என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

தொழில் நுட்பத்தில் புதிய புரட்சி: அடுத்தடுத்து அம்பானிகள்..!
- அக்ரிமா கம்பெனியை முழுக்க முழுக்க ஊக்கு வித்தது கூகுள் தான்.
- பால் ரவீந்திரநாத் என்னும் கூகுள் இந்தியாவின் மென்பொருள் மானேஜர் இந்த செயற்கை அறிவுத்திறன் என்பது மிகப்பெரும் வரப்பிரசாதம் என்கிறார்.
"அட! இது என்னங்க?"
"இது அரைச்சு வெச்ச சோளம்! படம் எடுத்து வெச்சிருக்காங்க!"
"இத வெச்சு என்ன செய்யணும்?"
"இந்த கம்ப்யூட்டர் மவுஸ் இருக்கு பாரு! இத அதுமேல வெச்சு அழுத்து!"
"அப்பா! இத்தன உப யோகமா சோளத்துல!
"சோளத்த மட்டும் பாக்காத! இந்த தொழில் நுட்பத்தப்பாரு! இதுல எந்த படத்துமேலயும் போய்த்தேடினா அந்தப்பொருளோட அத்தன உபயோகமும் ஸ்கிரீன்ல வந்துரும்!"
"எப்படீங்க இது சாத்தியம்?"
"எல்லாம் செயற்கை அறிவுத்திறனாம்!"
ஆம்! செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) வேகமாக அதிகரித்துவிட்டது. மனித மூளையைப்போலவே சிந்தித்து செயல்படும் மென்பொருள் தயாரிப்பும் பயன்பாடு களும் பரவிக்கொண்டே வருகின்றன. இந்தியாவில் கூகுள் கம்பெனியே இந்த முயற்சிகளை ஊக்குவித்து வருகின்றது.
ரெஸிப்பி புத்தகம் என்னும் சமையல் குறிப்பு செயலி ஒன்றில்கூட செயற்கை அறிவுத்திறனை உபயோகித்து தகவல் தரும் நுட்பம் இப்போது நம் நாட்டிலும் வந்துவிட்டது. கொச்சியில் உள்ள அக்ரிமா (Agrima) என்னும் கம்பெனி ஒரு மிக மேம்பட்ட படிவ உரு உணரும் மென் பொருளை (Advanced image Recognition software) உருவாக்கி அதை மேலே சொன்ன சமையல் குறிப்பு செயலியில் பதிப்பித்திருக்கிறது. இதன் மூலம் வெறும் படங்களை வைத்து அந்தப் பதார்த்தத்தைத் தயாரிக்கும் முறையை ஸ்கிரீனில் பார்த்துவிட முடியுமாம்.
இந்த அக்ரிமா கம்பெனியை முழுக்க முழுக்க ஊக்கு வித்தது கூகுள் தான்.
இன்னொரு சுவாரஸ்ய தகவல் தெரியுமா?
ஒவ்வொரு நாளும் இந்தியாவில் கிட்டத்தட்ட 4கோடி பேர்வழிகள் நீண்ட தூரப்பயணம் மேற்கொள்கிறார்களாம். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சரியான தகவல்கள் கிடைக்காமல் பல மணி நேரம் விரயம் செய்கிறார்கள். பல இடங்களுக்குத் தவறாகப்போய் பின்பு மறுபடி வந்து சேருகிறார்களாம்.
இந்தச் சங்கடத்தைத் தவிர்க்க ரெயில் யாத்ரி (Rail Yatri) என்னும் மென்பொருள் கம்பெனி, நம்ம உத்தரப்பிரதேச நொய்டாவைச்சேர்ந்த கம்பெனிதான், செயற்கை அறிவுத்திறனை செலுத்தி தயாரித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் டிக்கெட் புக் செய்வது, எந்தெந்த டிரெயின்களில் பயணம் செய்வது, எங்கெல்லாம் தத்தம் டிரெயின் தாமதமாகிக் கொண்டிருக்கின்றது, போகும் ஊரில் ஓட்டல் புக் செய்வது போன்ற சகலவித தகவல்களை தம் மொபைல் போனிலேயே பெறலாம்.
"இந்த செயலி, தகவல் ஆராய்வு மற்றும் செயற்கைத்திறன் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகளுக்குத்தேவையான தகவல் தந்து அவர்களின் பயணத்தை இனிமையானதாகவும் சுருக்கமானதாகவும் செய்து விடுகிறது" என்று சிலாகிக்கிறார் இந்தக்கம்பெனியின் தலைவர் மணிஷ் ராத்தி.
பால் ரவீந்திரநாத் என்னும் கூகுள் இந்தியாவின் மென்பொருள் மானேஜர் இந்த செயற்கை அறிவுத்திறன் என்பது மிகப்பெரும் வரப்பிரசாதம் என்கிறார். "சாதாரண மென்பொருளை விட இந்த செயற்கை அறிவுத்திறன் மென்பொருளானது மிகச்சுலபமாக சிக்கல் தீர்க்கும் இயலைச்செய்துவிடும். எனவே கூகுள் கம்பெனி இந்த இயலில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது" என்று சொல்கிறார்.
Innovation என்னும் புதியதைக்கண்டு பிடிக்கும் ஆர்வமும் முயற்சியும் கொண்ட ஸ்டர்ட் அப் கம்பெனிகளுக்கு கூகுள் தன்னால் இயன்ற ஊக்கத்தைத்தவறாது கொடுத்து வருவதைப்பார்க்கிறோம்.
இந்தியாவில் தொடங்கப்பட்ட சில ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் புதுமையான முயற்சிகளில் ஆர்வம் கண்டு அந்தக் கம்பெனிகளுக்கு முதலீடு வழங்குவதில் இருந்து அமெரிக்காவில் சென்று செயலாற்ற அவர்களுக்குத் தேவையான விசா, அனுமதி என்று பல உதவிகளை கூகுள் செய்து வருகின்றது.
கூகுள் மட்டுமில்லை, ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற மிகப்பெரும் மென்பொருள் கம்பெனிகளும் இந்தியாவில் புதுமையான முயற்சிகளுக்கு ஆர்வமும் உதவியும் தரத்தயங்குவதில்லை. இதில் அவர்களுக்கான லாப நோக்கும் கலந்திருப்பது என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் இந்த ஊக்குவிப்பு புதுமையான் முயற்சிகளில் ஈடுபடும் இளைய சமுதாயத்துக்கு மிகப்பெரும் உதவி என்பதையும் மறுக்க இயலாது.
"என்னடி உம்புள்ள என்ஜினீயரிங் முடிச்சுட்டு எங்க வேலைக்குப்போறானாம்? என்னால இன்னமே அவனுக்கும் சேர்த்து சம்பாதிக்கறது கஷ்டம், தெரிஞ்சுக்க!"
"ஒண்ணும் வேண்டாம்! வேலைக்கெல்லாம் போகல.!"
"பின்ன என்ன பண்ணப்போறாராம் தொர? இங்க என்ன பாட்டன் சொத்தா கொட்டிக்கெடக்கு?"
"அதெல்லாம் இருக்கட்டும் இதப்பாருங்க!"
"உம்புள்ள படிச்சுட்டு தெண்டமா சுத்திக்கினு இருக்கானேன்னு கேட்டா நீ என்னமோ அவனோட லாப்டாப்பை காட்டறே?"
கொஞ்சம் இத்த பாருங்களேன்!"
"இன்னாடி இது? உலக மேப்ப போட்டு வெச்சு என்னாண்ட காட்டறே?
"த பாருங்க! இந்த மவுசை வெச்சு இதோ இந்த இடத்துல கிளிக் பண்ணினா, பாருங்க பாருங்க!
"அட! எங்கூர் பேரு வருதே! அட! ஊரு பத்தி வெவர மெல்லாம் வருது!
"இது மாதிரி இந்த மேப்புல எந்த எடத்துல கிளிக் பண்ணினாலும் அந்தந்த ஊர் பத்தி எல்லா வெவரமும் வரும்!"
"சரி இப்ப எதுக்கு இத்த என்னாண்ட காட்டறே?
"இந்த புரோகிராம எழுதினது நம்ம புள்ள!"
இன்னாது?"
ஆமாய்யா! என்னவோ பாட்டன் சொத்து இல்லேன்னியே! ஒரு பாட்டன் சொத்தும் தேவையில்ல! நம்ம புள்ளாண்டானே சொந்தமா கம்பெனி ஆரமிக்கப்போறான்!"
"ஆமா பெரிய அம்பானி இவரு! போய் எதுனா நல்ல வேலையில சேரச்சொல்லுடி!"
"அவனோட முயற்சியைப் பார்த்துட்டு அமெரிக்காவிலேர்ந்து பணம் தராங்களாம்! எம் புள்ள ஒரு நாள் அம்பானியாகப்போறான் பாருங்க!"
நிச்சயம் நடக்கத்தான் போகிறது!






