search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  உன்னத வாழ்வளிக்கும் உத்தரகோச மங்கை வராகி
  X

  உன்னத வாழ்வளிக்கும் உத்தரகோச மங்கை வராகி

  • பன்றியை வடமொழியில் வராகம் என்பார்கள். பன்றி முகம் கொண்டதால் வராகி என்ற திருநாமம் ஏற்பட்டது.
  • இருபது முப்பது சமுதாய மக்களின் குலதெய்வமாகவும் இந்த வராகி அம்மன் உள்ளார்.

  நாம் அதிகம் தெரிந்து வைத்திருக்காத ஒரு தெய்வம் தான் இந்த வராகி அம்மன்.

  சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் வராகி அம்மன்.

  அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர்.

  பிராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கவுமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகியோரே சப்த கன்னியர்.

  இவர்களில் பெரிதும் மாறுபட்டவள் வராகி. மனித உடலும், பன்றி முகமும் கொண்டவள். பன்றியை வடமொழியில் வராகம் என்பார்கள். பன்றி முகம் கொண்டதால் வராகி என்ற திருநாமம் ஏற்பட்டது.

  இந்தியாவில் வராகி அம்மனுக்கு உத்தரகோசமங்கை,, தஞ்சாவூர், காசி உள்ளிட்ட சில இடங்களில்தான் ஆலயங்கள் உள்ளன. அவற்றில் மிக மிக பழமையானது உத்தரகோசமங்கையில் உள்ள மங்கை மாகாளி என்ற சுயம்பு வராகி அம்மன் ஆலயம்தான்.

  உலகின் முதல் சிவாலயம் எனப்போற்றப்படும் திருஉத்திர கோசமங்கை மங்களநாதர் கோவில் அருகே காவல் தெய்வமாக வராகி வீற்றிரு க்கிறாள்.

  மங்களநாதர் சிவன் கோவில் காவல் தெய்வமாக வராகி இருப்பதால், முக்கிய திருவிழாக்களின் போது வராகிக்கு பூஜை நடத்தப்பட்ட பின்னரே சிவன் கோவில் விழாக்கள் தொடங்கும் மரபாக உள்ளது.

  மங்களநாதர் ஆலயம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமைக் கொண்டது வராகி அம்மன் கோவிலும்.

  வராகி அம்மன் அங்கு குடிகொண்ட வரலாற்றை அறிய வேண்டுமானால் கால பயணத்தில் பின்நோக்கி நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

  திரு உத்திர கோச மங்கை 4 சதுர் யுகங்களுக்கு முன் தோன்றிய தலமாகும். ஒரு சதுர் யுகம் என்பது 60 ஆயிரம் ஆண்டுகளைக் கொண்டது. அப்படியானால் எவ்வளவு பழமையானது என நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

  நான்கு சதுர் யுகங்களுக்கு முன்னாள் ஒருசமயம் படைக்கும் கடவுளான பிரம்மா தனது அன்ன வாகனத்தில் வான்வழியாக சென்ற போது அடர்ந்த இலந்தை வனத்தின் நடுவே ஆவுடை இல்லாத லிங்கம் ஒன்றை கண்டார்.

  உடனே ஈசனை வழிபட அவ்விடத்தில் இறங்கினார் பிரம்மா. அங்கே கர்ப்ப கிரகம் அமைத்து அந்த லிங்கத்தை ஆவுடையுடன் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதுவே திரு உத்திர கோச மங்கை மங்களநாதர் சிவாலயமாகும்.

  அங்கு பெருங்கோவில் உருவாவதற்கு முன்னரே கோபுரம் அமைய வேண்டிய இடத்தில் விநாயகர், முருகர் விக்ரகங்களையும் பிரம்மா பிரதிஷ்டை செய்தார்.

  இதில் ஒரு தவறு நேர்ந்து விட்டது. அதாவது, இடது புறத்தில் இருக்க வேண்டிய விநாயகரை வலது புறத்திலும், வலது புறத்தில் இருக்க வேண்டிய முருகரை இடது புறத்திலும் பிரதிஷ்டை செய்துவிட்டார்.

  கடவுளே செய்தாலும் தவறு தவறு தானே.. அதற்கு பிராயசித்தமாக உருவானது தான் இந்த வராகி அம்மன் ஆலயம்.

  செய்த பிழைக்கு என்ன பரிகாரம் என்று வேண்டி நின்ற பிரம்மாவிடம் ஈசன் "திருஉத்தரகோசமங்கையில் நானுறையும் ஆலயத்தின் அருகே வராகி சுயம்புவாய் எழுந்தருள்வாள். அவளை வழிபட்டு பிராயசித்தம் தேடிக்கொள்" என்று கட்டளையிட்டார்.

  அதன்படி அங்கே சுயம்புவாய் எழுந்தருளிய வராகி அம்மனுக்கு பிரம்மா மூலாலயம் அமைத்து வழிபட்டு நிவர்த்தி பெற்றார்.

  பிரம்மனுக்கே பிராயசித்தம் வழங்கிய அன்னை வராகி அன்று முதல் தன்னை நாடி வரும் கோடான கோடி பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி வருகிறாள்.

  ஆறடி உயரத்தில் எட்டு திருக்கரங்களுடன் மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தரும் வராகி அம்மனைக் காணும் போதே நமக்குள் பரவசம் ஏற்படும்.

  வலது கரம் அபயம் அளிக்க, இடது கரம் வரதம் காட்ட மற்ற கரங்களில் சங்கு, சக்கரம், ஏர்கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம் தாங்கிட.. வலது காலை குத்த வைத்து, இடது காலை தொங்கவிட்டு உக்கிரமாக அமர்ந்த கோலத்தில் வராகி அன்னை இருக்கிறாள். வடக்கு திசை நோக்கி இருக்கும் அவள் காலடியில் பஞ்ச பூதங்களும் அடக்கம். இதனைக் குறிக்கும் வகையில் 5 பூதகணங்கள் அவள் காலடியில் உள்ளனர்.

  அன்னையின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு அவளது இடது பக்கம் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்.கிழக்கு திசை நோக்கி இருக்கும் இவர் அம்பாளின் கோபத்தை பெற்றுக் கொண்டு, பக்தர்களுக்கு அருள் மட்டும் கிடைக்க வழிவகை செய்கிறார்.

  வராகி அம்மனை வழிபட்டால் வாழ்வில் வெற்றிகள் கிடைக்கும். ஆஷாட நவராத்திரியில் வராகி தேவியை வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள், நீதிமன்ற வழக்குகள், நிலத்தகராறு பிரச்சினைகள் சுமூகமாகும்.

  ராஜராஜசோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். இதனால் இந்த அம்மனை "ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம்' என்று வர்ணிப்பர்.

  தீராத நோயால் அவதிப்படுபவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், வழக்கு, பூமி சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், குழந்தை வரம், கல்வியில் தேர்ச்சி, பில்லி சூனியம்ஏவல் தோஷம் நீங்க, நினைத்த காரியம் கைகூடி வெற்றி பெற மாதத்தில் வருகிற வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி திதியில் விரதமிருந்து வழிபட நல்ல பலன் கிடைக்கும்.

  நாம் வேண்டியதை நிறைவேற்றி வைப்பதால் இந்த வராகியை வழிபட தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி மற்றும் அமாவாசை பவுர்ணமி அன்று விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. எனவே அன்றைய தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

  மஞ்சள் பரிகாரம்: வராகி அம்மனுக்கு மஞ்சள் அரைத்து சாத்துவது இந்த கோவிலில் சிறந்த பரிகாரமாக கடைப்பிடிக்கப் படுகிறது.

  ஏனென்றால் அன்னையின் முகம் காட்டுப்பன்றி வடிவம் கொண்டது. பன்றிகள் பொதுவாக பூமியை கிளறி கிழங்கு வகைகளை உண்ணும்.

  மஞ்சளும் பூமிக்கடியில் விளையும் ஒரு கிழங்கு வகை என்பதாலும், அதோடு மங்களகரமான பொருள் என்பதாலும் வராகி அம்மனுக்கு மஞ்சளை அரைத்து சாத்தும் வழக்கம் ஏற்பட்டது.

  திருமணம், குழந்தை பேறு, வேலைவாய்ப்பு, தொழில் அபிவிருத்தி, பணம் மற்றும் சொத்து பிரச்சினை, வழக்கு மற்றும் நோய் நொடிகள் தீர பக்தர்கள் மஞ்சளை அரைத்து அம்பாளின் பாதத்தில் சாத்தி கோரிக்கைகளை சொல்லி லழிபடுவார்கள்.

  அன்னையின் பாதத்தில் சாத்திய மஞ்சளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். அதனை சிறிதளவு எடுத்து 3 நாட்கள் சாப்பிட வேண்டும். பெண்கள் உடலுக்கு பூசியும் குளிக்கலாம்.

  பக்தர்கள் மஞ்சள் அரைத்து சாத்துவதற்கு மஞ்சள் பொடியை பயன்படுத்தக் கூடாது. கோவிலுக்கு வந்து தான் மஞ்சள் கிழங்கை அரைத்து கொடுக்க வேண்டும். இதற்காக கோவில் வளாகத்தில் 180 அம்மிகற்கள் வைக்கப்பட்டு உள்ளன. மஞ்சள் கிழங்ைக கொண்டு வந்தோ அல்லது கோவில் வளாக கடைகளில் வாங்கியோ சிறிது நேரம் ஊற வைத்த பின்னர் அரைத்து கொடுக்க வேண்டும்.

  மற்றொரு சிறப்பு பரிகாரமாக தேங்காய் விளக்கு ஏற்றுதலும் செய்யப்படுகிறது. அரிசியை வாழை இலையில் பரப்பி, தேங்காய் உடைத்து வைத்து அதில் நெய் விளக்கேற்றி வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் காரிய வெற்றி எளிதில் கிடைக்கும்.

  கல்யாணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க, மஞ்சள் கயிற்றை கோவிலின் தல விருட்சமான வேப்ப மரத்தில் கட்டி பிராத்திக்கின்றனர்.

  திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை பேறு இல்லதவர்கள் தொட்டில் கட்டி பிரார்த்திக்க மறுவருடத்தில் குழந்தை பாக்கியம் பெறுகிறார்கள்.

  இது தவிர குடும்பத்தில் தீராத பிரச்சினைகள் இருந்தால் அந்தந்த பிரச்சினைகளுக்குரிய வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

  வராகி அம்மனிடம் மேற்கண்ட பரிகாரங்கள் மூலம் வைக்கும் வேண்டுதல்கள் யாவும் 3 முதல் 6 மாத காலத்தில் நிறைவேறுவது நிச்சயம்.

  திருவிழாக்கள்: ராமநாதபுரம் சமஸ்தானம் - தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்படும். தற்போது அது நின்றுபோய் உள்ளது. மீண்டும் பிரம்மோற்சவத்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  ஆடி முதல் புரட்டாசி வரை நடக்கும் திருவிழா காலங்களில் அம்மனின் 4 கரகங்கள் வீதிவலம் சுற்றிவரும். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். ஆடி முதல் வெள்ளியில் பால்குட ஊர்வலம் நடைபெறும். புரட்டாசியில் நவராத்திரி விழா சிறப்பாக ெகாண்டாடப்படும்.

  இந்த ஆலயத்தில் வராகி அம்மனின் இரண்டு உற்சவ மூத்திகள் உள்ளன. இதுவும் அதிசயமான ஒன்றாகும். 4 கரங்களுடன் உள்ள உற்சவர் ருத்ர வராகி எனப்படுகிறார். இந்த உற்சவர் ஆடித் திருவிழாவில் வீதிவலம் வருவார். மற்றொன்று 8 கைகளுடன் உள்ள விஷ்ணு வராகி உற்சவர். நவராத்திரி விழாவில் இந்த உற்சவர் தான் வீதிவலம் வருவார்.

  இங்கு காளி தெய்வமும் உள்ளது. ஆடு, கோழி பலி பூஜையும் நடத்தப்படுகிறது. இருபது முப்பது சமுதாய மக்களின் குலதெய்வமாகவும் இந்த வராகி அம்மன் உள்ளார். நாமும் சென்று வழிபட்டால் நம் குலத்தையும் தழைக்க வைப்பாள்!

  Next Story
  ×