search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மண், பெண் விடுதலைக்கு பாடுபட்ட சரோஜினி நாயுடு
    X

    மண், பெண் விடுதலைக்கு பாடுபட்ட சரோஜினி நாயுடு

    • புகழ்பெற்ற கவிஞராக, எழுத்தாளராக விளங்கிய சரோஜினி, 1905-ல் கர்சன் பிரபுவால் நிகழ்த்தப்பட்ட வங்கப்பிரிவினையால் பெரிதும் மனம் வருந்தினார்.
    • சரோஜினி நாயுடு செய்த தொடர்சேவைகளுக்காக 1908-ல் இந்தியப் பேரரசர் எனும் பொருள்படும் "கைசர்-இ-இந்த்" எனும் பட்டத்தை ஆங்கிலேய அரசு வழங்கியது.

    "நான் வாழும்வரை, என் கரங்களில் இரத்த ஓட்டம் இருக்கும்வரை, எந்தக் காரணத்தை முன்னிட்டும் சுதந்திரத்திற்கான என் போராட்டங்களை விட்டுவிட மாட்டேன். நான் ஒரு பெண்ணாக, கவிஞராக உங்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கேடயமாகவும், ஆயுதங்களாகவும் தருகிறேன். என் பாடல்களை ஒலிப்பதாகைகளாக வீசுகிறேன். அதன் மூலம் போருக்கான அழைப்பை விடுக்கிறேன். என் மக்களே! அடிமைத்தனத்திலிருந்து உங்களை எழுப்பும் சுடரை நான் எப்படித்தான் ஏற்றுவது?"

    மேற்காணும் உணர்ச்சி மிக்க கவிதை வரிகளுக்கு சொந்தக்காரர்தான் இந்தியாவில் முதல்பெண் ஆளுநராக பதவியேற்று சிறப்பாக பணியாற்றியவர். பல்வேறு சாதனைகளுக்கும் பெருமைகளுக்கும் உரியவர். சிறப்பான தன் கவிதைகளின் மூலம் அயல்நாட்டு ஆங்கிலக் கவிஞர்களால் கொண்டாடப்பட்டவர். மகாத்மா காந்தியால் "இந்தியாவின் நைட்டிங்கேல்" என்று பட்டம் சூட்டப்பட்டவர்.

    பிறக்கும்போதே அறிவார்ந்த செல்வக்குடும்பத்தில் பிறப்பதும், கல்வி, கலைகள், பன்மொழிப் புலமை, கவிதை, கட்டுரை படைக்கும் ஆற்றல், அயல்நாடு சென்று உயர்கல்வி பெற்று அறிவும், ஆற்றலும் பெருகுதல் என்று எங்கோ ஒரு சிலருக்குத்தான் அந்த வாய்ப்புகளும் வாழ்க்கையும் வாய்க்கும். அப்படி வாழ்க்கை அழகாகவும், வசதியாகவும், சுகமாகவும் அமைந்துவிடும்போது அவற்றை துய்த்து மகிழ்வதில்தான் எல்லோரும் நாட்டம் கொள்வர்.

    பெருமைக்குரிய, மகிழ்ச்சியான உயர்வாழ்வு அமைந்தாலும் அவற்றை எல்லாம் அனுபவிப்பதை விட்டுவிட்டு குடும்பக் கடமைகளையும் கவனித்துக்கொண்டே நாட்டின் விடுதலைக்காகவும், எளிய மக்களின் உரிமைகளுக்காகவும், மகளிர் வாழ்க்கையை மேம்படுத்தவும் பாடுபட தன்னை ஒப்புவித்தார் ஒரு பெண். பொதுநலன் கருதிய தன் இலட்சியங்களை அடைய பல போராட்டங்களை முன்னெடுத்து, கைது செய்யப்பட்டு சிறைச்சாலை வாழ்வையும் அனுபவித்து, பல்வேறு சாதனைகளை படைத்து அந்தப் பெண்மணி வாழ்ந்தார் என்றால் அவர் பெரிதும் வியப்புக்குரியவர் அல்லவா!

    ஹைதராபாத்தில் ஒரு கல்லூரியை நிறுவி அதன் நிர்வாகியாக இருந்தவர் அகோர்நாத் சட்டோபாத்யாயா எனும் வங்காளத்துக்காரர். இவரின் வாழ்க்கைத் துணைவி வங்கமொழி கவிஞரான பரதாசுந்தரிதேவி. இவர்களுக்கு எட்டாவது மகளாக பிப்ரவரி 13, 1879-ல் பிறந்தார் சரோஜினி.

    வங்காளம், ஆங்கிலம், பாரசீகம், உருது, தெலுங்கு ஆகிய மொழிகளில் சீரிய புலமை வாய்ந்த சரோஜினி 12 வயதிலேயே உருதுமொழியில் கவிதைகளையும், நாடகத்தையும் இயற்றியவர். 1300 வரிகள் கொண்ட "லேடி ஆப் த லேக்" எனும் இவரின் படைப்பு புகழ்பெற்றது.

    பாரசீக மொழியில் சரோஜினி எழுதிய "மஹேர் முனீர்" என்ற நாடகத்தால் ஈர்க்கப்பட்ட ஹைதராபாத் நிசாம் மீர் மகபூப் அலிகான், சரோஜினி இங்கிலாந்து சென்று மேற்கல்வி பயில கல்விக்கொடை வழங்கினார். இங்கிலாந்தில் இரண்டு கல்லூரிகளில் படித்துத் திரும்பிய சரோஜினி, தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் கோவிந்தராஜூலு நாயுடு என்ற மருத்துவரை காதலித்து மணம்புரிந்தார். சாதிமறுப்பு திருமணம் நடைமுறையில் இல்லாத காலத்தில் தன்மகளின் விருப்பத்தை நிறைவேற்றிவைத்தார் சரோஜினியின் தந்தையார்.

    புகழ்பெற்ற கவிஞராக, எழுத்தாளராக விளங்கிய சரோஜினி, 1905-ல் கர்சன் பிரபுவால் நிகழ்த்தப்பட்ட வங்கப்பிரிவினையால் பெரிதும் மனம் வருந்தினார். வங்கப் பிரிவினைக்கு எதிராக இந்திய தேசியக் காங்கிரஸ் போராட்டங்களை முன்னெடுத்த சமயத்தில்தான் கோபாலகிருஷ்ண கோகலேவை சரோஜினி நாயுடு சந்திக்க நேர்ந்தது.

    நாட்டுக்காக போராட வரும்படி சரோஜினியை அழைத்தார் கோகலே. அதனை ஏற்றுக்கொண்ட சரோஜினி, நாட்டின் விடுதலையை நோக்கிய பயணத்திற்கு அடியெடுத்துவைக்க தன்னை தயார்படுத்திக் கொண்டார். முகமது அலி ஜின்னா, சி.பி. இராமஸ்வாமி உள்ளிட்ட விடுதலைப் போராட்ட தலைவர்கள் பலரையும் சரோஜினிக்கு அறிமுகப்படுத்திவைத்தார் கோகலே.

    சமூகத்தில் பெண்கள் படும் துன்பங்களைக் கண்ட சரோஜினியின் மனதில் மண் விடுதலையோடு பெண்விடுதலையும் வேண்டும் என்ற சிந்தனைகள் ஓடின. இந்திய தேசிய காங்கிரசின் 22வது சமூக மாநாடு 1908-ல் நடைபெற்ற போது, கைம்பெண்களுக்கு கல்வி அளிப்பது, பெண்களுக்கான பாதுகாப்பு இல்லங்கள் தொடங்குவது, கைம்பெண் மறுமணத்தில் இருக்கும் தடங்கல்களை நீக்குவது என தீர்மானங்கள் நிறைவேற்ற வலியுறுத்தினார் சரோஜினி நாயுடு.

    இந்திய மக்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட போது, சரோஜினி நாயுடு செய்த தொடர்சேவைகளுக்காக 1908-ல் இந்தியப் பேரரசர் எனும் பொருள்படும் "கைசர்-இ-இந்த்" எனும் பட்டத்தை ஆங்கிலேய அரசு வழங்கியது.

    சமூகப்பணிகளோடு அரசியல் பணிகளையும் இணைத்தே சுழன்றுவந்த சரோஜினி, 1916-ல் ஜவகர்லால் நேருவை சந்தித்தார். அவரோடு இணைந்து பீகாரில் பிரிட்டிஷாருக்கு எதிராக விவசாயிகள் நடத்திய இன்டிகோ போராட்டமான 'சம்பரன் சத்யாக்கிரகத்தில்' கலந்துகொண்டார். இதே ஆண்டில்தான் மகாத்மா காந்தியையும் சந்தித்த சரோஜினி நாயுடு அவரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். காந்தியை மிக்கிமௌஸ் என்று அழைத்தவர் சரோஜினி.

    இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவரான அன்னிபெசன்ட் அவர்களுடன் இணைந்து 1917-ல் "இந்திய பெண்கள் கூட்டமைப்பை"த் தொடங்கிய சரோஜினி நாயுடு, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தார். பெண்களுக்கு சம உரிமை கோரி லண்டனுக்குச் சென்ற பெண்கள் வாக்குரிமைக் குழுவை வழிநடத்திய இவர், பெண்களின் வாக்குரிமைக்கான சர்வதேச இயக்கத்திலும் இணைந்தார். 1918-ல் லண்டனில் இருந்து திரும்பிய சரோஜினி நாயுடு, இந்திய அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொண்டிருந்த குழுவிடம் பெண்களுக்கான வாக்குரிமையை கொண்டுவர வலியுறுத்தினார்.

    இந்திய தேசிய காங்கிரசின் பிரதிநிதியாக அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்திய மக்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தி வந்தார்.

    1919-ல் ரவுலட் சட்டத்திற்கு எதிராக காந்தியால் அறிவிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் முதலில் இணைந்தவர் சரோஜினி. தன்னாட்சி இயக்கக் குழுவின் இங்கிலாந்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்டு, 1919 இந்திய அரசுச் சட்டத்தில் இந்தியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார். தொடர்ந்து காந்தி அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றார். ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்ந்தபோது அதனை கண்டித்து தனக்கு பிரிட்டிஷ் அரசு வழங்கிய "கைசர்-இ-இந்த்" பட்டத்தை திருப்பித் தந்தார் சரோஜினி.

    1924 ஜனவரியில் இந்திய தேசிய காங்கிரசின் இரண்டு பிரதிநிதிகளில் ஒருவராக கிழக்கு ஆப்பிரிக்க இந்திய காங்கிரசில் இருந்து, கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்கா முழுவதும் பயணித்து சிதறிக் கிடந்த இந்திய மக்களின் தேவைகளை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

    1925-ல் இந்திய தேசிய காங்கிரசின் முதல் இந்திய பெண் தலைவராக நியமிக்கப்பட்டார் சரோஜினி நாயுடு. காங்கிரஸ் தலைவராக அவர் நியமிக்கப்பட்டதை "இந்திய பெண்மைக்கு வழங்கப்பட்ட நற்சான்று" என்று அவர் கருதினார். தனது தலைமையுரையின் போது, சமூகத்தில் பெண்களின் பங்கை மீட்டெடுப்பது குறித்து அவர் பேசினார். "பெண்களுக்கு சமத்துவம்" இருந்தால் மட்டுமே சுதந்திரம் எட்டப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இந்திய தேசிய காங்கிரசில் பெண்கள் பிரிவைத் தொடங்கவும், பெண்களுக்கு அதிகாரமளிப்பது குறித்து பேசுவது அவசியம் என்பதையும் வலியுறுத்தினார் சரோஜினி நாயுடு. தமிழ்நாடு எதிலும் முன்நிற்கும் மாநிலம் என்பதற்கிணங்க இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டில் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி நியமிக்கப்பட்டார். இது சரோஜினியின் குரலுக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

    இந்து-முஸ்லீம் கலவரங்களை அடக்கி சமாதானப்படுத்துவதில் காந்திக்கு பெரிதும் உதவினார் சரோஜினி. 1928-ல் அமெரிக்கா சென்ற சரோஜினி, அங்கு காந்தியின் அகிம்சைக் கொள்கையை பரப்பினார்.

    சரோஜினி நாயுடுவின் முயற்சிகளால் தொடங்கப்பட்ட மகளிர் அமைப்புகள் அரசியல் சார்பற்றவையாக இருந்ததால், அவை பல திறமையான பெண்களுக்கு தங்களை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புகளை அளித்தன. மேலும் அவர்களில் பலர் அரசியல் கட்சிகளில் சேர்ந்து தேசிய இயக்கத்திலும் பங்கேற்றனர்.

    1930-ல் காந்தியின் தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகம் முடிந்தபின்னர், குஜராத்தில் உள்ள 'தாராசனா' என்னுமிடத்தில் மீண்டும் உப்புச் சத்தியாக்கிரகம் தொடங்கப்போவதாக காந்தி அறிவித்தார். ஆனால் பிரிட்டிஷ் அரசு அவரையும், அவரைத் தொடர்ந்த நேரு, படேல் உள்ளிட்ட தலைவர்களையும் கைதுசெய்தது. ஆனாலும் சரோஜினி நாயுடு தலைமையேற்று பல எதிர்ப்புகளுக்கிடையில் அபுல்கலாம் ஆசாத்துடன் இணைந்து 28 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தாராசனா சத்யாக்கிரக போராட்டத்தை தொடர்ந்தார்.

    1931-ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் காந்தியுடன் இணைந்து கலந்துகொண்டார். விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத்து பணியாற்றியமைக்கு 1930, 1932 மற்றும் 1942-ல் சிறைத் தண்டனைகளை பரிசாக பெற்றார் சரோஜினி நாயுடு. குறிப்பாக 1942ல் "வெள்ளையனே வெளியேறு" இயக்க போராட்டத்தின் பரிசாக 21 மாதங்கள் சிறையில் இருந்தார். ஆனால் சிறைத்தண்டனைகளுக்கு அவர் எப்போதுமே அஞ்சியதில்லை.

    நான்கு குழந்தைகளுக்கு தாயாக இருந்த சரோஜினி நாயுடு, தன் குடும்பத்தையும், நாட்டையும் பிரித்துப் பார்த்தவர் இல்லை. இளமைக்காலம் தொட்டு இந்திய விடுதலைப் போராட்டங்களில் மிகத் தீவிரமாக பங்கெடுத்து வந்ததோடு பெண்கள் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், எழுதியும், மேடைகளில் பேசியும், அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென்று பெரும் அக்கறையோடு வலியுறுத்தி வந்த சரோஜினி நாயுடுவின் தியாகம் சேவைகளுக்கு கிடைத்த பரிசுதான் இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் எனும் பதவி.

    நாடு விடுதலைபெற்ற 1947 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் சரோஜினி நாயுடு. பதவி ஏற்ற நாள்முதல் அதிகாரப்பூர்வமாக தன் சேவையைத் தொடர்ந்த அவர், தன் இறுதி சுவாசத்தையும் தன் அலுவலகத்திலேயே மார்ச் 2, 1949-ல் நிறுத்திக் கொண்டார்.

    பாரதீய கோகிலா, நைட்டிங்கேல் ஆப் இந்தியா என்றெல்லாம் பாராட்டப்பட்ட சரோஜினி நாயுடு மறைந்த மார்ச் 2, இந்தியாவின் "தேசிய பெண்கள் தினமாக" போற்றப்படுகிறது.

    தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in

    Next Story
    ×