search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆடத் தெரிந்தவரெல்லாம் ஆடலாம்...
    X

    ஆடத் தெரிந்தவரெல்லாம் ஆடலாம்...

    • எண்ணத்தை நிறைவேற்ற தொலைக்காட்சிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஆடிசன் நடத்தப்பட்டது.
    • அசாருக்கு இருந்த ரசிகர் பட்டாளம் காரணமாக அவருக்கு 3-வது பரிசு கொடுக்கப்பட்டது கூட சர்ச்சையானது.

    எண்ணத்தை நிறைவேற்ற தொலைக்காட்சிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஆடிசன் நடத்தப்பட்டது.திறமை இருந்தால் நீங்களும் ஆடலாம் என்று ஆட தெரியாதவர்களையும் ஆட வைத்த மேடை மானாட... மயிலாட...

    ஏற்கனவே 2 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 3-வது சீசன் தொடங்கியது. இது புதுமைகளை புகுத்திய சீசன் என்பதை விட புதியவர்களும் புகுந்து விளையாடிய சீசன் என்பதுதான் சரியாக இருக்கும்.

    ஏற்கனவே 2-வது சீசன் பற்றி நான் தெரிவித்து இருந்தேன். அந்த சீசனில் மிகச்சிறந்த போட்டியாளர்களாக இருந்த ஐஸ்வர்யா-ரஞ்சித் ஜோடி சூழ்நிலை காரணமாக அரை இறுதிக்கு பிறகு கலந்து கொள்ள முடியாமல் போனது. எனவே அவர்களுக்கு இந்த சீசனில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    இந்த சீசனில்தான் புதிதாக எங்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறோமே இதே போல் திறமையானவர்கள் வெளியிலும் இருக்கலாமே! அவர்களையும் தேடி பிடித்து ஆட வைத்தால் என்ன? என்று நினைத்தோம்.

    எங்கள் எண்ணத்தை நிறைவேற்ற தொலைக்காட்சிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஆடிசன் நடத்தப்பட்டது. பலரும் தேர்வுக்கு வந்திருந்தார்கள். அதில் இருந்து போட்டியாளர்களை தேர்வு செய்தோம்.

    அப்போது என்னிடம் கேட்டார்கள். சின்னத்திரையில் நடித்து கொண்டிருப்பவர்கள் நன்றாக நடனம் ஆட தெரிந்தவர்கள். அவர்களுக்கென்று ரசிகர் பட்டாளமும் இருக்கும். ஆனால் நீங்கள் போட்டியாளர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? அவர்களுக்கு வரவேற்பு கிடைக்குமா? என்றார்கள்.

    நான் நடனம் பயின்றவள். பயிற்சி அளித்து கொண்டிருப்பவள். எனவே ஒருவர் நடந்து வருவதை வைத்தே இவரிடம் ஆடும் திறமை இருக்கிறதா என்பதை கணிக்க முடியும். அப்படித்தான் போட்டியாளர்களை தேர்வு செய்தோம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அசார்-ரஜினி ஜோடி, தர்ஷினி-பயாஸ் ஜோடி. இவர்களுடைய நடனம் பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது. இவ்வளவு திறமை உள்ளவர்கள் வெளியிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களது திறமைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. நன்றாக ஆடினால் போதும். ரசிகர்கள் நிச்சயம் அங்கீகரிப்பார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் அசாரின் நடனத்தை பார்த்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே அவருக்கு இருந்தது. இப்போது ரஜினிக்கும் திருமணமாகிவிட்டது. அசாருக்கும் திருமணமாகிவிட்டது. இருவரும் நல்ல நிலையில் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

    அதேபோல் தர்ஷினி-பயாஸ் ஜோடியில், பயாசுக்கு மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்த்து சினிமாவிலே சில வாய்ப்புகள் கிடைத்தன.

    இந்த சீசனில் காட்சிக்காக செட்டுக்கள் அமைப்பதிலும் புதிய கற்பனையை கையாண்டோம். செட்டுக்கள் அனைத்தும் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் 3-வது தளத்தில் அமைக்கப்பட்டிருந்தது. 3-வது சீசனுக்கு 3-வது தளம்... என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்? கோயம்பேடு மார்க்கெட் போன்ற செட், வீடுகள் போன்ற செட், வரலாற்று காட்சிகளுக்காக அரன்மணை போன்ற செட் ஆகியவற்றை அமைத்து இருந்தோம்.

    வீடுகள் போன்ற செட்டுக்கு எம்.ஜி.ஆர். நடித்த நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்... என்ற பாடலுக்கு ஏற்றபடி கையில் சாட்டையை வைத்துக்கொண்டு ஆடினார்கள். நிஜமாகவே வாத்தியாரை கண்முன் கொண்டு வந்துவிட்டார்கள். பழைய பாடலுக்கு ஆடினார்கள். இந்த சீசனில்தான் இன்னொரு புதுமையையும் அரங்கேற்றினோம். கலர்ஸ் என்ற பெயரில் ஒரு சுற்று. இந்த சுற்றில் போட்டியாளர்கள் பெயர்களில் ஒரு குலுக்கள் நடத்தப்படும். அதில் அவர்கள் எடுக்கும் சீட்டில் என்ன நிறம் இருக்குமோ அந்த நிறத்திலான காஸ்டியூம்களை அணிந்து அவர்கள் ஆட வேண்டும். அவர்கள் ஆடை அணிவது மட்டுமல்ல அந்த மேடையும் முற்றிலும் அதே நிறத்தில் மாற்றப்பட்டிருக்கும். அமர்ந்திருக்கும் நடுவர்களும் அதே கலர் காஷ்டியூமில்தான் இருக்க வேண்டும்.

    இப்படி ஒரு காட்சி அமைப்பை நான் சொன்னதும், இது சிரமம். முடியாது என்றுதான் சொன்னார்கள். ஆனால் அதையும் முடித்து காட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். இதில் என்ன சிரமம் என்றால் அந்த கலருக்கு ஏற்ற வகையில் மேடையை மாற்றுவதுதான். அதற்குதான் குறைந்தபட்சம் 3 மணி நேரம் வரை ஆனது. இப்படி ஒவ்வொரு ஜோடியும் ஆடியதை காட்சிப்பதிவு செய்வதற்கு காலை முதல் சூட்டிங் முடிவதற்கு நள்ளிரவு வரை ஆகும். அப்படித்தான் காட்சிகளை எடுத்தோம். இது மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.

    சூரியகாந்தி பூக்களின் பின்னணியில் இருப்பதை போன்ற ஒரு செட் அமைத்து அதில் அந்த பூந்தோட்டத்துக்குள் ஹீரோ சுற்றி வந்து டூயட் பாடுவது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டுஇருந்தது. அந்த காட்சியும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைவிட முக்கியமாக வெளியில் இருந்து தேர்வு செய்து கொண்டு வந்த போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள் என்று சொல்வதை விட நாங்களும் நட்சத்திரங்களுக்கு ஈடு கொடுப்பவர்கள்தான் என்று சொல்லும் அளவுக்கு ஒரு போட்டியாளரான அசார், குஷ்புவுடனே ஜோடி போட்டு ஆடினார்.

    அவர் குஷ்புவுடன் ஆட தயார் என்றதும் குஷ்புவுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவரும் இணைந்து ஆடுவதற்கு சம்மதிக்கவே 'ரோமியோ ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே... அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே" என்ற பாடலுக்கு கைதேர்ந்த கலைஞரை போல அசார் ஆடியதை பார்த்து குஷ்புவும் ஆச்சரியப்பட்டார். அவரும் அசாருக்கு ஈடு கொடுத்து அந்த டூயட் பாடலில் அசத்தினார்.

    அதே போலதான் அசாருடைய ஜோடி ரஜினி ஒரு எபிசோட்டில் ஒரு விபத்து காரணமாக ஆட வர முடியவில்லை. உடனே அந்த எபிசோட்டின் தொகுப்பாளினி யாக இருந்த கீர்த்தியுடன் ஜோடி சேர்ந்து ஆட தயார் என்றதும், கீர்த்தியும் அவரோடு ஆடி அசத்தினார்.

    ஒவ்வொரு சீசனிலும் 30 முதல் 35 எபிசோடு வரை இடம் பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த 3-வது சீசனில்தான் 100-வது எபிசோட்டை நிறைவு செய்திருந்தோம். அதற்காக சிறப்பு சுற்று ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். அதல் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    அதாவது சிம்பு, தனுஷ் ஆகியோரது படப் பாடல்களை எடுத்து அதற்கு ஏற்ற வகையில் ஆட வேண்டும் என்பதுதான் அது.

    இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ புது புது நிகழ்ச்சிகள் டி.வி.க்களில் வருகின்றன. அதிலும் திறமையானவர்களை தேடி பிடித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறார்கள். அதற்கு அடிப்படையாக இருந்தது எங்களின் மானாட மயிலாட தான் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.

    3-வது சீசன் நிறைவு விழாவுக்கும், பரிசளிப்பு விழாவுக்கும் நடிகை ஸ்ரேயா வந்து சிறப்பித்தார். அவர்தான் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் அளித்தார். இந்த சீசனில் ஐஸ்வர்யா-ரஞ்சித் ஜோடி முதல் பரிசை தட்டி சென்றது. 2-வது பரிசை பயாஸ்-தர்ஷினி ஜோடியும், 3-வது பரிசை அசார்-ரஜினி ஜோடியும் பெற்றது. அசாருக்கு இருந்த ரசிகர் பட்டாளம் காரணமாக அவருக்கு 3-வது பரிசு கொடுக்கப்பட்டது கூட சர்ச்சையானது. பல ரசிகர்கள் அவருக்கு 3-வது பரிசா என்று ஆதங்கப்பட்டதும் உண்டு. அந்த அளவுக்கு சாதாரணமானவர் களையும் ஜொலிக்க வைத்த மேடை மானாட... மயிலாட... அடுத்த வாரம் இன்னும் புதிய தகவல்களுடன் 4-வது சீசனில் உங்களை சந்திக்கிறேன்.

    Next Story
    ×