப்பிடுங்கள். அதனை எண்ணை சட்டியில் போட்டு ஃப்ரை பண்ணி சாப்பிட வேண்டாம். பொறித்த உணவில் உள்ள மசாலா நமது வயிறை பதம் பார்க்கும். வயிற்றுப் புண், அல்சர் வர வாய்ப்புண்டு. அதனால் அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
பாலில் கொழுப்பு உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் 10 வயது சிறுவர்களுக்கு பால் கொடுங்கள். அதன்பிறகு பாலை குறைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதில் மோர் குடியுங்கள். இப்போது சுட்டெரிக்கும் வெயிலுக்கு மோர் அற்புதமான ஒரு பானம். இளநீர், கரும்புச்சாறு குடியுங்கள். கொழுப்பில்லாத பால் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். 50 வருடத்துக்கு முன்பு நமது முன்னோர்கள் ராகி களி, கம்பஞ்சோறு, சோளத்தில் தயாரான உணவு, சிறுதானிய உணவுகள், பழைய சோறு அதிகம் உட்கொண்டு நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ்ந்தனர். அந்த பழைய உணவு பழக்கத்துக்கு மாறி அந்த உணவுகளை உட்கொள்ளலாம்.
காய்கறிகள், பழங்கள் உணவில் அதிகம் சேருங்கள். கேரட், பீட்ரூட், வெண்டைக்காய், அவரைக்காய், பாகற்காய், புடலங்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளை சாப்பிடுங்கள். பச்சை காய்கறிகளுக்கு உடலில் உள்ள கழிவுகளை அகற்றி எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் சக்தி உண்டு. உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கில் அதிக சர்க்கரை இருக்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அவற்றை சாப்பிடுவதை தவிருங்கள். ஆசைக்கு ஒரு துண்டு சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
வாழைப்பழம், ஆப்பிள், அன்னாசி, கொய்யா, மாம்பழம், மாங்காய் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி 6, பி 12 ஆகியவை நிறைந்திருக்கின்றன. அதோடு வாழைப்பழத்தில் அமில எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். எல்லா காலகட்டங்களிலும் கிடைக்கக்கூடிய இந்த பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
வைட்டமின் சி மிக அதிக அளவில் இருக்ககூடிய பழங்களில் ஒன்று தான் கொய்யாப்பழம். இது எலும்புகளுக்கு உறுதியைக் கொடுக்கும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதாலும் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதாலும் இது மலச்சிக்கலை நீக்குகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழங்களில் ஒன்றாக இருக்கிறது. சருமப் பிரச்சினைகளை நீக்கும் தன்மை கொண்டது. இதய வால்வுகளில் கொழுப்புகளைத் தேங்க விடாமல் பாதுகாக்கும்.
பப்பாளி என்றாலே அது பெரும்பாலும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் சாப்பிடும் பழம் என்று ஆகிவிட்டது. ஆனால் பப்பாளியில் மிக அதிக அளவிலான வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இந்த பழத்திற்கு குறிப்பிட்ட சீசன் என்று கிடையாது. எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய இந்த பழம் பல் முதல் சிறுநீரகப் பிரச்சினை வரையிலும் அத்தனை பிரச்சினைகளையும் தீர்க்கவல்லது. சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற பழம்.
அன்னாசிப்பழம் வைட்டமின் பி நிறைந்த அற்புதப் பழங்களில் ஒன்று. இது உடலுக்கு வலிமை தருவதோடு ரத்த விருத்திக்கு உதவக் கூடியது. ரத்தத்தில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது. இதய வால்வுகளில் உண்டாகும் அடைப்பு மற்றும் கொழுப்புகளை நீக்கக்கூடியது.
மாதுளை மற்ற பழங்களை விட கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். இனிப்பு, கொஞ்சம் புளிப்பு, கொஞ்சம் துவர்ப்பு சுவையுடன் கூடிய பழம் இது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குச் சிறந்த தீர்வாக மாதுளை இருக்கும். குடலில் உண்டாகும் புண்ணை ஆற்றக் கூடியது. கொழுப்புகளைத் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ளும். கண் முதல் சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும். ரத்தத்தை விருத்தி செய்யக்கூடியது. இதய அடைப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள உதவும்.
பச்சைக்கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். கீரைகளில் தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், கரோட்டின் என்ற கண்களுக்கு தேவைப்படும் இன்றியமையாத பொருட்கள் அதிகளவு உள்ளது.
அகத்திக்கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, காசினிக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தய கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கைக் கீரை, முளைக்கீரை போன்ற கீரைகள் உடலுக்கு நல்ல பலனை கொடுக்க கூடியது. கீரைகளில் அரைக்கீரை இதயம், மூளை வலுப்பெறும். கீரைகளை சூப் செய்து குடிக்கலாம். அதனை அப்படியே கூட்டாக தயாரித்து சாப்பிடும் போது அதில் உள்ள நார்ச்சத்துகளும் நம் உடலுக்கு கிடைக்கிறது.
நமது உடலும், அதில் உள்ள இதயமும் ஆலயம் போன்றது. எனவே அந்த ஆலயத்தை பேணி காப்பது நம் கடமை. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடல் நன்றாக இருந்தால் உழைக்க முடியும். நம்மை நம்பி வீட்டில் மனைவி, மக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து உணவுப்பழக்கத்தை மாற்றுங்கள்.
எப்படியும் வாழலாம் என்று இல்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்க்கை முறையை வரையறுத்து வாழ்ந்து நீங்களும் 100 வயதை தாண்டி வாழலாம்.
தொடர்புக்கு:
info@kghospital.com, 98422 66630






