search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    குலம் காக்கும் குல தெய்வ வழிபாடு- பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி
    X

    குலம் காக்கும் குல தெய்வ வழிபாடு- பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

    • குல தெய்வம் என்பது முன்னோர்களால் தலைமுறை தலைமுறையாக வணங்கப்பட்டு வந்த தெய்வமாகும்.
    • மனிதனுக்கு ஏதாவது ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே.

    மனிதர்களின் கண்ணுக்கு புலப்படாத உணரக்கூடிய சக்தி இறை சக்தியாகும். நமக்கு துன்பம் நேரும் போது நாம் துணைக்கு அழைப்பது நமது குல தெய்வம், இஷ்ட தெய்வம் அல்லது உபாசனை தெய்வத்தை தான். தெய்வங்களில் மிகவும் வலிமையானது தெய்வம் குலதெய்வமாகும். குல தெய்வம் என்பது முன்னோர்களால் தலைமுறை தலைமுறையாக வணங்கப்பட்டு வந்த தெய்வமாகும். எல்லா தெய்வங்களிலும் முதன்மையாக வணங்கப்பட வேண்டியது. குலம் என்றால் வம்சாவழி என்று பொருள். குலத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ஒவ்வொரு குலத்தின் முன்னோர்களும் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும். குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்பவர்களுக்கு நவகிரகங்களும் துணை நிற்கும்.

    குலதெய்வம் பெரும்பாலும் சிறு காவல் தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிட முடியாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்களாகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.

    குலதெய்வ வழிபாட்டின் அவசியம்

    ஒருவர் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் எல்லா பலன்களும் ஜாதகர், ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான குலதெய்வம் தீர்க்கும்.

    குல தெய்வ வழிபாட்டு முறை

    குல தெய்வ வழிபாட்டில் பல முறைகள் உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் குல வழக்கப்படி நான்கு முறைகளில் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.

    1.உருவ வழிபாடு, உருவமில்லாத வழிபாடுகள்

    2. ஆயுதங்களை வழிபடுவது, நினைவுப் பொருட்களை வைத்து வழிபடுவது.

    3. ஆண்கள் மட்டும் கும்பிடும் குல தெய்வம்.

    4. இரவில் பூஜை செய்வது. பூஜையின் போது வாய் கட்டி பூஜை செய்வது. வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பூஜை செய்யும் தெய்வம். என தமது பராம்பரிய முறைப்படி குல தெய்வ வழிபாட்டைக் கடைபிடிக்கிறார்கள்.

    எனினும் குல தெய்வம் தொடர்பாக பலர் சந்தேகத்துடன் ஜோதிடரை அணுகுகிறார்கள். அதில் பலருக்கு எழும் சில முக்கியமான சந்தேகங்களைப் பார்க்கலாம்.

    1. குல தெய்வமே தெரியாதவர்கள்

    பூர்வீகத்தை விட்டு வெளியேறி சொந்த பூமிக்கு வராமல் இருப்பவர்களுக்கு சில வருடங்களில் குல தெய்வம் மறந்து போகும். நண்பர்கள், உறவினர்களின் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு காரியசித்தி ஏற்பட்டால் சொந்த குல தெய்வத்தை மறந்து விடுவார்கள். அதனால் தான் சில குறிப்பிட்ட சமூகத்தினர் தங்கள் குலத்தில் பிறக்காத வரை குல தெய்வ கோவிலுக்குள் அனுமதிப்பது இல்லை. குல தெய்வம் தெரியாதவர்கள் குல தெய்வத்தை கண்டறியும் முறை

    ஒருவரின் ஜாதகத்தில்

    பூர்வ புண்ணிய ஸ்தானமான

    ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி,

    ஐந்தில் நின்ற கிரகம்,

    ஐந்தாமிடத்தை பார்த்த கிரகம்,

    ஐந்தாம் அதிபதி பெற்ற நட்சத்திர சாரம் மற்றும் சனி பகவானே ஒருவரின் குல தெய்வத்தை நிர்ணயம் செய்யும் காரணிகளாகும். 5-ம் இடம் ஆண் ராசியா, பெண் ராசியா எனக் கண்டுபிடித்து, அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா எனத் தெரிந்து கொள்ளலாம். மேலும் அது நில ராசியில் (ரிஷபம், கன்னி, மகரம்) உள்ளதா, நீர் ராசியில் (கடகம், விருச்சிகம், மீனம்) உள்ளதா, என்பதைத் தெரிந்துகொண்டு, குல தெய்வம் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கலாம்.

    நீர் ராசி என்றால், ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடங்களுக்கு அருகில் இருக்கும். நில ராசியில் நின்றால், வயல்வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் (மேஷம், சிம்மம், தனுசு) நின்றால், மலை மேல் இருக்கும். குலதெய்வம் பற்றி வீட்டின் மூத்த ஆண் வாரிசின் ஜாதகத்தின் மூலம் அறியலாம்.

    5-ம் இடத்துடன் சந்திரன், சுக்கிரன் சம்பந்தம் பெற்றால் குல தெய்வம்பெண் தெய்வமாகும். சனி சம்பந்தம் பெற்றால், பதினெட்டுப்படி கருப்பணசாமி, மதுரைவீரன், முனீஸ்வரன் போன்ற ஆண் காவல் தெய்வங்களைக் குறிப்பிடுகிறது. செவ்வாய் சம்பந்தம் பெற்றால் பெண்கள் அருகில் சென்று வழிபட முடியாத உக்கிர ஆண் தெய்வமாகும்.

    குரு சம்பந்தம் பெற்றால் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த பெரியவர்களை வழிபடுதல். ராகு கேதுக்கள் சம்பந்தம் பெற்றால் உக்கிரமான வனதேவதைகளாக இருக்கும்.

    ஜாதக ரீதியாக குறிப்பாக கண்டறிய முடியாத நிலையில் சோழிப் பிரசன்னம், அஷ்டமங்கலப் பிரசன்னத்தால் தீர்வு கிடைக்கச் செய்ய முடியும். ஒருவருக்கு குல தெய்வம் தெரியாமல் போவதற்கும் குல தெய்வ சாபமே காரணம்.

    குல தெய்வ சாபம் உள்ளவர்கள், குல தெய்வம் தெரியாதவர்கள் ஜோதிட ரீதியாக 5-ம் அதிபதி தொடர்பான தெய்வத்தை கண்டறிந்து அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நெய்தீபம் ஏற்றி தீபத்தை குல தெய்வமாக பாவித்து சர்க்கரை பொங்கல் படையலிட்டு தொடர்ந்து ஆத்மார்த்த வழிபாடு செய்து வர குல தெய்வம் தொடர்பான தகவல் கிடைக்கும்.

    2. குலதெய்வமாக ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வத்தை வணங்குபவர்கள்.

    3. கும்பிடும் குல தெய்வம் சரிதானா என்ற சந்தேகம் உள்ளவர்கள்.

    4. கும்பிடும் தெய்வம் குல தெய்வமா? அல்லது குடும்ப தெய்வமா என்ற சந்தேகம் உள்ளவர்கள். தந்தையின் குல தெய்வத்தை கும்பிடாமல் தாயின் குல தெய்வத்தை கும்பிடுவதால் குல தெய்வம் மறந்து போகும். பல சாமி போட்டோ வைத்து இருக்கும் வீடுகளில், குலதெய்வத்தை பல பேர் மறந்துவிடுகிறார்கள்.

    குலம் மாறிய திருமணம் குல தெய்வ வழிபாட்டை மாற்றி விடும். கலப்பு திருமணம் அதிகம் இருக்கும் குடும்பத்தில் கும்பிடும் குல தெய்வம் சரிதானா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். சில குறிப்பிட்ட சமூகத்தினர் கலப்பு திருமணம் செய்தவரை ஆதரிக்காமல் குடும்பத்தில் இருந்து விலக்கி விடுவார்கள். எங்கள் குலதெய்வத்திற்கு கலப்பு திருமணம் ஆகாது என்று கூறுவதை கேள்விபட்டு இருக்கிறோம். கலப்பு திருமணம் குல, குடும்ப பழக்கத்தை மாற்றி அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும். தனக்கு பிறக்கும் குழந்தைகள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதை விரும்புபவர்கள் கலப்பு திருமணத்தை தவிர்த்தல் நலம்.

    5. குல தெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் பிரச்சினை வருகிறது அல்லது குலதெய்வ கோவிலுக்கு என்னால் செல்ல முடிவதில்லை?

    5-ம் அதிபதி நீசம், அஸ்தங்கம் அடைய குல தெய்வம் இருந்தும் வழிபாடு செய்யும் ஆர்வம் இருக்காது. குல தெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் பிரச்சினை வருபவர்களின் ஜாதகத்தில் 5-ம் அதிபதி பலவீனமாக இருக்கும். இந்த குறை நீங்க குலதெய்வ வழிபாட்டை ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் அல்லது 5-ம் அதிபதியின் நட்சத்திரம் நடைபெறும் நாட்களில் வழிபாடு செய்ய வேண்டும் அல்லது கோச்சாரத்தில் 5-ம் அதிபதி பலம் பெறும் நாளில் வழிபட வேண்டும். வீட்டில் பெண்கள் வீட்டு விலக்குடன் இருக்கும் போதும், இறப்பு தீட்டு இருந்தாலும் குல தெய்வ கோவிலுக்கு செல்ல கூடாது.

    5-ம் அதிபதி 8-ல் மறைய குல தெய்வ குற்றம், கோபம் இருக்கும். குல தெய்வ குற்றம், கோபம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக குலதெய்வ வேண்டுதலை நிறைவேற்றாமல் இருப்பது, குலதெய்வ கோவிலுக்கு செல்லாமல் இருப்பது போன்ற காரணத்தால் குலதெய்வ குற்றம், குலதெய்வ கோபம் ஏற்படுகிறது. குல தெய்வ கோபத்தை சரி செய்ய கோவிலை சரியாக பராமரித்து , முறையான அபிஷேக ஆராதனை செய்து , வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரித்து, உணவு படைத்தால் குலதெய்வ குற்றம், கோபம் சரியாகும். அத்துடன் கோவிலுக்கு வருடம் ஒரு முறை யாவது சென்று வழிபாடு செய்து தான தர்மம் செய்ய வேண்டும். அத்துடன் குல தெய்வத்தின் திருமேனி பழுதடையாமல் காக்க வேண்டும்.

    5-ம் அதிபதி 12-ல் இருத்தல் அல்லது பாதகாதியுடன் சம்பந்தம் பெறுவது குல தெய்வ சாபமாகும். அத்துடன் சூரியன், சந்திரன் சம்பந்தப்படுவது பரம்பரை பரம்பரையாக தீர்க்கப்படாத சாபமாக இருக்கும். சாபம் ஏற்பட காரணம் கோவில் சொத்து, வருமானத்தை அபகரிப்பதால் மட்டுமே ஏற்படும். இதன் பலனாக பூர்வீகத்தில் குடியிருக்க முடியாத நிலை, பூர்வீகச் சொத்தை இழக்கும் நிலை, கஷ்ட ஜீவனம், நல்ல வேலை, தொழில் அமையாத நிலை, தீராத கடன், கர்ம வினை நோய், தொடர் துர் மரணம், ஊனம் உள்ள குழந்தை பிறப்பது, திருமணம் நடக்காமல், குழந்தை பிறக்காமல் தலைமுறையே தழைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஒரு குறிப்பிட்ட ஊரில் உருவாகும் இயற்கை சீற்றத்திற்கு குல தெய்வ சாபமே காரணம். ஒரு ஊரில் நடக்கும் தொடர் சம்பவங்களே குல தெய்வம் மகிழ்வோடு இருக்கிறதா இல்லையா? என்பதைக் காண்பித்து விடும்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்களின் பொருளாதார தேவையை தங்களின் வருமானத்திற்குள் வைத்து கொண்டதால் பொருளாதார தேவைக்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறவில்லை. ஆனால் இந்த நவீன யுகத்தில் பணம் இல்லாமல் உலக இயக்கமே இல்லாத நிலை ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதால் பொருளாதார தேவைக்காக இடப்பெயர்ச்சி செய்தே ஆக வேண்டிய சூழல் இருக்கிறது. பெரும்பான்மையான ஊர்களில் தங்களின் குழந்தைகளின் கல்வி, தொழில் போன்ற காரணங்களுக்காக வெளியூர், வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டு பெரியவர்கள் மட்டும் பூர்வீகத்தில் இருக்கிறார்கள்.

    பூர்வீகத்தை விட்டு வெளியேறும் போது ஊரின் எல்லை, காவல் தெய்வங்களுக்கு பூஜை, புனஷ்காரம் குறைந்து விடும். அதனால் காவல் தெய்வங்களின் சக்தி குறைந்துவிடும். அவர்களின் சக்தி குறைந்தால் மழை பெய்யாது. மழை பெய்யாவிட்டால் விவசாயம் நின்று போகும். பல ஊர்களில் எல்லை, காவல் தெய்வங்கள் பூஜை இல்லாமல் கோவில்கள் பூட்டப்பட்டு இருக்கிறது. பூர்வீகத்தை விட்டு வெளியேறுபவர்களுக்கு குல தெய்வம், ஊர்க்காவல் தெய்வம் மறந்து போகும். ஏன் பலருக்கு பூர்வீகமே மறந்து போவது மிகவும் மனவருத்தத்தை தருகிறது. பலர் பிறந்த ஊரே சொந்த ஊர் என்று நினைக்கிறார்கள். முன்னோர்கள் வாழ்ந்த பூமியே பூர்வீகம். அத்துடன் நகரங்களில் உள்ள சொகுசு வசதிகள் (ஏ.சி,குளியல் அறை, பொழுதுபோக்கு அமைப்புகள்) குறைவாக இருப்பதால் பூர்வீகத்திற்கு செல்வதை குறைத்து விடுகிறார்கள். அல்லது செல்வதே இல்லை. பூர்வீகத்தை விட்டு வெளியேறி பொருள் தேட வேண்டாம் என்று நான் கூறவில்லை. வெளியூர் சென்றாலும் குலதெய்வம், எல்லை, காவல் தெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும். அத்துடன் குழந்தைகளுக்கு பூர்வீகத்தைப் பற்றியும் குலதெய்வம் பற்றியும் சொல்லி வளர்க்க வேண்டும். பூர்வீகத்தை மறக்கும் போது பலருக்கு பணம் மட்டுமே இருக்கும். நிம்மதியான நிறைவான வாழ்க்கை இருக்காது. இன்னும் சிலருக்கு பணமும் இல்லாமல் வாழ்வே வெறுப்பாகி விடுகிறது. பெண்கள் திருமணம் முடிந்த பிறகு பிறந்த வீடு குலதெய்வத்தோடு, புகுந்த வீட்டு குல தெய்வத்தையும் வணங்கி வருவதால் பலன் இரட்டிப்பாகும். பிறந்த வீட்டின் குல தெய்வத்தையும் வழிபடும் போது புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ முடியும். மனிதனுக்கு ஏதாவது ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே. நீங்கள் ஒருவேளை குல தெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை.

    Next Story
    ×