என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஒரு வழிப்போக்கனின் பார்வை: எது உண்மையான பக்தி?
    X

    ஒரு வழிப்போக்கனின் பார்வை: எது உண்மையான பக்தி?

    • பெற்ற தாயை வீட்டில் வைத்துப் பராமரிக்க மனமில்லாதவன், கடவுளுக்கென்று கோடி கோடியாய் பணத்தைக் கொட்டுகிறான்.
    • நாம் எத்தனையோ பேருடன் பழகுகிறோம். பலர் நம்முடன் பழகுகிறார்கள். ஆனால் எல்லோரும் நம் மனதோடு ஒன்றிவிடுவதில்லை.

    பக்தி என்பது என்ன? வழிபாட்டுக் கூடங்களுக்குச் சென்று இறைவேண்டல் செய்தல்; உண்டியலில் காணிக்கை இடுதல்; விரதம் இருத்தல்; அவரவர் தங்கள் மதம்சார்ந்த சடங்குகளை அனுசரித்தல்; பண்டிகைகளைக் கொண்டாடுதல்; தோத்திரப் பாடல்களை முணுமுணுத்தல் - இவையே பக்திக்குரிய செயற்பாடுகள் என்பதுதான் நம்மில் பலரின் நம்பிக்கை.

    வாழ்வின் மீதான பற்றுதலை அறுத்துவிடுவதுதான் உண்மையான பக்தி என்று கருதுபவர்களும் உண்டு. உடையில் தனிப்பட்ட வித்தியாசத்தைக் காட்டுவதும் பக்தியின் ஓர் அடையாளம் என்று நினைத்துக் கொள்பவர்களும் உண்டு.

    ஆனால், மெய்யான பக்தி என்பது இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. புறத்தோற்றங்களையும் சம்பிரதாயங்களையும் கடந்து நிற்பது. ஆன்மாவில் இருந்து புறப்பட்டுக் கருணை வெள்ளமாய் பிரபஞ்சத்தை நிரப்புவது; அன்பின் ஒளியால் அகிலத்தை ஆட்கொள்வது.

    மனிதநேயமே மெய்யான பக்தி. மனதில் ஈரம் இருக்க வேண்டும். தமக்கு அடுத்திருப்பவனை நேசிக்கின்ற உள்ளம் வேண்டும். மனிதமற்ற நிலையில் போடுகின்ற பக்திக்கோலம் காகிதப் பூக்களைப் போன்றது. மணம் உண்டா, மதுரம் உண்டா, வண்டுகளின் மோகனம்தான் கேட்பதுண்டா!

    அன்புதானே பக்தியின் அடிநாதம். அதுதான் நம் வாழ்க்கையைப் பக்திபூர்வமாக்குகிறது; அழகுபடுத்துகிறது. ஒருவனை 'பக்திமான்' என்று அடையாளப்படுத்துவது, மற்றவர்களிடத்தில் அவன் காட்டுகின்ற அன்பேயன்றி, வேறொன்றுமில்லை.

    'உன் சுயத்தை இழந்துவிடு; வாழ்வின் சுகங்களைப் புறந்தள்ளிவிடு. அப்படியானால்தான் இறையருளைப் பெற முடியும்' என்று சொல்பவர்களை நம்பாதீர்கள். ஏனெனில், இறையருளால் நாம் பெற்றிருப்பதுதான் இந்த வாழ்க்கை. எனவே, வாழ்க்கையை நாம் நேசிக்க வேண்டும். தன்னைத்தான் நேசிக்கத் தெரியாதவன், எப்படி மற்றவர்கள் மீது அன்பு செலுத்த முடியும்.

    தமிழில் தோன்றிய அளவிற்கு வேறு எந்த மொழியிலும் பக்தி இலக்கியம் தோன்றவில்லை. ஆழ்வார்கள் நாயன்மார்களின் பாடல்களில் துறவறம் பழிக்கப்படவில்லை; இல்லறம் வெறுக்கப்படவில்லை. கலைகள் போற்றப்படுகின்றன. உலக இன்பங்களை நுகர்ந்தவாறே பக்தி செலுத்தலாம் என்ற தெளிவை பக்தி இலக்கியம் நமக்குத் தருகிறது. இந்தப் பூமியில் நல்வாழ்வை அது வலியுறுத்துகின்றது.

    நல்ல வாழ்க்கை என்றால்? நல்லவர்களாய் வாழ்வது. பெற்றோரை கனப்படுத்துதல்; உடன்பிறந்தார்க்கு உதவுதல்; உறவினர்களை ஆதரித்தல்; அபயம் என்று வந்தோரை அரவணைத்தல்; பசியோடிருப்பவரின் பசியாற்றுதல்; உள்ளன்போடு பழகுதல்; பொய்பேச அஞ்சுதல்; நேர்மையாக சம்பாதித்தல்; பிறர்க்குத் தீங்கு எண்ணாமை - இவையெல்லாம் நல்வாழ்வின் உட்கூறுகள்.

    பெற்ற தாயை வீட்டில் வைத்துப் பராமரிக்க மனமில்லாதவன், கடவுளுக்கென்று கோடி கோடியாய் பணத்தைக் கொட்டுகிறான். என்ன பிரயோஜனம்? அவன் கொட்டிய கோடிகளில் ஒரு பைசாகூட இறைவனின் சன்னதியைச் சென்றடையப் போவதில்லை.

    இளமைத் துடிப்புள்ள ஓர் இளைஞன் நபிகள் பெருமானாரிடம் வந்தான். இறைத்தூதரை வணங்கி, 'அறப்போருக்குச் செல்லும் படையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்றான்.

    'உன் பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?' என்று அவனிடம் கேட்டார் நபிகளார்.

    'ஆம், இறையருளால் இருவருமே உயிருடன் இருக்கிறார்கள்' என்றான் அந்த இளைஞன்.

    'அப்படியானால், நீ போய் உன் பெற்றோருக்குப் பணிவிடை செய்' என்று அறிவுறுத்தி, அவனை அனுப்பி வைத்தார் அண்ணல் நபிகளார்.

    மற்றுமோர் இளைஞன். திடகாத்திரமான தேகம். தன்னை அறப்போர் படையில் சேர்த்துக் கொள்ளுமாறு அவனும் அண்ணல் நபிகளாரை வேண்டினான்.

    'உன் பெற்றோரிடம் அனுமதி வாங்கினாயா?' - அவனிடம் கேட்டார் நபிகளார். 'இல்லை' என்றான் அவன்.

    'உன்னை உன் தாய் எப்படி அனுப்பி வைத்தார்?' என்று மீண்டும் அவனிடம் கேட்டார் இறைத்தூதர்.

    'என் தாய் அழுதுகொண்டே இருந்தார். அவளின் அழுகையைப் பொருட்படுத்தாமல் நான் வந்துவிட்டேன்' என்றான் அந்த இளைஞன்.

    'உடனே இங்கிருந்து செல். அழுது கொண்டிருக்கும் உன் தாயை மகிழ்ச்சியில் சிரிக்கவை. பெற்றோரின் மகிழ்ச்சியில்தான் இறைவனின் மகிழ்ச்சி உள்ளது' என்றார் நபிகள் பெருமானார்.

    எத்தனை பெரிய உண்மை! பெற்றோரை தவிக்க விட்டுவிட்டு, 'சமூக சேவை செய்கிறேன்' என்று திரிகின்றவன் யாருக்குதான் உண்மையுள்ளவனாக இருக்க முடியும். முதியோர் இல்லத்திற்குத் தாயை அனுப்பிவிட்டு, முக்திபெற அலைகின்றவனுக்கு சத்தியமே புரியவில்லை என்றுதான் அர்த்தம்.

    சொத்துக்காக பெற்றோரைக் கொலை செய்கின்ற படுபாதகச் சம்பவங்களும் நடந்துகொண்டுதானே இருக்கின்றன. பெற்றோர் தங்கள் சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டை அவர்களிடமிருந்து எழுதி வாங்கிக் கொண்டு, அவர்களை வீதிக்கு அனுப்புகின்ற பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

    சிலருக்குப் பேய்த்தனமான பேராசை. பிறந்த வீட்டிற்கு துரோகம் செய்வார்கள். சொத்துசுகங்களைப் பிடுங்கிச் செல்வார்கள். துளியளவுகூட நன்றியில்லாமல் நடந்து கொள்வார்கள்.

    இன்று எத்தனையோ வீடுகளில் முதிர்வயதுப் பெற்றோர்கள் தன்னந்தனிமையில் தவிக்கின்றனர். ஒரு குவளை வெந்நீர் வைத்துக் கொடுப்பதற்குக்கூட ஆளில்லை. ஆத்திர அவசரத்திற்கு மருந்து மாத்திரை வாங்கித்தர யாருமில்லை. அவர்களின் ஆயுள் கண்ணீரில் கரைந்து போவதுதான் பரிதாபம்.

    இதில் வேடிக்கை என்னவென்றால், அன்பில்லாதவனும் அறத்தின்வழி நில்லாதவனும்தான் அதிகமாக பக்தி வேஷம் போடுகிறான். ஊரை ஏமாற்றுவதாக எண்ணிக்கொண்டு, அவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான். தர்மத்தை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. அது சரியான நேரத்தில் தனது தீர்ப்பை எழுதி முடிக்கும்.

    தாய்தந்தையைச் சேவிப்பதும், அவர்களை அன்புடன் பராமரிப்பதும்தான் உன்னதமான பக்தி. மற்ற பக்தியெல்லாம் அதற்குப் பின்னர்தான்.

    அதனால்தான், 'கொன்றை வேந்தன்' என்னும் நீதி நூலில் முதல் நீதியாக 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றாள் ஔவை. அதை அடுத்து' ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றாள். வீட்டில் பெற்றோரைக் கண்ணீர்விடச் செய்துவிட்டு, ஆலயத்திற்கு வந்து தோத்திரக் கீர்த்தனங்கள் பாடுகின்றவன் அருவருப்பானவன். அவனுடைய வாழ்க்கை, வெளிச்சத்தை அறியாத இருண்ட குகை. தோல்விகளும் தொல்லைகளுமே அவனைத் தொடரும்.

    வாழ்வில் இறையருள் வேண்டுமா; நன்மைகள் பெருக வேண்டுமா; நிம்மதி வேண்டுமா? பெற்றோரை நேசிக்க வேண்டும். அந்த பக்தியில் எல்லா நலன்களும் வந்து சேரும்.

    'என்ன நோன்பு நோற்றாள் கொல்லோ அவனைப் பெற்ற வயிறுடையாள்' என்று எல்லோரும் போற்றிக் கொண்டாடும் சிறப்பை உடையவன் கண்ணன். அவனின் பிறப்பால் யசோதையின் வயிறு விளக்கம் பெற்றது என்பதை, 'தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்' என்று குறிப்பிடுகிறாள் ஆண்டாள். 'மக்கள் அன்புக் கயிற்றினால் என்னைக் கட்டலாம்' என்பதை உணர்த்துவதே தாமோதரன் என்னும் பெயர்.

    அன்புதான் தெய்வீகம். அதுதான் மானுட மேன்மையின் ஆதாரம். கடவுளுக்கு முன் மக்கள் எல்லாரும் சமமானவர்கள் என்பதே, ஆழ்வார்கள் நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் ஏற்படுத்திய புரட்சி.

    ஒருவன் எப்போது பக்தியில் முதிர்ச்சி அடைகிறான்? எல்லோரும் சரிசமம் என்று எண்ணுகின்ற பக்குவத்தை அடையும்போதுதான். பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. வசதி வாய்ப்புகளில் வித்தியாசங்கள் இருக்கின்றன. எனினும் மனித சமூகம் என்பது ஒன்றுதான்.

    மனித சமுதாயத்திற்குள் பிரிவினைகளை ஏற்படுத்துவது ஆன்மிகத்திற்கு எதிரானது; பக்திநெறிக்குப் புறம்பானது. மனிதத்தை மறுதலிக்கிறவன் அறவாழ்வைப் புறக்கணிக்கிறான் என்று பொருள்.

    மனிதத்தில் வேர்கொண்டு நிற்பவனின் கண்களில் பேதங்கள் இருப்பதில்லை. அவன் மனதில் பிரிவினைகள் தோன்றுவதில்லை. எல்லோரிடத்திலும் அவன் தெய்வ தரிசனத்தைக் காண்கிறான்.

    ஏழைகளுக்கு மனமுவந்து கொடுக்கின்ற கைகள் கோயிலாகிவிடுகின்றன. நோயில் கிடப்பவனைத் தட்டி எழுப்புகின்ற வார்த்தைகள் பூஜை மலர்களாய் மணக்கின்றன.

    கனிவான பேச்சிலும், களங்கமற்ற சிரிப்பிலும், கருணைமிகு செயல்களிலும் அவன் தான் யாரென்பதை வெளிப்படுத்துகின்றான். 'பக்திமான்' என்பதற்கு அவனுக்கு வேறெந்த அடையாளங்களும் தேவையில்லை.

    நல்ல எண்ணங்களே உள்ளத் தூய்மை. புறச்செயல்கள் ஒருவனைத் தீட்டுப்படுத்துவதில்லை. அதனால்தான், 'இருதயத்தில் இருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷனங்களும் புறப்பட்டுவரும் இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்' என்று விவிலியம் கூறுகிறது.

    மாசுபடாத சிந்தனை வேண்டும். நேர்மையான பார்வை வேண்டும். நட்பிலும் பக்தி வேண்டும். அந்த நட்புதான் ஆயுளுக்கும் தொடர்கின்ற நட்பாக நிலைத்திருக்கும்.

    நாம் எத்தனையோ பேருடன் பழகுகிறோம். பலர் நம்முடன் பழகுகிறார்கள். ஆனால் எல்லோரும் நம் மனதோடு ஒன்றிவிடுவதில்லை. சிலர் சீக்கிரத்திலே விலகிவிடுவார்கள். சிலர் எவ்வித ஈடுபாடுமின்றி பெயரளவில் நண்பர்களின் பட்டியலில் இருப்பார்கள். வெகு சிலரே ஆத்மார்த்த நண்பர்களாய் நம்முடன் ஒன்றியிருப்பார்கள்.

    நட்பில் பக்தி என்பது நம்பகத்தன்மை. எப்போதும் வெளிப்படையாகப் பேச வேண்டும். ஆள் இருக்கும்போது ஒருவிதமாகவும், அந்த நபர் இல்லாத நேரத்தில் வேறுவிதமாகவும் பேசுவது அவலட்சணமான பழக்கம். அப்படிப்பட்டவர்கள் நண்பர்களுக்குள்ளேயே பகையை ஏற்படுத்திவிடுவார்கள். அவர்களை விட்டு விலகி இருப்பதே நமக்கு மரியாதை.

    பக்திமிகு நட்பு ஒருபோதும் வேஷம் போடாது; புறங்கூறாது. பொறாமை கொள்ளாது. உணர்வுகளால் பின்னிப் பிணைந்த நட்பு விட்டுப் பிரியாது.

    சங்கப் புலவர் கபிலர் பாரியின் மிக நெருங்கிய நண்பர். மூவேந்தர்களும் பொறாமைப்படும் அளவிற்குப் பாரியின் புகழைப் பாடியவர் கபிலர். இந்நிலையில், மூவேந்தர்களும் சூட்சுமமாக வஞ்சித்து, பாரியைக் கொலை செய்துவிடுகின்றனர்.

    கபிலரின் மனக்கண்களில் ரத்தம் கசிந்தது. பாரியின் இருமகள்களையும் திருக்கோவிலூரைச் சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்தார். தன் உயிர்த்தோழன் இறந்தபின்னும், அதே நட்புணர்வுடன் பாரியின் குழந்தைகளைத் தன் வாரிசாக எண்ணிச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடித்தார். பாரியின் பிரிவைக் கபிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நினைவுகள் வாட்டி வதைத்தன. தென்பெண்ணை ஆற்றில் உள்ள சிறு குன்றின் மீது வடதிசை நோக்கி அமர்ந்தார். உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்தார்.

    'நீ இறந்த போது, உன்னோடு என்னை வரவிடாது இங்கேயே இரு என்று சொல்லிச் சென்றாயே. இனி உன்னைப் பிரிந்திருக்க முடியாது. இடைவிடாமல் உன்னைச் சேர்ந்தே இருக்க வேண்டும். உனக்கு நான் உயிர்நண்பன் இல்லையா! எனவே, இங்கிருந்தது போலவே அங்கேயும் நான் உன்னுடன் வாழும் நிலையை எனக்குத் தருவாயாக' என்ற பொருளில் அவர் பாடிய 'பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது...' என்னும் பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. நட்பின்பால் கொள்ளும் பக்திக்கு இது ஓர் மிகச்சிறந்த உதாரணம்.

    குடும்ப வாழ்க்கை, நட்பு, தொழில், இறையச்சம், உபகாரம், உயிரினங்கள் - எல்லாவற்றின் மீதும் ஆழ்ந்த பக்தி வேண்டும். இயற்கை தரும் இன்பங்களும், கலை இன்பங்களும் இறைவன் தரும் இன்பங்களே. எனவே, எல்லாவற்றிலும் இறைவன் இருக்கின்றான் என்பதே பக்தியைப் பற்றிய சரியான புரிதல். அதுதான் உண்மையான இறைவழிபாடு.

    அந்த பக்தி நிலையை நாம் இன்னும் எய்திவிடவில்லை. அது ஒரு தெய்வீகத் தன்மை. அந்த நிலையை எய்திவிடக்கூடுமானால், இந்த உலகில் பஞ்சம் பசி பட்டினி, கேடுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள், கொலை கொள்ளை எதுவும் இருக்காது. எல்லோரும் இன்புற்றிருப்போம். அதுதான் மெய்யான பக்தியின் ஆற்றல்.

    Next Story
    ×