என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தசை பிடிப்பை தடுப்பது எப்படி?
    X

    தசை பிடிப்பை தடுப்பது எப்படி?

    • சீதோஷ்ண நிலை, வயது, மருந்து, உடல் உழைப்பு இவை காரணமாக உங்களுக்கு தேவையான அளவு நீர் சத்தினை நீங்களே கவனித்து சரி செய்து கொள்ள வேண்டும்.
    • நாம் அன்றாடம் உண்ணும் உணவில் நம்மை அறியாமலேயே சில தீங்குகளை வரவழைத்துக் கொள்கின்றோம்.

    சில நேரங்களில் இரவில் தூங்கிக் கொண்டு இருக்கும் போது திடீரென கால் இரு தசையில் பிடிப்பு ஏற்படும். வலி நம்மை கத்த வைக்கும். காலை நகர்த்துவது கூட கடினமாக இருக்கும். இந்த தசை பிடிப்பு இளம் பிராயத்தினர் தவிர்த்து மற்றவர்களுக்கு 60 சதவீதம் வரை அவ்வப்போது ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    தசைகள் தானாகவே இறுகுவதால் இந்த பிடிப்பு ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இவை ஆடு தசை மட்டுமில்லாமல் தொடையின் உள்புறம், தொடையின் கீழ்புறம் இவற்றிலும் ஏற்படலாம்.

    பல நேரங்களில் 10 நிமிடத்திற்குள் இவை தானாகவே சரியாகி விடும். ஆனால் ஒருவித டல்லான வலி, பலவீனம் போன்று ஒருநாள் வரை கூடத் தொடரலாம்.

    இந்த தசை பிடிப்பு பாதிப்பு பெண்களிடமும், முதியோர்களிடமும் பொதுவாகக் காணப்படும்.

    இப்படி தூக்கத்தில் ஏற்படும் தசை பிடிப்பினை தவிர்ப்பது எப்படி?

    * தேவையான அளவு நீர், திரவ வகையான இளநீர், மோர், ஜூஸ் போன்றவை எடுத்துக் கொள்ள வேண்டும். சீதோஷ்ண நிலை, வயது, மருந்து, உடல் உழைப்பு இவை காரணமாக உங்களுக்கு தேவையான அளவு நீர் சத்தினை நீங்களே கவனித்து சரி செய்து கொள்ள வேண்டும்.

    * உடற்பயிற்சிக்கான சைக்கிள் தெரியும் அல்லவா? சில நிமிடங்கள் மாலை நேரத்தில் இதனை செய்வது இந்த தசை பிடிப்பு தாக்குதலை தவிர்க்கும். ஸ்ட்ரெஸ் குறைத்தல், யோகா பயிற்சியினை செய்தல், குறிப்பாக கால்களுக்கு உரித்தானவற்றை சற்று கூடுதல் கவனம் கொடுத்து செய்ய வேண்டும்.

    முறையான காலணி பயன்படுத்துவது அவசியம். கால்களுக்கு மசாஜ் அவசியம். வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

    இரு தசையில் பிடிப்பு ஏற்படுகின்றது என்றால் கால்களை நீட்டி கால் விரல்களை மேல் பக்கமாக அதாவது உங்கள் முகம் பார்க்கும் வகையாக பயிற்சி செய்யுங்கள்.

    சாதாரண வலி மாத்திரையினை எடுத்துக் கொள்ளலாம். இவை அனைத்தும் செய்தாலும் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும் என்பதனை மறந்து விடாதீர்கள்.

    மேலும் சில காரணங்களையும் அறிவோம்.

    * பகலில் கோணல் மாணலாக உட்காரும் பழக்கம் கூடாது.

    உடல் உழைப்பே இல்லாது உட்கார்ந்த இடத்திலேயே உட்காரக் கூடாது.

    * மிக அதிகமான மற்றும் முறையற்ற உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது. அதிக நேரம் ஓய்வின்றி நிற்கக் கூடாது. மேலும் கர்ப்ப காலம், நரம்பு மற்றும் மூட்டு பாதிப்பு, தண்டுவட பாதிப்பு, இருதய பாதிப்பு, பார்க்கின்சன் பாதிப்பு, சில வகை மருந்துகள், சிறுநீரகம், கல்லீரல், தைராய்டு ஆரோக்கிய நிலை, சர்க்கரை நோய் பாதிப்பு இவைகளாலும் தசை பிடிப்பு ஏற்படலாம். உரிய காரணத்தை கண்டறிந்து சிகிச்சை செய்வதன் மூலம் நிவாரணம் பெற முடியும்.

    உடம்பு சரியில்லைன்னு கண்களும் சொல்லும்:

    கண்களுக்கு வாழ்வில் எத்தனை முக்கியத்துவம் உண்டு என அனைவரும் அறிவர். உடலின் பல மருத்துவ நிலைகளை கண்ணை பரிசோதித்தே மருத்துவர் அறிவார். நாமும் நம் கண்களை சுய ஆய்வு செய்து கொள்ள முடியும்.

    உயர் ரத்த அழுத்தம் முதல் தூக்கமின்மை வரை கண்களை பாதிக்கக்கூடும். சில அறிகுறிகளை நாம் கவனித்து சிகிச்சை பெற்றால் பலன்களை பெறலாம்.

    உயர் ரத்த அழுத்தம் ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கும். வெடிக்க வைக்கும். ரத்தக்குழாய் வெடித்தல் கூட ஏற்படலாம். இதனால் கண் பார்வை பாதிப்பு கூட ஏற்படலாம். முறையாக கண் பரிசோதனை செய்து கொள்வது இத்தகு பிரச்சினைகளை தவிர்க்கும்.

    சர்க்கரை நோய் பார்வை இழப்பு வரையில் கொண்டு செல்லலாம். முறையான, காலம் தாழ்த்தாத தொடர் கண் பரிசோதனை அவசியம்.

    தைராய்டு பிரச்சினை: வெளியே குதிப்பது போல் இருக்கும் கண்கள் தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். கார்னியாவினைச் சுற்றிய மஞ்சள் கலந்த வெள்ளை நிற வளையம் அதிக கொலஸ்ட்ரால் காரணமாக இருக்கலாம். கண்ணின் வெள்ளை பகுதி மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளித்தால் மஞ்சள் காமாலை (கல்லீரல் பாதிப்பாக) இருக்கலாம்.

    கண்ணில் கட்டிகள் என்பது கண் பார்வை பாதிப்பினை ஏற்படுத்தலாம். தூக்கமின்மை, வறட்சியான கண், கண்ணில் அரிப்பு ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

    ஆக அறிகுறிகளை உணர்ந்து மருத்துவர் அறிவுரை பெறுவதும் எதுவும் இல்லாவிடிலும் வருடம் ஒரு முறையாவது கண் பரிசோதனைகளை செய்து கொள்வதும் சிறந்த நன்மை பயக்கும். நாம் அன்றாடம் உண்ணும் உணவில் நம்மை அறியாமலேயே சில தீங்குகளை வரவழைத்துக் கொள்கின்றோம். இதனால் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகின்றன, எடையினை கூட்டுகின்றன. அவை:

    குளிர்பானங்கள், மிட்டாய்கள், அதிக சர்க்கரை சேர்த்த ஜூஸ் வகைகள் அதிக இனிப்பு சேர்த்த எந்த பிரிவும் ஆரோக்கியமற்றவையே. பற்களுக்கும் சரி, ரத்த குழாய்களுக்கும் சரி. இவை அதிக பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. அதிக சர்க்கரை உள்ள cereals வகைகளையும் தவிர்த்திட வேண்டும். சர்க்கரை வகைகளை தவிர்த்து பைன் ஆப்பிள், ஆப்பிள், மாம்பழம், ஆரஞ்சு, தர்பூசணி என பழ வகைகளை சேர்த்துக் கொள்ளலாமே. ஆலீவ் எண்ணை சேர்க்கலாம். ரத்தக் குழாய் அடைப்பினை தவிர்க்க கொழுப்பு குறைந்த அசைவம், கொழுப்பு குறைந்த பால் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

    வெண்ணை, முழு கிரீம் உள்ள பால், ஐஸ்கிரீம், அதிக கொழுப்பு நிறைந்த சீஸ், கொழுப்பு அதிகம் கொண்ட அசைவ உணவு போன்றவற்றினை தவிர்க்கலாம். அல்லது மிகக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

    நம்ம ஹார்மோன்களை நாமே நல்லா வச்சுக்க முடியும்:

    என்டார்பின்ஸ்: இந்த ஹார்மோன் வலி நீக்கும். ஸ்ட்ரெஸ்சினை குறைக்கும். ஆரோக்கியமான உடல், மன நிறைவினைக் கொடுக்கும். இது நமக்கு நன்கு சுரந்து பயனளிக்க.

    * உடற்பயிற்சி செய்ய வேண்டும் * வாய் விட்டு சிரிக்க வேண்டும் * நடனம் ஆடலாம் * மிதமான கார, மசாலா உணவு எடுத்துக் கொள்ளலாம் * அடர்ந்த சாக்லேட் ஒரு துண்டு எடுத்துக் கொள்ளலாம் * மனச்சோர்வு, கவலைகளை அடித்து விரட்டி விட வேண்டும்.

    ஆக்சிலோசின்: அன்புக்கான ஹார்மோன் இது. பிறரிடம் எரிந்து விழாமல் அன்பு, பாசம் ஏற்பட உதவும். இதன் தேவைக்காக செல்ல பிராணி (அ) செடி, கொடி வளர்க்கலாம்.

    * தினம் ஒரு சிறு நன்மையாவது பிறருக்கு செய்யலாம்.

    * அன்பாய், ஆறு தலாய் பேசலாம்.

    * நல்ல மசாஜ் எடுத்துக் கொள்ளலாம்.

    * வைட்டமின் சி.டி.- சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

    * பாட்டு பாடுவது, யோகா செய்வது இவை நன்கு உதவும்.

    டோபமைன்: இது ஒருவர் நல்ல மன நலத்துடன் இருக்க உதவும். நல்ல பாட்டு கேட்கலாம். புரதம் நிறைந்த உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி அவசியம். இரவு நல்ல உறக்கம் அவசியம். காலை-மாலை வெய்யிலில் சிறிது நேரம் இருக்கலாம். தியானம் செய்யலாம்.

    செரடோனின்: இது நல்ல மனநிலை, தூக்கம், பசி, ஜீரண சக்தி இவற்றினை அளிக்கின்றது. செரடோனின் நன்கு சுரக்க தியானம், மூச்சுப் பயிற்சி, யோகா, இயற்கையோடு சிறிது நேரம் இருத்தல், இயற்கையின் ஒலிகளை கேட்டு ரசித்தல், வைட்டமின் டி-சத்து மருந்து, மசாஜ், ஆக்கப்பூர்வ சிந்தனை ஆகியவை அவசியம்.

    கீழ்கண்ட அறிகுறிகள் உடனடி மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியவை:

    * காரணமின்றி எடை குறைவது * எப்பொழுதும் சோர்வாக இருத்தல் * தீராது வரும் ஜூரம் * உடலில் எப்பொழுதும் வலி * சரும மாற்றம்-நிறம், அளவு மாறும் மச்சங்கள் * விடாது இருக்கும் இருமல் * விழுங்குவதில் சிரமம் * தொடர்ந்து வயிற்று வலி * மூச்சு விடுவதில் சிரமம் * வீக்கம் * மஞ்சள் காமாலை * தொடர் தலைவலி * தொடர் வயிற்று பிரட்டல், வாந்தி * குரலில் மாற்றம் * எலும்பு வலி * ரத்த போக்கு- உடலில் எங்கிருந்தும் * மாதவிலக்கு சுற்றின் நடுவில் மாத விலக்கு, நின்றபின் ஏற்படும் ரத்தபோக்கு * கழிவு பொருள் வெளியேற்றத்தோடு ரத்த போக்கு * இப்படி எந்த ரத்த போக்கு இருந்தாலும் * உடலில் கட்டி போன்று இருத்தல் * இரவில் வியர்த்து கொட்டுதல் * சிறிது உண்டாலும் வயிறு நிரம்பிய உணர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    மேலும், சிறுநீர், கழிவு பொருள் வெளியேற்றத் திலும் மாறுபாடு, ஆறாத புண், பெண்களுக்கு மார்பக கட்டி (அ) மார்பகத்தில் மாறுபாடு போன்றவையும் உடனடியாக மருத்துவர் ஆலோசனை பெற வேண்டியவையே.

    கடந்த 2, 3 ஆண்டுகள் கொரோனா, டெல்டா, ஒமைக்ரான் என்ற பெயர்களால் மனித சமுதாயம் பிரண்டு போய் விட்டது. அதிலிருந்து மீள்வதற்கே இன்னும் சில காலம் ஆகலாம். இந்நிலையில் கடந்த 2 மாத காலமாக ஜூரம், உடல் வலி, இருமல், சளி என்ற பாதிப்பு மக்களிடையே கூடிக் கொண்டு வந்துள்ளது. H3N2 என்று அடிக்கடி குறிப்பிடப்படுகின்றது. இது குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மற்றும் நீண்ட கால சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உடையவர்களை எளிதில் தாக்குவதோடு அதிக பிரச்சினைகளுக்கும் ஆட்படுத்தி விடுகின்றது. H3N2 வைரஸ் வீரியம் அதிகம் கொண்டது. இருமல், தும்மல் இவற்றின் துளிகளால் அடுத்தவருக்கு வெகு வேகமாய் பரவி விடுகின்றது. மற்ற ப்ளு பிரிவுகளை போல் ஜூரம், இருமல் தொண்டைவலி, உடல்வலி, சோர்வு என்ற தாக்குதல்களை ஏற்படுத்துகின்றது.

    இதற்கு தவிர்ப்பு முறையாக சமூக இடைவெளி, முககவசம், கைகளை அடிக்கடி சுத்தம் ெசய்தல் இவை அவசியம். மேற்கூறப் பட்ட அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே 48 மணி நேரத்திற்குள் மருத்துவர் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். பாதிப்பு இருப்பவர் தனிமைபடுத்தப்பட வேண்டும். இதற்கான பரிசோதனைகளை மருத்துவர் ஆய்வு செய்வார். அவரது ஆய்வுக் கேற்றபடி மருந்துகள் அளிக்கப்படும்.

    சுய சிகிச்சை என்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இதன்பின் விளைவுகள் சற்று ஆபத்தாக மாறலாம் என்பதால் மருத்துவ மனையை அணுகுவது மிக அவசியம்.

    இன்று கொரோனாவும் சற்று தலை தூக்க ஆரம்பித்து விட்டது. சுகாதாரம், தவிர்ப்பு முறைகளை பின்பற்றுதல் மருந்து ஆலோசனைபடி புளூ ஊசி போட்டுக் கொள்ளுதல் போன்றவையே இதற்கு சிறந்த தீர்வாக முடியும்.

    Next Story
    ×